பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

வீணை தனம்மாள் 150

வீணை தனம்மாள் 150
பிரீமியம் ஸ்டோரி
News
வீணை தனம்மாள் 150

வீயெஸ்வி - படம்: ராமநாதன் ஐயர்

ர்நாடக இசை உலகில் வணக்கத்துக்கும் போற்றுதலுக்கும் உரியவர் வீணை தனம்மாள் (1867 - 1938). ‘தனம்மாள் பாணி’ என்றாலே இசைக் கலைஞர்களில் நிறைய பேர் எழுந்து நின்று மரியாதை செலுத்துவது மரபு!

மிகப்பெரிய சங்கீதப் பரம்பரையைச் சார்ந்தவர் தனம்மாள். ஆலமரம் மாதிரி பரந்து விரிந்த கிளைகள் கொண்ட குடும்பம். சியாமா சாஸ்திரிகளின் மகன் கப்பராய சாஸ்திரியின் வழியில் ஆரம்பித்து, தனம்மாளின் முன் தலைமுறையில் தொடங்கி, பிருந்தா, முக்தா, டி.விஸ்வநாதன், பாலசரஸ்வதி என்று பின் தலைமுறை வரையில் கலை உலகில் கால் பதித்து சாதித்தவர்களின் பட்டியல் நீளமானது. இன்று இளம் பாடகர் திருவாரூர் கிரீஷ் வரையில் இந்த வாழையடி வாழை தழைத்துக்கொண்டிருக்கிறது. தவிர, அருணா சாய் ராம், சித்ரவீணை ரவிகிரண், சௌம்யா, அனுராதா ஸ்ரீராம் ஹரிஹரன் என்று பலர் இந்தப் பரம்பரையின் சங்கீத மாணவர்கள். பாட்டுக் கச்சேரிகளிலும், பரத நிகழ்ச்சிகளிலும் பதம், ஜாவளிகள் இசைக்கப்படும்போதெல்லாம், தனம்மாள் பாணி நினைவுக்கு வருவது தவிர்க்க இயலாத சந்தோஷம்.

வீணை தனம்மாள் 150

சாத்தனூர் பஞ்சநாத ஐயரின் மாணவி தனம். சென்னை, ஜார்ஜ் டவுன் பகுதியில் குடிபெயர்ந்த குடும்பம். முதலியார் ஒருவரின் வீட்டுக்கு உதவிக்குச் சென்றார் தனம்மாளின் தாய் சுந்தராம்மாள். சிறுமி தனத்தின் குரலால் கவரப்பட்ட முதலியார், சிறப்பு இசை வகுப்புக்கு ஏற்பாடு செய்தார். மாதச் சம்பளத்தை ஏழு ரூபாயிலிருந்து பதினான்கு ரூபாயாக உயர்த்தினார். ஆரம்பத்தில் அழகிய சிங்கராயரிடமும், பின்னர் திருவொற்றியூர் வீணை தியாகய்யரிடமும் வீணை பயின்று தேர்ச்சிப் பெற்றார் தனம்மாள். நாளடைவில் இவர் பெயருடன் வீணை தன்னை இணைத்துக் கொண்டது. தனம்மாளின் இசை வாழ்க்கை, வரலாறானது.

ஒருகட்டத்தில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் தனம்மாளின் வீட்டில் வீணைக் கச்சேரி நடக்கும். இரு பக்கமும் இரண்டு குத்து விளக்குகள் சுடர் விட்டு எரியும். இந்தக் கச்சேரிகளுக்கு தம்புரா வைத்துக்கொள்ள மாட்டார். சுருதி, சாரீரத்துடன் கலந்து விட்டிருந்தது. பக்கவாத்தியமாக மிருதங்கம் இருக்காது. லயம், அவர் மனத்துக்குள் வியாபித்திருந்தது. வெள்ளிக்கிழமை வேள்விக்கு அன்றைய  சங்கீத வித்வான்கள் பலரும் தவறாமல் வந்திருந்து, வீணை இசையைக் கேட்டு இன்பமடைவார்கள். மகாகவி பாரதியார், தனம்மாளின் வீணை வாசிப்பைக் கேட்டு மகிழ்ந்தது உண்டு. நாகஸ்வர மேதை ராஜரத்தினம் பிள்ளை வீடு தேடிவந்து தனம்மாளை வீணை வாசிக்கச் சொல்லிக் கேட்டு லயிப்பாராம். குறிப்பாகத் தோடி ராகம் பிள்ளையின் விருப்பமாக இருக்கும்.

தான் வீணை வாசித்துக்கொண்டிருக்கும் போது, குழுமியிருப்பவர்களில் யாராவது ‘சபாஷ்’ சொல்லிப் பாராட்டினால், தனம்மாளுக்குப் பிடிக்காது. வாசிப்பதை நிறுத்திவிடுவார். “கூட்டத்துல யாரோ ஞானஸ்தர் வந்திருக்கார் போலிருக்கு... அவருக்கு முன் வாசிக்கிற தகுதி எனக்குக் கிடையாது” என்று சொல்லிவிடுவார்.

ஒருமுறை, ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில் தனம்மாள் கச்சேரி. நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு கல்யாணி ராகத்தை ஆலாபனை செய்திருக்கிறார். பூஜை தடைப்பட்டது. கச்சேரி முடிந்ததும் ஜீயரிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார் தனம்மாள். ``வருத்தம் வேண்டாம் தனம்... ஆண்டாளுக்கு நீ மிகச் சிறப்பான நாத பூஜை செய்திருக்கிறாய்...அதுவே போதுமானது” என்று ஆசி வழங்கியிருக்கிறார் ஜீயர்.

கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இசை உலகின் முடிசூடா மகாராணியாகக் கோலோச்சியவர் வீணை தனம்மாள். இறுதி நாள்களில் பார்வையில் குறைபாடு ஏற்பட்டுவிட, பொதுவில் கச்சேரிகள் செய்வதை நிறுத்திக்கொண்டார். வீட்டு பூஜை அறையில் மட்டுமே வீணையின் நாதம் ஒலித்தது.

வீணை தனம்மாளின் 150-வது பிறந்த வருடத்தையொட்டி சென்னையில் சென்ற வாரம் நான்கு நாள் விழா. திருவாரூர் கிரீஷ் ஏற்பாடு. நான்கு நாள்களும் நிறைய பாட்டுக் கச்சேரிகள்; வாத்தியக் கருவி கச்சேரிகள் மற்றும் பேச்சுக் கச்சேரிகள். இத்தனைக்கும் சங்கீதம் பற்றிப் பேசினால், தனம்மாளுக்குப் பிடிக்காது என்று சொல்லிக்கொண்டே எல்லோரும் பேசினார்கள்.

முதல்நாள் காலை, பாடகர் பரத் சுந்தர் தயாரித்துத் திரையிட்ட தனம்மாள் பற்றிய குறும்படம்,  ஓர் தகவல் களஞ்சியம். பின்னணியில் தனம்மாளின் வீணை வாசிப்பும், பாட்டும் சன்னமாக ஒலிக்க, ஆளுமைமிக்க எஸ். சௌம்யாவின் குரல் ஆங்கிலத்தில் வர்ணனை கொடுக்க, தனம்மாளின் வாழ்க்கைச் சரிதம் படமாக ஓடியது. இடையில், தனம்மாளின் குடும்ப மரமும் (Family tree).  அலைகடலின் ஆர்ப்பரிப்புக்கு நடுவே பாலசரஸ்வதியின் ‘கிருஷ்ணா நீ பேகனே வா’ அபிநயமும் பிரமிக்க வைத்தது உண்மை!

இந்த நான்கு நாள் மேளாவில் ஒருநாள் ஹரிஹரன் - திருவாரூர் கிரீஷ் ஜுகல்பந்தி, ரவிகிரணின் சித்ர வீணை இசை, டி.எம்.கிருஷ்ணாவின் உள்ளம் உருக்கும் பாட்டு, சௌம்யாவின் கச்சேரியும் தனம்மாள் பாணியை நிலைநிறுத்திய காக்டெய்ல் விருந்து!

ஆரம்ப நாளன்று தனம்மாள் வாசித்த வீணையை மேடையில் எடுத்துவந்து வைத்தார்கள். அந்த வீணைக்குத் தெரியும், தன்னை மீட்டியது மா மேதையின் விரல்கள் என்று!