Published:Updated:

அறிவின் அம்மா எழுதுவது...

அறிவின் அம்மா எழுதுவது...

சந்திப்பு: ஐஸ்வர்யா - படம்: ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ் - ஓவியம்: பாரதிராஜா

அறிவின் அம்மா எழுதுவது...

சந்திப்பு: ஐஸ்வர்யா - படம்: ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ் - ஓவியம்: பாரதிராஜா

Published:Updated:
அறிவின் அம்மா எழுதுவது...
அறிவின் அம்மா எழுதுவது...

ன்பு சூழ் உலகத்திற்கு,

பேரறிவாளன் இருந்த சிறையறை பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்காது. ஆனால், எனக்கு நன்றாகத் தெரியும். அவனது மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகத் திருத்தி எழுதப்படுவதற்கு முன்பு ஒருமுறை அவனை அந்தத் தனிமைக் கொட்டடியில் சந்தித்திருக்கிறேன். சுவர்களுக்குக் கண்கள் இருந்திருந்தாலும் குருடாகவே இருந்திருக்கும்படியான இருண்ட அறை. அதே அறையின் ஓரத்திலேயே கழிப்பறை; மற்றொரு ஓரத்தில் குடிப்பதற்கான நீர். அங்கே குறுகிக் கொண்டு படுத்துக்கிடந்தான் என் மகன். பார்த்த எனக்கு நெஞ்சத்தை அழுத்திக்கொண்டு கண்ணீர் வந்தது. அதற்குப்பிறகு, என் மகனை எப்படியாவது அங்கிருந்து மீட்டுக் கொண்டு வந்துவிட வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே எனக்குள் நிறைந்து இருந்தது.

இதோ இப்போது என் மகன் திரும்பி வந்திருக்கிறான். முழு விடுதலை இல்லை என்றாலும், பல மாதப் போராட்டங்களுக்குப் பின் முப்பது நாள் சிறை விடுப்பில் என் மகன் மீண்டும் வீட்டுக்கு வந்திருக்கிறான்.

1991-ம் வருடம். தனது பத்தொன்பதாவது வயதில் என் மகன் மிதிவண்டிகளில் ஊர்த் தெருக்களைச் சுற்றிக் கொண்டிருந்த ஒருநாள். அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டான். வெறும் விசாரணைதானே, மீண்டும் வீட்டுக்கு வந்துவிடுவான் என்று நாங்கள் காத்திருந்தோம்.

அன்றிரவு நாங்கள் கூட்டாக அமர்ந்து சாப்பிட, அவனுக்குப் பிடித்த பருப்புக் குழம்பு எங்கள் வீட்டு அடுக்களையில் அவனுக்காகத் தயாராகிக் கொண்டிருந்தது. ஆனால், அறிவு மீண்டும் வீட்டுக்குத் திரும்ப, எங்களோடு சேர்ந்து உணவருந்த 26 ஆண்டுகள் ஆகிவிட்டன!

இப்போது என் மகன் வருவான் என்று நினைக்கவேயில்லை. ஏனென்றால், அவன் வருவான் என்று நம்பிக் காத்திருந்த நொடிகளெல்லாம் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. மொத்தமாக நம்பிக்கை இழந்திருந்த எனக்கு ‘நம்ம அண்ணே ஜோலார்பேட்டை வந்திருச்சும்மா... இன்னும் கொஞ்சநேரத்துல வீட்டுக்கு வந்துரும்’ என்று அன்றைய தினம் யாரோ சொன்னதும் அதை நம்பவும் முடியாமல் செயலற்றுதான் போனேன். 

அறிவின் அம்மா எழுதுவது...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவனுக்காகச் சாப்பிட எதுவுமே செய்து வைக்கவில்லை. வாசலுக்கும் வீட்டுக்குமாகப் பதற்றமாக ஓடவில்லை. ஆனால், அறிவு வந்தான். பத்தொன்பது வயதில் தலை நிறையச் சுருண்டு கிடந்த முடியுடன் சென்றவன், நாற்பது வயதில் முன்னந்தலை முடிகள் கொட்டி வயோதிக வாலிபனாய் வந்திருக்கிறான். சிறையின் உயிர்ப்பற்ற சூழல் அவனது இளமையை விழுங்கியிருந்தது.

‘அம்மா!’ என்று என்னை அழைத்தபடியே வந்தான். ‘என்னம்மா இது வீட்டுக் கூரை தாழ்ந்திருக்கு?’ என்றபடியே நுழைந்தான். உண்மையில் வீட்டுக் கூறை அப்படியேதான் இருந்தது. சாலையை உயர்த்திக் கட்டியிருந்தார்கள்.

வீட்டிற்குள் நுழைந்தவன் ‘உடம்புக்கு இப்போ எப்படிப்பா இருக்கு?’ என்று என் கணவர் படுத்திருந்த கட்டிலை நோக்கி ஓடினான். மகன் சிறையில் இருந்ததுதான் என்னவரின் உடல்நிலையை மோசமடையச் செய்திருந்தது. அத்தனை முடியாதபோதும், மகனைக் கண்டதும் எழுந்து அமர்ந்து ஆரத் தழுவிக் கொண்டார்.

கடந்த சில ஆண்டுகளில் எனக்கும் சர்க்கரை நோய்த் தாக்கம் ஏற்பட்டிருந்தது. ஆனால், மகனைக் கண்டதும் நோய் என்ன? நொடிப்பென்ன? அத்தனையும் பறந்து போய்விட்டது. இரவு உண்பதற்கு தோசை ஊற்றித் தரச்சொல்லிக் கேட்டான். சிறைவாசம் அவனுக்கு தோசை கிடைப்பதைக்கூட அரியதாக்கியிருந்தது. அன்றிரவு, நான் என் கணவர் மற்றும் பிள்ளைகள் மூன்று பேர் என இருபத்தாறு ஆண்டுகள் கழித்துக் குடும்பமாக ஒன்றாக உட்கார்ந்து உணவு உண்டோம்.

அறிவுக்கு கிடார் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை. அவனுடைய அக்கா ஆசையாக வாங்கிக் கொடுத்த கிடாரைத் தடவிப் பார்த்துக் கொண்டிருந்தான். இளையவள் அவனுக்கு மொபைல் போன் வாங்கிக் கொடுத்து அதில் வாட்ஸ்அப் உபயோகிக்கக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். சிறு வயதில் ஒருவருக்கு ஒருவர் சீண்டிக்கொண்டும் செல்லப்பெயர் இட்டுக்கொண்டும் விளையாடியதைப்போலவே இப்போதும் செல்லமாகச் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

அறிவின் அம்மா எழுதுவது...

ஒரு குறிஞ்சி மலர் பூக்க பன்னிரெண்டு ஆண்டுகள் ஆகும். இங்கே எங்கள் குடும்பம் மீண்டுமாய் பூக்க இரு குறிஞ்சி மலர்கள் பூக்கும் காலங்கள் கடந்துள்ளன. இந்த 26 ஆண்டுகாலம் அதற்குத் தேவையாய் இருந்துள்ளது.

இயற்கையென்றால் அவனுக்கு மிகவும் இஷ்டம். சிறையில் இருக்கும்போது நிலவைப் பார்க்க வேண்டும் கவிதை எழுத வேண்டும் என்று அடிக்கடிச் சொல்வான். பரோலில் வெளியே வந்த பிறகு, இரவு எங்கள் வீட்டுத் தோட்டத்தில் இருந்து வானத்தில் நிலாவைப் பார்த்துவிட்டு ‘அம்மா! நிலாவைப் பார்த்துட்டேன். ஆனால், மகிழ்ச்சியில் கவிதைதான் தோணலை’ என்றான் குழந்தையைப் போல. `இந்தக் குழந்தை மனதை ஏனடா சிறைக்குள் பூட்டி வைத்துள்ளீர்கள்’ என்று மனதுக்குள் அழுதுகொண்டேன்.

அழ வேண்டாம் என்று மட்டும் தயவுசெய்து எனக்கு அறிவுறுத்தாதீர்கள். சோகம் என்றாலும் மகிழ்ச்சி என்றாலும் என்னால் கண்ணீரில்தான் வெளிப்படுத்த முடியும். இதை எழுதும்போது என் மகன் என்னுடன் இருக்கிறான் என்கிற மகிழ்ச்சியில் என் கண்களில் நீர் வடிகிறது. அவன் எங்களுடன் இருக்கும் இந்த முப்பது நாள்களில் ஒவ்வொரு நிமிடமும் அவனுக்குப் பிடித்ததுபோல அனைத்தும் இருக்க வேண்டும் என்று விருப்பப்படுகிறேன்.

முப்பது நாள்கள் கழித்து அதே இருட்டறை சிறைவாசத்துக்கு மீண்டும் என் மகன் சென்றுவிடுவானே... என்பதை நினைக்கும்போது மனது பயம் கொள்கிறது. நிரந்தரமாக அவன் எங்களுடனே இந்த வீட்டில் இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

என் மகன் அறிவு இதுவரை அனுபவித்த துன்பங்கள் போதும். அவனுக்கான முழு விடுதலை வேண்டும். அவன் வாழ்க்கையில் இனிமேல் மகிழ்ச்சியை மட்டுமே உணர வேண்டும். அவனோடு மகிழ்ச்சியாகத் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கும் ஒரு பெண்ணாகப் பார்த்து அவனுக்கு மணமுடித்து வைக்க வேண்டும். என் குடும்பமும் எங்கள் மனமும் நிரம்பி இருக்க வேண்டும். அதைப் பார்த்துவிட்டுத்தான் நான் நிம்மதியாகக் கண்மூடுவேன்.

நீங்காத நம்பிக்கையுடன்,

அற்புதம் அம்மாள்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism