Published:Updated:

இப்படி ஓர் அரசு தேவையா?

இப்படி ஓர் அரசு தேவையா?
பிரீமியம் ஸ்டோரி
இப்படி ஓர் அரசு தேவையா?

இப்படி ஓர் அரசு தேவையா?

இப்படி ஓர் அரசு தேவையா?

இப்படி ஓர் அரசு தேவையா?

Published:Updated:
இப்படி ஓர் அரசு தேவையா?
பிரீமியம் ஸ்டோரி
இப்படி ஓர் அரசு தேவையா?

ரே ஓர் ஓட்டுதான் போட்டோம். ஆனால், அதற்குள் மூன்று முதல்வர்களைப் பார்த்துவிட்டோம். இன்னும் எத்தனை முதல்வர்கள் வருவார்களோ, போவார்களோ தெரியாது! ஆளுங்கட்சியில் நடக்கும் உள்ளடி வேலைகளையும், முதுகுக்குப் பின் நடக்கும் மர்ம நாடகங்களையும் பார்க்கும்போது, நடப்பது நிலையான ஆட்சி அல்ல என்பது பட்டவர்த்தனமாகிறது. ‘அதிகாரிகள் யாரும் என் பேச்சைக் கேட்பதில்லை’ என்று ஓர் அமைச்சரே பொதுவெளியில் வெளிப்படையாகச் சொல்கிறார் என்றால் என்ன பொருள்? ‘இந்த ஆட்சி இன்னும் ஒரு சில நாள்களுக்குத்தான்’ என்று அந்த அதிகாரி கருதுகிறார் என்றுதானே அர்த்தம்.

இப்படி ஓர் அரசு தேவையா?


அதிகாரிகள், அமைச்சர்களின் பேச்சைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளாததற்குக் காரணம் என்ன? ஆளுங்கட்சி முதலில் இரண்டாக உடைந்து, இப்போது மூன்றாகவும் உடைந்துவிட்டது. ‘இன்னும் இந்தக் கட்சி ஒரு சில மாதங்களுக்குத்தான்’ என்று ஓர் அணியின் தலைவராக இருப்பவர் முதலமைச்சரை மிரட்டுகிறார். ‘முதல்வரை நீக்கும் அதிகாரம் எனக்கு உண்டு’ எனக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் என்று சொல்லிக்கொள்பவர் அதட்டுகிறார். ‘மடியில் கனம் இருப்பவர்கள், அதிகாரம் இருக்கும் வரை சுருட்டிக்கொள்ளப் பார்க்கிறார்கள்’ என்று முதலமைச்சரையும், அமைச்சர்களையும், கட்சிக்காரர்களையும் பார்த்து ஒருவருக்கொருவர் ஊடகங்களின் வழியாகக் குற்றச்சாட்டுகளைப் பரிமாறிக்கொள்கிறார்கள்.

ஆளுங்கட்சியின் நிலைமை இப்படிப் பரிதாபமாக இருப்பதால்தான், எந்த அணிக்கு எத்தனை எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள் என்று அதிகாரிகள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். மீசையில் மண் ஓட்டவில்லை என்பதுபோல நடித்துக் கொண்டிருக்கும் ஆளுங்கட்சியினர் ‘மேலும் நான்கு ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்வோம்’ என்று சொன்னாலும், காலையில் ஓர் அணி, மதியம் ஓர் அணி, மாலையில் மூன்றாவது அணி என்று மாறிமாறி இடம் மாறித் தங்களின் இருப்பைக் காப்பாற்றிக்கொள்ள அலைகிறார்கள்.

இவர்களை நம்பித்தான் நம் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ‘நீட்’ தேர்வின் முடிவை ஒப்படைத்திருக்கிறோம்; நம் விவசாயிகளின் ஜீவாதாரப் பிரச்னையாக விளங்கும் காவிரி நீர் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வழக்கை ஒப்படைத்திருக்கிறோம்; இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களின் எதிர்காலத்தை ஒப்படைத்திருக்கிறோம்.

இன்னொருபுறம், காவல்துறையின் கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி, தலைநகரே ஸ்தம்பிக்கும் வகையில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். அடையாள வேலைநிறுத்தம், முழுவேக வேலைநிறுத்தம் என்று அரசுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார்கள்.

மாநிலத்தில் நிலவும் இந்த அசாதாரண நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு மும்முரமாக இருப்பது இன்னும் பயங்கரம்.

இந்த அரசு ஸ்தம்பித்து நிற்கிறது; மத்திய அரசால் ஆட்டிவைக்கப்படுகிறது; சொந்தக் கட்சியினராலேயே மிரட்டப்படுகிறது. ஆனால், ‘மாமூல்’ வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்றும் சொல்கிறது. வெட்கக்கேடு!