Published:Updated:

ஏமாறாதே... ஏமாற்றாதே!

ஏமாறாதே... ஏமாற்றாதே!
பிரீமியம் ஸ்டோரி
ஏமாறாதே... ஏமாற்றாதே!

ஏமாறாதே... ஏமாற்றாதே!

ஏமாறாதே... ஏமாற்றாதே!

ஏமாறாதே... ஏமாற்றாதே!

Published:Updated:
ஏமாறாதே... ஏமாற்றாதே!
பிரீமியம் ஸ்டோரி
ஏமாறாதே... ஏமாற்றாதே!

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைந்துவிட்டன. ‘பகைவர்கள் அல்ல நாங்கள், பங்காளிகள்தான்’ என்று கூறிக்கொண்டிருந்தவர்கள் கச்சிதமாகப் பங்கு பிரித்துக்கொண்டார்கள். மூன்று முறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் இப்போது துணை முதல்வராகியிருக்கிறார். அமைச்சர்கள் சிலரின் இலாகாக்கள் மாறி, புதிய அமைச்சர்கள் பதவியேற்றிருக்கிறார்கள். இது அவர்களின் உள்கட்சி விவகாரம். ஆனால், தமிழகத்தினுடைய நிகழ்காலத்தின்மீதும் எதிர்காலத்தின்மீதும் அக்கறை உள்ளவர்கள் கவனத்தில்கொள்ள வேண்டிய செய்தி, ‘காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்குத் தண்ணீர் தருவதாக இருந்தால், மேக்கேதாட்டூ அணையின் பராமரிப்புப் பணி மத்திய அரசு அல்லது மூன்றாவது அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றால், காவிரியின் குறுக்கே அணையைக் கட்டிக்கொள்ளலாம்’ என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தலையாட்டியிருக்கிறது என்பதுதான். 

ஏமாறாதே... ஏமாற்றாதே!



காவிரிப் படுகையையே பாலைவனமாக்கும் இப்படிப்பட்ட ஒரு நாசகார முடிவை அதிகாரிகள் எடுத்தார்களா அல்லது தமிழக முதலமைச்சர் எடுத்தாரா? இந்தத் துரோகத்தை யார் செய்திருந்தாலும், அது மிகுந்த கண்டனத்துக்குரியது.

“இந்த அணையைக் கட்டுவதோ, இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதோ காவிரி  நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரானது. ஆகவே, இந்தத் திட்டத்தைக் கர்நாடக அரசு கைவிட வேண்டும். மத்திய அரசும் இந்த திட்டத்திற்கான சுற்றுச்சூழல் மற்றும் இதர அனுமதிகளை அளிக்கக் கூடாது” என்று சட்டமன்றத்தில் இரண்டுமுறை தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு, இப்போது இப்படி முடிவெடுக்க வேண்டிய அவசியம் என்ன?

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பிலேயே “தமிழகத்திற்கு  வழங்கப்படும் தண்ணீரின் அளவு குறையும் வகையில் எந்தத் திட்டங்களையும் கர்நாடக அரசு நிறைவேற்றக் கூடாது” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதைத் தமிழக அரசு மறந்துவிட்டதா?

மூன்றாவது அமைப்பின் கட்டுப்பாட்டுக்கு உச்ச நீதிமன்றத்தில் தலையாட்டிவிட்டு, இங்கே `மேக்கேதாட்டூ பிரச்னையில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது உண்மைக்குப் புறம்பானது’ எனச் சொல்கிறார் முதல்வர் பழனிசாமி. எக்காரணம் கொண்டும் மேக்கேதாட்டூ அணையைக் கட்டக் கூடாது என்பதுதான் தமிழகத்தின் ஒரே முடிவாக இருக்க வேண்டும் என்பது எப்படித் தமிழக முதல்வருக்குத் தெரியாமல் போனது?

அரை நூற்றாண்டுக்கு முன்பு இதே போன்ற சூழல் எழுந்தது. அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு, ‘‘எங்களுக்குச் சேர வேண்டிய தண்ணீரைக் கொடுப்பதால் நீங்கள் அணைகள் கட்டிக்கொள்வதில் ஆட்சேபனை இல்லை” என்று  சம்மதம் சொன்னது. இதுதான் சந்தர்ப்பம் என்று கர்நாடக அரசு ஒன்றுக்கு நான்கு அணைகளைக் கட்டிக்கொண்டது. ஆனால், நமக்கு நியாயமாகத் தர வேண்டிய தண்ணீரைத் தந்ததா என்ன? பல ஆண்டுப் போராட்டத்துக்குப் பிறகு வந்த காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்குப் பிறகும்கூட நமக்கு வர வேண்டிய தண்ணீரை அந்த அணைகளில் இருந்து திறந்துவிடுவதில்லை என்பதுதான் சோகமும் கோபமும் நிறைந்த சரித்திரம்.   

ஒருவேளை, மேக்கேதாட்டூ அணை கட்டப்பட்டு, கர்நாடக அரசே தண்ணீரைத் திறந்துவிட முன்வந்தால்கூட, காவிரிப் பிரச்னையை வைத்துக் கர்நாடகத்தில் அரசியல் செய்பவர்கள் அதை அனுமதிப்பார்களா? மேலும், கர்நாடக அரசு எத்தனை முறை நீதிமன்றத் தீர்ப்புகளை மதித்திருக்கிறது,  இதுவரை வழங்கிய எத்தனை உறுதிமொழிகளைக் காப்பாற்றியிருக்கிறது என்பதையெல்லாம் அனுபவபூர்வமாக உணர்ந்தவர்கள் நாம்.

‘மேக்கேதாட்டூ அணை கூடாது. கூடவே கூடாது’ என்பதுதான் தமிழகத்தின் நிலைப்பாடாக இருக்க வேண்டும். இதற்கான அழுத்தத்தை அனைத்துக் கட்சிகளும், மக்களும் தமிழக அரசுக்கு அளிக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism