Published:Updated:

புதிய போராளிகள்!

புதிய போராளிகள்!

மு.நியாஸ் அகமது - படங்கள்: ஜெ.வேங்கடராஜ், க.பாலாஜி

புதிய போராளிகள்!

மு.நியாஸ் அகமது - படங்கள்: ஜெ.வேங்கடராஜ், க.பாலாஜி

Published:Updated:
புதிய போராளிகள்!

வாடிவாசல், நெடுவாசல், கதிராமங்கலம், நீட் எனத் தமிழகத்தில் தகிக்கும் ஒவ்வொரு பிரச்னைகளுக்கு எதிராகவும் ஓங்கி ஒலிப்பது சாமானியர்களின் குரல்தான். களத்தில் இவர்கள் முகத்தை முன்னிறுத்தி அல்ல; தங்களின் உயிரைக் கொடுத்துப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். போராட்டங்கள் மட்டுமன்று, தெளிவான ஒரு மாற்றை, சூழலியலுக்கு இசைவான ஒரு சித்தாந்தத்தை முன்வைப்பது என அறம் பயின்ற தமிழர்கள் தீவிரமாகச் சுழன்றுகொண்டு இருக்கிறார்கள். அப்படியான மாற்றத்தை விதைக்கும், போராட்டங்களில் முன்வரிசையில் நிற்கும் சாமானியர்கள் இவர்கள்.

புதிய போராளிகள்!

எஸ்.அனிதா (17)

தண்ணீர் தொட்டியில் ஒரு பந்தை அழுத்தினால் என்ன ஆகும்...? திமிறி மேலே வரும்தானே...? அதுபோலத் திமிறி எழுந்தவர் அரியலூர் அனிதா. ஒரு கிராமத்தின் மருத்தவக் கனவையே ஒற்றை மனுஷியாகச் சுமந்து மேலே வந்த முதல் தலைமுறை மாணவி. ப்ளஸ் டூ-வில் அனிதா பெற்ற மதிப்பெண்கள் 1,176. நல்ல மதிப்பெண் இருந்தும் கிராமத்தின் விருப்பத்தை நிஜமாக்க விடாமல், தடையாக வந்து நின்றது ‘நீட்’ தேர்வு. சாதாரணமான ஏழை எளிய மாணவர்கள் என்ன செய்துவிட முடியும் என மத்திய, மாநில அரசுகள் மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட... தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நிற்கும் மாணவிகளின் பிரதிநிதியாக உச்ச நீதிமன்றம்வரை சென்றுள்ளார் அனிதா.

“அப்பா, திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளி. அந்த வேலையை நாங்கள் இழிவாகக் கருதவில்லை. ஆனால், அதே வேலையைத்தான் அவரின் அடுத்த தலைமுறையும் செய்ய வேண்டும் என்று இந்த அரசு நுணுக்கமாகச் செயல்படுகிறதே, அதற்கு எதிராகத்தான் போராடுகிறோம். என்னிடம் எளிமையான கேள்வி இருக்கிறது. இங்கு எல்லோருக்கும் எல்லாமும் சரிசமமாகக் கிடைக்கிறதா... எல்லோருக்கும் ஒரே தரமான கல்வி கிடைக்கிறதா... எல்லோருடைய பொருளாதார நிலையும் ஒன்றுபோல இருக்கிறதா...இங்கு ஏற்றத்தாழ்வு எதுவும் இல்லையா...? எனக்குப் பெரிதாக அரசியல் புரிதல்கள் எல்லாம் ஒன்றும் இல்லை. எல்லா அரசியலும் எங்களுக்கும் தெரியும் என்பவர்கள், எனது இந்த எளிமையான கேள்விக்குப் பதில் சொல்லட்டும். இங்கு யாருக்கும் எதுவும் சரிசமமாகக் கிடைக்காதபோது அனைவருக்கும் ஒற்றைத் தேர்வு என்பது யாரை ஏமாற்றும் வேலை..?  நான் கேட்கும் கேள்விகள் அனைத்தும், அனிதா என்னும் தனி மனிதியின் கேள்விகள் இல்லை.  கல்வியை இறுகப்பற்றி மேலே எழுந்துவிடலாம் என்ற பெரும் கனவில் இருக்கும் ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மாணவர்களின் கேள்விகள். இது சிலருக்கு சங்கடம் தரும் கேள்விகள்தான். ஆனால், நியாயம் கேட்கும்வரை இந்தக் கேள்விகளைத் தொடர்ந்து எழுப்புவேன்... எழுப்புவோம்” என்கிறார் அனிதா கணீர் குரலில்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதிய போராளிகள்!

பேராசிரியர் த. ஜெயராமன் (63)

மீத்தேன் குறித்துத் தமிழக அளவில் புரிதலை ஏற்படுத்தியவர் பேராசிரியர் த.ஜெயராமன். மீத்தேன், ஈத்தேன் போன்ற வார்த்தைகள் எல்லாம் சாமானிய விவசாய மக்களுக்கு அந்நியமான வார்த்தைகளாக இருந்த சமயத்திலிருந்தே விவசாயிகளுடன் அவர் இது குறித்து உரையாடிக்கொண்டிருக்கிறார்; எழுதிக் கொண்டிருக்கிறார்; அவர்களோடு இணைந்து போராடிக்கொண்டிருக்கிறார்!

 “நான் ஆசிரியன். எம் மாணவர்களிடம், ‘சமூக அக்கறையுடன் இருங்கள்; அறத்தின் பக்கம் நில்லுங்கள்’ என்று பாடம் நடத்துகிறேன்.  நான் என்ன நடத்துகிறேனோ, அந்தச் சொல்படி நானும் நிற்க வேண்டும்தானே...? அதற்காகத்தான் நான் மீத்தேன் திட்டங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடுகிறேன். நான் வரலாறு படித்தவன். வரலாற்றுக் காலம் தொடங்கி சமகாலம் வரை அகதிகள் படும் இன்னலை அறிந்தவன். மக்கள், மண்ணை இழந்து இன்னொரு இடத்துக்குப் புலம் பெயரும்போது என்ன நடக்கும்... எத்தகைய இன்னல்களைச் சந்திப்பார்கள்? என்று நன்கு தெரியும். இப்போது சிரியா அகதிகள் படும் அவலம் நமக்குத் தெரியும்தானே...? இதே அவலத்தை நாளை நம் பிள்ளைகளும் படக் கூடாது என்பதற்காகத்தான் இந்தப் போராட்டம்.  டெல்ட்டாவின் மக்கள் தொகை மட்டும் 53 லட்சத்துக்கும் மேல். நிலத்தை இழந்து, வளத்தை இழந்து... குறிப்பாக அடையாளத்தை இழந்து நாளை இவர்கள் எல்லாம் அகதிகளாக மாறினால் என்ன ஆகும்..? இது தேவையற்ற அச்சமோ, மிகையான அச்சமோ இல்லை. ஆப்பிரிக்காவில் இதுதான் நிகழ்ந்திருக்கிறது. எந்த வரைமுறையும் இல்லாமல் சுரண்டிவிட்டால், நாளை இங்கும் அதுதான் நிகழும்.
தஸ்தயெவ்ஸ்கி சொல்வார், ‘எவ்வளவு துயரங்கள் ஏற்பட்டாலும் எப்போதும் மனிதத் தன்மையுடன் இருப்பதும், வீழ்ந்துவிடாமல் தைரியத்தைத் தக்கவைத்துக்கொள்வதும்தான் வாழ்க்கை. இதுதான் வாழ்க்கையின் மாபெரும் சவால்’ என்று. அப்படி மனிதத்தன்மையுடன் இருப்பதற்காகத்தான் போராட்டம். என் குடும்பம் இதைப் புரிந்துவைத்திருக்கிறது. குறிப்பாக என் மனைவி சித்ரா. அவருடைய  ஆதரவு மட்டும் இல்லை என்றால், என்னால் இப்படி போராடிக்கொண்டிருக்க முடியாது.”

புதிய போராளிகள்!

சு.கீதா (29)

படித்தது பொறியியல். பணியிடம் பெங்களூரு. உலகமயமாக்கலுக்குப் பிந்தைய சமூகம் எவற்றையெல்லாம் வைத்திருந்தால் நவநாகரிகமானவர்கள் என்று சொல்கிறதோ, அவை அனைத்தையும் வாங்கிவிட முடியும் என்ற அளவுக்குச் சம்பளம் எனச் சில ஆண்டுகளுக்கு முன்வரை கீதாவின் வாழ்க்கை வேறொரு தளத்தில், வேறொரு நிறத்தில் இருந்தது. இப்போது அவர் அந்த மாநகரத்தின் சொகுசுகள்  அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு, தர்மபுரியில் நாகர்கூடல் என்னும் சிறு பஞ்சாயத்தில் நீர்நிலைகளை மேம்படுத்த, மக்கள் இடம்பெயர்வதைத் தடுக்க, கான் காக்க வெயிலிலும் காட்டிலும் அலைந்துகொண்டிருக்கிறார்.

“புவிதம் மீனாட்சி அக்காவுடனான சந்திப்புதான், கீதா இப்படியானவளாக மாறியதற்குக் காரணம். மீனாட்சி அக்கா காந்தியச் சிந்தனையாளர். உத்தரப்பிரதேசத்திலிருந்து தர்மபுரி வந்து, இங்கு கிராம மக்கள் மத்தியில் பணி செய்துகொண்டிருப்பவர். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காகப் பள்ளி நடத்திக்கொண்டிருப்பவர். அவர்தான் கிராமப் பொருளாதாரம், அதனுடன் பிணைந்து இருக்கும் நீர்நிலைகள், அவற்றை மீட்க, மேம்படுத்த வேண்டிய தேவை குறித்துப் புரியவைத்தார்.

அந்தந்த மக்களுக்கான வளம் அந்தந்த பகுதியிலேயே இருக்கிறது. அந்த வளம் சிதையும் போதுதான் மக்கள் சொந்த மண்ணைவிட்டுப் பெருநகரங்களை நோக்கி இடம்பெயர நேரிடுகிறது. பெருநகரங்கள் இவர்களுக்கு வாழ்வளிக்கிறதா என்றால்... நிச்சயம் இல்லை. இன்று சென்னையில் பிளாட்ஃபாரத்தில் வசிக்கும் யாரிடம் வேண்டுமானாலும் பேசிப் பாருங்கள். அவர்கள் நினைவில் இன்னும் பசுமையான ஒரு கிராமமும், வற்றாத நீர்நிலையும் இருந்திருக்கும். அதன் இயல்பு சுரண்டப்படாமல் இருந்திருந்தால், அந்த எளிய மக்களும் கிராமத்தில் வளமாக வாழ்ந்துகொண்டு இருந்திருப்பார்கள். சென்னையில், ஒருவர் நடைபாதையில் வசிப்பதற்கும் ஏதோ ஒரு கிராமம் சிதைவதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது புரிந்தது. இந்தப் புரிதல், என்னை மீனாட்சி அக்கா வசிக்கும் நாகர்கூடல் பஞ்சாயத்திலேயே வசிக்கவைத்தது. என் கணவரும் இதில் ஈடுபாடு கொண்டவர் என்பதால், என்னை ஊக்குவிக்கிறார். இப்போது நாகர்கூடல் பஞ்சாயத்தை, தன்னிறைவான கிராமமாக்கச் சில பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். அதில், முதற்கட்டமாக நாகர்கூடல் பஞ்சாயத்தின் ஜீவாதாரமாக இருந்த நாகவதி ஆற்றை மீட்கும் முயற்சியில் மக்களுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்’’ என்கிறார் கீதா.

புதிய போராளிகள்!

எம்.எஸ்.சந்திரமோகன் (38)

‘மக்களால், மக்களைக் கொண்டு, மக்களுக்காக’ என்ற கருத்தியலை நீர்த்துப்போகச் செய்து, போலீஸைக் கொண்டு ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களை எதிர்த்து நிற்பவர் சந்திரமோகன். சசிகலாவின் சொத்து முதல் கதிராமங்கலத்தில் மாசுபட்டுப்போன நிலத்தடிநீர் வரை மக்களுக்கு உண்மையைக் கொண்டுவர தொடர்ந்து இயங்கி வருபவர்.

“அப்பா சுகுமார் தொழிற்சங்கவாதி. அதனால் மிரட்டல்களைச் சந்தித்தவர்; அநியாயங்களைத் தட்டிக் கேட்டதற்காகப் பணியையும் இழந்தவர். வீட்டில் பொருளீட்டும் ஒருவர் பணியை இழந்தால் என்னென்ன சங்கடங்களை ஒரு குடும்பம் சந்திக்குமோ...அது அனைத்தையும் என் குடும்பம் சந்தித்தது. செவி வழியாக மட்டுமே நான் கேள்விப்பட்டிருந்த வறுமை, எங்கள் குடும்பத்தை முற்றுகையிட்டது. நியாயமாக ஒருவன் நடந்துகொண்டால்... அதிகாரவர்க்கம் ஒருமனிதனை இந்த அளவுக்குத் துன்புறுத்துமா என்ற கேள்வி எனக்குள் கோபத்தை உண்டாக்கியது. ஆனால், அப்போது யார்மீது கோபம்கொள்வது என்று தெரியவில்லை. தனி மனிதன்மீதா...இல்லை இந்த அமைப்பு முறைமீதா என்று புரியவில்லை. கோபத்தை எனக்குள் புதைத்துக்கொண்டு கல்வியில் கவனம் செலுத்தினேன்; அமெரிக்கா சென்றேன்; திகட்டத் திகட்டப் பொருளீட்டினேன். ஆனால், அது எதுவும் மகிழ்ச்சி தரவில்லை. மனம் நியாயத்தின்  பக்கம் நில் என்று சொல்லிக்கொண்டே இருந்தது. அந்தச் சமயத்தில் நியூயார்க்கில் சினிமா தொடர்பாகப் பயின்றேன். அந்தப் பயிற்சி நிறுவனத்தில், ‘இனி நீங்கள் அனைத்தையும் லென்ஸ் வழியாகப் பாருங்கள்’ என்று சொல்லிக் கொடுத்திருந்தார்கள். 

மீண்டும் சென்னை திரும்பி, கையில் கேமராவுடன் வீதிவீதியாக அலைந்து லென்ஸ் மூலமாக நான் பார்த்த காட்சி, இந்தச் சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும் அதற்குக் காரணமான நுண்ணரசியலையும் புரியவைத்தது. அந்தச் சமயத்தில் அர்விந்த் கெஜ்ரிவால் தொடர்பு கிடைத்தது. அவர், ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கும்போது உடன் இருந்தேன். பின், அவருடன் ஏற்பட்ட முரணால் அங்கிருந்து விலகி நண்பர்களுடன் இணைந்து ‘அறப்போர்’ இயக்கத்தைத் தொடங்கினேன். அரசியல்வாதிகள் ஊழல் செய்கி றார்கள். அது நமக்குத் தெரிந்திருக்கிறது. ஆனாலும், நாம் அவர்களைக் கேள்வி கேட்க அஞ்சுகிறோம். நமது அச்சம்தான் அவர்களின் பலம் எனப் புரிந்தது. எங்களது இலக்கு, தொடர்ந்து இந்த அரசியல் அமைப்பைக் கண்காணிப்பது. தவறு நடந்தால் கேள்வி கேட்பது. மக்களிடம் இருக்கும் அச்சத்தைக் களைவது. தவறு செய்யும் அதிகார அரசு வர்க்கத்துக்குப் பயத்தை ஏற்படுத்துவது என இப்போது காத்திரமாக இயங்கிக் கொண்டிருக்கிறோம்.”

புதிய போராளிகள்!

சி.நந்தக்குமார் (37)

எளிய மக்களுக்கு அதிகாரம் வேண்டுமென்றால், உள்ளாட்சிகளை வலுப்படுத்த வேண்டும். சாமான்ய மக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரம் குறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அதிகாரப் பரவலுக்காகத் தீவிரமாக இயங்கிக்கொண்டு இருப்பவர் நந்தக்குமார்.

“திருச்சி பக்கம் உறையூர்தான் சொந்த ஊர். என் வாழ்க்கையில் தூய வளனார் கல்லூரிதான் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது; அங்கு ஏற்பட்ட வாசிப்புப் பழக்கம் அரசியல் குறித்த ஒரு புரிதலை உண்டாக்கியது. மென்பொருள் பணியை விட்டுவிட்டு முழுவதுமாகச் செயற்பாட்டாளராக மாறிவிடலாம் என்ற காத்திரமான முடிவை எடுத்தேன்.

பெருநிறுவனங்கள், அழுக்கான அரசியல் எல்லாம் கரம் கோத்துக்கொண்டு நம் வளத்தைச் சூறையாடத் துடிக்கின்றன. இப்படியான சர்வபலம் பொருந்திய எதிரிகளுடன் மோத உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தினால் மட்டும் போதுமா... என்ற சந்தேகத்தில் இருந்தபோது, குத்தப்பாக்கம் ஊராட்சியில் நிகழ்ந்த ஒரு சம்பவம் அந்தச் சந்தேகத்தைத் துடைத்தெரிந்தது. ஆம், குத்தப்பாக்கம் ஊராட்சியைச் சென்னை மாநகராட்சியின் குப்பைத்தொட்டியாக மாற்ற ஆட்சியாளர்கள் திட்டமிட்டு, சிங்காரச் சென்னையின் குப்பைகளை அங்கு கொட்டத் திட்டமிட்டார்கள். அப்போது மக்களைத் திரட்டி அறவழியில் போராடினோம்; ஊராட்சியில் தீர்மானம் போட்டோம்; அந்தத் தீர்மானத்தைக் கொண்டு சட்டப் போராட்டம் நடத்தினோம்; இறுதியில் நாங்கள் வென்றோம்; மக்களும் வென்றார்கள். ஒரு பெரும் அமைப்பை எதிர்த்து நாங்கள் நடத்திய போராட்டம் வெற்றிபெற்றது, உள்ளாட்சி அமைப்பு முறை குறித்து ஆழமான நம்பிக்கையை எனக்குள் ஏற்படுத்தியது. அந்த நம்பிக்கைதான் உள்ளாட்சி அமைப்பு முறை குறித்து மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்த என்னைத் தொடர்ந்து இயங்கச் செய்கிறது.”

நந்தக்குமார் அண்மையில்  தமிழகம் முழுவதும் ஏறத்தாழ பத்தாயிரம் கிலோமீட்டர்கள் பயணம் செய்து கிராம சபைக் கூட்டங்கள் குறித்து உரையாடி, அதில் மக்களைப் பங்குபெறச் செய்துள்ளார்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism