Published:Updated:

மா பாதக நாடகம்!

மா பாதக நாடகம்!
பிரீமியம் ஸ்டோரி
மா பாதக நாடகம்!

ப.திருமாவேலன் - படம்: ஜெரோம்

மா பாதக நாடகம்!

ப.திருமாவேலன் - படம்: ஜெரோம்

Published:Updated:
மா பாதக நாடகம்!
பிரீமியம் ஸ்டோரி
மா பாதக நாடகம்!

நாட்டை முன்வைத்து ஒரு சூதாட்டம் நடந்து முடிந்துள்ளது. இங்கே இரண்டு பக்கமும் தொடை தட்டிக்கொண்டு இருந்தவர்களும்  துரியோதனர்களே. அர்ஜுனன் களுக்கும் கும்பகர்ணனுக்கும் இங்கு வித்தியாசம் இருக்கவில்லை. திருதராஷ்டிரனுக்கும் விபீஷணருக்கும் வேறுபாடு இல்லை. மானத்தைப் பறி கொடுத்த பாஞ்சாலியை நாட்டு மக்கள் என்று உருவகப்படுத்தலாம். ஆனால், இங்கு தர்மர்கள் இல்லை. ‘நடப்பது தர்மயுத்தம்’ என்று சொல்லிக் கொண்டார் ஓ.பன்னீர் செல்வம். இவர்களில் யாருமே தர்மர்கள் இல்லை. கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற இந்த அதர்மங்கள் நடத்தும் யுத்தம் மகாபாரதமாக எப்படி இருக்க முடியும்? இது மகா பாதகம்!

வாழ்ந்த வீட்டையும், இடத்தையும் ஊர் மக்களுக்கு எழுதிவைத்துவிட்டுச் செத்துப்போன பி.எஸ். குமாரசாமி ராஜாக்கள் முதலமைச்சராக இருந்த நாடு இது. குடிநீர் கிணற்றைக்கூட ஊர் மக்களுக்கு விட்டுத்தராமல் போக்குக் காட்டிவந்த ஓ.பன்னீர்செல்வம், நான்காவது முறையாக அலுங்காமல் குலுங்காமல் நாட்டின் முதலமைச்சராகத் துடித்தார்.

மா பாதக நாடகம்!

காவிரியில் தண்ணீர் தர மறுத்துத் தமிழக டெல்டா மாவட்டங்களையே காய்ந்த கருவாடாக மாற்றத் துடித்துக்கொண்டிருக்கிறது கர்நாடக அரசு; இப்போது புதிதாக மேக்கேதாட்டூ அணையையும் கட்டத் திட்டமிட்டுள்ளது. ‘தமிழகத்துக்குக் காவிரி நீரை வழங்கத் தடை இல்லை என்றால், மேக்கேதாட்டூ அணை கட்டவும் தடை இல்லை’ என்று தமிழ்நாட்டு வழக்கறிஞர் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் பச்சைக்கொடி காட்டிவிட்டு வந்திருக்கிறார்.

பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவியர் மருத்துவப்படிப்புக்குள் நுழைய முடியாமல் தெருவில் நிற்கிறார்கள். இதைப்பற்றிய எந்த அக்கறையுமே இல்லாமல், கோயில் கும்பாபிஷேகத்துக்குக் கதாகாலட்சேபம் செய்வது மாதிரி ஊர் ஊராகப் போய்க் கதை சொல்லிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியை விட்டுத்தர மறுத்தார்.

தன்னைத்தவிர வேறு எந்த மாற்றுச் சிந்தனையுமே இல்லாத இரண்டு பேர் சந்திப்பார்களா, சந்திக்க மாட்டார்களா என்பதே சந்தி சிரிக்கும் தமிழ்நாட்டு அரசியலாக சில மாதங்களாக நடந்தது. இவர்கள் சந்திக்க முதலில் தேர்ந்தெடுத்த இடம் சமாதி. பிறகு எப்படி விளங்கும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் ஏன் பிரிந்தார்கள், ஏன் சேர்ந்தார்கள்? இரண்டுக்கும் இந்த நாட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இது அவர்களின் சொந்த விவகாரம்தான். இன்னும் சொன்னால் இந்த விவகாரத்துக்கும் எடப்பாடிக்கும் ஆரம்பத்தில் எந்தத் தொடர்பும் இல்லை. இது சசிகலா - ஓ.பன்னீர் செல்வம் மோதலாகத்தான் முதலில் தொடங்கியது.

கட்சியையும் ஆட்சியையும் அநாதையாக விட்டுவிட்டு ஜெயலலிதா இறந்துபோனார். அவருடைய தோழியாக இருந்த சசிகலா, கட்சியின் பொதுச் செயலாளராகத் தன்னை ஆக்கிக் கொண்டார். அவர் முதலமைச்சர் பதவியில் அமர நினைத்தார். ஆனால், அதுவரை முதலமைச்சராக இருந்த பன்னீர் செல்வத்துக்கோ சசிகலாவுக்குப் பதவியை விட்டுத்தர மனமில்லை. பதவியை விட்டு விலகினாலும், சசிகலாவை எதிர்த்துத்  தனி அணி தொடங்கினார். அதற்குள் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குப் போனதால், சசிகலாவின் முதலமைச்சர் கனவு தகர்ந்தது. எடப்பாடி முதல்வர் ஆக்கப்பட்டார்.

அம்மாவும் இறந்து, சின்னம்மாவும் சிறைக்குப் போனதால் தினகரன் முன்னுக்கு வந்தார். கட்சியின் துணைப்பொதுச்செயலாளரான அவர், ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏ-ஆகி தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் திட்டமிட்டார். ஆனால், அந்தத் தொகுதி இடைத்தேர்தலுக்குத் தடை விழுந்ததால், அவரது முதல்வர் கனவும் தகர்ந்தது. வெவ்வேறு வழக்குகளில் மாட்டி திகார் வரை போய்விட்டு சென்னைக்குத் திரும்பி வந்துள்ளார். முதல்வர் ஆகாவிட்டாலும், கட்சியையாவது ஆட்சி செய்வோம் என்று தினகரன் திட்டமிட்டார். அதுவும் முடியவில்லை.

சசிகலாவும் சிறையில் இருக்கிறார். தினகரனும் உள்ளே வர முடியாத நிலை... மீண்டும் கட்சிக்குள், ஆட்சிக்குள் நுழைய நினைத்தார் பன்னீர். தினகரன் சில எம்.எல்.ஏ-க்களை இழுத்தால், பன்னீர் வைத்திருக்கும் பத்துப் பேர் உதவி செய்வார்கள் என்று எடப்பாடியும் நினைத்தார். அதனால்தான் மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடங்கின. சமாதி சந்திப்புகளுக்கும் தேதி குறிக்கப்பட்டது.

மா பாதக நாடகம்!

இவர்கள் இணைந்ததும், முடக்கி வைக்கப்பட்டு இருக்கும் இரட்டை இலையை விட்டுத் தருவதும், அ.தி.மு.க. என்ற பெயரை அவிழ்த்துக் கொடுப்பதும்தான் மோடி - அமித்ஷாவின் திட்டம். ஒன்றுபட்ட அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க-வைக் கூட்டுச் சேர வைப்பதும் அடுத்தடுத்த தேர்தலை அவர்களோடு கூட்டணி சேர்ந்து சந்திப்பதும்தான் இந்த நாடகத்தின் உச்சம்.

அதனால்தான் ‘புலிக்குப் பயந்தவர்கள் என்மீது விழுந்து கொள்ளுங்கள்’ என்பதுபோல பன்னீரையும் எடப்பாடியையும் மாறி மாறி வரவழைத்து டெல்லி அப்பளம் தின்னவைத்து அனுப்புகிறார்கள். இந்திய சீனப் பிரச்னையை விட எடப்பாடி - பன்னீர் விவகாரத்தைச் சீர் செய்யவே பிரதமர் அதிக நேரம் செலவு செய்கிறார் என்றால், அவர்கள் அடைய நினைக்கும் லாபம் எவ்வளவு அலாதியானது என்பது எளிதில் புரியும்.

எடப்பாடியும் பன்னீரும் சசிகலா குடும்பத்தை எதிர்க்கும் ஆளுமைத் திறனோ அறிவோ இல்லாதவர்கள். கார்டனில் இருந்து போன் வந்தால், எங்கே இருந்தாலும் எழுந்து நின்று செருப்பைக் கழற்றிவிட்டு வெறுங்காலில் கால் அட்டென்ட் செய்யக்கூடிய மனிதர்கள் இவர்கள். ஆனால், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் போன்றவர்களோ நெடுஞ்சாண்கிடையாகப் படுத்தபடியே பேசுவார்கள்.

இப்படிப்பட்டவர்களுக்கு எப்படி வந்தது இவ்வளவு தைரியம்? ‘ஸ்பீட்’ அடித்துக்கொண்ட இருமுகன்களாக எடப்பாடியும் பன்னீரும் மாற டெல்லி இருமுகன்கள்தான் காரணம். சசிகலா, தினகரன், நடராஜன், திவாகரன் போன்றோர் கையில் அ.தி.மு.க. இருந்தால், நாம் நினைத்த மாதிரி எல்லாம் ஆட்டுவிக்க முடியாது; பலனை அனுபவிக்க முடியாது என்பதால்தான் அவர்களை ஒதுக்கிவைத்துவிட்டு ஆடுகளுக்கு சிறுத்தை சட்டை போட்டு இறக்கிவிட்டுள்ளது டெல்லி! இவை சண்டை போடும்போது சிறுத்தையாகத் தெரிகிறது. கத்தும்போது குரல் காட்டிக்கொடுத்து விடுகிறது.

இந்த இரண்டு ‘புனிதர்’களுக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் எடப்பாடி பழனிசாமியே முதல்வராகத் தொடர்கிறார். பன்னீர் செல்வம் துணை முதல்வராகியுள்ளார். பன்னீருடன் வந்த ஆட்களுக்கு இனி அவரவர் அளவுக்குத் தேவையான பிஸ்கெட்டுகள் அடுத்தடுத்து வழங்கப்பட இருக்கின்றன. அடுத்த சில நாள்களில் தினகரன், இந்தக் கட்சியில் இருந்து நீக்கப்படுவார். சசிகலாவிடம் இருக்கும் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்படும். பன்னீர் செல்வம் அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராகவும் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் தொடர்வார்கள். இதுதான் டெல்லி எழுதிக் கொடுத்திருக்கும் நாடகத்தின் அடுத்தடுத்த காட்சிகள். ஆனால், முடிவுகள் டெல்லி எதிர்பார்த்ததாக இருக்கப்போவதில்லை.

இதன்பிறகுதான் தினகரனின் திருவிளையாடல்கள் ஆரம்பமாகும். கட்சியைப் பெரியகுளம் பன்னீர் செல்வத்துக்கும், ஆட்சியை எடப்பாடி பழனிசாமிக்கும் தங்கத் தாம்பாளத்தில் வைத்து பரிவட்டம் கட்டி தாரை வார்க்க மன்னார்குடியில் இருந்து சசிகலா குடும்பம் கிளம்பிவரவில்லை. அதற்காகவா இவர்கள் 30 ஆண்டுகளாக ஜெயலலிதாவைப் பாதுகாத்து வைத்திருந்தார்கள். ஜெயலலிதாவை வைத்து தங்களை வளப்படுத்திக்கொள்வதும், ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிகாரத்தைத் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கைப்பற்றுவதும் தான் சசிகலா குடும்பத்தின் ஒரே நோக்கம். எல்லா அவமானங்களையும் பட்டபிறகும் ஜெயலலிதாவுடன் சசிகலா ஒட்டிக்கொண்டு நின்றதும், ‘எங்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை. நீங்கள் போயஸ்கார்டன் உள்ளேயே இருங்கள்’ என்று நடராஜனும் திவாகரனும் உத்தரவு போட்டு இருந்ததும் எதற்காக? ஜெயலலிதாவுக்குப் பிறகு கட்சியையும், ஆட்சியையும் தங்கள் குடும்பம் மட்டுமே கைப்பற்ற வேண்டும் என்பதற்காக. எனவே, தினகரன் தனது குடைச்சல்களை மெதுவாகத் தொடங்குவார். பன்னீர், எடப்பாடி இணைப்போடு அ.தி.மு.க. அமைதியாகிவிடப் போவதில்லை. இந்தத் தரித்திர சரித்திரத்தைக் கதை சொல்லி மறைக்கப் பார்க்கிறார் எடப்பாடி. வெற்றிக்கதைகளை மட்டுமே படமாக்கி நடித்த எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவைத் திருவாரூரில் கொண்டாடிப் பேசிய எடப்பாடி, பூனைக் கதை சொல்லியிருக்கிறார்.

முனிவர் ஒருவர் பூனை வளர்த்தாராம். அது தன்னை நாயாக மாற்றக் கேட்டது. நாய் ஆக்கினார். புலியாக மாற்றச் சொன்னது நாய். புலி ஆக்கினார். சிங்கமாக மாற்றச் சொன்னது புலி. சிங்கமாக ஆக்கினார். எட்டு கால் கொண்ட பாம்பாக மாற்றச் சொன்னது சிங்கம். பாம்பாக மாற்றினார்.

தன்னைப்போலவே வேறு யாரையாவது  இந்தச் சாமியார் மாற்றிவிட்டால் போட்டி வரும் என்று பயந்து அந்தச் சாமியை தீர்த்துக்கட்டத் திட்டமிட்டது பாம்பு. ‘ உன்னை எவ்வளவுதான் உயர்வாக மாற்றினாலும் நீ இன்னும் பூனையாகவே இருக்கிறாய்’ என்று அதை மீண்டும் பூனையாக மாற்றினாராம் சாமியார்.

இந்தக் கதையைச் சொன்ன எடப்பாடி பழனிசாமி. ‘`இந்தக் கதையில் வரும் முனிவர்தான் அ.தி.மு.க.,  பூனை யாராக இருக்கும் என்று உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். தன்னை வளர்த்து ஆளாக்கிய கழகத்திற்கே களங்கம் விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கும் இந்தப் பூனையின் கதிதான் ஏற்படும்” என்று சொல்லி இருக்கிறார். இந்தக் கதையில் அவர் பூனை என்று குறிப்பிட்டது தினகரனை! சசிகலாவால் நாயாகவும், புலியாகவும், சிங்கமாகவும், பாம்பாகவும் மாற்றப்பட்ட எடப்பாடிதான்... இப்படிச் சொல்லி இருக்கிறார்.

பன்னீரையும் எடப்பாடியையும் இப்போது சிங்கமாகவும், புலியாகவும் மாற்றி நடமாடவிட்டிருக்கும் பா.ஜ.க. முனிவர்கள், இவர்களைப் பூனைகளாக மாற்ற எவ்வளவு காலம் ஆகும்?

ஆனாலும், எடப்பாடியின் நேர்மையைப் பாராட்ட வேண்டும். ஒரு கதையைச் சொல்லி, அதில் பெரிய சதிக்கான மர்மத்தைப் போட்டு உடைத்துள்ளார். ஆம்! ‘அ.தி.மு.க. முனிவரை, பூனை கொல்லத் திட்டமிட்டது’ என்பதுதான் அந்த மர்மச்செய்தி. ஜெயலலிதா என்ற முனிவரைக் கொன்ற பூனை எது?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism