Published:Updated:

மீண்டு(ம்) பிறந்துவிட்டான் கோபி!

மீண்டு(ம்) பிறந்துவிட்டான் கோபி!
பிரீமியம் ஸ்டோரி
மீண்டு(ம்) பிறந்துவிட்டான் கோபி!

வெ.நீலகண்டன் - படங்கள்: ப.சரவணகுமார்

மீண்டு(ம்) பிறந்துவிட்டான் கோபி!

வெ.நீலகண்டன் - படங்கள்: ப.சரவணகுமார்

Published:Updated:
மீண்டு(ம்) பிறந்துவிட்டான் கோபி!
பிரீமியம் ஸ்டோரி
மீண்டு(ம்) பிறந்துவிட்டான் கோபி!

“ஹாய்...அங்கிள், எப்படி இருக்கீங்க..?”

மலர்ந்த பூ மாதிரி சிரிக்கிறான் கோபி. சற்றே பெரிதான நடுப்பற்கள் இரண்டும் கொள்ளை அழகு. கோபியை இவ்வளவு உற்சாகமாகவும், மலர்ச்சியாகவும் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. கோபிக்கு, இது மறுபிறப்பு. இந்த உலகில் மனிதநேயம் மரித்துப்போகவில்லை என்பதற்கான சாட்சியாக இருக்கிறது கோபியின் கள்ளங்கபடமில்லாத அந்தச் சிரிப்பு.

சென்னை, வளசரவாக்கத்தில் வசிக்கும் கோபிக்கு ஒன்பது வயது. தாலசீமியா (Thalassemia) என்ற குறைபாடு பிறப்பிலேயே அவனோடு ஒட்டிப் பிறந்துவிட்டது. அவனைப்போல, தாலசீமியாவைச் சுமந்துகொண்டு தமிழகத்தில் ஆண்டுக்கு 10,000 குழந்தைகள் பிறப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். மரபு சார்ந்த இந்தக் குறைபாடுடைய குழந்தைகளுக்கு, ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தி ஆகாது. குறிப்பிட்ட இடைவெளியில் ரத்தம் ஏற்றிக்கொண்டே இருக்க வேண்டும். ஒரே மரபுடைய ரத்தக் குருத்தணுக்கள் (Stem cell) தானமாகக் கிடைத்தால், அவற்றைக்கொண்டு முற்றிலும் குணப்படுத்த முடியும். சகோதர-சகோதரியின் மரபணுக்கள் இணங்கிப்போகக் கூடும். ஆனால், கோபிக்குச் சகோதரனும் இல்லை; சகோதரியும் இல்லை; பெற்றோரும் இல்லை.

மீண்டு(ம்) பிறந்துவிட்டான் கோபி!

கோபியின் அப்பா, ஒரு குடும்பச் சண்டையில் தீக்குளித்து இறந்துவிட்டார். கோபிக்கு தாலசீமியா இருப்பதை அறிந்த அம்மா, அவனைக் கைவிட்டுவிட்டு வெளியேறிவிட்டார். பாட்டி இளவரசியும், தாத்தா கண்ணையாவும் தாய்க்குத் தாயாக, தந்தைக்குத் தந்தையாக இருந்து கோபியை வளர்த்தெடுத்தார்கள்.  

நன்றாக ஓடியாடி விளையாடும் கோபி, ரத்தச் சிவப்பணுக்கள் குறைந்ததும் மயங்கிப்போவான். தாத்தாவும் பாட்டியும் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடுவார்கள். ரத்தம் ஏற்ற வேண்டும். குறைந்தது மாதம் இருமுறையேனும் இப்படி நடக்கும். ஏகப்பட்ட மாத்திரைகள் வேறு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோபியைத் தொடக்கத்தில் இருந்தே கவனித்து, சிகிச்சை யளித்துவந்த ஹெமட்டால ஜிஸ்ட் டாக்டர்  ரேவதி ராஜ்,  கோபிக்கு  ‘ரத்தக் குருத்தணு தானம்’ பெற பெரும் முயற்சிகள் மேற்கொண்டார். உலக அளவில் உள்ள பதிவேடுகளில் கோபியின் விவரங்கள் பதியப்பட்டன. அதிர்ஷ்டவசமாகக் கோபியின் மரபணு, இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு தன்னார்வலரின் மரபணு வோடுப் பொருந்திப்போக, அவர் தானம் செய்ய முன்வந்தார். ஆனால், போக்குவரத்து, சிகிச்சை என எல்லாம் சேர்த்து 25 லட்சத்திற்கு மேல் செலவாகும் நிலை!

நிதி திரட்டும் முயற்சிகள் நடந்துவந்த நிலையில், கோபி பற்றி ஆனந்த விகடன் (நவம்பர்  9, 2016) இதழில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அதைப்படித்த விகடன் வாசகர்கள் பலரும் தங்கள் பங்களிப்புகளை வழங்கினார்கள். இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் கோபிக்குச் சிகிச்சைத் தொடங்கியது. இரண்டு வார காலம் மருத்துவமனையில் தங்கவைக்கப்பட்டுக் கடும் சிகிச்சைகளை எதிர்கொண்டான் கோபி. தானமாகப் பெறப்பட்ட ரத்தக் குருத்தணு இங்கிலாந்தில் இருந்து விமானத்தில் வந்திறங்க, வெற்றிகரமாக அது கோபிக்குச் செலுத்தப்பட்டது. தொடர் மருத்துவக் கண்காணிப்புக்குப் பிறகு, கோபி வீட்டுக்கு அனுப்பப்பட்டான்.

மீண்டு(ம்) பிறந்துவிட்டான் கோபி!

“கடவுள் காரணமில்லாம எதையும் செய்ய மாட்டார்னு தீர்க்கமா நம்புறவ நான். பால்மணம் மாறாத பிள்ளையை என் கையில கொடுத்திருக்காருன்னா, ஏதோ காரணம் இருக்கு. நம்ம உயிரைக் கொடுத்தாவது இந்தக் குழந்தையை மீட்டுடணும்னு அப்பவே முடிவு செஞ்சுட்டேன். கோபிக்கு இப்படியொரு குறைபாட்டைக் கொடுத்த கடவுள், நல்ல நல்ல மனிதர்களை எல்லாம் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். நிறைய பேர் உதவிக்கு வந்தாங்க. டாக்டர் ரேவதி ராஜ், கோபியை அவங்க பிள்ளையாவே தத்தெடுத்துக்கிட்டாங்க. எங்க வாழ்க்கைத்தரத்துக்கு 25,000 ரூபாய் புரட்டுறதே சவால். `25 லட்சம் தேவைப்படும்மா’ன்னு டாக்டர் சொன்னப்போ, எனக்கு மலைப்பு வரலை. ‘நிச்சயம் இந்தத் தொகை நமக்குக் கிடைச்சிரும்’னு நம்பிக்கைதான் உருவாச்சு. ஆனந்த விகடனும் உதவிக்கு வந்துச்சு.

ஒருநாள், `பணம் ரெடியாகிடுச்சு, கோபியை அழைச்சுக்கிட்டு வாங்கம்மா’ன்னு ரேவதியம்மா கூப்பிட்டாங்க. அட்மிட் பண்ணினோம்.  இரண்டு வாரத்துல புள்ளை, எலும்பும் தோலுமா ஆகிட்டான். கீமோதெரபியில உடம்புல இருந்த சத்தெல்லாம் வெளியே வந்திடுச்சு. ரத்தம் ஏற்ற, ஆகாரம் ஏற்றன்னு உடம்புல மொத்தம்  நாலு டியூப். யாரோ ஒரு மகராசன், எந்த எதிர்பார்ப்பும் இல்லாம குருத்தணுவை தானம் பண்ணியிருக்கார். ஏதோ ஜென்மத் தொடர்பு போலருக்கு. கோபி ஒருவழியா தேறி வந்துட்டான். சாப்பாடில்லாம, தூக்கமில்லாம பட்ட கஷ்டத்துக்கெல்லாம் இப்போ பலன் கிடைச்சுடுச்சு. ஆறு மாசமா எந்தப் பிரச்னையும் இல்லை. காலையில  அஞ்சு மாத்திரை, ராத்திரிக்கு ஏழு மாத்திரை, ரெண்டு  டானிக்... அவ்வளவுதான். அதுவும் இன்னும் ரெண்டு மூணு மாசத்தோட நிறுத்திடலாம்னு சொல்லிட்டாங்க. கடந்த ஆறு மாசமா ஒரு தடவைகூட ரத்தம் ஏற்றல. புள்ள கொஞ்சம் கொஞ்சமாத் தேறிக்கிட்டிருக்கான்...” என்னும் இளவரசியின் வார்த்தைகள் கண்ணீரில் தளும்புகின்றன. 

“கோபி, கடவுளின் குழந்தை. முதன்முறை அவனைப் பார்க்கும்போதே, ‘எப்படியும் இந்தக் குழந்தையை மீட்டிடலாம்’னு தோணுச்சு. கோபியோட பாட்டியும் ரொம்பவே அர்ப்பணிப்போட இருந்தாங்க. மாதாமாதம் ரத்தம் ஏற்றுவோம். ரத்தம் ஏற்றும்போது இரும்புச்சத்து அதிகமாகிடும். அதைக் குறைக்க மாத்திரைகள் கொடுப்போம். தாலசீமியாவை நிரந்தரமா குணமாக்குறதுக்கு ஸ்டெம்செல் மாற்று சிகிச்சைதான் தீர்வு. ஆனா, அது அவ்வளவு எளிதில்லை.மரபணு பொருந்திப்போகணும். சகோதர, சகோதரிகளோட மரபணு பொருந்திப்போக  30 சதவிகிதம் வாய்ப்பிருக்கு. ஆனா, கோபிக்கு அந்த மாதிரி உறவுகள் இல்லை.

மீண்டு(ம்) பிறந்துவிட்டான் கோபி!

தாலசீமியாவால பாதிக்கப்பட்டவங்களுக்கு ரத்தக் குருத்தணு தானம் பண்றதுக்கு உலகம் முழுவதும் 20 மில்லியன் டோனர் தயாரா இருக்காங்க. அவங்களைப் பற்றிய பதிவேடுகள் ஒவ்வொரு நாட்டிலேயும் பராமரிக்கப்படுது. அவங்களுக்கெல்லாம் கோபியைப் பற்றிய தகவல்களைத் தெரியப்படுத்தினோம். இங்கிலாந்துக்காரர் தானம் கொடுக்கச் சம்மதிச்சார். தானம் கொடுக்கிறவரைத் தயார் பண்ணி ஸ்டெம்செல்லை இங்கிலாந்தில இருந்து கொண்டுவரவும், கோபிக்கு கீமோதெரபி கொடுக்கவும்னு மொத்தம் 25 லட்சம் ரூபாய் தேவை. நிதி திரட்ட ஆரம்பிச்சோம். ஆனந்த விகடன்ல கோபியைப் பற்றிய கட்டுரை  வந்தபிறகு, நிறைய பேர் பணம் தந்தாங்க.

பிப்ரவரியில கோபியை அட்மிட் பண்ணிட்டோம். இங்கிலாந்துல, ஸ்டெம்செல் தானம் தருகிறவரை அங்கிருந்த அமைப்பு மூலமா தயார் பண்ணத் தொடங்கினோம். ஸ்டெம்செல்லை உடம்புல இருந்து ரத்தம் மூலமாகவோ எலும்பு  மூலமாகவோ எடுக்கலாம். நாங்க ரத்தம் மூலம் எடுக்க முடிவு செஞ்சோம். எல்லோரது உடம்புலேயும் 0.1 சதவிகிதம் ஸ்டெம்செல் இருக்கும். நான்கு நாள்கள் இங்கிலாந்து டோனருக்கு ஊசி போட்டு, அந்த அளவை ஒரு சதவிகிதமா உயர்த்தினோம். அஞ்சாவது நாள் அவர்கிட்ட இருந்து 150 மில்லி ரத்தத்தோட  ஸ்டெம்செல்லை எடுத்தோம். அதை ப்ளட்பேக்ல போட்டு நான்கு டிகிரி குளிர்ல ஐஸ்பாக்ஸ்ல வெச்சு விமானத்துல சென்னைக்குக் கொண்டு வந்தோம்.

அதற்கிடையில் கோபிக்கு கீமோதெரபி கொடுத்து, அவன் உடம்புல இருந்த மொத்த ஸ்டெம்செல்லையும் வெளியேற்றினோம். அது ரொம்பவே முக்கியமான காலகட்டம். கோபி ரொம்பச் சிரமப்பட்டான்.   ஹீமோகுளோபின் குறைவால சோர்வு உண்டாகிடும். பிளேட்லெட்ஸ் கம்மியானா  பிளீடிங்  ஆகிடும்.  வெள்ளையணுக்கள் குறைஞ்சா ஜன்னி வரும். தீவிரமான கண்காணிப்புல வெச்சுருந்தோம். இங்கிலாந்துல இருந்துவந்த ஸ்டெம்செல்லை அவனுக்கு ஊசி மூலம் செலுத்தி, அது உடம்புல சேர்ந்து புது ரத்தம் உற்பத்தியாக இரண்டு வாரம் ஆச்சு. அதையும் வெற்றிகரமாகக் கடந்தான் கோபி.

இப்போ ஏழு மாதம் ஆகிடுச்சு. மிகப்பெரிய மாற்றம் வந்திருக்கு. இன்னும் ஐந்து மாதங்களுக்குப் பிறகு கோபி இயல்பாகிடுவான். ஆனா, புதுசாப் பிறந்த குழந்தை மாதிரிதான். தடுப்பூசிகள் போடணும். குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதிக்கணும். மற்றபடி அவன் ஆல்ரைட். மிகச்சிறந்த எதிர்காலம் அவனுக்கு அமையும்”உணர்வுபூர்வமாகப் பேசுகிறார் டாக்டர் ரேவதி ராஜ்.

கோபி இயல்பாகப் பள்ளிக்குச் செல்கிறான். உற்சாகமாக விளையாடுகிறான். இப்போது சோர்வு வருவதில்லை. மயங்கி விழுவதில்லை. ஆமாம்.... கோபி, தாலசீமியாவை வென்று விட்டான். ஆனந்த விகடன் வாசகர்களுக்கு கோடானுகோடி நன்றிகள்!
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism