Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 48

ஆண்பால் பெண்பால் அன்பால் - 48
பிரீமியம் ஸ்டோரி
ஆண்பால் பெண்பால் அன்பால் - 48

#MakeNewBondsஇளம்பிறை எழுத்தாளர் - படங்கள்: அருண் டைட்டன்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 48

#MakeNewBondsஇளம்பிறை எழுத்தாளர் - படங்கள்: அருண் டைட்டன்

Published:Updated:
ஆண்பால் பெண்பால் அன்பால் - 48
பிரீமியம் ஸ்டோரி
ஆண்பால் பெண்பால் அன்பால் - 48

ந்த நம்பிக்கையும் இல்லாமல் உடைந்த ஒரு மண்கலத்தின் சில்லுகளைக் கண்ணீர்மல்க மடியில் சேர்த்து அள்ளிக்கொண்டிருக்கும் ஒரு சிறுமியின் பிம்பம், இந்தத் தலைப்பின் கீழ் எழுத முற்படும் இந்தத் தருணத்தில் என்னுள் தோன்றுவதை உணர்கிறேன்.  வறண்ட காலங்களில் தன் கிழங்குகளை மண்ணுக்கடியில் பத்திரமாக மறைத்துவைத்திருக்கும் கொடிகளைப்போல, என் நினைவுகளின் ஆழங்களில் புதைந்துகிடக்கும் கடந்தகால வாழ்வியல் நிகழ்வுகளை மீட்டெடுப்பதில் பேராவல்கொண்டவன் என் இளைய மகன் திலீபன். அவனுக்கு என்னிடம் மற்ற கதைகளைக் கேட்பதைவிட, என் சொந்தக்கதையைக் கேட்பதில்தான் எப்போதும் விருப்பம் அதிகம்.

1988-ம் ஆண்டில் நாகை மாவட்டம் கீழ்வேளூரில் நான் ஆசிரியர் பயிற்சி மேற்கொண்டிருந்தேன். ஒருநாள் மாலை வீடு திரும்புவதற்கான பேருந்துக் கட்டணம்  இல்லாமல், அங்கிருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ள எனது ஊரான சாட்டியக்குடிக்கு நடந்து வந்துகொண்டிருந்தேன்.  அய்யடிமங்கலம் என்ற ஊரைக் கடக்கும்போதே இருட்டத்தொடங்கிவிட்டது. தென்னங்கீற்றுக் கட்டுகளை ஏற்றிச்சென்ற ஒரு மாட்டுவண்டியைத் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தேன். அப்போது எதிர் திசையிலிருந்து இருசக்கர ஊர்தியில் வந்த இரண்டு இளைஞர்கள் கொஞ்சதூரம் போய் மீண்டும் வண்டியைத் திருப்பிக்கொண்டு என்னை நோக்கி வந்ததைப் பார்த்ததும் ஒரு புதர் மறைவில் ஓடி ஒளிந்துகொண்டேன். அவர்களில் ஒருவன் “பொண்ணுதான்டா... நான் பார்த்தேன்டா” என்றான். மற்றொருவனோ``மோகினிப் பிசாசா இருக்கப்போகுதுடா’’ என்றான். சிறிதுநேரம் என்னைத் தேடிவிட்டு அவர்கள் சென்றதும் கீற்று வண்டிக்கு முன்னால் ஓடி,  நடுக்கத்துடன் வீடுபோய்ச் சேர்ந்தேன். இதைத் திலீபனிடம் சொன்னேன்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 48

“அவங்க ஏம்மா உங்களைத் தேடினாங்க?” என்றான்.

``ஏன்னா எனக்கு அப்போ 17 வயசு... அப்ப மட்டுமில்ல, இப்பவும் படிக்கப்போகிற, வேலைக்குப்போகிற பெண்களைப் பின்தொடர்வது,  பயமுறுத்துவது,  தொல்லைதருகிற இப்படிப்பட்ட ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்… என்ன செய்வது?” என்றேன்.

“இப்படியெல்லாம் செய்யக் கூடாதுன்னு அவங்களுக்கு யாரும் சொல்ல மாட்டாங்களா?” என்றான்.

``பலரும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படிச் செய்தால் தண்டனை உண்டு எனச் சட்டம்கூட இருக்கிறது. ஆனாலும் சிலர் மாறுவதே இல்லை’’ என்றவுடன், ``நீங்க அப்ப செல்போன்ல பேசி, உதவி கேட்டிருக்கலாமே’’ என்றான். அப்போது என் கால்களில் செருப்புகள்கூட இல்லை என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.

