Published:Updated:

நதிநீர் இணைப்பு! - சாதித்தாரா சந்திரபாபு நாயுடு?! - லைவ் ரிப்போர்ட்

நதிநீர் இணைப்பு! - சாதித்தாரா சந்திரபாபு நாயுடு?! - லைவ் ரிப்போர்ட்
பிரீமியம் ஸ்டோரி
நதிநீர் இணைப்பு! - சாதித்தாரா சந்திரபாபு நாயுடு?! - லைவ் ரிப்போர்ட்

துரை.நாகராஜன், இரா.கலைச் செல்வன் - படங்கள்: ஸ்ரீனிவாசலு

நதிநீர் இணைப்பு! - சாதித்தாரா சந்திரபாபு நாயுடு?! - லைவ் ரிப்போர்ட்

துரை.நாகராஜன், இரா.கலைச் செல்வன் - படங்கள்: ஸ்ரீனிவாசலு

Published:Updated:
நதிநீர் இணைப்பு! - சாதித்தாரா சந்திரபாபு நாயுடு?! - லைவ் ரிப்போர்ட்
பிரீமியம் ஸ்டோரி
நதிநீர் இணைப்பு! - சாதித்தாரா சந்திரபாபு நாயுடு?! - லைவ் ரிப்போர்ட்

“வரலாற்றுப் பகீரதா, கங்கையை இந்தியாவிற்குக் கொண்டு வந்தார். நவீன பகீரதா, (சந்திரபாபு நாயுடு) கோதாவரியைக் கிருஷ்ணாவுக்குக் கொண்டுவந்து புது வரலாறு படைத்துள்ளார்’’,  “நாடே போற்றும் நதிநீர் இணைப்பு - சாதித்துக் காட்டிய சந்திரபாபு நாயுடு”, “ஆந்திராவை வறட்சியிலிருந்து மீட்டெடுத்த புனிதர்’’ இப்படியான செய்திகள் சமீபகாலங்களில் சமூகவலைதளங்களிலும், செய்திகளிலும் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றன. இந்தியாவின் அத்தனை சூழலியலாளர்களும் நதிநீர் இணைப்பை எதிர்க்கும் சூழலில், ஆந்திராவில் இரண்டு முக்கிய நதிகளை இணைத்து, பல நூற்றாண்டுகால வறட்சிக்குத் தீர்வு கண்டிருக் கிறார்கள் என்று சொல்லப்படுவது உண்மைதானா? என்ற கேள்வியில் தொடங்கியது, ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதி நோக்கிய பயணம்.

ஆந்திராவுக்கு உயிராதாரமாக இருப்பது இரண்டு நதிகள். கிருஷ்ணா மற்றும் கோதாவரி.  இதில் கிருஷ்ணா, மகாராஷ்ட்ராவின், சதாரா மாவட்டத்திலிருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலிருந்து உருவாகி, ஆந்திராவுக்குள் நுழைந்து இறுதியாக வங்கக்கடலில் கலக்கிறது. இந்த 1,400 கி.மீ தூரப் பயணத்தில் மகாராஷ்ட்ரா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்கள் சிறிதும், பெரிதுமாக  ஒன்பது நீர்த் திட்டங்களைக் (அணைகள், நீர்த் தேக்கங்கள் போன்றவை) கட்டமைத்திருக்கின்றன. இதனால் ஆந்திராவின் கிருஷ்ணா, டெல்டா பகுதிக்குவரும் தண்ணீரின் அளவு மிகவும் குறைவு. விவசாயத்தை நம்பியிருக்கும் இந்தப் பகுதிகள், ஒவ்வொரு வருடமும் வறட்சியில் வெடித்துச் சிதறுகின்றன. கிருஷ்ணா கொஞ்சம் சாந்தமானவர்.

நதிநீர் இணைப்பு! - சாதித்தாரா சந்திரபாபு நாயுடு?! - லைவ் ரிப்போர்ட்

மகாராஷ்ட்ராவின்,நாசிக் மாவட்டத்திலிருக்கும் திரிம்பகேஷ்வர் பகுதியில், 1,067 மீட்டர் உயரத்தில் ஊற்றெடுக்கும் கோதாவரி, ஆந்திராவில் இறுதியாக வந்து தன் ஓட்டத்தை முடித்துக்கொள்கிறாள். இந்த நதியின் பயண தூரம் 1,465 கி.மீ. கிருஷ்ணாபோல் அல்ல கோதாவரி. இதன்மீது அத்தனை பெரிய நீர்த்திட்டங்கள் ஏதுமில்லையென்பதால், ஆர்ப்பரித்து, காட்டுத்தனமாகச் சீறிப் பாய்ந்து ஓடும் குணம் கொண்டவள் கோதாவரி. வருடத்துக்குக் கிட்டத்தட்ட 3,000 டி.எம்.சி. அளவுக்கான கோதாவரி நீர் கடலில் கலக்கிறது.

ஒருபக்கம் சீறிப்பாய்ந்து ஓடும் கோதாவரி இறுதியாகக் கடலில் கலக்கிறது. மறுபக்கம் ஒழுகி, ஒடிந்து ஓடும் கிருஷ்ணாவில் நீர்வரத்து மிகக் குறைவு. சரி... இதற்கு என்ன தீர்வு? பழைய ராபின்ஹூட் கதைதான். இருக்குமிடத்திலிருந்து எடுத்து, இல்லாத இடத்துக்குக் கொடுப்பது. ஆனால், இதற்கு விதை போட்டது சந்திரபாபு கிடையாது. இந்தக் கதை அறிய நாம் இந்தியச் சுதந்திரக் காலத்துக்கு முன் செல்ல வேண்டும்.

அமெரிக்காவைச் சேர்ந்த பொறியாளர் எஸ்.எல். சாவேஜ் தலைமையில், அன்றைய உலகின் மிகச் சிறந்த பொறியாளர்களான கார்ல் தெர்சாகி, ஹார்ப்பர், முர்டாக் மெக்டொனால்ட் ஆகியோரைக் கொண்டு ஒரு குழுவை அமைத்தது அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம். ஆந்திராவில், கிருஷ்ணாவையும், கோதாவரியையும் இணைப்பதற்கான சாத்தியங்களை ஆராய்வது தான்  இவர்கள்  பணி.  பலகட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, மேற்கு கோதாவரி மாவட்டத்தில் போலவரம் எனும் ஊரைத் தேர்ந்தெடுத்தனர். 

“ இருவேறு பாதைகளில் ஓடிக்கொண்டிருக்கும் நதிகளின் மடையை மாற்றுவது, மலைகளை உடைத்து அணையைக் கட்டுவது,  மூழ்கவிருக்கும் கிராமங்களைக் காலிசெய்வது போன்ற சில கடினமான வேலைகளைக் கடந்து, இந்த இரு நதிகளையும் இணைப்பது சாத்தியம்தான்’’ என்று அறிக்கை கொடுத்தனர்.

அந்த அறிக்கை, 1980-ல் அறிவிப்பாக உருவெடுத்தது. அன்றைய ஆந்திர முதல்வர்  தங்குத்ரி அஞ்சையா,  ` இந்திரா சாகர் போலவரம் திட்டம்’ என்ற பெயரில் இந்தத் திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். ஆனால், எந்த முன்னெடுப்புகளும் எடுக்கப்படவில்லை. அந்தத் திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. பின்னர், 24 வருடங்கள் கழித்து ராஜசேகர ரெட்டி இந்தத் திட்டத்தைத் தூசு தட்டினார்.

அதாவது போலவரம் எனும் பகுதியில் ஒரு மிகப்பெரிய நீர்த்தேக்க அணையைக் கட்டுவது. 150 அடி உயரம் உள்ள அதில், பாய்ந்துவரும் கோதாவரி நீரைச் சேமித்துவைத்து, பின்னர் இடம் மற்றும் வலமாக வெட்டப்பட்டிருக்கும் கால்வாய் களில் புவிஈர்ப்புச் சக்தியின் அடிப்படையில் அந்த நீரைப் பாய்ச்சி, அதை ஒரு கட்டத்தில் கிருஷ்ணாவோடு இணைத்து, ஆந்திராவின் மூலை முடுக்குகளுக்கும் நீரைக் கொண்டு சேர்ப்பதுதான் இந்தத் திட்டத்தின் அடிப்படை. 2004-ல் இந்தத் திட்டத்துக்கான மொத்தச் செலவாக 14,000 கோடி ரூபாய்களை ஒதுக்கி, வேலைகளை ஆரம்பித்தது ராஜசேகர ரெட்டித் தலைமையிலான அரசு.

நதிநீர் இணைப்பு! - சாதித்தாரா சந்திரபாபு நாயுடு?! - லைவ் ரிப்போர்ட்

முதலில் கால்வாய் வெட்டும் பணிகள் துவங்கின. இந்தக் கால்வாய் வெட்டும் பணியில் 80 சதவிகிதப் பணிகள் ராஜசேகர ரெட்டியின் காலத்திலேயே முடிக்கப்பட்டுவிட்டது. எதிர்பாராதவிதமாக ராஜசேகர ரெட்டியின் மரணம், அதைத் தொடர்ந்து ஆந்திர அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள், ஆந்திரா - தெலங்கானா பிளவு எனப் பல பிரச்னைகளின் காரணமாக இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஆந்திரா - தெலங்கானா பிரிக்கப்பட்டபோது, மத்திய அரசாங்கம் போலவரம் நீர் இணைப்புத் திட்டத்தை தேசியத் திட்டமாக அறிவித்து, அதற்கான முழு செலவையும் தானே ஏற்பதாகக் கூறியது. 2014-ல் சந்திரபாபு நாயுடு முதல்வராகப் பொறுப்பேற்றதும் மிகத் துரிதமாக இந்தத் திட்டத்தை முன்னெடுத்தார். முதலில் மொத்தத் திட்டத்துக்கான செலவுத்தொகையாக 40,000  கோடி ரூபாய் வேண்டும் என்றவர், சில வாரங்களுக்கு முன்னர் அதை 60,000  கோடியாக அதிகப்படுத்திக் கேட்டிருக்கிறார்.

போலவரம் திட்டம் முடிவுபெறக் குறைந்தது ஐந்து அல்லது ஆறு வருடங்கள் ஆகும் என்ற நிலையில், அதற்கிடையில் கடந்த வருடம் `பட்டீசீமா ஏற்றுப் பாசனம்’ (Pattiseema Lift Irrigation) எனும் புதுத் திட்டத்தை ஆரம்பித்தார் சந்திரபாபு நாயுடு. போலவரம் கிராமத்துக்கு முன்னர் பட்டீசீமா என்ற இடத்தில் ஒரு பெரிய  நீரேற்று நிலையத்தை நிறுவினார். மிகப் பெரிய அளவில் மொத்தம் 24 பம்ப்புகள் அங்கு நிறுவப்பட்டன. கோதாவரியிலிருந்து ஒவ்வொரு பம்ப்பும் 354 கியூசெக்ஸ் அளவிலான நீரை உறிஞ்சி, 12 பைப்களின் வழியே போலவரம் வலது கால்வாயில் கொண்டு சேர்க்கும். அந்தக் கால்வாயில் போகும் நீர், பவித்ரசங்கமம் என்னுமிடத்தில் கிருஷ்ணாவோடு கலந்து, கிருஷ்ணா டெல்டா பகுதிகளுக்குப் பாயும். இந்த நீரேற்று நிலையம் ஐந்து மாதம் 15 நாள்களில் கட்டி முடிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் 2015-ம் வருடம் 8.98 டி.எம்.சி. கோதாவரி நீர் கிருஷ்ணாவுக்குத் திருப்பி விடப்பட்டது. 2016-ல் 15 டி.எம்.சி. தண்ணீரும், இந்த வருடம் இப்போதுவரை 28 டி.எம்.சி. தண்ணீரும் கிருஷ்ணாவுக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தைக் குறிப்பிட்டுத்தான் சமூகவலைதளங்களிலும், பல்வேறு செய்திகளிலும் சந்திரபாபு நாயுடுவைக் கொண்டாடி வருகிறார்கள். ஆனால், இந்தத் திட்டம் அந்தளவு கொண்டாட்டத்துக்குக் உரியதுதானா?

“பட்டீசீமா மொத்த ஆந்திரத்தின் வறட்சியைத் தீர்த்துவிட்டது என்று சொல்வது மிகையான பிரசாரம். ஆந்திரத்துக்கு பட்டீசீமா திட்டம் அவசியமற்றது. எங்களுக்குத் தேவை போலவரம்தான். தன் சுயநலத்துக்காகவும், சுய விளம்பரத்துக்காகவும்தான் சந்திரபாபு நாயுடு பட்டீசீமா திட்டத்தைச் செயல்படுத்தி யுள்ளார். மக்களின் வரிப்பணத்தை வீண் விரயமாக்கியிருக்கிறார். முதலில் பட்டீசீமா திட்டத்துக்கான செலவு  1,300 கோடி ரூபாய் என்று அறிவித்திருந்தார். பொதுவாக ஓர் அரசு, ஒரு நிறுவனத்துக்கு டெண்டர் விடும்போது ஐந்து சதவிகிதம்வரைதான் அந்த நிறுவனம் லாபத் தொகையை எடுக்கலாம். ஆனால், சந்திரபாபு நாயுடு வெளிப்படையாக இந்தத்  திட்டத்தைச்  சீக்கிரம் முடிப்பவர்களுக்குக் கூடுதலாக 17.25 சதவிகிதம் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதனால் ஐந்து சதவிகித அளவில் லாபம் பார்க்க வேண்டிய கான்ட்ராக்டர்கள், 22 சதவிகிதம்வரை லாபம் பார்த்தார்கள். திட்டச்செலவும் 1,600 கோடியைத் தாண்டிச் சென்றது. இதற்குப் பதிலாக, இந்தப் பணத்தையும் போலவரம் திட்டத்திலேயே முதலீடு செய்து, அதைத் துரிதப்படுத்தியிருக்கலாம்” என்கிறார்  ஆந்திராவின் முன்னாள் எம்.எல்.ஏ-வும், எம்.பி-யுமான திரு. வத்தே ஷோபனத்ரிஷ்வர் ராவ்.

நதிநீர் இணைப்பு! - சாதித்தாரா சந்திரபாபு நாயுடு?! - லைவ் ரிப்போர்ட்

போலவரம் அணை கட்டப்படும் இடத்துக்குச் சென்று பார்வையிட்டோம். உண்மையிலேயே அதன் பிரமாண்டம் பிரமிக்கத்தக்க வகையில் இருக்கிறது. அதே சமயம், அங்கு அவர்கள் இயற்கைக்கு எதிராக நடத்திக்கொண்டிருந்த பெரும் யுத்தம் கண்ணுக்கு முன் தெரிகிறது. நாம் போயிருந்த சமயம், ஒரு மலையைத் தகர்க்க வெடி வைத்துக் கொண்டிருந் தார்கள். அடர் பச்சை மரங்களால் நிறைந்திருந்த அந்த மலை சில நிமிடங்களில், தன் பச்சை நிறத்தை இழந்து மொட்டையாகக் காட்சி யளித்தது. இப்படியாக அந்தப் பகுதியில் பல நூறு  மலைகள் தரைமட்டமாக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

“கடந்த வருடம் 70 சதவிகித அளவுக்கான விவசாய நிலங்களில் விவசாயம் நடைபெற்றன. ஆனால், இந்த வருடம் வெறும் 35 சதவிகித அளவுக்குத்தான் பயிர்களே விதைக்கப்பட்டிருக் கின்றன. அனந்த்பூர் மாவட்டத்தில் வழக்கமாக 20 லட்சம் ஏக்கரில் நிலக்கடலைப் பயிரிடப்படும். இந்த வருடம் வெறும் 1.5 லட்சம் ஏக்கரில்தான் பயிரிடப்பட்டிருக்கின்றன. கிருஷ்ணா டெல்டா விவசாயிகள் பலரும் தண்ணீரில்லாமல், மீன் வளர்ப்பு, இறால் பண்ணை என வெவ்வேறு தொழில்களுக்குச் சென்றுவிட்டனர். இந்த நிலையில், ஏதேதோ கணக்குகளைக் காட்டி, ஆந்திர விவசாயிகள் செழித்து ஓங்குவதுபோல் பிம்பத்தைச் சந்திரபாபு நாயுடு கட்டமைத்திருக்கிறார்.

பட்டீசீமா அவசியமே இல்லாத ஒன்று. கடந்த முறைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தோல்வியுற்றதற்கு முக்கியக் காரணமே, விவசாயம் சார்ந்த பிரச்னைகளை அவர் கையில் எடுக்காததுதான். இந்தத் தடவை அந்தத் தவறு நிகழக் கூடாது என்ற எண்ணத்தில், விவசாயத்தின் மீது அதீத அக்கறை இருப்பதுபோல் செயல்படுகிறார் முதல்வர். நதிநீர் இணைப்பதால் என்ன சூழலியல் பிரச்னைகள் வரும் என்பது இன்றுவரை சரியாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால், எங்களுக்குக் கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்பு அவசியம் வேண்டும். போலவரம் எங்கள் ஆந்திரத்தின் கனவுத் திட்டம். ஆனால், அதை இந்த அரசாங்கம் செயல்படுத்தும் முறைகளில்தான்  நிறைய கோளாறுகள் இருக்கின்றன. போலவரம் திட்டம் புவிஈர்ப்பு விசையை மட்டுமே பயன்படுத்தி நீரை மடைமாற்றம் செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டத் திட்டம். ஆனால், தற்போது பட்டீசீமாவில் மோட்டார் போட்டு நீரை உறிஞ்சி எடுப்பதெல்லாம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை’’ என்கிறார் ஆந்திர விவசாய சங்கத் தலைவர் நாகேந்திரநாத்.

நதிநீர் இணைப்பு! - சாதித்தாரா சந்திரபாபு நாயுடு?! - லைவ் ரிப்போர்ட்

நதிநீர் இணைப்பினால் ஏற்படும் சூழலியல் சிக்கல்கள் குறித்து அறிய இந்தியாவின் தண்ணீர் மனிதர் எனப் போற்றப்படும் ராஜேந்தர் சிங்கைச் சந்தித்தோம்.

“நதிநீர் இணைப்பு என்பது ஒரு மாயை. அது கார்ப்பரேட் கயவர்களோடு இணைந்து, அரசாங்கம் செய்யும் சதி. இது ஒருபோதும் நன்மையைத் தராது. ஒரு நதி என்பது வெறும் நீர் மட்டுமே அல்ல. அது ஓர் உயிர்ச்சூழல் மண்டலம். ஒவ்வொரு நதிக்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. அதை ஒன்றோடொன்று இணைக்க முயற்சித்தால், அது இயற்கைச் சுழற்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். இதைச் சொல்வதன் மூலம் நான் மொத்தமாக வளர்ச்சித் திட்டங்களை எதிர்க்கவில்லை. சரியான பாதையில் வளர்ச்சியைக் கொண்டுசெல்ல வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.

இயற்கையின் வளர்ச்சி, இயற்கையோடு இயைந்ததாக இருக்க வேண்டும். நதிகளைக் குளங்களோடு, ஏரிகளோடு, குட்டைகளோடு இணையுங்கள். நதிகளை நதிகளோடு இணைக்காதீர்கள். நம் பாரம்பர்ய முறைகளைப் பின்பற்றி ஒவ்வொரு கிராமத்திலும், நீர் மேலாண்மைத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். நம் தேசத்தின் தண்ணீர்ப் பிரச்னை தீர்க்க முடியாதது அல்ல. ஆனால், எந்த அரசும் தீர்க்க முயற்சிக்கவில்லை என்பதுதான் நிஜம்’’ என்றார்.

நதிநீர் இணைப்பு! - சாதித்தாரா சந்திரபாபு நாயுடு?! - லைவ் ரிப்போர்ட்

ஆந்திராவில் இந்தத் திட்டத்தை எதிர்த்து நிறைய போராட்டங்களை நடத்தும் சூழலியலாளர் சர்மாவிடம் பேசினோம்.

``அரசாங்கத்தின் பழைய கணக்குப்படி சட்டீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்களில் இந்தத் திட்டத்தால் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலப்பகுதி நீரில் மூழ்கும். ஒடிஷாவில் 10, சட்டீஸ்கரில் 23, ஆந்திராவில்  276 ஆதிவாசிக் கிராமங்கள் மொத்தமாகக் காலி செய்யப்பட வேண்டும்.  4,45,745 குடும்பங்கள், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான ஆதிவாசி  மக்கள் தங்கள் இடங்களிலிருந்து இடம் பெயர வேண்டும்.  இது நடந்தால் கோயா எனும் பழங்குடியினம் மிகப்பெரிய அழிவைச் சந்திக்க நேரிடும். சட்ட ரீதியிலேயே இந்தத் திட்டத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கின்றன. இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்த, அந்தந்த கிராமங்களில் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். அது எங்கேயும் நடத்தப்படவில்லை. தேசியப் பழங்குடி கொள்கைப்படி, `50 ஆயிரத்துக்கும் அதிகமான பழங்குடிகளை வெளியேற்றும் எந்தத் திட்டங்களும் ஆதிவாசிகளின் இடங்களில் மேற்கொள்ளப்படக் கூடாது’ என்று இருக்கிறது. ஆனால், இத்திட்டம் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான ஆதிவாசிகளைப் புலம்பெயர வைக்கிறது. இவர்களுக்கான மாற்று இடங்களுக்கும், மறுவாழ்வுக்கும் 15,000  கோடிகள் ஒதுக்கப்படும் என்று அரசாங்கம் சொல்கிறது.

நதிநீர் இணைப்பு! - சாதித்தாரா சந்திரபாபு நாயுடு?! - லைவ் ரிப்போர்ட்

இந்தப் பிரச்னைகள் ஒருபுறமிருக்க, போலவரம் திட்டம் சரியான முறையில் இந்தியச் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதிச் சான்றிதழைப் பெற வில்லை. ஆந்திரா தனியாகப் பிரிக்கப்பட்டதும், இது தேசியத் திட்டமாக அறிவிக்கப்பட்டதும் அதற்குரிய தடையில்லா மற்றும் அனுமதிச் சான்றிதழ்களை வாங்க வேண்டும். அதை இவர்கள் சரியாகச் செய்யவில்லை. மேலும், போலவரம் திட்டத்தின் காசை எடுத்து பட்டீசீமா திட்டத்துக்குச் செலவழித்துள்ளார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, போலவரத்துக்கு வாங்கிய அனுமதிச் சான்றிதழ்களைக் கொண்டே பட்டீசீமாவையும் கட்டி முடித்துள்ளார்கள். இதன் அர்த்தம் பட்டீசீமாவுக்கு இவர்கள் எந்தத் துறையின் அனுமதியையும், சுற்றுச்சூழல் துறையின் தடையில்லாச் சான்றிதழையும் வாங்கவேயில்லை என்பதுதான்’’ என்கிறார் சர்மா.

நதிநீர் இணைப்புத் தொடர்பாளர் ஆந்திரப் பிரதேசத்தின் நீர்வளத்துறை அமைச்சர் திரு.தேவனேனி உமாமகேஸ்வரராவைச் சந்தித்தோம். “போலவரம் மற்றும் பட்டீசீமா திட்டங்கள் மொத்த இந்தியாவுக்குமான முன் மாதிரித் திட்டங்கள். இது எங்கள் முதல்வர் சந்திரபாபு நாயுடுகாரு அவர்களின் நேரடிப் பார்வையில் உருவாகிக்கொண்டிருக்கிறது. இந்திய தேசத்தில் எந்த முதல்வராவது வாரத்துக்கு ஒருமுறை வீதம் திட்டத்தைப் பார்வையிட வருவார்களா? எங்கள் முதல்வர் வருகிறார். இது மொத்த ஆந்திரத்தின் தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்க்கப் போகிறது’’ என்று கேள்விகளுக்கு இடம் கொடுக்காமல் பேசி முடித்தார் அமைச்சர்.

சீறிப்பாய்ந்து ஓடும் கோதாவரி ஆற்றின்மேல் கட்டப்பட்டிருக்கும் பல பாலங்களைக் கடந்து, சென்னையை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தோம். இந்த நதிநீர் இணைப்புத் திட்டம், ஆந்திராவின் இன்றைய தண்ணீர்த் தேவையை ஓரளவிற்குப் பூர்த்தி செய்யலாம். ஆனால், அதற்காக நாம் அழிக்கும் இயற்கை வளங்களைத் திரும்ப உருவாக்கிட முடியுமா? என்ற கேள்விக்கான பதில் யாரிடமும் இல்லை.