Published:Updated:

எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியா?!

எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியா?!
பிரீமியம் ஸ்டோரி
எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியா?!

மருதன் - ஓவியம்: ஹாசிப்கான்

எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியா?!

மருதன் - ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியா?!
பிரீமியம் ஸ்டோரி
எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியா?!

ங்கு எதிர்க்கட்சி பலத்துடன் இருக்கிறதோ அங்குதான் ஜனநாயகம் தழைத்திருக்கும். இதை ஓர் அடிப்படை அரசியல் விதியாகக்கொண்டு இன்றைய சூழலை ஆராய்ந்தால் கவலையைவிட அச்சமே அதிகம் தோன்றுகிறது. மத்தியில் மட்டுமல்ல, இந்தியாவின் பல மாநிலங்களில் எதிர்க்கட்சி என்னும் அரசியல் அமைப்பு முற்றாகச் செயலழிந்துவிட்டது அல்லது பலவீனமடைந்துவிட்டது அல்லது உருத்தெரியாத அளவுக்குச் சிறுத்துப்போய்விட்டது அல்லது சுவடே இல்லாதபடிக்கு இறந்துவிட்டது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பிரமாண்டமான பலத்துடன் வலம் வருவதற்கு இதுவே முதன்மையான காரணம்.

எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியா?!

அதிகரிக்கும் பலம்

இந்தியா முழுவதும் 13 மாநிலங்களில் பா.ஜ.க-வின் முதல்வர்கள் ஆட்சி செய்துவருகிறார்கள்.  மாநிலங்களவையில்  57 உறுப்பினர்களும் மக்களவையில் 281 உறுப்பினர்களும் இடம்பெற்றிருக்கிறார்கள். இந்தியாவின் தனிப்பெரும் கட்சி இதுவே.  இத்துடன் பா.ஜ.க-வின் பலம் மேலும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. சமீபத்திய இரண்டு நிகழ்வுகளை எடுத்துக்கொள்வோம். காங்கிரஸ், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் இரண்டோடும் மகா கூட்டணி ஏற்படுத்திக்கொண்டு மோடியின் வெற்றியை பிகாரில் வெற்றிகரமாகத் தடுத்துநிறுத்திய நிதிஷ் இப்போது தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்னும் ஒரே காரணத்துக்காக இதுவரை எதிர்த்துநின்ற பா.ஜ.க-வுடன் அதிகாரத்தைப் பங்கிட்டுக்கொள்ள முன்வந்திருக்கிறார். மோடிக்குச் சவால்விடக்கூடிய பிரதமர் வேட்பாளர் என்று கருதப்பட்ட நிதீஷ் திடீரென்று அணி மாறியது எதிர்க்கட்சி அமைப்புமுறையையே பலவீனப்படுத்திவிட்டது. மோடியை எதிர்த்து நிற்க வேறொரு வலுவான தலைவர் இன்றில்லை.

கடந்த டிசம்பரில் அருணாச்சலப் பிரதேசத்தை பா.ஜ.க வென்றெடுத்தது தேர்தல் மூலமாக அல்ல. ஆட்சியில் இருந்த காங்கிரஸைப் பின்பக்க வாசல் வழியாக நுழைந்து கலைத்துப் போட்டது பா.ஜ.க. முதல்வர் பேமா காண்டு உள்பட 43 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் காங்கிரஸில் இருந்து வெளியேறி அருணாச்சல் மக்கள் கட்சியில் (பி.பி.ஏ) இணைந்துகொண்டனர். இது பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சி. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்களையடுத்து பிபிஏவில் இருந்து 33 எம்எல்ஏக்களுடன் பா.ஜ.கவுக்குத் தாவினார் காண்டு. விளைவு? 12 எம்எல்ஏக்களை மட்டுமே கொண்டிருந்த பா.ஜ.க இப்போது 49 பேருடன் பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சியமைத்திருக்கிறது. ஒரு காங்கிரஸ் முதல்வர் இருமுறை கட்சி தாவியதால் மட்டுமே நிகழ்ந்த அதிசயம் இது.

அருணாச்சலப் பிரதேசத்தின் கதை இதுவென்றால் பிகாரில் சிபிஐ சோதனைமூலம் நிதிஷுக்கும் லாலுவுக்கும் இடையில் நெருக்கடியை ஏற்படுத்தி மகா கூட்டணியை முடிவுக்குக் கொண்டுவந்தது பா.ஜ.க தேர்தலில் தோற்றுப்போன மாநிலங்களைப் பின்பக்க வாசல் வழியாக நுழைந்து கைப்பிடிக்குள் கொண்டுவரும் கலையை பா.ஜ.க நன்கு கற்றுக்கொண்டுவிட்டது.

இந்நிகழ்வுகளை பா.ஜ.க-வின் வெற்றி அல்லது காங்கிரஸின் வீழ்ச்சி என்று மட்டுமே எடுத்துக்கொள்ளமுடியாது. காரணம், எல்லா வழிமுறைகளையும் பயன்படுத்தி பா.ஜ.க போரிட்டுக்கொண்டிருப்பது காங்கிரஸை எதிர்த்து மட்டுமல்ல, எதிர்க்கட்சி என்னும் அமைப்புமுறையையே எதிர்த்துதான். பலரும் நினைப்பதுபோல் இது ‘நரேந்திர மோடி, இந்துத்துவம், பா.ஜ.க’ பிரச்னையல்ல. அதைவிடவும் பெரியது. இதற்கு நாம் ஒவ்வொருவரும் கவலைப்பட்டே தீரவேண்டும். ஆம், மோடி ஆதரவாளர்களும் சேர்த்தேதான்.

அதிகரிக்கும் பலவீனம்


முதலில் காங்கிரஸை எடுத்துக்கொள்வோம். ஒரு காலத்தில் இந்தியாவின் ஒரே பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸ் இன்று இருக்கும் இடமே தெரியவில்லை. 2014 பொதுத்தேர்தலில் வெறும் 44 இடங்களை வாங்கிச் சுருங்கிப்போன காங்கிரஸ் இன்று ஒரு சிறு கடுகாகச் சிறுத்திருக்கிறது. கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், மிசோராம், மேகாலயா ஆகிய ஐந்து மாநிலங்களில் மட்டுமே இன்று காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. ஜனவரி 2019-க்குள் இவற்றில் மூன்று இடங்களில் (இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மிசோராம்) தேர்தல் நடைபெறவிருக்கின்றன. இவை போக, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் பா.ஜ.க-வுடன் நேரடியாக மோதப்போகிறது காங்கிரஸ். இந்த ஆறு மாநிலங்களில் காங்கிரஸ் உறுதியாக வெற்றிபெறும் இடங்கள் என்னென்ன என்று ஒருவராலும் சொல்லமுடியவில்லை. காங்கிரஸ் சிறுத்து மட்டும் போகவில்லை அதன் காரமும் காணாமல்போய்விட்டது.

இரண்டாவதாக, இடதுசாரிகள். சிபிஎம் கட்சியை எடுத்துக் கொண்டால் இன்று மக்களவையில் 9 பேரும் மாநிலங்களவையில் 8 பேரும் மட்டுமே இருக்கிறார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முதல் ஆட்சிக்காலத்தில் சிபிஎம்மின் பலம் இந்த இரு அவைகளிலும் 43 ஆக இருந்தது என்பதைப் பார்க்கும்போது இப்போதைய வீழ்ச்சியின் அளவு புரியவரும். காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து  2016 மேற்கு வங்கத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி யடைந்ததைத் தொடர்ந்து காங்கிரஸுடன் இனி கூட்டு இல்லை என்னும் முடிவை அக்கட்சி எடுத்தது. 2011-ல் சி.பி.எம்-மைக் கவிழ்த்த திரிணாமுல் காங்கிரஸ் இன்று 211 உறுப்பினர்களோடு வளர்ந்து நிற்கிறது. மேற்கு வங்கத்தை இழந்த பிறகு கேரளாவிலும் திரிபுராவிலும் மட்டுமே ஆட்சியில் இருக்கிறது சிபிஎம். சிபிஎம்மின் நிழலாக மாறிப்போய்விட்ட சிபிஐ கிட்டத்தட்ட முற்றிலுமாக வாக்குவங்கி அரசியலில் காணாமல்போய்விட்டது.

மூன்றாவது, மாநிலக் கட்சிகள். பா.ஜ.க இதுவரை ஆளாத மாநிலங்கள் என்று ஏழு மாநிலங்களைச் சொல்லமுடியும். தமிழ்நாடு, கேரளா, மேகாலயா, மிசோராம், தெலங்கானா, திரிபுரா மற்றும் மேற்கு வங்கம். தனி மாநிலமாவதற்கு முன்பு ஆந்திராவை தெலுங்குதேசக் கட்சியுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க முன்பு ஆண்டிருக்கிறது என்பதால் அவர்களுடைய வேர் இன்னமும் அங்கே வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. துரிதமாக இந்த வளர்ச்சியை வளர்த்தெடுக்கும் முயற்சிகளை ஏற்கெனவே முடுக்கிவிட்டுள்ளது பா.ஜ.க. மேற்கு வங்கத்தில் பா.ஜ.க  வலுவாக இல்லை என்றபோதும் இடதுசாரிகளை அகற்றியதன்மூலம் மறைமுகமாக ஆனால், திட்டவட்டமாக இந்துத்துவத்துக்குச் சாதகமான சூழலையே மம்தா பானர்ஜி அங்கே ஏற்படுத்தியிருக்கிறார் என்பதால் பா.ஜ.க எதிர்காலத்தின்மீது நம்பிக்கை வைத்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியா?!

மேகாலயா, மிசோராம், திரிபுரா ஆகியவற்றுக்காக பா.ஜ.க அதிகம் பிரயத்தனப்படும் என்று எதிர்பார்க்கமுடியாது. கேரளாவில் இடதுசாரிகளையும் அவர்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் காங்கிரஸையும் தோற்கடிக்க இந்துத்துவச் செயல்திட்டத்தை பா.ஜ.க மும்முரமாக முயன்றுவருவதைச் சமீபத்திய நிகழ்வுகள் அனைத்தும் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டுகின்றன. எஞ்சியிருப்பது தமிழ்நாடு மட்டும்தான். இங்கே தனக்குக் குண்டூசி முனை இடமும் இல்லை என்பது பா.ஜ.க-வுக்குத் தெரியும். எனவே, தேர்தல் பாதையை நம்பமுடியாது.  அருணாச்சல், பிகார் வழி மட்டுமே திறந்துகிடக்கிறது. ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து நிலவும் அசாதாரணமான அரசியல் குழப்ப நிலையைச் சாதகமாக்கிக்கொண்டு இந்த வழியைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது பா.ஜ.க.

பா.ஜ.க, காங்கிரஸுக்கு அடுத்தபடியாக அதிக மக்களவை உறுப்பினர்களைப் பெற்றிருந்தும் அ.தி.மு.க கட்சி (37) தனித்துவ மின்றி இருப்பது பா.ஜ.க-வின் பலத்தை அதிகப்படுத்தவே உதவிக்கொண்டிருக்கிறது.

நாங்கள் பா.ஜ.க-வின் கட்டுப்பாட்டில் இல்லை என்று தினம் தினம் அறிவிக்கவேண்டிய நிலைக்கு அ.தி.மு.க தள்ளப்பட்டிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான திமுக முழுக்க முழுக்க ஸ்டாலின் கரங்களில்தான் அடங்கி யிருக்கிறது. அ.தி.மு.க அல்லது தி.மு.க என்பதுதான் இங்கு வழக்கம் என்பதால் அடுத்த தேர்தலில் தி.மு.க-வுக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே தெரிகிறது என்றாலும் தகுந்த தலைமையின்றி அ.தி.மு.க சிதறடிக்கப்பட்டு விட்டால் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்ள நிச்சயம் பா.ஜ.க கூடுதலாக உழைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மொத்தத்தில் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளில் பா.ஜ.க-வை எதிர்த்து நிற்கும் அதிகாரம் கொண்ட எதிர்க்கட்சி என்றொன்று இல்லை என்பதே உண்மை. அதிகாரத்தில் உள்ள கட்சிகள் ஒன்று பா.ஜ.க-வைச் சார்ந்திருக்கின்றன அல்லது பா.ஜ.க-வைவிட்டு விலகி நிற்கின்றன. இது நிச்சயம் அபாயகரமான போக்கு.

குலையும் சமநிலை


நரேந்திர மோடி, அமித் ஷா இருவருமே தீவிர இந்துத்துவக் கொள்கைவாதிகள் என்பதல்ல அபாயம். அதைவிடவும் பெரிய அச்சுறுத்தல், அவர்கள் தங்களுடைய சித்தாந்தத்தை எப்போது வேண்டுமானாலும் தளர்த்திக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான். எப்போதும் இந்துத்துவ முகமூடியுடன் அவர்கள் வலம் வருவதில்லை. வாகான சமயங்களில் அதைக் கழற்றிவைத்துவிட்டுப் புன்னகைக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். பசு மாடு, அயோத்தி, காஷ்மிர் ஆகியவற்றை எப்போதெல்லாம் உயர்த்திப் பிடிக்கவேண்டும், எப்போதெல்லாம் தூக்கிப் பரணில் போடவேண்டும் என்பதை அவர்கள் தெரிந்துவைத்திருக்கிறார்கள்.

இறுதி இலக்கு, இந்துத்துவம் அல்ல. அதிகாரம் மட்டும்தான். அதை அடைவதற்கு இந்துத்துவம் ஒரு நல்ல கருவி என்றால் இந்துத்துவம் அணைத்துக்கொள்ளப்படும். உதவாது என்றால் இந்துத்துவத்தை வீசிவிட தயாராகவே இருக்கிறார் மோடி. அவர் வீசுவதற்கு முன்பே பாய்ந்துசென்று பற்றிக்கொள்ளவும் பத்திரப்படுத்திக்கொள்ளவும் ஆர்.எஸ்.எஸ் இருக்கிறது. சங் பரிவார் இருக்கிறது. எண்ணற்ற சிறு, குறு அமைப்புகள் இருக்கின்றன. அவர்கள் தனித்தனியாகவும் தேவைப்படும்போது ஒன்றுசேர்ந்தும் இயங்கத் தயாராக இருக்கிறார்கள்.  இது ஒரு தோதான வேலைப் பகிர்வினை. அரசியல் களத்தை ஒருவரும் சிவில் சமூகத்தை வேறு சிலரும் ஆக்ரமித்துக்கொண்டிருக்கிறார்கள். சட்டத்துக்கு உட்பட்ட வழியில் முதலாமவரும் சட்டத்துக்கு வெளியில் இரண்டாமவர்களும் செயல்பட்டு வருகிறார்கள்.

இதற்குமுன்பு கண்டிராத அதிகாரம் இது. அதிகாரம் கட்டுக்கடங்காமல் போகும்போது  சமநிலை குலைந்து எதேச்சதிகாரம் உருவாகிறது. எதிர்க்க யாருமில்லை என்னும் துணிவு ஓர் ஆட்சியாளருக்கு ஏற்படுத்தும் மயக்கம் அச்ச மூட்டக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தும். தன்னுடைய அல்லது தான் சார்ந்திருக்கும் இயக்கத்தின் கனவுகளை, செயல்திட்டங்களை வாய்ப்பு இருக்கும்போதே நிறைவேற்றி முடித்திட வேண்டும் என்னும் தீவிர வேட்கையுடன் அந்த ஆட்சியாளர் செயல்பட ஆரம்பிப்பார். நல்லதோ கெட்டதோ எல்லாவற்றையும் தலைகீழாகத் திருப்பிப்போட்டுப் பார்க்கவேண்டும் என்னும் துடிப்பு பிறக்கும். பணமதிப்பு நீக்கம், ஆதார் என்று ஏற்கெனவே அத்தகைய சில நடவடிக்கைகளை நாம் கண்டுவிட்டோம்.

ஆம், இப்போது பா.ஜ.க இருந்த இடத்தில் காங்கிரஸ் முன்பு இருந்தது உண்மைதான். இடதுசாய்வுகொண்ட ஒரு ஜனநாயகவாதியாக இருந்தபோதும் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நேருவின் காலகட்டத்தில்தான் கலைக்கப்பட்டது. பிறகு அவருடைய மகள் அபரிமிதமான பலத்தின் துணையுடன் அவசரநிலை பிரகடனம் செய்தததையும் அதைத் தொடர்ந்து மேற்கொண்ட மனிததன்மையற்ற நடவடிக்கைகளையும் நாம் காணத்தான் செய்தோம். ஆனால் இந்திரா காந்தி வீழ்த்தப் பட்டது எதிர்க்கட்சிகளின் திரட்சியால்தான் என்பதையும் வரலாறு குறித்துவைத்திருக்கிறது. நேருவை விமர்சிக்க எதிர்க்கட்சி என்று பெரிதாக எதுவுமில்லை என்றபோதும் நாலாபக்கங்களில் இருந்தும் கிளம்பிய எதிர்க்குரல்களை அவர் ஒருபோதும் நசுக்கமுயலவில்லை. இப்போது எதிர்க்கட்சிகள் இல்லை என்பதோடு எதிர்ப்புகளும் இல்லை என்பதே உண்மை நிலை. இன்றைய சிவில் சமூகத்திடமிருந்து அதிகாரம் கோருவது ஒன்றைத்தான். விமர்சனங்களற்ற, எதிர்ப்புகளற்ற கீழ்படிதல். இதுவேதான் மீடியாவிடமிருந்தும் வலுக்கட்டாயமாகக் கோரப்படுகிறது.

புதிய நம்பிக்கையை விதைப்பதாகச் சொன்ன அர்விந்த் கெஜ்ரிவால் இன்று இருக்கும் இடமே தெரியவில்லை. மோடிக்குச் சரியான மாற்று என்று கருதப்பட்டுவந்த நிதிஷ் அப்படி நினைத்த அனைவரையும் ஏமாற்றிவிட்டார். ராகுல் காந்தியின் காங்கிரஸ் ஆழ்நிலை உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டது. கட்சி இடதுசாரிகள் தங்களுடைய அடையாளத்தையும் இருப்பையும் தக்க வைத்துக்கொள்ளவே மாபெரும் போராட்டத்தை நடத்தவேண்டியிருக்கிறது. இதர மாநிலக் கட்சிகளால் மையத்தை நெருங்கிச்செல்லவே முடியாது. கண்ணுக்கு எட்டியவரை எந்த மாற்றும் தென்படவில்லை என்பது நிலைமையை மேலும் அபாயகரமானதாக மாற்றுகிறது.

இதற்கு மோடி பக்தர்களும் சேர்த்தே ஏன் கவலைப்படவேண்டும் என்பதற்கு ஓர் உதாரணம். பத்தாண்டு காலம் துணைக் குடியரசுத் தலைவராகப் பணியாற்றிச் சமீபத்தில் ஓய்வுபெற்ற ஹமித் அன்சாரியைத் தற்போதைய அரசு எப்படி வழியனுப்பிவைத்தது தெரியுமா? நரேந்திர மோடி தொடங்கி ஆர்.எஸ்.எஸ் வரை பலரும் அவருடைய மத அடையாளத்தை நேரடியாகவும் மறைமுகமகாவும் குத்திக்காட்டிப் பழி தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர் செய்த குற்றம் நடப்பு ஆட்சி குறித்த தன்னுடைய சமூகக் கவலையைப் பகிர்ந்துகொண்டதுதான். இத்தனை பெரிய பதவியை வகித்த ஒருவரைப் பிரதமரால் நேரடியாகத் தாக்கிப் பேசமுடிகிறது என்றால் எளிய மக்களின் நிலை? ஒருவருடைய மதத்தைக் கொண்டு அவரைச் சந்தேகிக்கவும் வேறுபடுத்தவும் அவமதிக்கவும் முடியும் என்னும் நிலை நிலவுவது ஒருவருக்குமே நல்லதல்ல. இது அச்ச மூட்டக்கூடியது மட்டுமல்ல, அவமானத்துக் குரியதும்கூட. ஜனநாயகத்தின்மீது அக்கறை கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் இதைப் பற்றிச் சிந்தித்தாகவேண்டும்.

எதிர்க்கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் செயலழிந்துவிட்டன. நாம் செய்ய வேண்டிய தெல்லாம் ஒன்றுதான். ஜனநாயகத்துக்கு எதிரான போக்குகளை எதிர்க்கும் பணியை சிவில் சமூகம் மேற்கொண்டாகவேண்டும். அதற்கு அறிவுஜீவிகள் தொடங்கிச் சாமானியர்கள்வரை ஜனநாயகத்தின்மீது அக்கறையும் நம்பிக்கையும் கொண்டிருக்கும் அனைவரும் கரம் கோர்த்து ஓர் அமைப்பாகத் திரளவேண்டும். இது நடக்காதவரை ஜனநாயகம் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக்கொண்டேதான் இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism