Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 49

ஆண்பால் பெண்பால் அன்பால் - 49
பிரீமியம் ஸ்டோரி
ஆண்பால் பெண்பால் அன்பால் - 49

#MakeNewBondsஆர்.ஆர்.சீனிவாசன் ஆவணப்பட இயக்குநர் - படங்கள்: சி.சுரேஷ்பாபு

ஆண்பால் பெண்பால் அன்பால் - 49

#MakeNewBondsஆர்.ஆர்.சீனிவாசன் ஆவணப்பட இயக்குநர் - படங்கள்: சி.சுரேஷ்பாபு

Published:Updated:
ஆண்பால் பெண்பால் அன்பால் - 49
பிரீமியம் ஸ்டோரி
ஆண்பால் பெண்பால் அன்பால் - 49

டக்கக் கூடாதது நிகழ்கிறது, பார்க்கக் கூடாதது காட்சியாகிறது, தொலைந்துபோகக்கூடியது எல்லோருக்கும் பரப்பப்படுகிறது. இந்தியாவில் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்குமான ரகசியங்களும் அந்தரங்கங்களும்கூட சாத்தியமில்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. காதலன் தன்னுடைய நிர்வாண உடலைத் தன் காதலிக்குக் காட்டுவதற்கு முன்பாக, காதலியின் நிர்வாண உடலை அவன் பார்ப்பதற்கு முன்பாக, காதலித்ததற்காக, ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்ததற்காக, சூரியனுக்குக் கீழே நூற்றுக்கணக்கான ஆண்களுக்கு முன்னால் இருவரும் நிர்வாணமாக்கப்பட்டு ஒருவரை ஒருவர் சுமந்து பல பேரால் துன்புறுத்தப்பட்டு, மனித இனமே வெட்கித் தலைகுனிய வேண்டிய கொடூரம்  இந்தியாவில்தான் நடந்தேறியுள்ளது. இது யதேச்சையான  நிகழ்வன்று. பல காலம் பயிற்றுவிக்கப்பட்டுச் சிந்தனைகளில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஆழப்பதியவைக்கப்பட்ட வலுவான சித்தாந்தங்கள் இதன் பின்னால் உள்ளன. கடவுளும், காவியங்களும், மதங்களும் இதனோடு அணிவகுத்து நிற்கின்றன. மிகவும் வேதனையை ஏற்படுத்திய, ஆண் - பெண் அந்தரங்க உறவின் படிநிலையை, சாதிய அமைப்பு எப்படிப் பார்க்கிறது என்பதற்கான துயரம் மிக்க உதாரணம் இது.

சிறு குழுக்களாக இருந்தவர்கள், பெரும்பான்மையான குழுக்களைக் கட்டுப்படுத்தக் கட்டமைக்கப்பட்டதே படிநிலைச் சாதிய அமைப்பு; தங்களை நேரடியாகச் சம்பந்தப்படுத்தாமல், பெரும்பான்மையான தொல்குடி மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்ந்து மோதிக்கொள்ளவே உருவாக்கப்பட்ட சாதி அமைப்பு. `பெண்களை ஒட்டுமொத்தமாகக் கட்டுப்படுத்தவே உருவாக்கப்பட்டது’ என்கிறார் அம்பேத்கர். அதாவது, `சாதியத்தின் தோற்றமே பெண்களை அடிமைப்படுத்த மட்டுமே’ என்று சொல்லும் அம்பேத்கர், இதைப் பல பக்கங்களில் விரிவான ஆய்வுகளுடன் துல்லியமாக விளக்குகிறார்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 49

இன்னும் இன்னும் விளக்கமாகச் சாதியை நம்புகிறவர்கள், சாதியை ஆதரிப்பவர்கள், சாதியை நடைமுறையில் அனுசரிப்பவர்கள் பெண்களை நேரடியாக அடிமைப்படுத்துகிறார்கள் என்றே சொல்லலாம். தாய்ச்சமூக மரபின் தன்மைகள் பொதிந்துள்ள அதே வேளையில், ஆணாதிக்கச் சாதிய அடுக்குகளைப் பின்பற்றும் குழப்பமான ஆணாதிக்கச் சமூகமே நமது. ஏனெனில், தாய்ச்சமூக மரபின் வேர்கள் அன்றாட வாழ்வின் பாதைகளில் எப்போதும் பரவிக்கொண்டே இருக்கின்றன. அந்தப் பழக்கமே நம் சமூகத்தைப் பேணிவருகிறது என்றும் சொல்லலாம்.

இவ்வாறு சமூகத்தையும் வரலாற்றையும் சாதிய அடுக்குகளையும் சுட்டிக்காட்டி விளக்குவது எளிது. தெருவில் எரியும் விளக்கை நம்மை நோக்கியும் நமக்குள்ளாகத் திருப்புவது எளிதன்று. நிலத்தில் காலூன்றியபடி பெண் ஆணையும், ஆண் பெண்ணையும் எடை போடவோ, தரப்படுத்தவோ முயன்றால், அது பெரும் குற்றச்சாட்டுகளிலேயே முடியும். வாழ்வதற்கு சிறு பறத்தல் தேவைப்படுகிறது. சிறகுகள் முளைத்த உறவுகள், அவ்வப்போது பறந்து சென்று உறவுகளைச் சீர்செய்ய முடியும். கலை, இலக்கியங்கள், திரைப்படங்கள் இன்னபிற யாவும் சிறகுகளாக எப்போதுமே முளைத்திருக்க வேண்டும்.

நான் என் குடும்பத்தில் மூத்தவன். என் தம்பிகள், தங்கைகளைவிட என்மேல் குடும்பத்தினர் அதிகக் கவனம் செலுத்தியதாகவே நான் உணர்கிறேன். இன்னும் சொல்லப்போனால்,  நான் பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்டேன். 18 வயதுவரை எங்குமே தனியே செல்ல அனுமதிக்கப்பட்டதில்லை; என்னை எந்த வேலையையும் செய்யவிட்டதில்லை. ஆணும் பெண்ணும் சமம் என்றில்லாமல், ஒரு முழு தடித்த ஆண்மகனாக, செவ்வனே வளர்க்கப்பட்டேன். அதுவும் முழு குடும்பத்தினரின் அதி தீவிர கண்காணிப்பில். குறிப்பாக, என்னுடைய அம்மா ஒவ்வொரு செயலையும் முழுமையாகக் கண்காணித்தபடியே இருப்பார். இருபது வயதுக்கு மேலேயே இதிலிருந்து வெளியேறி உலகைப் பார்த்தேன். தாமிரபரணி நதிக்கரையில் பிறந்தாலும் இன்று வரை எனக்கு நீச்சல் தெரியாது. சொல்லப்போனால், நல்ல ஓர் ஆணாதிக்கவாதியாக முழுமையாக வளர்க்கப்பட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆண்பால் பெண்பால் அன்பால் - 49ஆனால், இவை யாவும் என்னுடைய குணங்களாக எந்த நண்பர்களும் என்னிடம் உணர்ந்ததில்லை. என்னுடைய எல்லா குணங்களையும் மீறி என்னுடைய பாட்டியின் அன்பும் ஆளுமையும் என்னை முழுமையாக ஆக்கிரமித்திருந்தன. அதுவே, என்னுடைய ஆளுமையாகவும் மலர்ந்தது. சக நண்பர்களும் உறவினர்களும், ஆலமரம் எனக் கிளை பரப்பியிருந்த என் பாட்டியின் அன்பை என்னை அறியாமல் பரப்புரை செய்து வந்தேன் என்றே தோன்றுகிறது. குழந்தைகள், மிக நிச்சயமாகப் பாட்டி- தாத்தாவின் நிழலிலேயே வளர வேண்டும். இளமையின் வேகத்தில் அம்மாவும் அப்பாவும் குழந்தைகளை முழுமையாக உணர்வார்களா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது அல்லது குழந்தைகளின் வேகம் முழுமையாகச் சரணடைவது தாத்தா-பாட்டியின் பேரன்பில்தான். ஒரு பாட்டியின் கைகளில் வளர்ந்த பேரன், மிக நிச்சயமாக வேறோர் ஈடு செய்ய முடியாத வாழ்க்கையைப் பெறுகிறான். அந்த வகையில் ஒரு பாட்டியால் வளர்க்கப்பட்ட பேரன் நான். பாட்டியுடன் இருந்த நாள்கள், `சிலப்பதிகார’ காவிய நாள்களாகவே இன்றும் என் நினைவில் உள்ளன. எல்லா சம்பவங்களும் ஒவ்வொரு நாளும் என் மனதில் அழியாவண்ணம் உள்ளன.

`ஆணும் பெண்ணும்’ என்ற சித்திரமே எனக்கு `பாட்டியும் பேரனும்’ என்றே பதிந்துள்ளது. பாட்டியின் சிறிய வீடு, அருவிகளும், மலைகளும், குகை ரகசியங்களும் நிறைந்த மாபெரும் வனமாக இருந்தது. ஒவ்வொரு நாள் காலையும் மாலையும் பாட்டியைச் சந்திப்பேன். பள்ளிக்குச் செல்லும் முன், பள்ளியிலிருந்து வந்த பிறகு, ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மலர்கள் பூத்திருக்கும்  அன்பு வழி அது. வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் எனக்கும் தனியான உபசரிப்பு இருக்கும். யாருக்கும் தெரியாமல் எனக்கு மட்டுமே தனியே பலகாரங்களை ஒளித்து வைத்திருப்பார். அதைச் சாப்பிட்டுவிட்டு எனக்குத் தெரியாமல் ஒளித்து வைத்திருக்கும் பலகாரங்களைத் திருடித் தின்பது என்னுடைய வேலை. எங்களுடைய முழு குடும்பமும் அவரது ஆளுமையின் கீழ் இருந்தது. அதாவது அன்பின் கீழ்.

பாட்டியின் கதைகளும், நான் பார்த்த அவரது கதையுமே என்னில் முழுமையாக நிரம்பி வழிகின்றன. வறுமையான குடும்பத்தில் இருந்தார் என் பாட்டி. என் தாத்தாவோ, முழுமையான ஆதிக்கவாதியாக பல எரிசொற்களை என் பாட்டியின் மேல் வீசிக்கொண்டிருப்பார். கட்டுவதற்கு நல்ல சேலைகூட இல்லாத நிலை பற்றியும், ஒரே ஒரு சேலையை வைத்துக்கொண்டு, வீட்டின் உள்ளே நிர்வாணமாக இருந்தது பற்றியும் பாட்டி அடிக்கடி கூறுவார். பாட்டி இளவயதில், தன்னிடம் ஒரே ஒரு ரவிக்கைதான் இருப்பதாகவும், மேலும் ஒரு ரவிக்கை வேண்டும் எனத் தாத்தாவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் ஏதோ அசிங்கமாகச் சொல்லித் திட்டியிருக்கிறார்.  பாட்டிக்கு வந்ததே கோபம். இருந்த ரவிக்கையையும் கழட்டி வீசினார். சாகும்வரை அவர் ரவிக்கையே அணியவில்லை. இப்படிப் பாட்டியின் பிடிவாதத்தால் குடும்பமே நடுங்கியது.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 49

மங்கலான மஞ்சள் குண்டு பல்புகள் எரிந்த காலம். என் அம்மாவுக்கு மூளையின் நரம்பில் பிரச்னை ஏற்பட்டது. எதிரில் இருப்பவர்கள் இரண்டு இரண்டு நபர்களாகத் தெரிய ஆரம்பித்தார்கள். மிகவும் சிக்கலான அபாயக்கட்டம். ``நாங்கள் மருத்துவத்துக்குச் சென்னை செல்கிறோம். அம்மா மீண்டும் உயிருடன் திரும்புவார்களா என்று தெரியவில்லை, நீங்கள் எல்லோரும் பாட்டியுடன் பத்திரமாக இருக்க வேண்டும்’’ என்று அப்பா தெரிவித்தார். யாரும் எதுவும் பேசவில்லை. எனக்கு இரண்டு தம்பிகள், இரண்டு தங்கைகள். எல்லோரும் அமைதியாக அழுதுகொண்டிருந்தோம். அம்மாவையும் அப்பாவையும்  வழியனுப்ப நானும் பாட்டியும் ஜங்ஷனுக்குச் சென்றோம். பாட்டி, வழி நெடுக யோசித்துக்கொண்டே வந்தார்; பேருந்து சென்னை கிளம்பவும் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார். ஒருவேளை அம்மா வராவிட்டால், ஐந்து குழந்தைகளின் நிலையும் என்னவாகும் எனத் துடித்துவிட்டார். வழியனுப்பிவிட்டு, ஆட்டோவில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தோம். என்னுடைய கையைப் பிடித்தபடி அழுதுகொண்டே வந்தார். திடீரென சுருண்டு விழுந்துவிட்டார். மூச்சுமில்லை, உடல் அப்படியே உறைந்துவிட்டது. ``பாட்டி...’’ எனக் கத்தினேன். ஆட்டோ டிரைவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. டிரைவரிடம் ``வண்டியை ஹைகிரவுண்டுக்கு விடுங்கள்’’ என்று சத்தம் போட்டேன். அப்போது நான் சிறுவன். நான் கத்தியதில் டிரைவர் பயந்துவிட்டார். நான் பாட்டியைத் தூக்கிவைத்துக்கொள்ள, ஆட்டோ மருத்துவமனைக்கு விரைந்தது. வழியெங்கும் நான் அலறிய அலறலில் எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். ஆட்டோ மருத்துவமனைக்குள் நுழைய, பாட்டியை நான் தூக்கிச் சென்றேன். ``என் பாட்டியைக் காப்பாற்றுங்கள்’’ என்று கூப்பாடு போட்டதில் எல்லோரும் பயந்துவிட்டனர், `யாரோ பைத்தியக்காரச் சிறுவனோ’ என்று. விளாதிமீர் போகமலோவின், `இவான்’ படிக்கும்போது, அது என் வாழ்க்கை மாதிரி இருந்தது.

 மூன்றுமணி நேரம் கழித்து பாட்டி எழுந்தார். குளுகோஸ் ஏறிக்கொண்டிருந்தது. அரசு மருத்துவமனையின் நூற்றுக்கணக்கான வார்டைப் பார்த்தவுடன் அவருக்குக் குழம்பிவிட்டது. அவருடைய வாயிலிருந்து வந்த முதல் வரி, ``நான் என் குழந்தைகளைப் பார்க்கணும். அவர்கள் சாப்பிடாமல் இருப்பார்கள்’’ என்பதுதான். எழுந்து உட்கார முயன்றார். மருத்துவர்கள் விடவில்லை. அடுத்து, ``நான் வீட்டுக்குப் போகணும்’’ என்றார்.  ``நீங்கள் மூன்று நாள்கள் இங்கே இருக்க வேண்டும்’’ என்றனர். ``அய்யோ, என் குழந்தைகள்’’ என்று கத்தினார். இவர்கள் விட மாட்டார்கள் என்று அவருக்குத் தெரிந்துவிட்டது. ``அடேய்... என்னை விடுங்கடா’’ என்று ஓங்கி ஒரு குரல் கொடுத்தார், வார்டே அலறியது. குளுகோஸ் ஏறிக்கொண்டிருந்த நீடிலைப் பிய்த்து எறிந்தார். கட்டிலிலிருந்து  இறங்கி மருத்துவரைப் பிடித்து ஒரு தள்ளு தள்ளினார். வழிமறித்தவர்களை எல்லாம் பார்த்து ஒரு முறைப்பு முறைத்தார். வழி தானாகத் திறந்தது. நான் பின்னாலேயே ஓடினேன். ஒரு பேருந்தில் ஏறி, வீடு வந்து சேர்ந்தோம். அதற்குப் பிறகு நீண்டகாலம் நலமுடன் இருந்தார். அவ்வப்போது குடும்ப நிகழ்ச்சிகளில் எல்லாம் தன்னுடைய பேரனின் வீரத்தைச் சொல்லி மகிழ்வார். அவர் சொல்லும்போது நானும் பாட்டியின் வீரத்தை எல்லோருக்கும் சொல்வேன். எல்லோரும் சிரிப்பார்கள்.

புற்றுநோயால் அவரின் வாழ்நாள்கள் கடந்துகொண்டிருந்தன. அவருடைய சுருக்குப்பையினுள் இருந்த புகையிலையே அவருக்கு முடிவைக் கொண்டுவந்தது. யாருக்குமே தராத அந்தச் சுருக்குப்பை, அவர் உயிரன்பின் வாசலாக இருந்தது. எல்லோரும் `அவர் அந்த அழுக்குச் சுருக்குப்பையை   எப்போது திறப்பார்?’ எனக் காத்திருப்போம். பண உதவி, புகையிலை,வெற்றிலை என அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி அது. அவருடைய உடல் சிதிலமடையத் தொடங்கியது. ஒரே ஒருமுறை படுக்கையில் நீர் போனது. அதோடு உணவையும் நீரையும் அருந்த மறுத்துவிட்டார். அவருடைய இரு மகள்களும் அதாவது என்னுடைய அத்தைகள் இருவரும் உருக்குலைந்த உடலை ஒட்டுத்துணியின்றி குளிப்பாட்டிக் கொண்டிருந்தனர். அப்போது அவரது உடல், முதுமக்கள் தாழிக்குள் அடைபடும் உடலாக இருந்தது. எதிர்பாராமல் அந்த அறைக்குள் நுழைந்துவிட்டேன்.  ``விஜி...” என்று என்னைப் பார்த்து ஓலமிட்டார். அந்தப் பார்வை, என்னுள்ளே அப்படியே உறைந்துவிட்டது. பிறகு, பாட்டியும் உறைந்துவிட்டார்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 49

பாட்டி இறந்தபோது எங்கள் தெருவே சூன்யமாகிவிட்டது. யாருமே எதுவும் பேசவில்லை. ஆழமான, அழுத்தமான அமைதி குடும்பத்தின் உள்ளும் நிலவியது. `இழக்கக் கூடாததை இழந்துவிட்டோம். இனி இந்த அத்தியாயம் நிகழாது’ என்ற தவிப்பு. எந்த அதிகாரமும் செய்யாமல் பேரன்பினால் மாபெரும் அதிகாரமாக உருவெடுத்திருந்தார். அத்துடன் என் வாழ்க்கையில் எல்லாமே நின்றுவிட்டன. இன்றுவரை எனக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. வைக்கம் முகம்மது பஷீரும், மசனாபு புகோகாவும் என்னைத் தேற்றினர். என்னென்னமோ செய்கிறேன், எங்கெங்கோ பயணிக்கிறேன், நிற்காமல் ஓடுகிறேன்... தெரு எங்கும் வயதான பிச்சைக்காரிகள், கீரை விற்பவர்கள், சாமியாரினிகள், பைத்தியக்காரிகள், மீன் விற்பவர்கள் ஆகியோரிடம் பாட்டியைப் பார்க்கிறேன்.

கேமராவோடு இருந்தால் கேமராவைக் கீழே வைத்துவிட்டு அவர்களைப் பார்க்கிறேன். கேமரா இல்லையெனில், கேமராவைத் தேடுவேன். அவர்களும் என்னைப் பார்க்கின்றனர். நான் தேடுவது புரிந்து அவர்கள் என்னைக் கைகளால் ஆசீர்வதிப்பதும் உண்டு. உறவுகளின் வழியே எல்லாவற்றையும் கடக்க வேண்டும் என்பதே நியதி. பள்ளி நண்பர்கள், தெரு நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், இலக்கிய, திரைப்பட நண்பர்களால் வழிகள் திறக்கின்றன.

வாழ்க்கையின் இறுக்கங்களும் அதிகாரங்களும் அன்றன்றே உடைக்கப்பட வேண்டும் என்று தெரிகிறது. ஒவ்வொரு நாளையும் புதிதாகச் சிந்திக்க வேண்டும். ஆழமான வாசிப்பு, பிறகு படித்ததை விடுதல், பயணங்கள் என நம்மைச் சுற்றியிருக்கும், அழுத்தும் சாதி மத ஆணாதிக்க அதிகாரக் கோரப்பிடியிலிருந்து அன்றாட வாழ்வின் மேன்மை அடைய எல்லையற்ற சிந்தனையும், ஆழ்ந்த மோனமும், ஓய்வற்ற செயலுமே சாத்தியம்.

`உயிரின் சுபாவம் ஆனந்தம்’ என்கிறார் தேவதேவன். தீர்வுகள், தினசரி சிந்திப்பதில் தொடங்குகின்றன. பல உறவுகளைக் கடந்து நம்மை நாம் கண்டுபிடிப்பதும், பிறரோடு இணைவதும் நம் குழந்தைப்பருவச் சாயல்களேயன்றி வேறில்லை. அதை வழிநடத்துவதும் நாம் பெற்ற பேரன்பின் மிச்ச சொச்சங்களே. என் பாட்டியின் முழங்கை சுருக்கங்களைத் தேடி அலைகிறேன். அவை ஒருநாள் குட்டிரேவதியின் முழங்கையில் மின்னி மறைந்தன. அன்றிலிருந்து அவரோடு பயணம். என் உடலோடு ஒட்டியுள்ள ஆணுடல் திமிர், அதிகார வெறி, பொறுக்கித்தனங்கள், சாதிய வெறி எனச் சாக்கடைகள் ரத்தத்தோடு கலந்து பயணத்தைக் கடினமாக்குகின்றன. ஆனாலும் மீறி ஒளிரும் பாட்டியின் அன்பு வழித்தடம், எங்கள் பயணங்களை இனிதாக்குகிறது.  பயணங்கள் வழி பயணங்களைக் கடக்கிறோம்.

திரைப்படங்களைப் பற்றிக் குறிப்பிடாமல், என்னால் எதுவும் எழுத முடியாது. சாப்ளினின் `சிட்டி லைட்ஸ்’ திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் பார்வையற்றப் பெண்ணுக்குப் பார்வை கிடைத்த பிறகு தனக்கு உதவி செய்தது சாப்ளின்தான் என அறியாமல் இருப்பார். அப்போது அவளருகே சென்று கீழே விழுந்த ரோஜாவை எடுத்துக் கொடுப்பார். அந்த மின்னல் பொழுதே தூரத்தில் இருவரும் தொட்டார்களா இல்லையா எனத் தெரியாது. அந்தப் பெண் அவரைக் கண்டு உணர்ந்துகொள்வாள். அறிவியல் மேதை ஐன்ஸ்டின் இந்தக் காட்சியைப் பார்த்துக் குலுங்கி அழுதார், `அய்யோ பாவம், போகட்டும்.’

இந்தக் காட்சியைச் சாப்ளின் எப்படிப் படமெடுத்தார் என்பதுதான் ஆவணப்பட இயக்குநரின் கவலை. சாப்ளின் இதைப்பற்றி எழுதியிருக்கிறார், இந்தக் காட்சியை நூற்றுக்கணக்கானமுறை ஒத்திகை பார்த்திருக்கிறார். பல ஷாட்டுகள் திரும்பத் திரும்ப எடுக்கப்படுகின்றன. ஆனால், குறிப்பிட்ட காட்சியில் மட்டுமே அந்த `மந்திர யதார்த்தம்’ நடந்திருக்கிறது. அதனாலேயே அதை அவர் பயன்படுத்தியுள்ளார். அதாவது அவரே நடிகர், அவரே இயக்குநர், திரும்பத் திரும்ப நடிக்கிறார், இயக்குகிறார், எதுவும் சரியாக இல்லை. திடீரென, ஒரு ஷாட்டில் `தான் நடிப்பதை’ அவரே விலகியிருந்து பார்த்து நடிக்கிறார். அதுவே திரையில்  மின்னுகிறது. வாழும்   வாழ்க்கையிலிருந்து என் வாழ்வை விலகிப்பார்த்து வாழ முயல்கிறேன்.

- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

நான் என் கைவிளக்கை
ஏற்றிக்கொண்டதன் காரணம்
என்னைச் சுற்றியுள்ளதை
நான் கண்டுகொள்வதற்காகவே;
என் முகத்தை உனக்குக் காட்டுவதற்காக அல்ல;
 
நீ என் முகத்தைக் கண்டுகொள்வதற்கும்தான்
என்கிறது ஒளி!

- தேவதேவன்

`மனித இனம் எதையுமே அறிந்திருக்கவில்லை,
எதற்கும் உள்ளார்ந்த மதிப்பு என்பதே கிடையாது,
அனைத்து செயல்களும் வீணான,
பொருளற்ற முயற்சிகளே!’

 - மசானபு ஃபுகோகா

ண்ணீர், பூமியின் ரத்தம்!

- வைக்கம் முகம்மது பஷீர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism