Published:Updated:

இது இளைஞர் படை!

இது இளைஞர் படை!
பிரீமியம் ஸ்டோரி
இது இளைஞர் படை!

விவேக் ஆனந்த்

இது இளைஞர் படை!

விவேக் ஆனந்த்

Published:Updated:
இது இளைஞர் படை!
பிரீமியம் ஸ்டோரி
இது இளைஞர் படை!

து கபடி சீசன். ஐ.பி.எல்-லுக்கு அடுத்த படியாக இந்தியாவில் அதிகமானோர் பார்க்கும்  டி.வி நிகழ்ச்சி `புரோ கபடி.’  `கபடியின் பூர்வீகம் தமிழகம்’ எனச் சொல்லப்பட்டாலும் புரோ கபடியில் தமிழகத்துக்கு என ஓர் அணி முந்தைய  சீசன்களில் இல்லை. கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகளிலும் கவனம் செலுத்திவரும் சச்சின் டெண்டுல்கர், இப்போது தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளராகக் கபடிக்குள் நுழைந்திருக்கிறார். 

மண் தரையில் விளையாடியவர்கள், இன்று `மேட்’ கபடியில் கலக்குகிறார்கள். இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் ஜெய்ப்பூர் அணி ஒருமுறையும், மும்பை அணி ஒருமுறையும், பாட்னா அணி இரண்டு முறையும் வென்றிருக்கின்றன. சரி, தமிழ் தலைவாஸ் அணியின் வெற்றி வாய்ப்பு எப்படி, ப்ளஸ்-மைனஸ் என்னென்ன?

இது இளைஞர் படை!

இளம் படை

இந்திய அணியில் விளையாடிய சீனியர் ப்ளேயர்களுக்கு, புரோ கபடியில் எக்கச்சக்க கிராக்கி. ஆனால், தமிழ் தலைவாஸ் அணியில் சீனியர்  பிளேயர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.  இதுவரை இந்திய அணிக்காக ஆடிடாத இளம் வீரர்களே அணியில் நிறைந்திருக்கின்றனர். தமிழகத்திலிருந்து பிரபஞ்சன், திவாகரன், அருண், பிரபாகரன், நிதின் தங்கதுரை, ராஜேஷ், ஆனந்த குமார், விஜின் தங்கதுரை, மருது உள்ளிட்ட வீரர்கள் தமிழ் தலைவாஸ் அணியில் இடம் பெற்றுள்ளனர். 25 பேர்கொண்ட அணியில் 15 பேர்  25 வயதைத் தொடாதவர்கள்.

ஒன் மேன் ஆர்மி


கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில், இந்தியாவுக்கு செம டஃப் கொடுத்திருந்தது ஈரான். இந்தியா கிட்டத்தட்ட மேட்சைக் கோட்டைவிட்டிருக்க வேண்டிய சமயத்தில் அணியைத் தாங்கிப்பிடித்தவர் அஜய்  தாகூர். ரெய்டுக்குச் சென்று கொத்துக்கொத்தாகப் புள்ளிகளை அள்ளினார். இறுதிப்போட்டியின் நாயகன் மட்டுமல்ல, உலகக்கோப்பையின் தொடர் நாயகனும் அஜய்தான். தமிழ் தலைவாஸ், இந்த சீசனில் அஜய் தாகூரை சுமார் 69 லட்சம் ரூபாய் கொடுத்துக் கடும் போட்டிகளுக்கு மத்தியில் ஏலத்தில் எடுத்திருக்கிறது.

தமிழ் தலைவாஸ் அணிக்கு கேப்டன் பொறுப்பேற்றிருக்கும் அஜய் தாகூர், சடாரென ஒட்டுமொத்த உடலையும் கன்ட்ரோலோடு வைத்துத் தாவுவதில் வல்லவர். அஜய்யைப் பெரிதும் நம்பியிருக்கிறது டீம். அவர்  சொதப்பினால், ஆட்டம் க்ளோஸ்.

இது இளைஞர் படை!

ரெய்டர் பிரபஞ்சன்

இந்த சீசனில் அஜய் தாகூருக்குப் பக்கபலமான ரெய்டர் பிரபஞ்சன். சேலம் சங்ககிரியைச் சேர்ந்த பிரபஞ்சன், தன் அப்பா ஊரில் நடக்கும் போட்டிகளில் விளையாடியதைப் பார்த்து, பிறகு கபடியையே தன் கரியர் ஆக்கிக்கொண்டார். முதல் போட்டியில் அபாரமாக ஆடி ஏழு புள்ளிகளை எடுத்தார். இந்த சீசனின் சென்சேஷன் பிரபஞ்சனாக இருப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கிடுக்கிப்பிடி


21 வயது அமித் ஹூடாவை, 63 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்திருக்கிறது தமிழ் தலைவாஸ். ரெய்டுக்கு வரும் வீரர்களை, மின்னல் வேகத்தில் கிடுக்கிப்பிடி போட்டு வெளியேற்றக் கூடியவர் அமித். தமிழ் தலைவாஸ் அணியின் டிஃபென்ஸ்  டிப்பார்ட்மென்ட்டில் அமித்துக்கு பக்கபலமாக இருக்கக்கூடிய இன்னொரு வீரர், வடுவூரைச் சேர்ந்த சி.அருண். டாஷ் அடிப்பதிலும் சரி, பிளாக் செய்வதிலும் சரி அருண் கில்லாடி.

அரை இறுதியே முதல் இலக்கு


தமிழ் தலைவாஸ் அணிக்கு மிகப்பெரிய பலமே  பயிற்சியாளர் பாஸ்கரன்தான்.  முன்னாள் வீரரான பாஸ்கரன், தமிழகத்தைச் சேர்ந்தவர்;  சர்வதேசப் போட்டிகளில் இந்திய அணிக்குப் பல போட்டிகளில் தலைமை தாங்கியவர். கடந்த உலகக்கோப்பையில் இந்திய அணிக்குப் பயிற்சி அளித்தது பாஸ்கரனே. ``எந்த அணியையுமே எங்களுக்கு எதிரியாக நாங்கள் கருதவில்லை. என்னைப்  பொறுத்தவரை அனைத்து அணிகளுமே வலுவானவை. பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கிறோம். எங்களது முதல் இலக்கு,  பிளே ஆஃப்புக்குச் செல்வதே. சச்சின் டெண்டுல்கர்,  தமிழ் தலைவாஸ் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். அவரைப் போன்ற ஆள்கள் மற்ற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் தரத் தொடங்கியிருப்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். நிச்சயம் நம் அணி வீரர்கள் சிறப்பாக ஆடுவார்கள்” என்கிறார்.

தலைவன் பேரைக் காப்பாத்துங்க தலைவாஸ்!