பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

நீர்த்துளிகள்... ஈரத்திவலைகள்!

நீர்த்துளிகள்... ஈரத்திவலைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
நீர்த்துளிகள்... ஈரத்திவலைகள்!

நித்திஷ்

நீர்த்துளிகள்... ஈரத்திவலைகள்!

முன்பின் அறிமுகமில்லாத சிலரோடு அடர்ந்த காட்டுக்குள் நெருப்பின் துணையோடு ஓர் இரவைப் போக்கும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? சுற்றிலும் பனி கண்களை மறைக்க, விண்மீன்களை வெறும் கண்களில் ரசித்தபடி இரவு முழுக்க, கனத்த பாறையில் கிடந்த அனுபவம் இருக்கிறதா? குளிர் நடுக்கும் மலைமுகட்டில் பஷீரின் எழுத்துகள், செவிவழி உடல் முழுக்கப் பாய்ச்சும் வெம்மையை உணர்ந்ததுண்டா? இந்த வித்தியாச அனுபவங்களை எல்லாம் வரிசை கட்டி அனுபவிக்க வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம்!

முகநூலில் செம ஆக்டிவாகச் செயல்பட்ட Exoticamp என்னும் இவர்களின் பக்கம்தான் இந்த வித்தியாசப் பயணத்துக்கான தொடக்கப்புள்ளி. ‘மேகங்களுக்கும் மேலே: வாகமன் மலைமுகட்டில் தங்கலாம்’ என்ற அவர்களின் அழைப்பே சுவாரஸ்யத்தை அள்ளிக்கொடுக்க, உடனே புக் செய்தாயிற்று. வதவதவென கூட்டத்தை வாரி அடைத்துக்கொள்வதில்லை இவர்கள். முதலில் புக் செய்யும் 20 பேருக்கு மட்டுமே அனுமதி. அடுத்த சுவாரஸ்யம், இவர்களுடன் பயணம் செய்யும்போது கண்டிப்பாகப் புகை பிடிக்க, மது அருந்த அனுமதி இல்லை. மூன்றாவது மற்றும் முக்கிய விதி - கண்டிப்பாக டென்ட்டில் மட்டுமே தங்கவேண்டும்/முடியும். இத்தனை விதிகளும் ‘யாரு சாமி இவங்க’ என்ற கேள்வியை எழுப்ப, அதற்காகவே பயணநாளை நோக்கிக் காத்திருக்க வேண்டியதாயிற்று.

நீர்த்துளிகள்... ஈரத்திவலைகள்!

சென்னையில் இருந்து குமுளி வரை பேருந்தில் சென்று, பின் அங்கிருந்து ஜீப்பில் வாகமன் செல்வதுதான் திட்டம். இந்தப் பயணத்துக்காக வந்த அனைவருக்குமே கிட்டத்தட்ட ஒரே வயதென்பதால், தொடக்கம் முதலே சுந்தர்.சி படம்போல கலகலதான். ‘நீங்க?’ எனத் தொடங்கிய உரையாடல்கள் காலைக் குமுளியில் இறங்கியபோது மண்வாசனையோடு கூடிய கெட்டவார்த்தைகளைப் பரிமாறிக்கொள்ளும் இயல்பான நட்பாக மாறிவிட்டிருந்தது. காலை கட்டஞ்சாயாவோடு ஜீப் ஏறினோம். குமுளியின் தார்ச்சாலைகளைக் கடந்து கடகட பாதையில் வாகமனை நோக்கி ஏறி இறங்கத் தொடங்கியது ஜீப். கிட்டத்தட்ட 45 கி.மீ மலைச்சாலை வழியே பயணம் என்பதால், வாகமன் போய்ச் சேர்வதற்குள் Exoticamp தொடங்கப்பட்ட கதையைப் பார்த்துவிடுவோம்.

மூன்று நண்பர்களின் மூளையில் உதித்த சிறு பொறிதான் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம். மூவருக்குமே பைக் பயணத்தில் அலாதிப் பிரியம்.  ஒரு நெடுந்தூரப் பயணத்தில்தான் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிறார்கள். சேர்ந்து பயணிக்கிறார்கள். அப்படித் தேனி அருகே பயணிக்கும் ஒரு நாளில் மழை இவர்களுக்கு வழி விடாமல் வெளுக்கிறது. சட்டென, தற்செயலாகக் கொண்டுவந்திருந்த டென்ட்டை வைத்து அங்கிருந்த திராட்சைத் தோட்டம் ஒன்றில் முகாமிடுகிறார்கள். அடை மழை, திராட்சையின் போதையேற்றும் புளித்த வாசம், இருள் தந்த ரம்மியம் போன்றவை அவர்களுக்கு முற்றிலும் புது அனுபவமாக இருக்க, இனி போகும் இடங்களில் எல்லாம் இப்படி டென்ட் அடித்துத் தங்கலாம் என முடிவெடுக்கிறார்கள்.

நீர்த்துளிகள்... ஈரத்திவலைகள்!

இதற்காகவே தென்னிந்தியா முழுக்க ஆள் அரவம் தென்படாத இடங்களாகப் பார்த்து முகாமிடுகிறார்கள். ஒருகட்டத்தில் இந்தப் பயண போதையை மற்றவர்களோடும் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று அவர்களுக்குத் தோன்ற, Exoticamp பிறக்கிறது. வாகமன், கூர்க், கோத்தகிரி, தடா எனத் தென்னிந்தியாவின் வித்தியாச சுற்றுலாத்தளங்களில் ரம்மியமான நிலங்கள் வைத்திருக்கும் உரிமையாளர்களிடம் பேசுகிறார்கள். அவர்களின் அனுமதியுடன் தாங்கள் அழைத்துவரும் பயணிகளை அந்த இடங்களில் டென்ட் அடித்துத் தங்கவைத்து அனுபவங்களைப் பரிசளிக்கிறார்கள். இதற்காகச் செலவாகும் தொகையில் ஒரு பங்கு அந்த நிலங்களின் உரிமையாளர்களுக்கு. இந்த வித்தியாச கான்செப்ட்டே ஏராளமானவர்களை ஈர்க்க, இன்று Exoticamp தென்னிந்தியாவின் முக்கியமான ட்ராவல் ஸ்டார்ட்அப்.

ஜீப்பிற்கு வெளியே பச்சைப்பசேலென பிரமாண்ட புல்வெளிகள் தென்படுகின்றன. யெஸ்... வாகமனின் பிரதான அடையாளமே மைல்கணக்கில் நீளும் Meadows என்ற இந்தப் புல்வெளிப் பிரதேசங்கள்தான். அவற்றின் நுனிகளில் வழியும் ஈரம் நேராக உங்கள் கருவிழி களிலும் படர்கிறது.  பனியில் முக்கியெடுக்கப்பட்ட சாலைகள் வழியே நாங்கள் தங்கப்போகும் மலை முகட்டை நோக்கிப் பயணிக்கிறது ஜீப். வழியில் ஆங்காங்கே சின்னச் சின்னதாய் அருவிகள் சாலையோரம் வழிந்தோடுகின்றன. ‘நீதான் இந்த ஏரியாவுக்குப் புதுசு’ என யாரையும் சட்டை செய்யாமல் ஓடும் அவற்றின் போக்கே உங்களைக் குளிக்கத் தூண்டுகிறது. கழுத்திலிருந்து முதுகுத் தண்டின் முடிவுவரை சொட் சொட்டென நீர்த்துளிகள் மசாஜ் செய்ய, ஈரத்திவலைகளோடு மீண்டும் முகட்டை நோக்கிப் பயணமானோம்.

நீர்த்துளிகள்... ஈரத்திவலைகள்!

கண் முன் வெள்ளை, நீலம், பச்சையாய் எட்டுக் கூடாரங்கள். பத்தடி தள்ளி கிடுகிடு பள்ளம். அவ்வளவு பெரிய பள்ளத்தையும் நிறைத்துப் பொங்கி வழியும் நுரையாய் மேகங்கள். ஓரடி அருகில் யானை நின்றாலும் பஞ்சாய் மறைக்கும் பனிப்பொழிவு. இதுதான் நாங்கள் தங்கப்போகும் இடம். வேறென்ன வேண்டும் அந்தப் பொழுதுக்கு? அரட்டை, இரவு உணவைத் தொடர்ந்து கேம்ப் ஃபயர். மொத்த உலகமுமே பிக் பாஸின் பத்து பிரபலங்களைக் கண்டு கொண்டிருந்த ஒரு வாரக்கடைசியில் தூரத்து மலையுச்சியில் 10 நிழலுருவங்கள் தங்களுக்குள்ளாகச் சகலவற்றையும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். பேய்க்கதைகள் இல்லாத கேம்ப் ஃபயர், கோஷ்டிகள் இல்லாத காங்கிரஸைப் போல சுவாரஸ்யமற்றவை. பேச்சு, பேய்க்கதைகள் பக்கம் திரும்ப, சட்டென முடிவெடுத்து நடு இரவில் ஒரு திக் திக் ட்ரெக்கிங்கிற்குக் கிளம்பினோம்.

பகல் வெளிச்சத்திலேயே பனியில் பாதை தெரியாது. இரவில்? ஆனாலும் ஆளுக்கு ஒரு டார்ச்சை எடுத்துக்கொண்டு கிளம்பினோம். எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் பதறிப் புல்தரையில் இருந்து பறந்து விலகும் மின்மினிப் பூச்சிகள், கனத்த அமைதியைக் க்ரீச்சென கோடு போட்டுக் கிழிக்கும் ராக்கோழிகள் ஆகியவற்றைத் தாண்டி அந்த வனாந்திரத்தில் ஆளரவமே இல்லை.

நீர்த்துளிகள்... ஈரத்திவலைகள்!

சில கி.மீ பயணத்துக்குப் பின் முன்னதைக் காட்டிலும் பிரமாண்ட பள்ளத்தாக்கை அடைந்தோம். நட்சத்திரங்கள் மின்னும் வானும், இருள் நிரம்பிய காடும் சந்திக்கும் தூரத்துப் புள்ளியில் அமைந்திருந்தது ஒரு நகரம். அங்கிருந்து மினுங்கிக்கொண்டிருந்தன சின்னச் சின்ன விளக்குகள். இந்த ஒற்றைக்காட்சி வழங்கும் பரவசத்தை வார்த்தைகளில் வடிக்க அங்கே யாரும் வைரமுத்து இல்லை. சுருங்கச் சொன்னால், பிழைத்திருத்தலையும் வாழ்தலையும் ஒரு மெல்லிய கோடுதான் பிரிக்கிறது. நாங்கள் அந்தக் கோட்டைத் தாண்டி ‘வாழத்’ தொடங்கி யிருந்தோம். பனிக்கு இதமாய்த் தோளோடு தோள் உரசி அமைதியாக மணிக்கணக்கில் அமர்ந்திருந்தோம். இசைப்புயலோ, இசைஞானியோ, யானியோ அங்கே இருந்திருந்தால் காரணமே இல்லாமல் எங்கள் கண்களில் கண்ணீர் வடிந்து ஓடியிருக்கும்.

தூக்கம் தளும்பிய ஒரு தருணத்தில் மீண்டு வந்து கண்ணசந்தோம். காலையில் எழுந்ததும் இரவு பார்த்த இடத்தை மீண்டும் தரிசிக்க உடல் பரபரத்தது. திரும்பவும் அதே பாதையில் பயணம். இரவின் தடங்களே இல்லாமல் முற்றிலும் புது அவதாரமெடுத்து நின்றது அந்தப் பள்ளத்தாக்கு. அன்று இரவுவரை அங்கேயிருந்தாலும் முந்தைய இரவின் காட்சி காணக்கிடைப்பது சந்தேகம்தான்.