Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 50

ஆண்பால் பெண்பால் அன்பால் - 50
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண்பால் பெண்பால் அன்பால் - 50

#MakeNewBondsகொற்றவை எழுத்தாளர் - படங்கள்: அருண் டைட்டன்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 50

நான் பெண்; ஆனால், பெண்மையைத் துறந்தவள்.

நான் தாய்; ஆனால், தாய்மையிலிருந்து வெளியேறியவள்.

இதுதான் என்னைப்பற்றிய சுய அறிமுகக் குறிப்பு.

தந்தைத் தலைமையிலான அல்லது ஆணுக்குச் சிறப்பிடம் கொடுக்கும் இந்தச் சமூக அமைப்பை நாம் ஆணாதிக்க அமைப்பு என்கிறோம். இந்த ஆணாதிக்க அமைப்பின் கற்பிதங்களைக் கற்று வளரும் பெண்கள் அவ்வளவு எளிதில் மேற்சொன்ன அடையாளங்களைத் துறந்துவிட முடியாது. விந்தை என்னவெனில் இந்த அடையாளங்களை, இன்னும் துல்லியமாகச் சொல்வதெனில் நான் பெண்மையைத் துறக்க ஓர் ஆண்தான் காரணம். அவனை என் கணவன் என்று சொல்வது உண்மையில் அவனைச் சிறுமைப்படுத்துவதாகும். ஆகவே நாங்கள் எங்களை `வாழ்நாள் தோழர்கள்’ என்றே அழைத்துக்கொள்கிறோம்.

ஆனால், இப்படித் தோழர்களாய் மாற நாங்கள் கடந்துவந்த பாதை போராட்டம் நிறைந்ததே. என்னுடைய இந்தப் பெண் வாழ்க்கையை `அறிவு பெறும் முன்’, `அறிவு பெற்ற பின்’ என்று இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 50

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சிறு வயதில் ‘நான்’ என்பது... சினிமாவும், சமூகமும் காட்டிய பொம்பள, அம்மா, ஹீரோயின் ஆகியோரின் கூட்டுமொத்தம். என் மனநிலையைப் பெரும்பாலும் சினிமாதான் கட்டமைத்தது. மீதம் என் குடும்பத்தில், வசிப்பிடத்தின் அருகில் வாழ்ந்த ஆண்கள் கட்டமைத்தனர். சினிமாவும் ஆண் உலகம் தானே! எனவே, என் மனநிலையை இந்த ஆண்களால் ,ஆண்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஆண்களின் சூழலே கட்டமைத்தது என்று சொல்லலாம்.

இன்றைக்கு சினிமாவின் பேசு பொருள், பேசாப் பொருள், குறியீடு என நுண்ணிய அளவில் ஆய்வு செய்யும் நான் ஒரு காலத்தில் சினிமாக் கதாநாயகிகளைத்தான் என் ரோல் மாடலாகக்கொண்டிருந்தேன். பாடல்களின் நடுவில் இந்தப் பெண்கள் எங்கு சென்று உடை மாற்றிக்கொண்டு வருகிறார்கள் என்று யோசிப்பேன். நீளமான கூந்தல், மஞ்சள் தடவிய முகம், அடக்கமான உடல் மொழி, குடும்பப் பாங்கான தோற்றம்கொண்ட பெண்களைக் கதாநாயகர்களும், சமூகமும் புகழ்வது கண்டு, அப்படி ஓர் அழகான ‘குடும்பப் பெண்ணாக’ வாழ வேண்டும்,  ‘பத்தினிப் பெண்’ என்று பெயர் எடுக்க வேண்டும், பெய் எனச் சொன்னால் மழை பெய்ய வேண்டும் என்பதே என் ‘வாழ்நாள் இலட்சியமாக’க் கொண்டிருந்தேன்.

ஆனால், அதே வேளை நவ நாகரீகத் தோற்றம் கொண்ட பெண்களின் பாணியே எனக்கு உள்ளுக்குள் பிடிக்கும். இந்த இரண்டு தோற்றத்துக்கும் இடையிலான முரண்பாடு உள்ளுக்குள் மோதும். ஏனென்றால், நவ நாகரீகப் பெண் திமிர் பிடித்தவள் என்று சினிமாக்கள் சொல்லும். ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் குட்டைமுடி வைத்திருக்கும் பெண்ணாகவே மாறினேன். முதலில் திருட்டுத்தனமாக வீட்டில் முடியை வெட்டிக்கொண்டிருந்தேன். அதை அறிந்த பாட்டி அடித்தார். என் அம்மா புரிந்து கொண்டு அனுமதி கொடுத்தார். பின்னர் அதுவே எனது அடையாளமானது.

தோற்றத்தில் பெண்மைக்கு வகுக்கப்பட்ட இலக்கணத்தை  மயிர் வெட்டிக் கடந்துவிட்டாலும், ஆழ்மனதில் பெண் பற்றி நான் உள்வாங்கிக் கொண்ட ‘பாடங்களை’ களைய முடியவில்லை. இதற்குக் காரணம் என் வாழ்வில் நான் கடந்து வந்த ஆண் சமூகம்; அவர்களுடன் வாழும் ஆணின் பெண்களும்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 50

பெண்மைக்குரிய இலக்கணங்கள் என் ஆளுமையை எப்படியெல்லாம் கட்டமைத்தி ருந்தது என்று நினைத்துப் பார்க்கையில் மலைப்பாய் இருக்கிறது. பெண்மையைத் துறந்தவள் என்று இன்றைக்குத் துணிவுடன் சொல்லும் நான், ஒரு காலத்தில் பதின் பருவ வயதில், பேருந்தில் பயணிக்கையில் முதிய ஆண் அருகில் அமர்வதைக்கூட ‘கற்பொழுக்கம்’ தவறும் செயலாகக் கருதியவள். Compulsive Obsessive Disorder என்று சொல்லத்தக்க வகையில் வலிந்து கற்பொழுக்கத்தைத் திணித்துக் கொண்ட ஒரு பெண்ணாகவே நான் இருந்து வந்தேன்.

உடல், காதல், காமம் என்று இன்றைக்கு உடலை, உணர்ச்சிகளை முன் வைத்து எழுதும் எனக்கு அந்தப் பதின் பருவ வயதில் ஆணின் விரல் பட்டாலே (தொடுதலால் மட்டுமே) கர்ப்பம் தரித்துவிடுவோம் என்ற அறிவு வளர்ச்சி தான் இருந்தது. நம்ப முடியவில்லை அல்லவா? பாலியல் கல்வி குறித்தெல்லாம் பேசப்படாத தலைமுறையில் வளர்ந்தவள். உடல், காதல் குறித்தெல்லாம் இந்த அளவு பேசும் வாய்ப்புகள் 1980-களில் இல்லை. அல்லது அத்தகைய வட்டமோ, சூழலோ எனக்கு வாய்க்கவில்லை. மேலும், காதல்வயப்பட்டு அந்த உறவு முறிந்து மறுமுறை காதல் வரும்போது குற்ற உணர்ச்சியும் சேர்ந்துவரும். ‘ஒருவனுக்குக் கொடுத்த இதயத்தை எப்படி மற்றவருக்குக் கொடுப்பது’, ‘அது என்ன லாட்ஜா பலரும் வந்து குடியிருக்க’ என்று ஏதோ ஒரு சினிமா வசனம் என்னை மிரட்டும். ஆனால், உண்மை என்னவெனில் பலமுறை காதல் வருவதைத் தடுக்க முடியவில்லை. ஒவ்வொரு உறவிலும் ஏதோ ஓர் ஏமாற்றம், நிறைவான ஒரு துணையைத் தேடுவது இயல்புதான் என்பது புரிய எனக்குப் புதிய கல்வி தேவைப்பட்டது. அது என்ன கல்வி என்று பின்னால் சொல்கிறேன்.

பெரும்பாலான பெண்கள் இத்தகைய அறியாமையோடுதான் இந்தச் சமூகத்தில் வளர்க்கப்படுகிறார்கள். பெண்-பெண்மை பற்றிய அதே இலக்கணம்தான் ஆண்களுக்கும் போதிக்கப்படுகிறது. இதுவே ஆண்-பெண் உறவுக்கிடையிலான சிக்கலாக வளர்கிறது. இதுதான் சமூகச் சிக்கலும்கூட.  இந்த ஆணாதிக்கச் சமூகத்தின் கருத்தாக்கங்களை உள்வாங்கிக்கொள்ளும் ஆண், பெண்ணைத் தன் உடைமையாகக் (அடிமையாக) கருத, பெண்ணோ தன்னை ஆணுக்காகப் படைக்கப்பட்ட பிறவியாகவே கருதும் நிலை நிலவுகிறது. ஆகவே சதாசர்வகாலமும், ஆண் பெண்ணை அடக்கி ஆள்வதில் தனது ஆண்மையை நிரூபிக்க வேண்டியவனாய் மாற்றப்படுகிறான். அதன் தொடர்ச்சியாய்ப் பெண்ணின் நடத்தையை, குடும்பத்திற்கு அடங்கி இருத்தலை மையப்படுத்தி குடும்ப கௌரவம் காக்கும் அழுத்தம் கௌரவக் கொலைகளில் கொண்டுவந்து நிறுத்துகிறது. ஆனால், இது போன்ற விதிகள் எல்லாம் காலப்போக்கில் தோன்றியவையே. ஆதிகாலத்தில் பெண்ணே தலைமை பெற்றிருந்தாள். பிறந்த குழந்தைகளில் எது தனது குழந்தை என்றுகூட தெரியாத நிலையில்தான் ஆண் இருந்தான் என்கின்றன வரலாற்று ஆய்வுகள். அதனைத் தாய்வழிச் சமூகம் என்றும் அப்போது பெண்ணும் சரி, நிலமும் சரி, இதர வாழ்வாதாரப் பொருள்கள் என ஏதும் எவரின் உடைமையாகவும் இருக்கவில்லை. ஆனால், காலப்போக்கில் உருவான தந்தை வழிச் சமூகத்தில் இயற்கையும் கூட ஒரு சிலரின் உடைமையாகிப் போனது.  இதைப்  பெரும்பான்மை மக்கள் அறிவதில்லை. அவர்கள் அறிவதற்கான கல்வி இங்கு வழங்கப்படுவதில்லை.

ஆண்களின் மனநிலை மட்டுமல்லாது பெண்கள், பெண்களைப் பெற்ற பெண்கள், பெண்களை மருமகளாகப் பெற்ற பெண்கள், பெண்களின் தோழிகள் என அனைத்துப் பெண்களும் இதே ஆணாதிக்க மூளையைச் சுமந்துகொண்டிருப்பதால்தான் பெண்ணே பெண்ணுக்கு எதிரி என்னும் நிலையும் இங்கு நிலவுகிறது. இந்த ஆணாதிக்கச் சமூகத்தின் நன்மதிப்பை, நற்சான்றிதழைப் பெரும் வகையிலான நடத்தை விதிகள்கொண்டே ஒவ்வொரு பெண்ணும் மற்றொரு பெண்ணை மதிப்பிடுகிறாள். ஆகவே, உடலியல் அடிப்படையில் நாம் பெண்களாய் இருந்தாலும், ஆண் மூளையைச் சுமந்துகொண்டு திரிகிறோம். இந்தக் கட்டமைப்பானது ஆணுக்குப் பெண்ணை எதிரியாக்கியது மட்டுமின்றி, பெண்ணுக்கும் பெண்ணை எதிரியாக்கி வைத்துள்ளது. இந்த உண்மைகளை எடுத்துரைக்கும் நபர்களைத்தான் ஆண்களும் பெண்களுமாய் கேடுகெட்டப் பெண்ணியவாதிகள், ஒழுக்கக்கேடான பெரியாரிஸ்டுகள், பெண்களைக்கூட பொதுவாக்கிவிடக்கூடிய ஆபத்தான கம்யூனிஸ்டுகள் என்று இந்தச் சமூகம் சொல்கிறது.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 50

கோடம்பாக்கம் பெரியார் நகரில் அப்போது வசித்து வந்தேன். குடிசைப் பகுதிகள் அதிகம் இருக்கும் ஒரு தெரு அது. அந்தத் தெரு வழியாக நடந்து பிரதான சாலைக்கு வந்து பேருந்து பிடித்துச் செல்வது வழக்கம். அப்படி வருகையில் எல்லாம் ஓர் ‘ஆண்’ கேலி செய்வதும், எதிரில் கடக்கையில் ஏதேனும் சொல்லிச் செல்வதுமாய் இருந்தான். ஒருநாள் நான் நடந்து செல்லும்போது என் கையைப் பிடித்தானா அல்லது என்னைத் தொட்டுச் சென்றானா என்பது எனக்கு நினைவில்லை. ஆனால், எங்கிருந்து எனக்கு அப்படி ஒரு துணிவு வந்தது என்று தெரியாது, பதிலுக்கு நான் அவனது கையைப் பிடித்து, ``இந்தா தொட்டுக்கோ... உனக்கு இப்போ என்ன ஃபீலாகுதுன்னு எனக்குச் சொல்லு” என்று கேட்க, அந்தப் பையன் சற்றுத் திகைத்து விட்டான். இத்தனைக்கும் இது நடந்தது நல்ல பகல் நேரத்தில். அங்கிருந்த அவன் நண்பர்களுக்கும் அதிர்ச்சி. அவன் செய்வதறியாது திகைக்க, ``எவ்ளோ நேரம் வேணும்னாலும் புடிச்சுக்கோ, ஆனால், என்ன தோணுதுன்னு சொல்லு” என்றேன். அவன் நண்பர்கள் வந்து சமாதானம் செய்து பிரித்தனுப்பினார்கள். இருந்தாலும் எனக்குக் கோபம் அடங்காமல் மாலை அவனது வீடு தேடிச் சென்று “உங்கள் மகன் என்ன இப்படி நடந்துக்கிறான்” என்று புகார் அளித்தேன். மீண்டும் நண்பர்கள் “இல்லை அவன் நல்ல பையன்தான். ஏதோ தெரியாம செஞ்சுட்டான்’’ என்றார்கள். ``இனி இப்படி நடக்க வேண்டாம்னு சொல்லுங்க’’ என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டேன்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 50


அடுத்த நாள் அந்த இளைஞன்  “ஸாரி” என்று எதிரில் வந்தான். “பேசணும்னு பிரியப்பட்டா நேரடியா வந்து பேச வேண்டியதுதானே, அதுக்கு ஏன் இப்படி நடந்துக்கணும்” என்றேன். இருவரும் கை குலுக்கிக்கொண்டு நண்பர்களானோம்.

இன்றைக்கு அதை யோசிக்கையில், அந்த வாலிபனுக்கு ஆண்மை மேலோங்கி இருந்தால், ‘என் திமிரை அடக்க’ எண்ணி என் முகத்தில் ஆசிட்கூட ஊற்றியிருக்கலாமே என்கிற அச்சம் ஏற்படுகிறது. ஏனென்றால் இன்றைக்குத் தனக்குக் கிடைக்காத பெண், தன் அத்துமீறல்களைக் கண்டிக்கும் பெண்களின் நிலை அதுவாகத்தானே இருக்கிறது. அப்படி ஆண்மைச் சிக்கலில் மாட்டிக்கொள்ளாத அந்த நண்பனை அவ்வப்போது நினைத்துக்கொள்வேன்.

மற்றொரு சம்பவம் பேருந்தில் ஏறப்போன என்னை, பின்புறத்தில் தட்டினான் ஒருவன். பளார் என்று அவன் கன்னத்தில் அறை விழ, திரும்பினால் என் அம்மா நிற்கிறாள். எனக்கு வெலவெலத்துவிட்டது. ஆனால், அந்த ஆண் அப்படியே ஒதுங்கிவிட்டான். நாங்கள் பேருந்தில் ஏறிச் சென்றுவிட்டோம். காலம்தான் மாறியிருக்கிறதே ஒழிய, வீதிகள், பேருந்துகள், தொடரிகள் என எல்லா இடங்களிலும் பெண்கள் எதிர்கொள்ளும் உடல்சார்ந்த அத்துமீறல்கள் ஏதும் மாறவில்லை. இன்னும் சொல்லப் போனால், வன்மமும், குரோதமும், உடைமை மனோபாவமும் முன்பிருந்ததைவிட மிகவும் குரூரமாக வளர்ந்துவிட்டது. சகிக்க முடியாத வகையில் வன்புணர்வுகளும், பெண் உடல் சிதைப்பும், கௌரவக் கொலைகளும், காதல் தோல்விக்குப் பழிவாங்குதலும் நடக்கின்றன.

இது ஏதோ தனி மனிதப் பிரச்னையாக நாம் கருதுவதால்தான் தவறு-தண்டனை என்கிற செய்திகளோடும், வழக்குகளோடும் நாம் நிறைவடைந்து விடுகிறோம். ஆனால், இயற்கையின் மிகவும் அழகான உயிரினங்களில் இரண்டு அடையாளங்கள் ஏன் இப்படி எதிர் எதிர் நிலையில் இருக்கின்றன; ஒன்று ஏன் மற்றொன்றை அடக்கி ஆளும் வேட்கையுடன் இயங்குகிறது? ஆணைக் குறை சொல்வதாலும், தண்டிப்பதாலும், பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்களை இயற்றிவிடுவதால் ‘கெட்ட ஆண்கள், கெட்டப் பெண்களை’ ஒழித்துவிட்டு ஆண்பால் பெண்பால் அன்பால் இணைந்துவிடுமா?

இல்லை தோழர்களே, இங்கு நிலவும் ஆண் பெண் உறவுச் சிக்கலுக்கு தனி நபர்கள் காரணமல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிறக்கும்போது எவரும் ஆண் வெறுப்பு, பெண் வெறுப்பு மனநிலையில் பிறப்பதில்லை. வளரும்போது ஏன் இந்நிலை ஏற்படுகிறது? பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு எது காரணமாக இருக்கிறது என்னும் சமூக ஆய்வுத் தேவை. பெண்ணை இரண்டாம் நிலையில், ஆணின் உடைமையாய் வைத்திருக்கும் சமூக நிலைமைகளை முற்றிலும் களைவதற்கான அடிப்படை மாற்றம் ஏற்பட வேண்டும். மத போதனைகள், சீர்திருத்தப் பேச்சுகள், பாதுகாப்புச் சட்டங்கள், பெண் மீதான கட்டுப்பாடுகள் இவை எதுவும் அதற்குத் தீர்வாகாது. உடைமை மனநிலையைக் களைய தனி உடைமைச் சமூகத்தை ஒழிக்க வேண்டும். அப்போது உடல் அடையாளம் ஒரு பொருட்டின்றி மனிதம் மேலோங்கி இருக்கும். அங்கே அர்த்தமுள்ள சமத்துவம்தானே பிறக்கும்!

- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

ஆண்பால் பெண்பால் அன்பால் - 50

Dr. B.R. Ambedkar and Emancipation of Women

Dr. S.N. Salwade

பெண்களின் உரிமைகளுக்காக அம்பேத்கர் அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இந்த நூல் அவற்றை தொகுத்தளிக்கிறது. Hindu Code Bill மூலம் சொத்து, விவாகரத்து, திருமணம் ஆகிய விஷயங்களில் ஆணையும், பெண்ணையும் சட்டத்தின் முன் சமமாகப் பாவிக்கும் சம உரிமை விதிகளை அறிமுகம் செய்தது உள்ளிட்ட முயற்சிகளோடு பெண்களின் விடுதலைக்காக அம்பேத்கர் செய்த பங்களிப்பை இதில் தொகுத்தளித்துள்ளார்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 50

குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்!

ஃப்ரெட்ரிக் எங்கல்ஸ்

மனிதர்கள் உயிர்வாழப் பொருள்கள் அவசியத் தேவை. இயற்கையோடு உறவாடி மனிதர்கள் தம் தேவைக்கென பொருள் உற்பத்தியில் ஈடுபடும்போது, தவிர்க்க முடியாமல் சமூக உறவுகளாகப் பிணைக்கப்படுகிறார்கள். அந்த உற்பத்தி உறவுகளின் வளர்ச்சிக்கும் பெண்களின் அடிமை நிலைக்கும் உள்ள தொடர்பை, சமூகத்தின் வரலாற்று வளர்ச்சியை, நாம் தற்போது வாழும் இந்த அரசியல்-பொருளாதார அமைப்பை அறிந்துகொள்ளவும் சிறந்த கையேடு இது.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 50

உலக வரலாற்றில் பெண்கள்!

ரோஸ்லிண்ட் மைல்ஸ்

பெண்கள் அடிமைப்படுத்தப்பட்ட வரலாற்றை தொகுத்தளிக்கும் நூலிது. பெண் தெய்வ வழிபாடு தொடங்கி, தந்தையாண்மை மதத்தின் தோற்றத்தினால் பெண்கள் (தெய்வமும்) இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்று பேசுவதோடு, மலிவான கூலிக்காகக் குழந்தைகள், பெண்கள் எப்படி உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகிறார்கள் என்கிற வரலாற்றைப் பேசும் நூல்.