Published:Updated:

கொஞ்சம் ஓய்வெடுங்கள் உசேன் போல்ட்!

கொஞ்சம் ஓய்வெடுங்கள் உசேன் போல்ட்!
பிரீமியம் ஸ்டோரி
கொஞ்சம் ஓய்வெடுங்கள் உசேன் போல்ட்!

அதிஷா

கொஞ்சம் ஓய்வெடுங்கள் உசேன் போல்ட்!

அதிஷா

Published:Updated:
கொஞ்சம் ஓய்வெடுங்கள் உசேன் போல்ட்!
பிரீமியம் ஸ்டோரி
கொஞ்சம் ஓய்வெடுங்கள் உசேன் போல்ட்!

ருவழியாகக் காட்லின், உசேன் போல்ட்டைத் தோற்கடித்துவிட்டார். எத்தனை ஆண்டுகாலப் போராட்டம்... எவ்வளவு வலி மிகுந்த பயணம்... ஒவ்வொரு முறையும் ட்ராக்கில் உசேன் போல்ட்டுக்குப் பக்கத்தில் ஓடத் தயாராகும்போதும் `இந்த முறையாவது முடியுமா...’ என்று புழுங்கித் தவித்த ஏக்கம்... ஒவ்வொரு முறையும் தோற்றுப்போய் உசேன்போல்ட்டுக்குப் பின்னால் எல்லைக்கோட்டைத் தாண்டும்போதெல்லாம் உண்டான ஆத்திரம்... எல்லாம் முடிந்துவிட்டது. இனி எதுவும் தேவையில்லை. இனி `உசேன் போல்ட்டைத் தோற்கடித்த ஒரே மனிதன்’ இவன்தான் என வரலாறு ஜஸ்டின் காட்லினைக் கைகாட்டும்.

ஐந்தாண்டுகாலக் கனவு நனவாகிவிட்டது. உசேன் போல்ட்டின் தடகள வாழ்வின் கடைசிப் பக்கத்தில் காட்லின் இடம் பிடித்துவிட்டார். மிகப்பெரிய சாதனைதான் இல்லையா? ஆனால், போட்டி முடிந்ததும் ஜஸ்டின் காட்லின் அந்த மகிழ்ச்சியை வெறித்தனமாக வெளிப்படுத்துவார் என்றே எல்லோரும் எதிர்பார்த்தனர். அவர் கதறி அழுவார் எனக் காத்திருந்தனர். ஆனால், அவர் செய்தது என்ன தெரியுமா?

உசேன் போல்ட்டுக்கு முன்னால் மண்டியிட்டு வணங்கினார். காரணம், காட்லின் தோற்கடித்தது சாதாரண ஓட்டக்காரனை அல்ல. யாருமே வெல்ல முடியாத ஓட்டத்தின் கடவுளை!

கொஞ்சம் ஓய்வெடுங்கள் உசேன் போல்ட்!

`மின்னல் மனிதன்’ உசேன் போல்ட் தன்னுடைய ஓய்வை அறிவித்துவிட்டார். இனித் தடகள வீரர்கள் அச்சம்கொள்ளத் தேவையிருக்காது. உசேன் போல்ட்டின் பாதம் படுமா என ஏங்கிக்கொண்டிருந்த தடகள ட்ராக்குகள் வருத்தப்படலாம். லண்டனில் நடந்த உலகத் தடகள சாம்பியன்ஷிப்பில் தன் கடைசி ஓட்டத்தையும் ஓடி முடித்துவிட்டார் உசேன். முகமது அலியைப்போல, மைக்கேல் ஜோர்டனைப்போல உசேனுக்கும் கடைசிப்போட்டித் தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. இருந்தும் இனி ஓட்டப்பந்தய வரலாறு உ.மு, உ.பி என்றே எழுதப்படும். காரணம் உலகத் தடகள அரங்கில் இந்த நெட்டைப்பையன் உண்டாக்கியிருக்கிற அதிர்வலைகள் அத்தகையவை!

வெறும் ஒருவேளை மதிய உணவுக்காகத் தொடங்கிய ஓட்டம் உசேனுடையது. உசேன் போல்ட் பரம ஏழையெல்லாம் இல்லை. மளிகைக்கடை வைத்திருந்த பெற்றோருக்குப் பிறந்த மிடில்கிளாஸ் பையன்தான். பள்ளியில் படிக்கும்போதே விளையாட்டில் தீராத ஆர்வம்கொண்ட குறும்புப்பையன்.   கிரிக்கெட்டும் ஃபுட்பாலும்தான் இஷ்டம். கிறிஸ்கெயில் தேசத்துப் பையன்கள் அனைவரையும் போலவே அவனுக்கும் கிரிக்கெட்தான் கனவு. வக்கார் யூனுஸ்போல் ஆக்ரோஷமான வேகப்பந்துவீச்சாளர் ஆக வேண்டும் என்பதே லட்சியம்.

ஆனாலும் உசேனுக்கான எதிர்காலம் ஓட்டத்தில்தான் இருந்தது. அதை முதன்முதலில் கண்டுபிடித்தவர் உசேன் படித்த பள்ளியின் விளையாட்டு வாத்தியார். உசேன் மதிய உணவை மறந்துவைத்துவிட்டு வந்திருந்த ஒருநாளில், ‘`உனக்கு என்னோட சாப்பாட்டைத் தரேன். ஆனா, அந்தப் பையைனோட ரன்னிங் ரேஸ் வைப்பேன், அதுல நீ ஜெயிக்கணும்’’ என்று முதன்முதலாக ஓட்டத்துக்குள் உசேனை இழுத்து வந்தார் வாத்தியார். அந்தப் போட்டியில் சிறுவன் உசேன் வென்று மதிய உணவைப் பெற்றுக்கொண்டான். அதற்குப் பிறகு எப்போதும் ஓட்டம்தான் உசேனின் உணவானது.

அடுத்த சில ஆண்டுகளிலேயே ஜமைக்கா முழுக்க உசேன் போல்ட் பிரபலமாகிவிட்டார். உசேன் போல்ட் ட்ராக்கில் இறங்கினாலே ``உசேன்...உசேன்..’’ என்கிற முழக்கம் கேட்கத் தொடங்கிவிட்டது. உசேன் ஓடுகிறார் என்று கேள்விப்பட்டாலே ரசிகர் பட்டாளம் குவிந்துவிடும். 16 வயதில் நினைத்துப்பார்க்க முடியாத புகழ்வெளிச்சம். குறும்புத்தனம் வேறு அதிகமாகிப் போட்டிகளுக்கும் பயிற்சிகளுக்கும் மட்டம்போட, ஜமைக்கா பிரதமரே தலையிட்டு இவனைக் கட்டுப்படுத்துங்கள் என நேரடியாக உத்தரவு போடுகிற அளவுக்கு பாப்புலர்! 

ஆனால், இந்தப் புகழ்வெளிச்சம் டீன் ஏஜ் பையனான உசேனுக்குத் தாங்க முடியாத மன அழுத்தத்தை உண்டாக்கியது. அந்தப் பையனுக்குள் தோல்வி குறித்த அச்சத்தை அதிகமாக்கியது. 2002-ல் ஜூனியர் தடகள உலக சாம்பியன்ஷிப்பின் 200 மீட்டர் இறுதிப்போட்டிக்குக் கிளம்பும்போது தன் காலணிகளைக்கூட மாற்றிப் போட்டுக்கொண்டு கிளம்புகிற அளவுக்கு அச்சமும் குழப்பமும் உசேனை நெருக்கியது. அம்மாதான் ஆறுதல் சொன்னார். வெற்றியோ தோல்வியோ அனைத்தையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் பக்குவத்தைக் கற்றுத்தந்தார். ``ரசிகர்களின் ஆரவாரத்தை எனக்கான உந்துசக்தியாக மாற்றிக்கொள்வது ஒன்றுதான் வெல்வதற்கான ஒரே வழி என்பதைக் கண்டறிந்தது அந்த போட்டியில்தான்’’ என்று பேட்டி ஓன்றில் சொல்லியிருக்கிறார் உசேன். கூடவே ``மற்ற போட்டியாளர்களைப்பற்றி அதிகமாக யோசிப்பதை நிறுத்தியபோதுதான் நான் வெற்றிகளைக் குவிக்க ஆரம்பித்தேன்’’ என்பதும் உசேனின் இன்னொரு டெக்னிக்.

கொஞ்சம் ஓய்வெடுங்கள் உசேன் போல்ட்!

தோல்விகளை விடவும் மிகச்சிறந்த பயிற்சியாளர் உலகிலேயே கிடையாது. 2007-ல் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் உசேன் போல்ட் டைசன் கேயிடம் படுதோல்வியைச் சந்தித்தார். பயிற்சியாளர் க்லென் மில்ஸிடம் போய்ப் புலம்புகிறார். ‘`நான் ஜெயிக்கணும்னா என்ன சார் செய்யணும்?’’ ஆவேசமாகக் கேட்கிறார். க்லென் யோசித்துவிட்டு, ‘`ஜெயிக்கணும்’’ என்கிறார் ஜென்துறவிபோல! அதற்குப்பிறகு எந்த ரேஸிலும் உசேன்போல்ட் தோற்கவேயில்லை. மிகச்சில போட்டிகள் தவிர்த்து முக்கியமான போட்டிகள் அத்தனையிலும் வெற்றிகளைக் குவிக்கத்தொடங்கினார். ‘`நீ ஜெயிப்பதற்கு முன்னால் தோற்கப் பழகவேண்டும், அவ்வளவுதான்’’ என்கிறார் உசேன்.

உசேன் போல்ட் மற்ற சாதனையாளர்கள் போல் அல்ல. அவர் எப்போதும் வாழ்க்கையை மிக எளிதாக எடுத்துக்கொள்பவராக இருக்கிறார். பார்ட்டியும் பெண்களும்தான் அவருடைய ஒட்டப்பந்தயங்கள் அற்ற வாழ்க்கையின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. தான் விரும்பியதை எல்லாம் செய்கிறவராக, பிரியப்பட்டதை உண்பவராகவே அவர் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார். தன் ஒலிம்பிக் மெடலை இரவு விருந்தில் தோழிகளுக்குப் பரிசாகத் தருகிற அளவுக்குக் உல்லாசர். ஆனால், ஓட்டப்பந்தயம் என்று வந்துவிட்டால் உசேன் போல்ட் வேறொரு மனிதன். அந்த மனிதனுக்குக் குறும்புத்தனம் ஆகாது. அங்கே பயிற்சியும் வெற்றியும் மட்டும்தான். அதற்காகத் தன்னைப் பயிற்சியாளரிடம் முழுமையாக ஒப்படைத்துக்கொள்கிறார். எத்தனை மூர்க்கமான பயிற்சிகளையும் முழுமனதோடு ஏற்றுக்கொண்டு செய்யத்தொடங்கிவிடுவார். காயம்பட்டு ஓய்வில் இருக்க நேர்ந்தபோதுகூட வீட்டில் நீச்சல் பயிற்சிகளைச் செய்துகொண்டிருந்தார்.

‘`எனக்குப் போட்டிகள் பிடிக்கும். ஆனால், பயிற்சிகள் பிடிக்காது. ரசிகர்களுக்கு முன்னால், ட்ராக்கில் ஓடுவதற்காகத்தான் நான் வாழ்கிறேன். அதற்காக எதையும் செய்வேன், பயிற்சியையும்!’’ இதுதான் உசேனின் வாழ்க்கை.

அந்த நூறுமீட்டர்களை ஓடிக்கடக்க கோடி மீட்டர்களை ஓடி ஓடி பயிற்சி பெற்றவை போல்ட்டின் கால்கள். செய்கிற எதையுமே நம்மையும் பிறரையும் மகிழ்விப்பதற்காகச் செய்ய ஆரம்பிக்கும்போது அது தன் நோக்கத்தில் முழுமையை எட்டிவிடுகிறது. 

‘`நான் விளையாட்டு வீரன் அல்ல; நான் ஒரு என்டர்டெயினர். மக்களை மகிழ்விப்பவன். அதற்காகத்தான் ஓடுகிறேன்.’’ இவர்தான் உசேன்போல்ட். 

மக்களை பரவசத்தில் ஆழ்த்திய பாதங்கள் இனியாவது ஓய்வெடுக்கட்டும்.