Published:Updated:

காதல்... வீரம்... துரோகம்!

காதல்... வீரம்... துரோகம்!
பிரீமியம் ஸ்டோரி
காதல்... வீரம்... துரோகம்!

கார்த்தி

காதல்... வீரம்... துரோகம்!

கார்த்தி

Published:Updated:
காதல்... வீரம்... துரோகம்!
பிரீமியம் ஸ்டோரி
காதல்... வீரம்... துரோகம்!

`பிக் பாஸ்’ ஃபீவரில் உள்ளூர் தொலைக்காட்சி ரசிகர்கள் சிக்கித்தவிக்க இண்டர்நேஷனல் பிரியர்களோ `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ சீரியலில் சிலிர்த்துக்கொண்டி ருக்கிறார்கள். சமீபத்திய தொலைக்காட்சி வரலாற்றில் இப்படி ஒரு அதிரிபுதிரி ஹிட்டை எந்த டி.வி தொடரும் கண்டதில்லை.

 `எ சாங் ஆஃப் ஐஸ் அண்டு ஃபயர்’ என்னும் தொகுப்பின் முதல் புத்தகம்தான் ‘எ கேம் ஆஃப் த்ரோன்ஸ்’. இது 1996-ம் ஆண்டு வெளிவந்தது. எழுதியவர் ஜார்ஜ்.ஆர்.ஆர்.மார்ட்டின்.

 முதல் பாகம் ஜஸ்ட் லைக் தட் கடந்துபோய்விட அடுத்தடுத்த பாகங்கள்தான் நியூயார்க் டைம்ஸின் பெஸ்ட் செல்லர் பட்டியலுக்குள் நுழைந்தது. அதற்குப் பின் நடந்தது எல்லாம் மாயாஜால வரலாறு. புத்தகங்கள் ஏழு பாகங்கள்தான் என்றாலும், டி.வி சீரியலாக எட்டு பாகங்கள் எடுக்கத் திட்டமிட்டு இருந்தார்கள். ஐந்தாம் பாகம் வரை புத்தகத்தைக் கரைத்துக் குடித்தவர்கள் காட்சிகளை விவரிக்க, அதற்குப்பின் அடுத்த பாகம் வெளிவரவில்லை. மார்ட்டின் ஆறாவது பாகத்தை எழுதிக் கொண்டிருக்க, டி.வி தொடரோ ஏழாவது சீசனில் அடியெடுத்து வைத்துவிட்டது.எல்லாம் ஹிட் ராசி.

காதல்... வீரம்... துரோகம்!

என்ன கதை?

கதை கொஞ்சம் சிக்கல் ஆனது. ஆனால், அதுதானே சுவாரஸ்யம்? வெஸ்டிரோஸ், எஸ்ஸோஸ் என இரு நிலங்களில் நடக்கும் சண்டைதான் `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’. இதில் கிங்ஸ் லேண்டிங்கில் இருக்கும், அயர்ன் த்ரோனை வெல்ல பல்வேறு குழுக்கள் போட்டியிடுகின்றன. மற்றொரு புறம், எஸ்ஸோஸில் இருந்து தன் இழந்த பெருமையை மீட்டெடுக்க  டனேரியஸ் டார்கேரியன் தனது டிராகன்களுடன் வருகிறாள். இவர்கள் அனைவரையும் அச்சுறுத்தும், மற்றுமொரு விஷயம் வொயிட் வாக்கர்ஸ். இவ்வளவுதானா `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ என்றால், ஆம். ஆனால், அதற்குள் ஓராயிரம் குறுங்கதைகளும், காதலும், வீரமும், துரோகமும், வன்மமும், அழுகையும், செங்குருதியால் எழுதப்பட்டு இருக்கின்றன.

அரியணையைக் கைப்பற்ற தன் ஒரே மகளைத் தீக்கிரையாக்கும் ஸ்டானிஸ் பரேதியன்; தனது வாழ்வை நிலைநிறுத்திக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்லும் லிட்டில் ஃபிங்கர்;  சாதுர்யப் பேச்சாலும், புத்திக் கூர்மையாலும் எதிரிகளைத் தன் வழிக்குக் கொண்டுவரும் டிரியன் லேனிஸ்டர்; அந்தச் சிறு வயதில் அவ்வளவு குரூரமா என அதிரவைக்கும் ஜஃப்ரி பராத்தியன்; எவ்வளவு இழிநிலைக்கு ஆளானாலும் தன் குணத்தை ஒருபோதும் மாற்றிக்கொள்ளாத செர்ஸி லேனிஸ்டர்;  இழந்த தன் குடும்பத்தின் புகழையும், பெருமையையும் மீட்டெடுக்கப் பெரும்படையுடன் துடிக்கும் டெனேரிஸ் டார்கேரியன்; இப்படிக்கூட அரக்கத்தனமாக இருக்க முடியுமா என அதிர்ச்சியூட்டும் ராம்சே போல்டன்; சிறுமிகளாக வந்து தற்போது பழிவாங்கும் படலத்தை நிறைவேற்றும் ஆர்யா ஸ்டார்க், சான்சா ஸ்டார்க்; வொயிட் வாக்கர்ஸிடம் இருந்து எல்லோரையும் காப்பாற்ற வேண்டும் எனத் துடிக்கும் ஜான் ஸ்நோ என எக்கச்சக்க கதாபாத்திரங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.

ரத்தம் தெறிக்கும் வன்முறை, சென்சார் கத்திகள் வெட்ட முடியாத அளவுக்கான ஆபாசக் காட்சிகள்தான் `கேம் ஆஃப் த்ரோன்ஸி’ன் ஹிட்டுக்குக் காரணம் என முன்பு சொல்லப்பட்டது. ஆனால், அதையும் மீறி அதன் எண்ணிலடங்கா கதாபாத்திரங்களும், உறவு முடிச்சுகளும், வசனங்களும், யார் அடுத்து இறப்பார் என்ற புதிர்த்தன்மையுடன்கூடிய மர்மமும் அதற்கு உலகளாவிய ரசிகர்களைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது. குறிப்பாக டிரியன் லேனிஸ்டர் பேசும் பல வசனங்கள் கூகுளில் தத்துவங்களாய்க் கொட்டிக் கிடக்கின்றன.

எகிறும் சீசன்கள்!

ஏழாவது சீசனின் முதல் எபிசோடை அமெரிக்காவில் முதல் நாளில் பார்த்தவர்களின் எண்ணிக்கை மட்டும் ஒரு கோடியைத் தாண்டி இருக்கிறதாம். ஒவ்வொரு சீசனிலும் இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டுதான் இருக்கிறது. எப்போதும் ஏப்ரலில் ஆரம்பித்து ஜூனில் முடியும் இந்தத் திருவிழாவை, இந்த ஆண்டு ஜூலைக்குத் தள்ளிவைத்தபோது, உச் கொட்ட ஆரம்பித்தனர் அதன் ரசிகர்கள். அதையும் கடந்து முதல் எபிசோட் தெறி ஹிட்.

 மூன்றாவது சீசனில் மரணமடையும் கேட்லின் ஸ்டார்க், மீண்டும் உயிர்பெற்று ஸ்டோன்ஹார்ட் என்னும் பெயரில் புத்தகத்தில் வருவார். ஆனால், அவரது கதாபாத்திரம் தொடரில் கிடையாது. இப்படிப் பல மாறுதல்களையும் தொடருக்காக மெனெக்கெட்டு இருக்கிறார்கள் வெய்ஸும், டேவிட் பெனியாஃபும் (David benioff). `கேம் ஆஃப் த்ரோன்ஸி’ன் மற்றொரு ஸ்பெஷல் ராமின் ஜ்வாதியின் இசை.

இந்தக் கதாபாத்திரம் செம்ம என நினைக்கும் போது, அதைக் கொல்வது மார்ட்டின் ஸ்டைல். முதல் சீசனில் நெட் ஸ்டார்க்கின் மரணத்தையோ மூன்றாவது சீசனின் ஒன்பதாவது எபிசோடில் வரும் அந்த ரெட் வெட்டிங் (Red Wedding) கொலைகளையோ யாரும் மறக்க முடியாது; அதிலும் குறிப்பாக ஆறாவது சீசனின் இறுதியில் செர்ஸி எவ்விதக் கருணையும் இல்லாமல் ஒரு கும்பலை வெடிக்கச் செய்வது எல்லாம் ... `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ பாருங்க பாஸ்!

தொடரில் ராம்சே பால்டன், “முடிவு ரொம்ப நிம்மதியா இருக்கும்னு நினைச்சேன்னா, நீ கூர்ந்து கவனிக்கலைனு அர்த்தம்’’ என்று சொல்வார். எழுத்தாளர் ஜார்ஜ் மார்ட்டினின் எண்ணமும் இது தான்.

காதல்... வீரம்... துரோகம்!

#GOT சில சுவாரஸ்யங்கள்!

கொடூர வில்லியான செர்ஸி லேனிஸ்டர், சமூக வலைதளத்தில் செய்வதெல்லம் ஸ்பாய்லர் அலெர்ட்தான். செர்ஸியாக நடிக்கும் லீனா ஹெடி பல்வேறு ஸ்பாய்லர்களை இதுவரை வெளியிட்டிருக்கிறார். ஆனால், அதை டீகோட் செய்வதென்பது கமல் ட்விட்டைப் புரிந்து கொள்வதற்கு ஒப்பானது.

 பார்வையற்ற அமேன் மேஸ்டராக நாடகத்தில் நடித்த பீட்டர் வாஹ்ன் உண்மையிலே கண் பார்வைக் குறைபாடு கொண்டவர்.

நாடகத்தின் ஆரம்ப பாகங்களில் வெளியான சில நிர்வாணக் காட்சிகளில், அடல்ட் படங்களில் டாப் லிஸ்ட்டில் இருக்கும் பல நடிகைகள் பங்களித்திருக்கிறார்கள்.

இதுவரையில், ஐமேக்ஸ் திரை அரங்குகளில் வெளியிடப்பட்ட ஒரே தொலைக்காட்சித் தொடர் `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தான்.

டிரியன் லேனிஸ்டர் (பீட்டர் டின்க்லேஜ்), செர்ஸீ லேனிஸ்டர் (லீனா ஹெடி) போன்றவர்களின் ஒரு எபிசோட் சம்பளம் மட்டும் 1.1 மில்லியன் டாலர்களாம்.

ஜான் ஸ்னோவின் காதலியாக வரும் இக்ரிட் சில எபிசோடுகளில் இறந்துபோவார். ஆனால் உண்மையில் டிவிக்கு வெளியே இருவரும் காதலர்கள்!

இந்தத் தொடர் ஹிட் அடித்துக்கொண்டிருக்கும்போதே அடுத்த தொடரான `கான்ஃபிடரேட்’க்குத் தயாராகிவிட்டது கிரியேட்டிவ் டீம்.

காதல்... வீரம்... துரோகம்!

Quotes

டிரியன் லேனிஸ்டர் :
நீ யார் என்பதை நீ மறக்காதே. இந்த உலகம் எப்படியும் மறக்காது. அதை ஒரு கவசமா போட்டுக்கோ, யாரும் உன்னை அதைச் சொல்லிக் காயப்படுத்த முடியாது.

சான்சா ஸ்டார்க் : நீ நாளைக்குச் சாகப்போற போல்டன். நிம்மதியாத் தூங்கு.

டைவின் லேனிஸ்டர்: ஆடுகளின் கருத்துகளை சிங்கம் பொருட்படுத்துவதில்லை.   

டெனேரிஸ் டார்கேரியன் : அடுத்தமுறை நீ என்னை நோக்கிக் கைகளை உயர்த்துவதுதான், உன் உடலில் கை இருப்பதன் கடைசி முறையாக இருக்கும்.