எப்போதும் தனித்த பயணங்களின்போதுதான் ஆண்களால் அச்சுறுத்தப்பட்டுத் தொல்லைக்குள்ளான பெரும்பான்மையான நிகழ்வுகளைச் சந்தித்திருக்கிறேன்.  ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குமேல் இருக்கலாம். திருவண்ணாமலையில் குறும்படத் திரையிடல் நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுவிட்டு, கிண்டி கத்திப்பாராவில் வந்து இறங்கும்போதே இரவு 10 மணிக்கு மேலாகிவிட்டது. அப்போது மயிலாப்பூரில் குடியிருந்தேன். பேருந்துக்காகச் சிறிது நேரம் காத்திருந்துவிட்டு, ஆட்டோவில் கட்டணம் பேசி அமர்ந்தேன். இரவு 10 மணிக்குமேல் கையில் கைப்பேசியுடன் ஒரு பெண் தனியே நின்றால் அல்லது பயணித்தால், ஏதேனும் பிரத்யேகமான அர்த்தங்களைக் கற்பித்துக்கொள்வார்களோ என்னவோ தெரியவில்லை. ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோ ஓட்டுவதைவிட என்னைத் திரும்பித் திரும்பிப் பார்ப்பதிலேயே அதிக கவனம் செலுத்தினார். அவரிடமிருந்து சாராய நெடி வேறு!

வீடுபோய்ச் சேர்வேனா, மாட்டேனா என்ற பீதியை மறைத்துக்கொண்டு, அவரைத் துளியும் பொருட்படுத்தாதவள்போல் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, கைப்பேசியில் எண்களை அழுத்துவதுபோல் பாவித்து அதிகாரத்தொனியில்,  ``நான்தான் எஸ்.ஐ பேசுறேன். வேண்டாம்... வண்டி அனுப்ப வேண்டாம். ஆட்டோவுல வந்துக்கிட்டிருக்கேன். ஸ்டேஷன்ல யாரெல்லாம் இருக்கீங்க? ஏதாவது கேஸ் வந்தா எஃப்.ஐ.ஆர். போட வேண்டாம். நான் வந்து பார்த்துக்கிறேன். ஏட்டு வந்ததும் எங்கிட்ட பேசச் சொல்லுங்க’’ என எதிரே யாரோ பேசுவதுபோல் இடைவெளிவிட்டுப் பேசிக் கைப்பேசியைத் தோல்பையில் வைத்தேன். அதன் பிறகு ஆட்டோக்காரர் என் பக்கம் திரும்பவே இல்லை. அவர் என்னை போலீஸ் என நம்பியது எனக்குத் தெம்பாக இருந்தது.

சிறிது நேரம் கழித்து, “மேடம், நீங்க எந்த ஸ்டேஷன்ல இருக்கீங்க?” என்றார்.

“தேனாம்பேட்டை” என்றதும்,  ``எனக்குக்கூட ஆட்டோ ஸ்டாண்டுல ஒரு பிரச்னை மேடம்’’ எனப் பேசத் தொடங்கினார்.

``எதுவாக இருந்தாலும் ஸ்டேஷன்ல வந்து எழுதிக் குடுப்பா’’ எனப் பேச்சைத் துண்டித்தேன்.

 இறங்கும்போது ``நீங்க குடுக்கிறதைக் குடுங்க மேடம்’’ என்றார்.

``நீ பேசினதை வாங்கிக்கப்பா… அப்புறம் `இந்த போலீஸ்காரங்களே இப்படித்தான். எதுக்குமே சரியா காசு தர மாட்டாங்க. எல்லாத்துலேயும் ஓசிதான்’னு நாலுபேர்கிட்ட சொல்லிட்டிருக்கவா” என அவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்ததும்தான் உயிர் வந்ததுபோல் இருந்தது.

என் கவிதை நூல் குறித்த விமர்சனம் என் நிழற்படத்துடன் இதழ் ஒன்றில் வந்திருந்ததை, பயணத்தின்போது தொடர்வண்டியில் அமர்ந்து புரட்டிக்கொண்டிருந்தேன். என் எதிரே அமர்ந்திருந்த ஒருவர் என்னிடம் அந்தப் புத்தகத்தைக் கேட்டு வாங்கிப் பார்த்தார்.

அதில் என் படத்தைப் பார்த்துவிட்டு “உங்கள மாதிரியே இருக்காங்க பாருங்க’’ என்றார்.

“நான்தான் சார் அது’’ என்றதும், ``எழுதுவீங்களா நீங்க?’’ எனத் தொடர்ந்து என்னிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டே வந்தார். எனக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. நான் அமைதியாகப் பயணிக்க விரும்பினேன். அந்த நபர் ஓய்வதாக இல்லை.

ஒருகட்டத்தில் மிக இழிந்த மனதோடு ``கவிதைனாலே உணர்ச்சிதானே. உணர்ச்சியா ஒரு கவிதை சொல்லுங்க கேப்போம்’’ என்றார். கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

      `இருப்பாய் தமிழா

ஆண்பால் பெண்பால் அன்பால் - 48


       நெருப்பாய் – நீ
       இருந்தது போதும்
       செருப்பாய்’ 


என்ற கவிதையைச் சொன்னேன். அதில் `செருப்பாய்’ என்பதை நன்கு அழுத்தமாக `செருப்பால் அடிப்பேன்’ என்ற தொனியில் சொன்னதும், அந்த ஆள் இறங்கும்வரை ஜன்னல் பக்கத்திலிருந்து முகத்தைத் திருப்பவே இல்லை.

`மவனே இனிமே நீ பிரயாணத்துல யார்கிட்டயாவது உணர்ச்சிக் கவிதை கேட்பே’ என எண்ணிக்கொண்டு, கவிஞர் காசி ஆனந்தனுக்கு நன்றி சொல்லிக்கொண்டேன். இதுபோல் பயணங்களில் ஆண்களால் நேர்ந்த கசப்பான அனுபவங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்போது எண்ணிப்பார்க்கும்போது எனது அனுபவங்களின் பெரும்பகுதி தப்பிப்பிழைத்த நிகழ்வுகளின் தொகுப்பாகத்தான் தெரிகிறது. ஆனால், ஒவ்வொரு முறை தப்பும்போதும் என்னைத்  துரத்திய கால்களுக்கும் தாங்கிப்பிடித்த கைகளுக்கும் பாலின பேதங்கள் இருக்கவேயில்லை.

`அடுத்த குழந்தை நிச்சயம் ஆண் குழந்தையாகத்தான் பிறக்கும்’ என்ற என் பெற்றோரின் எதிர்பார்ப்பு பொய்த்து, வரிசையாகப் பிறந்த பெண் குழந்தைகளில் ஐந்தாவதாகப் பிறந்தவள் நான்.  நானும் பெண்ணாகப் பிறந்ததால் மருத்துவமனையில் ஒரு தேநீர் வாங்கித் தரக்கூட துணைக்கு ஆள் இல்லாமல் அம்மா தனியாகவே இருந்தார். மருத்துவமனையில் இருந்து ``நீங்கள் வீட்டுக்குப் போகலாம்’’ என்று சொன்ன நாளில் நல்ல மழையாம். அழைத்துச் செல்லவும் யாரும் வரவில்லையாம். அதனால் அழுகையும் ஆத்திரமுமாக, மழையில் நனைந்து ஜன்னி கண்டு நான் செத்தால் சாகட்டும் எனத் தூறல் விழுந்துகொண்டிருக்கும்போதே வீட்டுக்குச் சென்றிருக்கிறார். வழியில் அவருக்குத் தெரிந்த வயதான ஓர் அம்மா அவர் வீட்டுக்கு அழைத்துச்சென்று தேநீர் கொடுத்து,“அஞ்சாவது பொண்ணு, கெஞ்சினாலும் கிடைக்காது. வளர்த்துவிடு, எங்கேயாவது போய்ப் பொழச்சிட்டுப்போறா” என்று அறிவுரை கூறி, மழைக்குக் குடையும் கொடுத்து அனுப்பிவைத்தாராம்.

இதைப்போலவே மற்றொரு முறை அப்பாவிடம் கோபித்துக்கொண்டு தன் தம்பி வீட்டுக்குச் செல்லும் வழியில் திருத்துறைப்பூண்டி பேருந்துநிலையத்தில் `யாராவது பிள்ளை இல்லாதவர்கள் தூக்கிச் செல்லட்டும்’ என, ஒரு துண்டை விரித்து அதில் என்னைப் போட்டுவிட்டு யாரோ எவரோபோல் உட்கார்ந்திருந்தாராம் அம்மா. வெகுநேரம் ஆகியும் யாரும் தூக்கிச் செல்லாததால், மனது கேட்காமல் அவரே தூக்கிவந்துவிட்டதாகவும் கூறுவார். 

இதுபோல் என்னை வேண்டாம் என எண்ணிய இன்னும் சில தருணங்களை, நான் பிடிவாதமாகக் கேட்டுத் தொந்தரவு செய்யும்போதெல்லாம் ``அப்பவே நீ போயிருக்கக் கூடாதா” எனச் சொல்லிச் சொல்லித் திட்டுவார். `அக்காக்களைப்போல் தங்கைகளைப்போல் இல்லாமல் நான் மிகவும் கறுப்பாகப் பிறந்துவிட்டதால்தான் அம்மாவுக்கு என்னைப் பிடிக்கவில்லையோ’ என நினைத்து நினைத்து அழுதிருக்கிறேன். இதுபோன்ற சமயங்களில் எனக்கான ஆறுதல் எப்போதும் அப்பாதான். மனம்நோக ஒரு வார்த்தைகூட என்னைப் பேசியதில்லை. கைநீட்டி அடித்ததில்லை.

எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இருப்பையும் இயல்பையும் மறந்து ஏதாவது ஒரு நினைவில் மிதந்துகொண்டே இருந்த என்னைத் தாய் என்ற அடிப்படையில் அம்மா கண்காணித்திருக்க வேண்டும். அதனால் என்மீதான அக்கறையின் பொருட்டே என்னிடம் கடுமையானவராக அவர் நடந்திருக்க வேண்டும் என்பதை அவரின் மறைவுக்குப் பிறகுதான் புரிந்துகொள்ள முடிந்தது.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 48

அம்மாவின் மறைவுக்குப் பிறகு, அப்பாவைப் பார்க்க நான் ஊருக்குப் போயிருந்தபோது அழுக்கடைந்த கிழிந்த பாலித்தீன் பையில் வெற்றிலைப்பாக்கு, சுண்ணாம்பு டப்பா போன்றவற்றை அப்பா போட்டு வைத்திருந்ததைப் பார்த்தேன். நான் அந்தப் பையிலிருந்து அவற்றை மாற்றி வேறோர் அழகிய புதிய பாலித்தீன் பையில் போட்டுவிட்டு, அந்த நைந்துபோன பையைக் குப்பையில் போட்டுவிட்டேன். அப்பா அப்போது உறங்கிக்கொண்டிருந்தார். விழித்தவுடன் புது வெற்றிலைப்பையைப் பார்த்துவிட்டு, நான் குப்பையில் போட்ட பாலித்தீன் பையைத் தேடி எடுத்து வந்தார். இதற்காக அவரிடம் நான் கோபப்பட்டபோது “வையாதத்தா... இது உங்க அம்மா கடைசியா வெத்தலப்பாக்குப் போட்டு வெச்சிருந்த பையித்தா” எனக் கூறி அந்த நைந்துபோன பையில் அவற்றையெல்லம் மீண்டும் மாற்றிக்கொண்டார். நான் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டேன்.

இதுதவிர இரண்டு படியளவு நெல்லை ஒரு துணியில் முடிந்து எரவான கம்பில் கட்டித் தொங்கவிட்டிருந்தார். இறப்பதற்கு சில நாள்களுக்கு முன் அறுவடை முடிந்த வயல் ஒன்றில் அம்மா தப்புக்கதிர் பொறுக்கிச் சேர்த்த நெல் அது. தரகுப்பணத்தைக் கள் குடித்துச் செலவழித்துவிட்டு வந்ததற்காக அம்மாவிடம் எப்போதும் ஏச்சுப்பேச்சுகளை வாங்கிக்கட்டிக்கொள்ளும் அப்பாவுக்கு, அம்மா மீது இப்படியோர் ஆழ்ந்த அன்பு இருந்தது வியப்பாகவே இருந்தது. அது ஒரு காலம்; அவர்கள் அப்படித்தான் என்பதைத் தவிர, வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை.

நம்பவைத்துக் கழுத்தறுப்பது, கூடஇருந்தே குழி பறிப்பது, ஏமாற்றுவது, துரோகம் இழைப்பது எனச் சொற்களாக மட்டும் அதுவரை நான் அறிந்திருந்தவற்றை நேரடியாக உணர்ந்த காலகட்டம் அது.

சுவாசித்தபடி நடமாடிக்கொண்டிருக்கும் கல்போல என்னையே நான் பார்த்துக்கொண்டும், கதவிடுக்கில் ரத்தம் கசிய நகக்கண்ணை நசுக்கிக்கொண்ட குழந்தைபோலும் விடாது தேம்பிக்கொண்டும் அப்போது இருந்தேன். அடுத்து வேலைக்குச் செல்வதா, குழந்தையைப் பார்ப்பதா, சிசேரியன் புண்ணுக்கு வைத்தியம் பார்ப்பதா அல்லது தன்னந்தனியாக வாழ்க்கையை எதிர்கொள்ளப் போராடுவதா எனக் கையில் பணமும் இன்றி உதவத் துணையுமின்றி தவித்துப்போனேன்.

ஆறுதல் தரவேண்டிய சக பெண்களும்கூட ஆணாதிக்க மனதோடு என்னையே குற்றவாளியாக்கிக்கொண்டிருந்தனர். ஆனாலும் வாழ்வின்மீது அவநம்பிக்கை எழவே இல்லை. காரணம், என்னைச் சுற்றி இருந்த தோழிகளும் தோழர்களும். அப்போது தோழர் சுப.வீரபாண்டியன் என்னைப் பார்க்க வீட்டுக்கு வந்திருந்தார்.

``எனக்கு மிகவும் வெட்கமாகவும் அவமானமாகவும் இருக்கிறது தோழர்’’ என அவரிடம் நான் வருந்தியபோது, “உங்களுக்கு இப்படிப்பட்ட துன்பத்தைத் தந்தவர்களே வெட்கப்படவேண்டியவர்கள்; அவமானப்படவேண்டியவர்கள்; வருத்தப்படவேண்டியவர்கள். நீங்கள் மன உறுதியோடு இருக்க வேண்டும்.’’ என்று அவர் அன்றைக்கு மனமுவந்து சொல்லிச் சென்ற வார்த்தைகள், இன்றளவும் மனச்சங்கடங்களிலிருந்து மீள எனக்குப் பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன.

என் மனம் உணர்ந்த உண்மை, சிலரின் சொற்களுக்கு அப்படியொரு பலமும் சக்தியும் உண்டு என்பதே. அப்படிப்பட்ட சொற்களால் வாழ்தலுக்கான என் நம்பிக்கையை எனக்கு இந்த 17 வருடங்களாக அளிக்கிறவர்களில் பலரும் ஆண் நண்பர்களே. ஜெயபாஸ்கரன், லிங்குசாமி, ரவி சுப்ரமணியன், தமிழ் மணவாளன், மணிபாரதி என என் ஆண் நண்பர்களின் பட்டியலானது சில பத்துகளைத் தாண்டிவிடும். இவர்கள் தவிர அநாதரவானவற்றின்மீதும் பாரபட்சமின்றி விழும் சூரியக்கதிர்களைப்போல நல்லகண்ணு, தமிழருவிமணியன், நடிகர் சிவகுமார் போன்ற பெருமக்களின் அன்பையும் பெற்றவள் நான்.

சென்ற ஆண்டு எனக்கு ஏற்பட்ட கொடிய சாலைவிபத்தின்போது ஓடோடி வந்து உதவியவர்கள், குருதி கொடுத்தவர்கள், பணம் கொடுத்தவர்கள், அறுவைசிகிச்சை செய்த மருத்துவர்கள், உடனிருந்து கவனித்துக்கொண்டோர் அனைவரும் ஆண்களே. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தொடர் அறுவைசிகிச்சைகளால் பெரும் வலியில் கிடந்தேன் என்றுதான் கூறவேண்டும். வலியால் துடித்த கன்றுக்குட்டியைக் காந்திமகான் கருணையோடு கொன்றுவிடச் சொன்னதைப்போல், `வலியால் துடிக்கும் இளம்பிறையைக் கொன்றுவிடுங்கள்’ என்று யாராவது ஒரு மகான் வந்து கூற மாட்டாரா என வலி பொறுக்க முடியாதபோதெல்லாம் நினைத்து அழுதுகொண்டிருந்தேன்.

கழிவறைக்கு எழுந்து செல்ல முடியாத சில தருணங்களில் என் மகன்களே எனக்கு உதவினார்கள். ``இதுபோன்ற சூழ்நிலையில் ஒரு பெண் பிள்ளை இருந்திருந்தால் உங்களுக்கு உதவியாக இருந்திருக்கும்’’ எனப் பார்க்க வந்தவர்கள் சொல்வதைக் கேட்டபோதெல்லாம் “ஏம்மா எல்லோரும் இப்படியே பேசுறாங்க... ஆம்பளப்புள்ளையா பொறந்தா அம்மாவைப் பார்த்துக்க முடியாதா என்ன?’’ என ஆறுதல் பேசியும், ஏதாவது நகைச்சுவையாகப் பேசி சிரிக்கவைத்தும் என்னைக் கோல்களின் உதவி இல்லாமல் எழுந்து நடக்க வைத்தவர்களும் அவர்களே.

நீண்ட நெடிய மானுட வாழ்வில் ஆண் பெண் நட்பிலும் உறவிலும் விட்டுப்போதல், விலகிப்போதல், கடந்துபோதல், ஏமாற்றிப்போதல், நேசங்கள் நிராகரிப்புகள் என்பனவெல்லாம் உலகம் தொடங்கிய காலம்தொட்டே தொடர்ந்துவரும் விஷயங்களே. ஆனால், நம் வாழ்வில் எப்படிப்பட்ட நிலையிலும் யாருமே இல்லாதவர்கள் என இந்த உலகில் யாருமே இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

வாழ்வில் புறக்கணிப்புகள், துன்பங்கள், அவமானங்கள் நேர்ந்தபோதெல்லாம் என்னுள் எங்கோ தேங்கிக்கிடந்த ஒரு துளி நினைவின் பச்சையத்தைப் பற்றிக்கொண்டு என் வியர்வையிலேயே நான் துளிர்த்திருக்கிறேன்; உயிர்த்திருக்கிறேன்.  விழுந்த இடத்திலேயே கிடந்துவிடாமல், உடனடியாக எழுந்து ஓடத் தொடங்கும் மனவலிமையே என் தாயிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட அரிதான தாய்வீட்டுச் சீதனம்.  மனதளவில் ஆண்கள்மீது சில வருத்தங்கள் எப்போதும் எனக்கு இருப்பது உண்மைதான். என்றாலும், அது வன்மமாகவோ வெறுப்பாகவோ எதிர்ப்புஉணர்வாகவோ ஒருபோதும் மாறியதில்லை; மாறப்போவதுமில்லை.

இங்கே எந்த மேகமும் ஓரிடத்திலேயே நிற்கப்போவதில்லை என்பதுபோல், இந்த வருத்தங்களும் கடந்துசெல்லும் என்கிற சிறிய நம்பிக்கைதான் என்னை இப்போதும் இயக்கிவருகிறது. இதுதான் ஆண் பெண் உறவின் அடிநாதமாக இருக்க வேண்டும்.

- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

ஆண்பால் பெண்பால் அன்பால் - 48

நிர்ணயிக்கப்பட்ட வெளிக்குள்
மட்டுமே பறக்கத் தலைப்படும்
சின்னஞ்சிறு பறவையொன்றின்
துயரப்பாடலொன்றைப்
பின்தொடர்கிறேன்.
கண்ணீரின் சாரல் நிரம்பிய
அக்குரல் விலகுவதும் நெருங்குவதுமாக
இருக்கிறது
கைகளில் அகப்படப்
பிரியமில்லையென்றதனை
கூண்டுக்குள் சிக்கவைக்க நான்
துணியவில்லை
முன்பொருநாள் அதன் குதூகலக்குரலில்
என் தனிமைத் துயரை மறந்திருந்தேன்
என்பதை மட்டும் சொல்லிவிட்டால் போதும்
நானும் பறந்துவிடுவேன்.


- இரா.பூபாலன்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 48

டைசிவரை எல்லா ஆண்பெண் விளையாட்டும், வயிற்றுக்கும் மனதுக்குமான இழுபறிதான். இடையில் இந்த மூளை விடுகிற வெற்றுச்சவால்களும், ஆடத்தூண்டுகிற பகடையாட்டங்களும், எந்தச் சூதும் முடிவதில்லை. எந்தச் சூதாடியும் நிஜத்தில் தோற்று, கனவில் ஜெயித்து, நிறுத்த முடியாத ஆட்டத்தில் நிலைகுலைகிறான். தோற்றவன் கண்களில் ஜெயித்தவனைவிட ஜெயம் மட்டுமே அதிகம் மினுங்குகிறது.

- வண்ணதாசன்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 48

கீறல்
உனது உதாசீனம்
அமிலமாய் வழிகிறது
எனது அன்பில்
சில்லுகளாய்
உடைத்துத் தெறிக்கிற
கண்களின் வெப்பத்திற்குள்
நிகழ்வுகள் உருகுகின்றன
ஆயினும்
பால் மஞ்சள் ஆறாய்
ஓடிக்கொண்டிருக்கிறது
வாழ்க்கை

- தேன்மொழி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism