Published:Updated:

வழிகாட்டும் தமிழ்நாடு!

வழிகாட்டும் தமிழ்நாடு!
பிரீமியம் ஸ்டோரி
வழிகாட்டும் தமிழ்நாடு!

வழிகாட்டும் தமிழ்நாடு!

வழிகாட்டும் தமிழ்நாடு!

வழிகாட்டும் தமிழ்நாடு!

Published:Updated:
வழிகாட்டும் தமிழ்நாடு!
பிரீமியம் ஸ்டோரி
வழிகாட்டும் தமிழ்நாடு!

‘அமைதியின் பாதையே ஆன்மிகம்’ என்ற மரபான நம்பிக்கையைக் குலைத்திருக்கிறது, வடமாநிலங்களில் ஆன்மிக ஆதரவு என்ற பெயரில் நடந்த கலவரங்கள்.

ஹரியானாவைச் சேர்ந்த குர்மீத் ராம் ரஹீம் சிங் என்ற சாமியார், சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், குற்றவாளி என்று சி.பி.ஐ. நீதிமன்றம் அளித்த தீர்ப்பையொட்டி   நிகழ்ந்த கலவரத் தீ, காட்டுத் தீயாக மாறியது. குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் ஆதரவாளர்கள் லட்சக்கணக்கில் வீதிகளில் திரண்டு, கலவரத்தில் ஈடுபட்டனர். நிதீமன்றம் அமைந்திருக்கும் பஞ்ச்குலா என்ற ஊரில் தொடங்கிய கலவரம் ஹரியானா மாநிலத்தைத் தாண்டி, பஞ்சாப், சண்டிகர், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கும் பரவியதில் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 250-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். சமீபத்தில் வட இந்தியா சந்தித்த மிகப்பெரிய, மோசமான கலவரம் இது.

வழிகாட்டும் தமிழ்நாடு!15 ஆண்டுக்காலமாக இழுத்தடிக்கப்பட்ட ஒரு வழக்கில் இப்போதுதான் நீதி கிடைத்திருக்கிறது. ஆனால், அதையும் தாங்க முடியாமல் ஒரு மாபெரும் கலவரத்தை நடத்தும் அளவுக்கு லட்சக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் எவ்வளவு தூரம் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியூட்டுகிறது.

குர்மீத் ராம் போன்ற சாமியார்களின் அசுர வளர்ச்சிக்கு அரசியல் ஒரு முக்கியக் காரணம். தனிப்பட்ட முறையில் தீவிரமான மத நம்பிக்கை கொண்டிருந்தாலும், ‘அரசியலில் மதம் கலக்கக் கூடாது. அது அபாயகரமானது’ என்றார் மகாத்மா காந்தி. ஆனால், நம் நாட்டில் சாமியார்கள் அரசியலில் நேரடியாகத் தலையிடுவதும் அரசியல்வாதிகள் சாமியார்களைச் சார்ந்திருப்பதும் வழக்கமான ஒன்று. இதைப்போன்ற சாமியார்களை வளர்த்துவிடுவதில் காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்பட எந்த கட்சிகளுமே விதிவிலக்கல்ல.

 தனிப்பட்ட முறையில் மத நம்பிக்கை கொண்டிருப்பதும், தன் வாழ்வியல் சிக்கல்களுக்கு சாமியார்கள் தீர்வு அளிப்பார்கள் என்று நம்பி அவரைப் பின்பற்றுவதும் தனிப்பட்ட மனிதர்களின் விருப்பம். ஆனால், அதே நேரத்தில் தாங்கள் நம்பும் சாமியார் தவறே இழைக்க மாட்டார் என்று நம்புவதும், தவறே இழைத்தாலும் அவரைத் தண்டிக்கக் கூடாது என்று எதிர்பார்ப்பதும் அபத்தமானது; அநீதியானது.

தமிழகத்திலும் பல சாமியார்கள் சர்ச்சையிலும் வழக்குகளிலும் சிக்கியிருக்கிறார்கள். இலக்கியங்களிலும் திரைப்படங்களிலும் போலிச்சாமியார்கள் கிண்டலடிக்கப்பட்டிருக்கிறார்கள். மதத்துக்கு எதிரான கூர்மையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், எப்போதும் சாமியார்களுக்கு ஆதரவாகத் தமிழகத்தில் வன்முறை வெடித்ததில்லை என்பதை நாம் பெருமையுடன் சொல்ல வேண்டிய தருணமிது. அதேபோல், மதநம்பிக்கை என்பது தனிநபர் உரிமை என்பதைத் தாண்டி, அரசியலில் சாமியார்கள் ஆதிக்கம் செய்யும் நிலை தமிழகத்தில் இல்லை. பகுத்தறிவு உரம் போட்டு வளர்ந்த மண் தமிழகம் என்பதுதான் நமது கர்வத்துக்குரிய காரணம்.

‘சாமியாராக இருந்தாலும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் அல்லர்’ என்ற நிலை உறுதிப்பட வேண்டுமானால், அரசியல் கட்சிகள் சாமியார்களிடமிருந்தும் அவர்களின் நிறுவனங்களிடமிருந்தும் விலகியிருக்க வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள சாமியார்களையும் அவர்களின் நிறுவனங்களையும் வரையறைக்குள் கொண்டுவருவதற்கான சட்ட வழிவகைகள் வகுக்கப்பட வேண்டும்.

எந்தச் சாமியாரையும் கண்மூடித்தனமாக நம்புவதோ அதற்காக வன்முறையில் ஈடுபடுவதோ மனிதத்தன்மையற்ற செயல் என்பதை அழுத்தமாக உணர வேண்டும். இந்த விஷயத்தில் வடக்குக்கு வழிகாட்டும் தகுதி தமிழகத்துக்கு உண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism