Published:Updated:

வியாசர்பாடி... பரதம்... பொன்னி மாஸ்டர்!

வியாசர்பாடி... பரதம்... பொன்னி மாஸ்டர்!
பிரீமியம் ஸ்டோரி
வியாசர்பாடி... பரதம்... பொன்னி மாஸ்டர்!

தமிழ்ப் பிரபா - படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

வியாசர்பாடி... பரதம்... பொன்னி மாஸ்டர்!

தமிழ்ப் பிரபா - படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

Published:Updated:
வியாசர்பாடி... பரதம்... பொன்னி மாஸ்டர்!
பிரீமியம் ஸ்டோரி
வியாசர்பாடி... பரதம்... பொன்னி மாஸ்டர்!

தூரத்தில் சலசலப்பு சத்தத்தைக் கேட்ட உடனே அருவியை நெருங்கிவிட்டோம் என்று உணர்வதுபோல, முகவரியைத் தேடி அந்தத் தெருவில் நடந்து போகும்போது நட்டுவாங்கத்தின் ஓசையுடன் `தக் ஜம்... தக ஜம்...’ என்ற குரலும் செவிகளில் விழுகிறது. வியாசர்பாடியில் உள்ள பிரமாண்டமான குப்பைமேடு பகுதியைத் தாண்டியதும் ஒரு குறுக்குச் சந்தில் அமைந்திருக்கிறது ‘அபிநயா நிர்தாலயா’ நாட்டியப் பள்ளி. சீமை ஓடு வேயப்பட்ட சிறிய அறைக்குள் நுழைந்ததும் வணக்கம் வைத்து வரவேற்றார் பொன்னி மாஸ்டர். பொன்னி மாஸ்டர் ஒரு திருநங்கை.

வியாசர்பாடி... பரதம்... பொன்னி மாஸ்டர்!

“என்னோட சொந்த ஊரு தூத்துக்குடி. சின்ன வயசுலேயே நடனம் மேல எனக்கு ஆர்வம் அதிகம். தொலைக்காட்சியில்  வரும் பரதத்தைப் பார்த்து அப்படியே பிசகாம ஆடுற திறமை என்கிட்ட இருந்தது. வ.உ.சி. கல்லூரியில் பி.எஸ்சி மேத்ஸ் முடிச்சேன். கல்லூரிகள்ல ஆண்கள் பிரிவுல பரதநாட்டியம் ஆடினேன். எனக்குள்ள நான் பெண்மையை உணர ஆரம்பிச்சு, அந்த உணர்வுகள் அதிகமா இருந்த சூழல்ல ஆண்கள் பிரிவுல ஆடுறது மனசுக்கு ஒப்பலை. பெண்கள் பிரிவுல ஆடுறதுக்குக் கடும் சவாலா இருந்தது. என்னை மாதிரித் திருநங்கைகளுக்கு சவால்ங்கிறது சாதாரணம்தானே. கணிதத்து மேல இருந்த ஆர்வம்போய், கால்ல சலங்கையைக் கட்டி ஜெயிக்கணும்னுதான் எப்பவும் நினைப்பேன். அதுக்காகப் போராடினேன். பரதத்தில் டிப்ளமோ  முடிச்சேன். பிறகு, சென்னைக்கு வந்து எம்.ஏ. பரதம் படிச்சு முடிச்சேன். என்னோட குரு நாட்டியச்சாரியார் திருவான்மியூர் திரு. சிவக்குமார்’’ என்று சொல்லி இருகரம் கூப்புகிறார் பொன்னி மாஸ்டர்.

``வியாசர்பாடியில் இருக்கிற பிள்ளைகளுக்குப் பரதநாட்டியம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?’’


``பரதநாட்டியம்னாலே மேல்தட்டு மக்கள்தான் ஆடுறாங்கன்னு ஒரு பிம்பம் இருக்கு. அதை உடைக்கணும்னு விருப்பப்பட்டேன். யாருக்கு இந்த நாட்டியக் கலை எட்டாக்கனியா இருக்கோ, அவங்க இதைக் கத்துக்கணும்னு ஆசைப்பட்டு இந்த ஏரியாவில் ஸ்கூல் ஆரம்பிச்சேன். ஆனா, ஆரம்பத்துல யாரும் அவங்க பிள்ளைகளை என்கிட்ட சேர்க்கலை. பக்கத்துல இருக்கிற எழிலகப் பெருமாள் கோயில் திருவிழா சமயத்துல ஆடுறதுக்கு  வாய்ப்புக் கேட்டேன். திருநங்கைன்னாலே குத்து டான்ஸ்தான் ஆடுவாங்கன்னு நெனச்சு என்னை மேடை ஏற விடலை. ஆனா, அந்தக் கோயில் அதிகாரிகிட்ட தொடர்ந்து வாய்ப்புக் கேட்டு, மேடை ஏறி ஒருமணி நேரம் நான் ஆடிய நாட்டியத்துல கூட்டம் இம்மியும் நகரலை. அப்போதான் இங்கே இருக்கிறவங்களுக்கு என்மேல நம்பிக்கை வர ஆரம்பிச்சு பசங்களைப் பரதம் கத்துக்க சேர்த்தாங்க.’’

வியாசர்பாடி... பரதம்... பொன்னி மாஸ்டர்!

``எவ்வளவு பேர் உங்களிடம் நடனம் கற்றுக்கொள்கிறார்கள்?’’

``சொன்னா நம்ப மாட்டீங்க. பத்து வருஷமா இந்தப் பள்ளியை இங்கே நடத்துறேன். இங்க வந்து கத்துக்கிற பசங்க வெறும் முப்பத்திஆறுதான். வீட்ல அப்பா அம்மாவுக்குச் சண்டை, வீடு காலி பண்ணிப் போயிடறதுன்னு பல காரணங்களால் பசங்களால தொடர்ந்து வர முடியாது. பாதியிலேயே நின்னுடுவாங்க. பெரும்பாலும் இந்தப் பகுதியில கூலி வேலை செய்றவங்களோட பிள்ளைங்கதான் நாட்டியம் கத்துக்க வர்றாங்க. இந்தக் குழந்தைகள் மட்டுமல்லாம திருநங்கைகளுக்கும் சொல்லித்தர்றேன். எங்கிட்ட கத்துக்கிட்ட திருநங்கைகள் மத்த இடத்துக்குப் போய் கிளாஸ் எடுக்கிற அளவுக்கு வளர்ந்துட்டு வராங்க.  இங்கே பிள்ளைகளா கொடுக்கிற காசை வெச்சு இடத்துக்கு வாடகை கொடுக்கிறேன். ஃபீஸ் எல்லாம் வாங்குறது கிடையாது.’’

``அப்புறம் உங்க செலவுக்கு என்ன பண்றீங்க?’’

``இலவசமா சொல்லித் தர்றது இங்கே மட்டும்தான். ஏன்னா இது என்னோட பள்ளி. அம்பத்தூர், திருவான்மியூர், பெரம்பூர், ஈரோடு ஆகிய பகுதிகள்ல உள்ள நாட்டியப் பள்ளிகளுக்குப் போய் வாராவாரம் சொல்லித் தர்றேன். மொத்தமாப் பார்த்தா, இருநூறு பிள்ளைகளுக்கு மேல என்கிட்ட நடனம் கத்துக்கிறாங்க. அதுல கிடைக்கிற வருமானத்துல நானும் என் அம்மாவும் வாழ்ந்துட்டு இருக்கோம். பரதநாட்டியம்  கத்துக்க  விரும்புற ஏழைக்குழந்தைகள், திருநங்கைகள் இவங்களுக்கும் இந்தக் கலை போய்ச் சேரணும். அதுக்காக கடைசிவரை நான் நடனம் கத்துக்கொடுத்துட்டே இருப்பேன்.’’