Published:Updated:

குற்றங்களின் நகரா கண்ணகி நகர்?!

குற்றங்களின் நகரா கண்ணகி நகர்?!
பிரீமியம் ஸ்டோரி
குற்றங்களின் நகரா கண்ணகி நகர்?!

வெ.நீலகண்டன் - படங்கள்: மீ.நிவேதன்

குற்றங்களின் நகரா கண்ணகி நகர்?!

வெ.நீலகண்டன் - படங்கள்: மீ.நிவேதன்

Published:Updated:
குற்றங்களின் நகரா கண்ணகி நகர்?!
பிரீமியம் ஸ்டோரி
குற்றங்களின் நகரா கண்ணகி நகர்?!

`கண்ணகி நகரைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் கைது’, `போதைப்பொருள் விவகாரத்தில் கண்ணகி நகரைச் சேர்ந்த ஐந்து பேர் கைது’, `போலீஸ் ஸ்டேஷனை எரித்த வழக்கில் கண்ணகி நகரைச் சேர்ந்த எட்டு பேர் கைது’- சென்னையின் தினசரிகளைப் புரட்டினால், கண்ணகி நகரைப் பற்றிய ஒரு செய்தியாவது கண்ணில்படும். எல்லா செய்திகளுமே குற்றச் சம்பவங்களுக்காக இருக்குமே தவிர, கண்ணகி நகரைப் பற்றிய ஒரு பாசிட்டிவ் விஷயத்தைக்கூட கேட்க முடியாது.

சென்னையில் குற்றச்சம்பவங்கள் அனைத்துக்கும் கண்ணகி நகர்தான் காரணமா, ரெளடிகள், குண்டர்கள் அனைவரும் அங்குதான் இருக்கிறார்களா, கண்ணகி நகர் போதைப்பொருள் குடோனா? எனப் பல கேள்விகளுடன் கண்ணகி நகருக்குள் சுற்றிவந்தோம். பரிதாபமும், மக்களின் அழுகையும் வாழ்க்கை பற்றிய பல புரிதல்களைக் கொடுத்தது கண்ணகி நகருக்குள்ளான அந்தப் பயணம்.

குற்றங்களுடன் சம்பந்தப்படுத்தப்படும் கண்ணகி நகர் சென்னை நகருக்கு வெளியே சுமார் 20 கி.மீ தொலைவில் இருக்கிறது. ஐ.டி மாளிகைகள் சூழ்ந்த ராஜீவ் காந்தி ஐ.டி எக்ஸ்பிரஸ் வே-வில்தான் அமைக்கப்பட்டிருக்கிறது கண்ணகி நகர் குடியிருப்பு. வெளியில் இருந்து பார்க்க, சகல வசதிகளும் நிரம்பிய நகரைப்போல காட்சியளிக்கும் இக்குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தால் நாற்றம் குடலைப் புரட்டுகிறது.

இரண்டு பேர் நெருக்கிப் படுக்க மட்டுமே போதுமான வீடுகள். அதற்குள் சிறு சிறு தடுப்புகள் கட்டிச் சமையலறையும் கழிவறையும். சுருக்கமாகச் சொன்னால் கான்கிரீட் பொந்துகள். அதற்குள் தான் குடும்பம், குழந்தைகள் எல்லாம்.

குற்றங்களின் நகரா கண்ணகி நகர்?!

சென்னைக்குள் எந்தக் குற்றம் நடந்தாலும், காவல்துறை போய் இறங்குவது கண்ணகி நகரில் தான்.

“இன்னாப் பண்ணச் சொல்றே. எப்போ போலீஸ் வரும்... யாரைத் தூக்கிட்டுப் போவும்ன்னு சொல்லவே முடியலே. நேத்து வரைக்கும் நம்மகிட்ட நல்லாப் பேசிக்கிட்டிருக்கான். இன்னைக்குப் பாத்தா, செயினை அறுத்துட்டான், வீடு புகுந்து கொள்ளையடிச்சிட்டான், ஆளை வெட்டிட்டான்னு  கூட்டிக்கிட்டுப் போறாங்கோ. யாரு நல்லவன், யாரு கெட்டவன்னே கண்டுபிடிக்க முடியலே...” சலிப்பாகப் பேசுகிறார் ராஜு.

குற்றங்களின் நகரா கண்ணகி நகர்?!


ராஜுவின் அப்பா, மத்திய அரசு ஊழியர். தாத்தா டி.எஸ்.பி-யாக இருந்தவர். அப்பா இறந்தபிறகு, உறவினர்களோடு ஏற்பட்ட பிரச்னை காரணமாக, தேனாம்பேட்டை குடிசைப்பகுதிக்கு வந்தவர், அங்கு வசித்த ஸ்டெல்லாவைக் காதல் திருமணம் செய்து கொண்டார். ராஜு, பெயின்டிங் கான்ட்ராக்ட்ராக இருந்தார். வாழ்க்கை வளமாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில், ``வணிக வளாகம் கட்டப்போகிறோம்... இடத்தைக் காலி செய்யுங்கள்” என்று அதிகாரிகள் சொல்லி யிருக்கிறார்கள். மக்கள் மறுத்து போராட்டம் நடத்த, ஒருநாள் அப்பகுதியில் திடீரென தீப்பிடித்தது. வாழ்வாதாரம் இழந்து நின்றவர்களுக்கு, கண்ணகி நகரில் வீடு தருகிறோம் என்று இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

“சொந்தமா வீடு தர்றாங்களேன்னு ஆசையோட வந்தோம். வந்தாத்தான் தெரியுது இது நரகம்னு. கால் நீட்டிப் படுக்க முடியாத வீடு. ஆயிரக்கணக்குல டெபாசிட் கட்டச் சொன்னாங்க. 250 ரூபா மாத வாடகைன்னாங்க. கழிவுநீர் வெளியேறக்கூட வழி இல்லை. சாக்கடைக்குள்ளதான் கிடக்கிறோம்.

வேலைவெட்டியும் இல்லாமப் போச்சு. இப்போ, இதோ இந்த மரத்துக்குக் கீழேதான் நம்ம வாழ்க்கை. எந்த வருமானமும் இல்லை...” சோகம் ததும்பப் பேசுகிறார் ராஜு.

குற்றங்களின் நகரா கண்ணகி நகர்?!

1970-களில் சென்னையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசைப்பகுதிகள் இருந்தன. 1971-ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க., குடிசைப்பகுதி மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கில் குடிசைமாற்று வாரியத்தை உருவாக்கியது. ராம.அரங்கண்ணல் போன்ற அக்கறையுள்ள அரசியல் தலைவர்கள் குடிசைமாற்று வாரியத் தலைவர்களாக இருந்தனர். குடிசைவாழ் மக்களை அவ்விடத்தில் இருந்து வெளியேற்றாமல் பாதுகாத்து, அவர்களை நவீன அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடியமர்த்துவது இந்த வாரியத்தின் பிரதான நோக்கமாகக் குறிப்பிடப்பட்டது. மக்கள் வாழ்ந்த குடிசைகளுக்கு அருகிலோ சற்றுத் தொலைவிலோ அடுக்குமாடி வீடுகள் கட்டித்தரப்பட்டன.

1990-களுக்குப் பிறகு அரசின் கொள்கைகள் மாறின. மலிவுவிலையில் கிடைத்த மனித சக்தி, இயற்கை வளங்கள், அரசியல் சூழல் போன்ற காரணங்களால் வெளிநாட்டு நிறுவனங்கள், சென்னையைக் குறிவைத்தன. அவர்களை ஈர்க்கும் வகையில், சீர்மிகு சென்னை, அழகுமிகு சென்னை, சென்னையைச் சிங்கப்பூராக்கும் திட்டம், சென்னை-2000 போன்ற பெயர்களில் பல திட்டங்கள் உருவாக்கப்பட்டன. சாலை விரிவாக்கம், மேம்பாலம், பறக்கும் ரயில், மெட்ரோ ரயில் எனக் காரணங்கள் சொல்லி,  குடிசைப்பகுதிகள் அகற்றப்பட்டன.

தொடக்கத்தில், அகற்றப்பட்ட குடும்பங்களுக்கு இரண்டு சென்ட் நிலம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டது. பிறகு அதுவும் நீர்த்துப்போனது. 1997-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, கண்ணகி நகர் குடியிருப்புத் திட்டத்தை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். 2000-மாவது ஆண்டு முதல் குடியேற்றம் தொடங்கியது. தொடக்கத்தில், 3,000 குடும்பங்கள் கொண்டு செல்லப்பட்டன. படிப்படியாக சாந்தோம், திருவல்லிக்கேணி, திருவான்மியூர், சைதாப்பேட்டை, பெரம்பூர், ஆயிரம் விளக்கு உட்பட சென்னை முழுவதும் இருந்த 62 குடிசைப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கண்ணகி நகரில் குடியமர்த்தப்பட்டார்கள்.

குற்றங்களின் நகரா கண்ணகி நகர்?!

இப்போதைய நிலவரப்படி, கண்ணகி நகரில், 15,565 குடும்பங்களும், அருகே எழில் நகரில் உருவாக்கப்பட்ட குடியிருப்பில் 8,038 குடும்பங்களும் வசிக்கின்றன.

“மக்கள்தொகைன்னு பாத்தா, குறைந்தது ஒன்றரை லட்சம் பேர் இங்க இருக்காங்க. கிட்டத்தட்ட ஒரு பெரு நகராட்சி அளவுக்கு மக்கள்தொகை கொண்ட இந்தப் பகுதி மேல ஊராட்சி அளவுக்குக்கூட அரசு கவனம் செலுத்தல. 3,000 குடும்பங்கள் இருந்தபோது, ஒரு ஆரம்பச் சுகாதார நிலையம் இருந்துச்சு. இப்போ இவ்வளவு குடும்பங்கள் வந்தபிறகும் அந்த ஒரே ஆரம்பச் சுகாதார நிலையம்தான். மலேரியா, டெங்குன்னு எந்த நோய் வந்தாலும் முதல்ல இங்கே வந்து எங்களை வதைச்சுட்டுத் தான் நகரத்துக்குள்ள வரும். எங்க உயிருக்கெல்லாம் மதிப்பு இவ்வளவுதான்” குமுறலாகப் பேசுகிறார் கண்ணகி நகர் பொதுநல சங்கத் தலைவர் ஸ்டீபன்ராஜ்.

இவ்வளவு மக்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் ஒரு சமூகநலக்கூடம்கூட இல்லை. கண்ணகி நகரில் கட்டிய சமூகநலக்கூடத்துக்குக் காவல்துறை குடிவந்துவிட்டது. எழில் நகரில் கட்டிய சமூக நலக்கூடத்தைக் குடிசைமாற்று வாரியமே தங்களுக்கான அலுவலகமாக மாற்றிக்கொண்டது.

குற்றங்களின் நகரா கண்ணகி நகர்?!

தண்ணீருக்கு இந்த மக்கள் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. அடிபம்புகளில் வருகிற தண்ணீர் மஞ்சள் நிறத்தில் வருகிறது. குளிக்க, குடிக்க, சமைக்க எல்லாம் அதுதான்.

“அடிதடி, சண்டையெல்லாம் நடக்கும். காசிருக்கிறவங்க கேன் வாட்டர் வாங்கியாந்து குடிக்கிறாங்கோ. நமக்கெல்லாம் அதுக்கு வசதியில்லை. புதுசு புதுசா நோவு வருது. என்னா நோயி, எதுக்கு வருதுன்னு கண்டுபிடிச்சுச் சொல்லக்கூட எங்களுக்கு ஆளில்ல. சிட்டிக்குள்ள ஏதோ ஒரு யாவாரம் பண்ணி கையில நாலு காசாவது இருக்கும். இங்கே எல்லாம் போச்சு. தெருவுல பாரு, ஒரு ஆம்பளையும் வேலைக்குப் போறதில்ல. எங்கே போய் வேலை கேட்டாலும், கண்ணகி நகர்காரங்கனு  வேலை தர மாட்டேங்கிறாங்க. பொம்பளங்க தான் பக்கத்துல இருக்கிற அபார்ட்மென்ட்டுங்க,கம்பெனிகள்ல ஹவுஸ்கீப்பிங் வேலை செஞ்சு குடும்பத்தை ஓட்டிக்கிட்டிருக்கோம். நிறைய குடும்பங்கள் வட்டிக்குக் காசு வாங்கியே அழிஞ்சு போச்சு. குப்பை மாதிரி எங்களை அள்ளியாந்து இந்த மூலையில கொட்டிப்புட்டு அநாதிங்க மாதிரி விட்டுப்போயிட்டாங்க.” ஆவேசமாகப் பேசுகிறார் லட்சுமி.

இவ்வளவு பெரிய குடியிருப்பை உருவாக்கிய அரசு, அதற்கான வாழ்வாதார ஏற்பாடுகளையும், அடிப்படை வசதிகளையும் உருவாக்கித் தரவில்லை. எல்லா வீட்டுக்குப் பின்புறத்திலும், சாக்கடைநீர் குளமாகச் சூழ்ந்து நிற்கிறது.

இங்கே உத்தேசமாக 20,000 மாணவர்கள் இருக்கிறார்கள். ஆனால், இரண்டுக்கும் சேர்த்து நான்கு ஆரம்பப் பள்ளிகள், ஒரு மேல்நிலைப்பள்ளி மட்டுமே செயல்படுகிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், முன்பு படித்த மயிலாப்பூர், சாந்தோம், அடையாறு பகுதிகளில் உள்ள பள்ளிக்கே செல்கிறார்கள். காலை, மாலை மூன்று மணி நேரம் பஸ்சில் பயணிக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு, விஜயன், சேகர், பாலமுருகன், மனோஜ்குமார் ஆகிய நான்கு மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும்போது பேருந்தில் இருந்து விழுந்து உயிரிழந்தார்கள். இப்போது அரசு சில பேருந்துகளைக் கூடுதலாக விட்டிருக்கிறதே ஒழிய கண்ணகி நகரில் கூடுதல் பள்ளிகளைத் திறக்க முனைப்புக் காட்டவில்லை. அரசு நிர்மாணித்துள்ள வரைமுறைகளின்படி, கண்ணகி நகரின் மக்கள்தொகைக்கு 60 அங்கன்வாடிகள் இருக்க வேண்டும். வெறும் 25 அங்கன்வாடிகள் தான் இருக்கின்றன. அதிலும் 15 அங்கன்வாடிகளைத் தொண்டு நிறுவனங்கள் நடத்துகின்றன.

குற்றங்களின் நகரா கண்ணகி நகர்?!

“சின்ன வயசுலயே குழந்தைங்க கெட்டுப் போறதுக்கான எல்லா சூழலும் இங்கே இருக்கு. பொம்பளப் புள்ளைகள வீட்டுல வெச்சுக்கப் பயந்து சின்ன வயசிலேயே கல்யாணம் பண்ணிக் கொடுத்திடுறாங்க. இதைப்பத்தியெல்லாம் யாருங்க கவலைப்படுறா” கோபமாகக் கேட்கிறார் பூ விற்கும் வசந்தி.

கண்ணகி நகர் மக்களின் வாழ்வாதாரங்களுக்காக குரல் கொடுத்துவரும் இசையரசுவிடம் பேசினோம்.

“இங்கே வசிக்கிறதுல 80 சதவிகிதத்துக்கும் மேல தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவங்க. நகரத்துக்கான சேரியா இதை அரசு நிர்மாணிச்சிருக்கு. அப்படித்தான் புரிஞ்சுக்க வேண்டியிருக்கு. கண்ணகி நகர்ல இருக்கிற வீடுகள் வெறும் 120 சதுர அடிதான். இந்த வீட்டுக்குள்ள ஒரு தம்பதி, குழந்தைகளோட எப்படி வாழ முடியும்? அம்மாவும் அப்பாவும் ஒண்ணா இருக்கிறதைப் பார்க்கிற குழந்தையோட மனநிலை எப்படி மாறும்?

இவ்வளவு மக்களைக் கொண்டுவந்து இங்கே கொட்டிய அரசு அவங்களுக்கு ஏதாவது தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கா? அவங்க சாப்பாட்டுக்கு என்ன செய்வாங்க? காவல்துறை திட்டமிட்டு, கண்ணகி நகர்னா அது குற்றம் செய்றவங்க ஊர்னு ஒரு பிரசாரத்தைச் செஞ்சிருக்கு. அதனால வேலை கொடுக்கவே தயங்குறாங்க. இந்த மக்கள் வேறு என்ன செய்வாங்க? மற்ற பகுதிகள்ல குற்றவாளிகளே இல்லையா? கண்ணகி நகரை மட்டும் அப்படி சித்தரிக்கிறதுக்குப் பின்னாடி பெரிய அரசியல் இருக்கு. இந்த மக்கள் ஏழைகள். அவங்களை ஒருங்கிணைக்க முடியாது. அவங்களுக்குக் குரல்கள் இல்லை. அதனால யாரும்  அவங்களைப் பற்றிக் கவலைப்படுறதில்லை.

கடந்த 17 வருடங்கள்ல தமிழகத்தை ஆண்ட அரசுகள், கண்ணகி நகர் மாதிரி உருவாக்கப்பட்டுள்ள குடியேற்றப் பகுதிகளுக்கு என்ன  மாதிரி  திட்டங்களை உருவாக்கியிருக்காங்க, எவ்வளவு செலவு செஞ்சிருக்காங்கன்னு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடணும். இந்த மக்களோட வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த  ஆக்கப்பூர்வமான திட்டங்களைக் கொண்டு வரணும்” என்கிறார் இசையரசு.

புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் பகுதியில் 1,028 குடும்பங்களை அகற்றி கண்ணகி நகருக்கு அனுப்பிவிட்டு அந்தப் பகுதியில் ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் பூங்கா அமைத்திருக்கிறது அரசு. பூங்காக்களில் கொட்டும் கோடிகளில் ஒரு பங்கையேனும் கண்ணகி நகர் மக்களின் வாழ்வாதாரத்துக்காகச் செலவிட வேண்டும் என்பதுதான் அம்மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால், அரசுக்கு அந்தக் கோரிக்கையைக் கேட்க காதுகள் இருக்கின்றன. நல்மனம்தான் இல்லை!