Published:Updated:

டார்கெட் 2022 - என்ன சொல்கிறார்... என்ன செய்கிறார் மோடி?

டார்கெட் 2022 - என்ன சொல்கிறார்... என்ன செய்கிறார் மோடி?
பிரீமியம் ஸ்டோரி
டார்கெட் 2022 - என்ன சொல்கிறார்... என்ன செய்கிறார் மோடி?

ப.திருமாவேலன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி - தொகுப்பு: ச.ஸ்ரீராம், இன்ஃபோகிராபிக்ஸ்: எஸ்.ஆரிப் முகம்மது

டார்கெட் 2022 - என்ன சொல்கிறார்... என்ன செய்கிறார் மோடி?

ப.திருமாவேலன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி - தொகுப்பு: ச.ஸ்ரீராம், இன்ஃபோகிராபிக்ஸ்: எஸ்.ஆரிப் முகம்மது

Published:Updated:
டார்கெட் 2022 - என்ன சொல்கிறார்... என்ன செய்கிறார் மோடி?
பிரீமியம் ஸ்டோரி
டார்கெட் 2022 - என்ன சொல்கிறார்... என்ன செய்கிறார் மோடி?

‘புதிய இந்தியாவை அமைப்போம்’ என்று புறப்பட்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ‘பழைய இந்தியாவை ஒழிப்போம்’ என்று சொல்லி இருந்தால், இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.

பிரிட்டிஷ் ஆட்சி ஒழிக்கப்பட்டு இந்தியா விடுதலை பெற்றதும், பி.ஜே.பி. தன் தலைமையில் ஆட்சிக்கு வந்ததும் ஏறத்தாழ ஒன்றுதான் என்று நினைக்கிறார் நரேந்திர மோடி. அதனால்தான், தான் பிரதமர் ஆனதும், ‘புதிய இந்தியா பிறந்து விட்டது’ என்றார். பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட போதும், ‘புதிய இந்தியா பிறந்துவிட்டது’ என்றார். சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் புதிய முறைகள் அறிவிக்கப்பட்டதும், ‘புதிய இந்தியா பிறந்துவிட்டது’ என்றார். இந்த அறிவிப்பையே, 1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவில் பிரதமர் நேரு அறிவித்ததைப்போல நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மோடி அறிவித்தார். இதோ இப்போது மீண்டும் ஒரு, ‘புதிய இந்தியா உறுதிமொழி’.

1942 - இந்தியர்கள் மறக்கக்கூடாத ஆண்டு. ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற உறுதிமொழியைத் துணிச்சலாக எடுத்ததால் தான் 1947-ல் விடுதலை பெற்றது இந்தியா. அதை நினைவுகூறும் வகையில் கடந்த ஆகஸ்ட் 9-ம்  தேதி இந்திய நாடாளுமன்றத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டு இருக்கின்றன.

டார்கெட் 2022 - என்ன சொல்கிறார்... என்ன செய்கிறார் மோடி?

புதிய இந்தியா இயக்கம் (2017-2022) என்ற முழக்கத்தை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கியிருக்கிறார். 2017-ல் நாம் எடுக்க இருக்கும் உறுதிமொழியை 2022-ல் நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என்பது பிரதமரின் பேராசை. இந்த உறுதிமொழிகளை வடிவமைத்துக் கொடுத்ததற்காகப் பாராட்டத்தக்கவரே பிரதமர்.

தூய்மையான இந்தியா, வறுமையற்ற இந்தியா, ஊழலற்ற இந்தியா, தீவிரவாதமற்ற இந்தியா, மதவாதமற்ற இந்தியா, சாதியற்ற இந்தியா என்ற ஆறு பெரும் கறைகளை நரேந்திர மோடி சமைத்துக் கொடுத்துள்ளார். இந்த ஆறு கறைகளுக்கும் அடிப்படையானது ஒற்றுமையான இந்தியா. பேதமற்ற இந்தியா.

டார்கெட் 2022 - என்ன சொல்கிறார்... என்ன செய்கிறார் மோடி?

இந்தியாவின் விடுதலை என்பது ஒற்றுமையால் மட்டுமே சாத்தியமானது. 30 கோடி மக்களுக்கும் ஒரே ஒரு லட்சியம் இருந்தது; அதுதான் இந்திய விடுதலை என்பது. சாதி,மத பேதமற்ற சிந்தனையில் அனைவரும் அடிமை இந்தியர் என்ற எண்ணத்தோடு போராட்டம் நடத்தினார்கள். அதற்காக மதமாச்சர்யங்கள் இல்லை, சாதிச் சண்டைகள் இல்லை என்று சொல்ல வரவில்லை. இவை அனைத்துமே ‘இந்திய விடுதலை’ என்ற இலக்கினுள் அமுங்கிக் கிடந்தன. மதப் பிரிவினைவாதத்தை பிரிட்டிஷ் அரசு மிக லாகவமாகக் கையாண்டபோதும், சண்டைகள் ஆங்காங்கே நடந்ததே தவிர, அது ஒட்டுமொத்த இந்தியா முழுமைக்கும் நடக்கவில்லை. வடமாநிலங்களின் சில பகுதிகளில் நடந்த கலவரங்கள் தென்பகுதிக்குப் பரவவே இல்லை. நாம் யாரை எதிர்த்தோம்? பிரிட்டிஷ் அரசாங்கத்தை. ஆட்சி அதிகாரத்தில் இருந்த அவர்களது கடவுள் வேறு. மதம் வேறு.  இங்கிருந்த பெரும்பான்மை மக்களின் மதம் வேறு. மிக எளிமையாக இவைக் கிறிஸ்துவ மதத்துக்கு எதிரான போராக மாற்றப்பட்டு இருக்கலாம். மக்களும் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு இருப்பார்கள். இந்த மோசமான ஆயுதத்தை நமது தேசத் தலைவர்கள் கையில் எடுக்கவில்லை. இங்கிருந்த கிறிஸ்தவ மக்களையும் பிரிட்டிஷ் அரசு, இந்தியர்களாகத்தான் பார்த்தது; கிறிஸ்தவர்களாக அல்ல. ஆதிக்க மனோபாவம்... சாதி, மதம், இனம், ஏழைபாகுபாடு பார்ப்பது இல்லை. அப்படித்தான் அனைவரும் ஒடுக்கப்பட்டோம். அதனால்தான் மொத்த இந்தியரும் ஒடுக்குமுறைக்கு எதிராக இருந்தோம்.

டார்கெட் 2022 - என்ன சொல்கிறார்... என்ன செய்கிறார் மோடி?

இந்த ஒன்றுபட்ட சிந்தனையை நோக்கி மக்களைக் கூர்தீட்டி நிறுத்தும்போது மட்டுமே தூய்மையான, வறுமையற்ற, ஊழலற்ற, தீவிரவாதமற்ற, மதவாதமற்ற, சாதியற்ற இந்தியா சாத்தியம். இந்த ஒன்றுபட்ட சிந்தனைக்கு உலை வைக்கும் காரியங்கள் இந்தத் தேசத்தில் அதிகமாக நடக்கின்றன, நடக்க ஆரம்பித்திருக்கின்றன என்பதை அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் மோடி அறிவார். மதவாதம், தீவிரவாதம் என்ற இரண்டு சொற்களை அவர் பயன்படுத்தி இருப்பது அவர் உணர்ந்திருப்பதால்தான்.

மோடியின் அறிவிப்புகளில் பலத்த சர்ச்சையைக் கிளப்பியது மாடு வெட்டுதல் குறித்தது. இந்த அறிவிப்பு நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த மாதிரியான அறிவிப்புகள், புதிய இந்தியாவுக்கு அடித்தளம் அமைக்கக் கூடியவையா என்ன? உணவுப்பழக்க வழக்கத்தில் தலையிட்டு ஒற்றைத்தன்மையை உருவாக்குவதன் மூலமாக ஒற்றுமையை உருவாக்கிவிட முடியுமா? பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் அமல்படுத்தப்படும் பல்வேறு அறிவிப்புகள் இந்தியாவின் ஒற்றுமைக்கு வேட்டு வைத்து வருவதை இந்தியப் பிரதமர் அறிய மாட்டாரா? ‘பசுப் பாதுகாப்பு என்ற பெயரால், மனிதர்களைக் கொல்ல அனுமதிக்க மாட்டேன்’ என்று பேட்டி அளித்தால் போதுமா? வட மாநிலங்களில் குறிப்பாக ராஜஸ்தானில் நடந்த கொலைகள் புதிய இந்தியாவுக்கு அழைத்துச் செல்லுமா? பசுப் பாதுகாப்புக்காக உயிரைக் கொடுக்கும் உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் மற்றும் நோய் எதிர்ப்புச்சக்தி மருந்துகள் இல்லாமல் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துபோனதுதான் யோகியின் யோக ஆட்சியா?

டார்கெட் 2022 - என்ன சொல்கிறார்... என்ன செய்கிறார் மோடி?

பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகியை உடனே வரச் சொன்னாராம். இவர் மறுநாள் வருகிறேன் என்றாராம். ஏனென்றால், ‘ஒரு வேட்டிதான் இருக்கிறது. துவைத்துக் காயவைத்து உடுத்தி வருகிறேன்’ என்றாராம் யோகி. யோகி, இந்தியத் தேர்தல் ஆணையத்தில் எவ்வளவு சொத்துக்கணக்குக் காட்டி இருக்கிறார் என்பது இந்தச் செய்தியைப் பரப்பியவர்களுக்குத் தெரியாது. இதேபோல் இன்னொரு செய்தி...

சிங்கப்பூருக்கு ஓர் இந்தியர் செல்கிறார். ஒரு பொருளை வாங்குகிறார். `நீங்கள் இந்தியாவைச் சேர்ந்தவரா?’ என்று அந்தக் கடைக்காரர் கேட்கிறார். ‘மோடி போன்ற மகான் ஆளும் தேசத்து மனிதனிடம் பணம் வாங்குதல் பாவம்’ என்று அந்தக் கடைக்காரர் மறுத்துவிட்டாராம். இப்படி ஒரு செய்தி. இதைப் படித்ததும், எல்லோரும் சிங்கப்பூரின் அந்தக் கடைக்கே போய்விட மாட்டார்களா? இதுபோன்ற கப்சாக்கள் மூலமாகப் புதிய இந்தியாவைக் கட்டமைக்க ஒரு கூட்டம் முயற்சித்து வரும்போது, இன்னொரு கூட்டம் கொலைகள் மூலமாகக் கட்டமைக்க நினைப்பதைத் தடுக்கும் பொறுப்பு, மோடிக்குத்தானே இருக்கிறது.

தனி மனித வன்முறையைவிட, அமைப்பு சார் வன்முறை ஆபத்தானது. அமைப்பு சார் வன்முறையைவிட ஆளுங்கட்சி வன்முறை ஆபத்தானது. ஆளுங்கட்சி வன்முறையை விட அரச பயங்கரவாதம் ஆபத்தானது. இவையே இன்றைய இந்தியாவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்.

டார்கெட் 2022 - என்ன சொல்கிறார்... என்ன செய்கிறார் மோடி?

இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவராக இருந்து விடைபெற்றிருக்கும் ஹமீது அன்சாரி, ‘`இந்தியா பன்முகத் தன்மைகொண்ட சமூகமாகக் கடந்த 70 ஆண்டுகளாக மட்டும் இல்லை. பல நூற்றாண்டுகளாகவே அப்படித்தான் இருக்கிறது. தற்போதைய சூழல் அனைவரோடும் ஒற்றுமையாக வாழும் தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது” என்று சொல்லி இருக்கிறார். அதே போல், ``அரசின் கொள்கைகளை எதிர்க்கட்சிக் குழுக்கள் நியாயமாக, சுதந்திரமாக, வெளிப்படையாக விமர்சிக்க அனுமதிக்காவிட்டால்,  அது ஜனநாயகத்தைக் கொடுங்கோன்மையாகச் சிதைத்ததுபோல் ஆகிவிடும்” என்றும் சொல்லி இருக்கிறார். நேற்றுவரை அவர் இந்திய ஜனாதிபதி. இன்று இப்படிச் சொல்வதால் இந்தியத் துரோகி ஆகிவிட மாட்டார்.

ஓர் அரசியல் கட்சி, ஆட்சிக்கு வந்ததும் பொதுக்கட்சி ஆகிவிட வேண்டும். எல்லோருக்குமான கட்சியாக மாறிவிட வேண்டும். ஒரு குழுவின், மதத்தின், ஒரு பிரிவின் ஆசைகளை, விருப்பங்களைப் பூர்த்தி செய்வதாக அது செயல்பட்டால், அந்த நாடு எந்தச் சூழலிலும் வளராது. இது பி.ஜே.பி-க்கு மட்டுமல்ல; காங்கிரஸுக்கும் பொருந்தும். இந்து மதவாதத்துக்கு மட்டுமல்ல; இஸ்லாமிய மதவாதத்துக்கும் பொருந்தும். எல்லா மதவாதத்துக்கும் எதிரான குரல் என்பது எல்லா மதவாதத்துக்கும் எதிரான குரலாக அமைய வேண்டும். காவிக்கொடியோடு இஸ்லாமிய மதவாதத்தைக் கண்டிப்பது எப்படித் தவறோ, அப்படித்தான் நோன்புக் கஞ்சி குடித்துக்கொண்டு இந்து மதவாதத்தைக் கண்டிப்பதும். இரண்டு பக்கமும் கோளாறு இருப்பதால்தான், இந்தியாவில் மத நல்லிணக்கம் கேலிக்குரியதாக மாறியது.

டார்கெட் 2022 - என்ன சொல்கிறார்... என்ன செய்கிறார் மோடி?

இதேபோல் கேலிப்பொருளானது ஊழல். மோடி சொல்கிறார் ஊழலற்ற இந்தியா என்று. குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுக்கு ஓட்டை மாற்றிப்போட கரன்சி கொடுத்த கை ஈரம் காய்வதற்கு முன்பே இந்த விளம்பரம் தரப்படுகிறது. அகமது படேல் வெற்றிபெறத் தேவையான வாக்குகள் இருக்கும்போது, எதற்காக அதனைக் கலைக்க கரன்சி அஸ்திரம் ஏவ வேண்டும்? இந்தக் குதிரைபேரத்துக்குத் தடையாக நின்ற கர்நாடக அமைச்சர் டி.கே. சிவகுமாரின் வீடு வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறது. கூவத்தூர் விடுதியை அரசியல் கூவமாக மாற்றிய எடப்பாடி பழனிசாமியை எப்போது வேண்டுமானாலும்  சந்திக்கிறார் பிரதமர். என்றால் இவர்கள் ஒழிக்க நினைக்கும் ஊழல் ஒருபக்கச் சார்பானது அல்லவா? நாடு முழுவதும் நாறிய மத்தியப் பிரதேசத்து `வியாபம்’ ஊழல் முதல்... 1,000 ரூபாய் நோட்டைத் தடைசெய்த சில நாள்களில் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் திருமண வைபோகம் நடத்தும் தைரியம் பெற்ற கர்நாடக ரெட்டி சகோதரர்கள்வரை பி.ஜே.பி. சுத்த சிகாமணிகள்மீது மோடி எடுத்த நடவடிக்கை என்ன? குறிப்பிட்ட நிறுவனங்கள் வளரும் வாய்ப்பாகவே வர்த்தக முடிவுகள் எடுக்கப்படுவதன் பின்னணிகள் விசாரிக்கப்பட வேண்டியவை.

டார்கெட் 2022 - என்ன சொல்கிறார்... என்ன செய்கிறார் மோடி?

அதேபோல் பூதாகரமாக அறிவிக்கப்பட்ட 1,000 ரூபாய் நோட்டுத் தடையும், ஜி.எஸ்.டி. அறிவிப்பும் இந்தியாவின் வளர்ச்சிக்கு எவ்வளவு பயன்தரும் என்பதை அறிவிக்கப்பட்ட காலத்தில் வரவேற்றவர்களே இப்போது சொல்லத் தயாராக இல்லை. 6.75 சதவிகிதப் பொருளாதார வளர்ச்சியை நாம் அடைவது கடினம் என்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆய்வு அறிக்கை கூறியுள்ளது. இந்த இரண்டு அறிவிப்புகளும் அந்த அறிவிப்புகளுக்கு மிஞ்சிய பெருமைக்குரியதாக உருவகப்படுத்தப்பட்டன. 1,000 ரூபாய் நோட்டை ஒழித்தால், கறுப்புப் பணம் ஒழிந்துவிடும். ஜி.எஸ்.டி. வந்துவிட்டால் இந்தியாவின் ஒருமைப்பாடு தழைத்துவிடும் என்பதுதான் மோடியின் குரல். இவை நிதி நடவடிக்கைகள் அவ்வளவுதான். சுபிட்ச நடவடிக்கைகள் அல்ல. தேவையற்ற மகுடம் சூட்டப்படுவதால்தான், அளவுக்கு அதிகமான விமர்சனத்தையும் சந்திக்கின்றன.

மிக மோசமான பழைய பாதை, புதிய இந்தியாவை உருவாக்குமா?