Published:Updated:

பாபாக்கள் ஜாக்கிரதை!

பாபாக்கள் ஜாக்கிரதை!
பிரீமியம் ஸ்டோரி
பாபாக்கள் ஜாக்கிரதை!

மருதன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

பாபாக்கள் ஜாக்கிரதை!

மருதன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

Published:Updated:
பாபாக்கள் ஜாக்கிரதை!
பிரீமியம் ஸ்டோரி
பாபாக்கள் ஜாக்கிரதை!

`நிர்பயாவைப்  பாலியல் பலாத்காரம் செய்தவர்களை உடனடியாகக் கைது செய்’ என்று புது டெல்லியே ஒன்றுதிரண்டு மெழுகுவத்தி ஏற்றிப் போராட்டம் நடத்தியது. ஆனால், இரண்டு பாலியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவர் கைது செய்யப்பட்டபோது அதை எதிர்த்து 38 பேரைக் கொன்று, 250 பேரைத் தாக்கி ஒரு மூர்க்கத்தனமான போராட்டத்தை நடத்தி முடித்துள்ளது ஹரியானா. குற்றம் என்னவோ ஒன்றுதான்.ஆனால், டெல்லியைப் போலின்றி ஹரியானாவின் குற்றவாளி சாமான்யரல்ல. பல லட்சக்கணக்கான சீக்கிய ஆதரவாளர்களைப் பெற்றிருக்கும் தேரா சச்சா சவுதா என்னும் அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். அதனால்தான், இந்த நகைமுரண் வன்முறைப் போராட்டம்.

`அதெப்படி எங்கள் கடவுளை நீங்கள் கைது செய்யலாம்’ என்பதுதான் ராம் ரஹீமின் ஆதரவாளர்களுடைய கோபம். கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு கும்பலாக அவர்கள் ஹரியானாவில் ஒன்றுதிரண்டபோது அவர்களுடைய கோபம், பொங்கும் வெறியாக வளர்ந்திருந்தது. தங்களுடைய குருநாதரின் புகழுக்கு ஏற்பட்ட களங்கத்தை அப்பாவிகளின் ரத்தத்தைக்கொண்டு  துடைப்பதே அவர்களின் நோக்கம்.

பாபாக்கள் ஜாக்கிரதை!

`நடந்ததற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை; தேரா சச்சா சவுதாவின் ஆள்கள் இப்படி திரண்டுவருவார்கள் என்றோ வன்முறையில் ஈடுபடுவார்கள் என்றோ நாங்கள் நினைக்கவில்லை’ என்கிறார் ஹரியானாவின் பா.ஜ.க. முதல்வர் மனோகர் லால் கத்தார். ஆனால்,  ராம் ரஹீம் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கின் தீர்ப்பு வெளிவருவதற்கு முன்பே ஆகஸ்ட் 25-ம் தேதி, தேராவின் தலைமையகம் அமைந்துள்ள சிர்ஸாவில் இருந்து வன்முறை வெடித்த பஞ்ச்குலா மாவட்டத்துக்கு ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் கும்பல் கும்பலாகத் திரண்டு வந்து சேர்ந்தது எப்படி என்னும் கேள்விக்கு அவரிடம் பதிலில்லை.

ஹரியானாவில் இப்படி நடைபெறுவது இது முதன்முறையல்ல. 2016 பிப்ரவரியில் ஜாட் பிரிவினர் இதே போன்ற ஒரு போராட்டத்தை முன்னெடுத்தனர். பிற பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்னும் கோரிக்கையுடன் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டம் ஹரியானாவைப் பத்து நாள்களுக்கு முடக்கிப்போட்டது. பொதுச்சொத்துகளைச் சூறையாடுவது, வாகனங்களுக்குத் தீ வைப்பது என்று ஆரம்பித்துப் பெண்கள் மீதான தாக்குதலிலும் இறங்கினார்கள் ஜாட் ஆதரவாளர்கள்.

அப்போதும் மனோகர் லால் அரசு அமைதியாகத்தான் இருந்தது. ஜாட் ஆதரவாளர்களின் வன்முறையையும் தேரா ஆதரவாளர்களின் தீவிரமான வன்முறையையும் மனோகர் லால் கத்தார் அரசு அனுமதித்ததற்கான காரணம் ஒன்றுதான்; அரசியல். 2016 எழுச்சியின்போது ஜாட் பிரிவினரின் பலத்தைக்கண்டு திகைத்துப்போன பா.ஜ.க. முதன்முதலாக அவர்களை ஒரு லாபகரமான ஓட்டு வங்கியாக அங்கீகரித்தது. அதனால்தான், அவர்களுடைய அணி திரட்டலையும் அதன் நீட்சியாக வெடித்த கலவரத்தையும் அமைதியாக இருப்பதன் மூலம் அங்கீகரித்தது கத்தார் அரசு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாபாக்கள் ஜாக்கிரதை!

ராம் ரஹீமின் பலம் என்ன என்பது பா.ஜ.க-வுக்கு மிக நன்றாகவே தெரியும். லட்சக்கணக்கான ஆதரவாளர்களை ஈர்த்துத் தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் இந்தச் சீக்கிய குருவோடு அனுசரணையாக இருப்பதே நல்லது என்பதும் பா.ஜ.க-வுக்குத் தெரியும். 2014 தேர்தலின் வெற்றிக்கு தேரா அமைப்பு, தங்களுக்கு அளித்த ஆதரவும் ஒரு முக்கியக் காரணம் என்பது பா.ஜ.க-வுக்கு மிக நன்றாகவே தெரியும். குறிப்பாக, பஞ்ச்குலா மாவட்டம் பா.ஜ.க-வுக்கே பெருவாரியாக வாக்களித்தது. மோடியின் ஸ்வச் பாரத் திட்டத்தை ராம் ரஹீமுடன் இணைந்துதான் முன்னெடுத்தார் கத்தார்.

ராம் ரஹீமின் எழுச்சியைப்போலவே அவருடைய வீழ்ச்சியும் பிரமாண்டமானதுதான். இந்தியாவின் 100 செல்வாக்குமிக்க மனிதர்கள் பட்டியலில் ராம் ரஹீம் இடம் பெற்றிருக்கிறார். ஒரு  மதத்தலைவராக மட்டுமின்றி ராக் ஸ்டாருக்கு இணையான புகழைப் பெற்ற பிரபலமாகவும் அவர் இந்த நிமிடம்வரை இருக்கிறார். `தி மெசெஞ்சர் ஆஃப் காட்’ என்னும் பெயரில் அவரே எழுதி, இயக்கி, தயாரித்து, இசையமைத்த (வேறு பல பணிகளையும் செய்திருக்கிறார்!) திரைப்படத்தை விமர்சகர்கள் குப்பை என்று சொல்லி நிராகரித்தாலும் அவருடைய பக்தர்கள் அதை ஓர் அதிசயமாகவே கண்டு மகிழ்ந்தனர். மரத்தை ஒரே போடாகப் போட்டு வெட்டிச் சாய்ப்பது, மோட்டார் சைக்கிளில் பறப்பது, வானத்தில் மிதப்பது என்று தொடங்கி கணக்கற்ற அற்புதங்களை இந்தப் படத்தில் அவர் நிகழ்த்தியிருந்தார்.

ராஜஸ்தானில் பிறந்த ராம் ரஹீம் தனது ஏழாவது வயதில் தேரா சச்சா சவுதா அமைப்பில் இணைந்துகொண்டார். 1948-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் பல பாபாக்கள் தலைவர்களாக இயங்கியிருக்கிறார்கள். இந்தியா முழுக்க 46 ஆசிரமங்களைக் கொண்டிருக்கும் தேரா அமைப்பு, மதக் கல்வியைப் புகட்டுவதோடு லாபமற்ற ஒரு சமூக நலப்பணி அமைப்பாகவும் தன்னைப் பதிவு செய்துகொண்டுள்ளது. 1990-ம் வாக்கில் தேராவின் செல்வாக்குமிக்க தனிப்பெரும் தலைவராகவும் கடவுளின் ஆசிபெற்ற பாபாவாகவும் ராம் ரஹீம் மாறினார். இன்று, இந்தியாவில் மட்டுமல்ல; உலகம் முழுவதிலும் தனக்கு 60 மில்லியன் ஆதரவாளர்கள் இருப்பதாகப் பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறார் அவர்.

பாபாக்கள் ஜாக்கிரதை!

2014 ஹரியானா மாநிலத் தேர்தலின்போது நரேந்திர மோடி வெளிப்படையாகத் தன்னைப் பாராட்டிப் பேசியதைத் தொடர்ந்து பா.ஜ.க-வுடன் நெருக்கமானார் ராம் ரஹீம். மோடி மட்டுமின்றி கத்தாருடனும் அவரால் சுலபமாக நெருங்க முடிந்தது. உண்மையில் அவருக்கு பா.ஜ.க. தேவைப்பட்டது என்பதைவிட பா.ஜ.க-வுக்கு ராம் ரஹீம் போன்ற மக்கள் செல்வாக்கு மிகுந்த ஒரு தலைவர் ஹரியானாவில் தேவைப்பட்டார் என்பதே உண்மை.

ராம் ரஹீம் பற்றி இப்போது பல விஷயங்கள் வெளியில் வருகின்றன. பெண் பக்தர்களைப் பாதுகாக்கும் பொருட்டுத் தன்னுடைய சீடர்களுக்கு ராம் ரஹீம் ஆண்மை நீக்கம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. கடவுளுக்கு நெருக்கமாகச் செல்ல இது அவசியம் என்று ராம் ரஹீம் சொல்லியிருக்கிறார். அவர்களில் ஒருவர் பின்னாளில் ராம் ரஹீமுக்கு எதிராகக் குற்றச்சாட்டுப் பதிவு செய்துள்ளார். ஆனால், ராம் ரஹீம் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக 2002-ம் ஆண்டு அவருடைய ஆசிரமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த புகார்தான் அவருடைய இப்போதைய கைதுக்கு மூலகாரணம். சி.பி.ஐ. விசாரணை தொடங்கப்பட்ட அதே 2002-ம் ஆண்டு ராம் ரஹீம்மீது ஒரு கொலைக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது. தேரா அமைப்பு குறித்தும் அந்த அமைப்பின் மேனேஜர் ஒருவர் மர்மமான முறையில் கொலையானது குறித்தும் கட்டுரைகள் எழுதிவந்த ராம் சந்தர் சத்திரபதி என்னும் பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ராம் ரஹீம்மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது.

ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் தேராவின் தலைநகரம் அமைந்திருக்கும் சிர்ஸாவில் கிட்டத்தட்ட ஒரு குறுநில மன்னரைப் போல வாழ்ந்து வந்திருக்கிறார் ராம் ரஹீம். தன்னாட்சி பொருந்திய ஒரு நாடுபோல் அதனை அவர் நிர்வகித்தும் வந்திருக்கிறார். சிர்ஸாவில் உள்ள கடைத்தெருக்களில் பெரும்பாலானவை ராம் ரஹீமுக்குச் சொந்தமானவை. அங்கே ஐந்து ரூபாய், பத்து ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் நாணயங்களைத் தேரா அமைப்பு அறிமுகப்படுத்தியிருக்கிறது. கடையில் பொருள்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்க ஐந்து அல்லது பத்து ரூபாய் சில்லறை இல்லாவிட்டால் பதிலாக இந்த பிளாஸ்டிக் நாணயத்தைக் கொடுத்துவிடுவது அங்குள்ள கடைக்காரர்களின் வழக்கம். வாடிக்கையாளர்கள் அந்த பிளாஸ்டிக் நாணயத்தை தேரா அமைப்பினர் நடத்தும் எல்லா கடைகளிலும் கொடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பாபாக்கள் ஜாக்கிரதை!

தேரா அமைப்புக்குப் பொதுமக்களிடையே இருந்த ஆதரவுக்கு முக்கியக் காரணம், அவர்கள் மேற்கொண்ட கவர்ச்சிகரமான நலப்பணிகள்தாம். போதை மருந்துக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு, ஏழை ஜோடிகளுக்கு இலவசத் திருமணம், இலவச மருத்துவ வசதி, ஆபத்தில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் வசதி, பாலியல் தொழிலுக்கு எதிரான போராட்டம் என்று தொடங்கிப் பலவிதமான நலப்பணிகளைத் தேரா முன்னெடுத்து வந்துள்ளது. மது அருந்துவதையும் புலால் உண்பதையும் இந்த அமைப்பு எதிர்க்கிறது. முக்கிய விழாக்களின்போது சீக்கிய, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத அடையாளங்களை ஒருங்கே கொண்டிருக்கும் பதாகைகளின்கீழ் அமர்வது ராம் ரஹீமின் வழக்கம்.

ராம் ரஹீமின் தேராவைப் பின்பற்றுபவர்களில் தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்களின் சதவிகிதமே அதிகம். குறிப்பாக, பெண்களின் ஆதரவை தேரா எப்போதுமே பெற்றுவந்திருக்கிறது. என் குடிகாரக் கணவனை அல்லது தகப்பனை அல்லது சகோதரனைத் திருத்தியவர்கள் அவர்கள் என்று பெண்கள் கையெடுத்துக் கும்பிடுகிறார்கள். ஒரு கோயிலில் அல்லது மசூதியில் அல்லது குருத்வாராவில் கிடைக்காத மதிப்பும் மரியாதையும் தேராவுக்குச் செல்லும்போது எனக்குக் கிடைக்கிறது என்கிறார்கள் சாதிய அடுக்கிலும் பொருளாதார அடுக்கிலும் கீழ்த்தட்டில் இருக்கும் சாமான்ய மக்கள். ராம் ரஹீமின் தேரா மட்டுமல்ல, அவரைப் போன்ற வேறு பல பாபாக்களும் பல தேராக்களை நீண்டகாலமாகவே நடத்திவருகின்றனர். அவர்களில் பலரிடம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலமும் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துகளும் இருக்கின்றன. உலகம் முழுவதிலுமிருந்து அவர்களுக்கு நன்கொடைகள் பெருகிக்கொண்டிருக்கின்றன.

ஆனால், இது ராம் ரஹீம் மற்றும் அவருடைய தேராவின் ஒரு முகம் மட்டுமே. அருள் நிறைந்த, புன்னகை புரியும் இந்த முகத்தை வெளியில் காட்டியபடிதான் அருவருக்கத்தக்க இழிசெயல்களை அவர் செய்துள்ளார். இந்த இன்னொரு முகத்தைதான் இப்போது நீதிமன்றம் அம்பலப்படுத்தியிருக்கிறது. தன்னுடைய ஆசிரமத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை அவர் பாலியல் பலாத்காரம் செய்தது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கிறது. அவர் மீதான கொலை உள்ளிட்ட மற்ற வழக்குகள் இனிதான் விசாரிக்கப்பட வேண்டும். அந்த வகையில் இப்போது வந்துள்ள தீர்ப்பை ஓர் ஆரம்பப்புள்ளியாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

எளிய மக்களை சில நற்செயல்கள்மூலம் ஈர்த்து அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்று பிறகு மோசடிகளை நிகழ்த்தும் எவரையும் பாரபட்சமின்றி நிராகரிப்பதே நேர்மையான, அறிவுப்பூர்வமான அணுகுமுறை.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism