
‘அவள் கிச்சன்’ இதழின் மூன்றாம் ஆண்டுவிழா... இந்த அறுசுவைத் திருவிழாவை, ‘ருச்சி மேஜிக் பிக்கிள்ஸ்’ (Title Sponsor) நிறுவனம் வழங்கியது; பவர்டு பை ‘சக்தி மசாலா’ நிறுவனம்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சென்னை, அடையாறில் உள்ள கிரவுன் பிளாசாவில் கடந்த ஜூலை 23-ம் தேதி நடந்தது விழா. விழாவின் இந்த வருட தீம்,‘ஹைவே சமையல்.’ அதற்காக வடிவமைக்கப் பட்டிருந்த மாடல் லாரி அமைப்பு விருந்தினர்களின் உற்சாகத்தை அதிகரிக்க, விழாவை ஆர்.ஜே சனோ தொகுத்து வழங்கினார்.

நிகழ்வைத் தொடங்கிவைத்துப் பேசினார் விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.ஸ்ரீனிவாசன். அவர் பேசும்போது ``சமையல் கலையில் புதுப்புது விஷயங்களை அறிமுகப் படுத்துவதுதான் ‘அவள் கிச்சன்’ இதழின் நோக்கம். இந்த வருடம் வாசகிகளுக்காக ‘யம்மி ரேட்டிங் அவார்ட்’ மற்றும் ‘யம்மி அவார்ட்’ என்கிற இரண்டு அவார்டுகளை அறிமுகப் படுத்துவதில் பெருமை கொள்கிறேன்’’ என்றார். நல்ல உணவகங்களைத் தேடிப் பிடித்து, வாசகர்களுக்கு அறிமுகப் படுத்துவது, யம்மி ரேட்டிங்க்ஸ்! சிறந்த உணவகங்களையும், செஃப்களையும் அங்கீகரிக்கும்விதமாக, யம்மி அவார்ட்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.


‘அவள் கிச்சன்’ இதழ்களை அலங்கரிக்கும் சமையல் கலைஞர்களில் ஆரம்பித்து, அதைச் செய்துபார்த்து ருசிக்கும் வாசக, வாசகிகள் வரை வந்திருந்தனர். சிறப்பு விருந்தினர் களாக இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி.பிரகாஷும், அவர் மனைவி சைந்தவியும் விழாவில் இணைந்தனர். ‘தெறி’ படத்தின் ‘உன்னாலே என் ஜீவன்’ பாடலை சைந்தவி பாடிச் சிறப்பித்தார். நம் சிறப்பு விருந்தினர் ஈரோடு மகேஷ், தன் ஸ்டைலில் விழாவைக் கலகலப்பாக்கினார்.

பல கலகலப்புகளுக்குப் பிறகு மதிய உணவு அறையின் பிரமாண்ட கதவு திறக்கப்பட்டது. அங்கே ஆம்பூர் மட்டன் பிரியாணியில் இருந்து கொத்து பரோட்டா, சிக்கன் சால்னா, சாலையோர டீ, கடி பக்கோடி, தால் பதி சூர்மா என அணிவகுத்திருந்தன ஹைவே உணவு வகைகள். விருந்தினர்கள் அனைவரும் அதைப்பற்றிய தங்களின் நினைவுகளை, குறிப்புகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்தவாறே அவற்றை ருசித்தனர். இறுதியாக, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒவ்வொருவருக்கும் ருச்சி ஊறுகாய், சக்தி மசாலா பஜ்ஜி மிக்ஸ் மற்றும் மண்பாண்ட வாட்டர் கூலர் பாட்டில் அடங்கிய கிஃப்ட் பேக் வழங்கப்பட்டது.

`` `அவள் கிச்சன்’ இதழ் இன்றுவைத்த விருந்து வயிற்றுக்கு மட்டுமா? செவிக்கும் கண்களுக்கும் மனதுக்கும்தான்!’’ என மகிழ்வுடன் விடைபெற்றனர் நம் வாசக வாசகிகள்!