Published:Updated:

ஏழைகள் என்றால் அலட்சியம்?!

ஏழைகள் என்றால் அலட்சியம்?!
பிரீமியம் ஸ்டோரி
ஏழைகள் என்றால் அலட்சியம்?!

ஒயிட்

ஏழைகள் என்றால் அலட்சியம்?!

ஒயிட்

Published:Updated:
ஏழைகள் என்றால் அலட்சியம்?!
பிரீமியம் ஸ்டோரி
ஏழைகள் என்றால் அலட்சியம்?!

வெறும் 68 லட்ச ரூபாய்தான், 60-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரைப் பறித்திருக்கிறது.  இப்போது ஒவ்வொரு குழந்தையின் உயிருக்கும் 20 லட்சம் இழப்பீட்டை அறிவித்திருக்கிறது உத்தரப்பிரதேச அரசு. அத்தனை மலிவானதா நம் குழந்தைகளின் உயிர்? உத்திரபிரதேச மாநிலம், கோரக்பூரில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் மரணமடைந்திருக்கும் குழந்தைகள் பற்றி செய்தி ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கி இருக்கிறது.

இந்த மரணங்களுக்குக் காரணமான ஒவ்வொருவரும் எட்டுத் திசைகளில் கைகாட்டிக்கொண்டிருக்கிறார்கள். யாருமே பொறுப்பேற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. “இதெல்லாம் வருஷா வருஷம் நடப்பதுதான்’’ என்று பொறுப்பில்லாமல் மாநில முதல்வரே கையை விரிக்கிறார். அக்கறையில்லாத அரசு நிர்வாகத்தைக் கேள்விகேட்க முடியாமல், `மீடியா பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும்’ என்று மைக்கை நீட்டியவரைக் குற்றவாளியாக்குகிறார். `இது விபத்து’ என்கிறார் அமித்ஷா. மருத்துவமனை நிர்வாகமோ, ஆக்ஸிஜன் பற்றாகுறையெல்லாம் இல்லவே இல்லை என்று பொய்க்கணக்குக் காட்டுகிறது. ‘`இதை அரசியல் ஆக்காதீர்கள்’’ என்று அறிக்கை விடுகிறார் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர்.

ஏழைகள் என்றால் அலட்சியம்?!

இதை அரசியல் ஆக்காமல் வேறு எதைத்தான் அரசியல் ஆக்குவதாம்? செத்துப்போன குழந்தைகள் ஒவ்வொருவரும் ஏழ்மையான தலித் மற்றும் இஸ்லாமியக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அதிகமும் செலவழித்து மருத்துவம் செய்ய முடியாதவர்கள். குணப்படுத்த முடியாத கொள்ளைநோயால் மரணங்கள் நிகழ்வது தடுக்க முடியாதது. ஆனால், முறையான மருத்துவம் கிடைக்காமல் அரசின் அலட்சியத்தால் உண்டாகும் மரணங்களுக்கு யார் பொறுப்பு?

``கோரக்பூரில் குழந்தைகளுக்கு வருகிற இந்த மூளைவீக்கம் எவ்வளவு முக்கியமான பிரச்னை தெரியுமா? அதை உடனடியாகக் கொள்ளைநோய் பட்டியலில் சேர்க்க வேண்டும். அதைத் தடுத்து நிறுத்துவதற்கும் அதற்கான உரிய சிகிச்சைகள் கிடைப்பதற்கும் இந்த அரசு, முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்று பாராளுமன்றத்தையே ஒருமுறை அலறச்செய்த குரல் யாருடையது தெரியுமா... இன்றைய உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடையது. அந்தச் சமயத்தில் உத்தரப்பிரதேசத்தை சமாஜ்வாதி கட்சிதான் ஆண்டுகொண்டிருந்தது.

 கோரக்பூர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக, 1998  முதல் 2014 வரை ஐந்துமுறை இருந்தவர்தான் இன்றைய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத். அவருக்குக் கோரக்பூர் குழந்தைகளை ஒவ்வொரு மழைக்காலத்திலும் தாக்குகிற இந்த encephalitis என்கிற மூளைவீக்கம் குறித்து மிக நன்றாகவே தெரியும். அது ஆண்டுதோறும் எத்தனை எத்தனை குழந்தைகளைப் பலி வாங்குகிறது என்பதையும் புள்ளிவிபரங்களோடு அறிவார். அப்படியொரு அசாதாரண சூழல் இருக்கிற இடத்தில் எத்தனை உச்சக்கட்ட மருத்துவ வசதிகளை உருவாக்கி இருக்க வேண்டும். ஆட்சியில் இல்லாதபோதுதான் இயவில்லை, போகட்டும். இப்போதுதான் அதிகாரம் இருக்கிறதே! ஆண்டுதோறும் மழைக்காலங்களில் எத்தனை நவீன பாதுகாப்பு வசதிகளோடு தயார் நிலையில் இருக்க வேண்டும். ஏன் அதெல்லாம் இல்லை? ஏழைகள்தானே என்கிற அலட்சியம்.

ஏழைகள் என்றால் அலட்சியம்?!

சென்ற வாரம்தான் கோரக்பூரின் பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பத்து ஐ.சி.யூ. பெட்களைத் திறந்து வைப்பதற்காகச் சென்று இருக்கிறார் யோகி ஆதித்யநாத். அப்போது இதே மூளைவீக்கத்திறகு சிகிச்சை அளிக்கும் வார்டுக்கும்கூட விசிட் வந்திருக்கிறார். அப்போதே ``இப்படி ஒரு பிரச்னை இங்கே இருக்கிறது? உடனே தீர்த்துவையுங்கள்’’ என மருத்துவமனையில் இருக்கிற யாராவது ஒருவர் கோரிக்கை வைத்திருந்தாலும், இன்று இத்தனை பெரிய துயரம் தவிர்க்கப்பட்டிருக்கும். ஏன் அப்போதே  யாரும் ஆக்ஸிஜன்  சிலிண்டர்களுக்குப் பணம் செலுத்தவில்லை என்பதைப்பற்றி முதல்வரிடம் சொல்லவில்லை?

ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு பணபாக்கி இருக்கிறது என்று இந்த மாதம் மூன்றாம் தேதி அரசுக்கு பெட்டிஷன் போடப்பட்டிருக்கிறது. மீண்டும் பத்தாம்தேதியும் நினைவூட்டல் செய்யப்பட்டிருக்கிறது. இருந்தும் ஏன் பணத்தைச் செலுத்தாமல் தள்ளிப்போட்டது அரசு? பத்து லட்சம் வரைக்கும்தான் ஒரு நிறுவனம் நிதி பாக்கியை நிலுவையில் வைக்க முடியும் என்கிற விதி இருந்தும், 68 லட்சம் வரை சப்ளை செய்திருக்கிறது அந்த ஆக்ஸிஜன் நிறுவனம். ஒருகட்டத்தில் இனியும் எங்களால் முடியாது எனக் கை விரித்திருக்கிறது. அதைக் கடிதமாக எழுதி மாவட்ட நிர்வாகம், சுகாதார அமைச்சகம் முதலானவைகளுக்கும்கூட அனுப்பியும் ஏன் அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை?

குழந்தைகள் தொடர்ச்சியாக மரணிக்கத் தொடங்கியதும், பிரச்னைக்கு ஆளாகிவிடுவோமோ என்று பயந்து மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளை வெளியேற்றத் தொடங்கியதாக அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டி இருக்கிறார். அப்படி நிஜமாகவே நடந்திருந்தால் எத்தனை பெரிய துயரம். இதுதான் நாம் கனவுகாணும் புதிய இந்தியாவா?

உத்தரப்பிரதேசம் எங்கேயோ இருக்கிறது. செத்துப்போன குழந்தைகள் எங்கேயோ இருக்கிற குழந்தைகள். எனவே, நாம் பதற்றப்பட வேண்டியதில்லை என நினைக்க வேண்டாம். உத்தரப்பிரதேசத்தில் அடிக்கப்பட்டிருப்பது நமக்கான எச்சரிக்கை மணி. நமது அரசு மருத்துவமனைகள் எப்படி இருக்கின்றன? திடீர் திடீரென்று விதவிதமான தொற்று நோய்கள் நம் குழந்தைகளைத் தாக்கத் தொடங்கியிருக்கின்றன. ஆனால், நம் குழந்தைகள் மருத்துவமனைகள் அவற்றைச் சந்திக்கத் தயார்நிலையில் இருக்கின்றனவா? நவீன வசதிகள் அங்கே கிடைக்கின்றனவா? இல்லையென்றால் ஏன் இல்லை என்பதையெல்லாம் உடனடியாக ஆய்வு செய்து அவற்றைச் சரிசெய்ய வேண்டிய அவசியம் அரசுக்கு இருக்கிறது.

இங்கே எத்தனை பேர் முழுமையான நம்பிக்கையோடு   அரசு   மருத்துவமனைகளுக்குச் செல்கிறோம். பணமில்லை, வேறு வழியில்லை என்னும்போதுதான் அங்கே செல்ல நேர்கிறது. தனியார் மருத்துவமனைகள் தருகிற நம்பிக்கையை அரசு மருத்துவமனைகள் ஏன் உருவாக்கவில்லை? இங்கேயும் இப்படி ஒரு பெருந்துயரம் நடந்தால்தான் நாம் விழித்துக்கொள்வோமா? அல்லது அப்படி நடந்தாலும் யோகியின் அரசைப்போலவே பொறுப்பைத்  தட்டிக்கழித்துவிட்டு இழப்பீட்டை எறிந்துவிட்டுக் கடந்து செல்வோமா?