Published:Updated:

நம்புங்க... நானும் ராஜாதான்!

நம்புங்க... நானும் ராஜாதான்!
பிரீமியம் ஸ்டோரி
நம்புங்க... நானும் ராஜாதான்!

எம்.கணேஷ் - படங்கள்: வீ.சக்தி அருணகிரி

நம்புங்க... நானும் ராஜாதான்!

எம்.கணேஷ் - படங்கள்: வீ.சக்தி அருணகிரி

Published:Updated:
நம்புங்க... நானும் ராஜாதான்!
பிரீமியம் ஸ்டோரி
நம்புங்க... நானும் ராஜாதான்!

`ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ கம்பீர’ என எந்தச் சத்தமும் இல்லை; அரசவையும் இல்லை, அரண்மனையும் இல்லை. ஆனால், நம்புங்க மக்களே இவர் ராஜாதான். கேரளாவில் இன்றைக்கும் தனக்கென மக்கள், தனக்கென எல்லைப் பரப்புகள், தனக்கென ஒரு வரலாறு எனச் சத்தமில்லாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது  கோவில்மலை ராஜ்ஜியம். இதன் மன்னர், ராமன் ராஜ மன்னான்.

தென்னிந்தியாவில் செயல்படும் ஒற்றை மன்னராட்சி இதுதான் என்கிறது விக்கிபீடியா. ஜனநாயக நாட்டில் மன்னராட்சியா, அதெப்படிச் சாத்தியம்? என்ற கேள்வியோடு, கேரளா இடுக்கி மாவட்டத்தில், கட்டப்பனை அருகில் இருக்கும் கோவில்மலை ராஜ்ஜியத்திற்குப் புறப்பட்டோம். கோவில்மலையில் இறங்கியதும், ஊர்க்காரர்களிடம் வந்த விவரத்தைச் சொன்னவுடன் நேராக கோவில்மலை மன்னர் அரண்மனைக்கே ஸாரி... வீட்டுக்கே அழைத்துச்சென்றுவிட்டனர்.

நம்புங்க... நானும் ராஜாதான்!

ஜரிகை மின்ன ஜிப்பா, முத்துக்கள் மிளிர தலைப்பாகை என பக்காவான மன்னர் கோலத்தில் நம்மை வரவேற்றார் மன்னர் ராமன் ராஜ மன்னான். அவரைப் பார்க்க மீடியாவில் இருந்து வருகிறார்கள் என்கிற தகவல் பரவியதுதான் மன்னர் ஃபுல் கெட்அப்பில் தயாராக இருக்கக் காரணம். மன்னருக்கு ஒரு மனைவி, ஒரு குழந்தை என மகிழ்வான குடும்பம்.

கேரளாவில் இருந்தாலும், ``எங்களுக்கான வரலாறு நீண்டது…’’ என அழகானத் தமிழில் பேச ஆரம்பித்தார். ``13-ம் நூற்றாண்டில் மதுரையில் ஆட்சிசெய்துகொண்டிருந்த பாண்டிய மன்னன் மானவ விக்ரமனுக்கும், இரண்டாம் குலோத்துங்கச்சோழனுக்கும் போர் நடக்கிறது. அப்போது பாண்டிய மன்னனின் தளபதி, சோழர்களிடம் தனது ராணுவ ரகசியங்களைப் பகிர்ந்துகொள்கிறார். அதனை அறிந்து மனம் உடைந்த பாண்டிய மன்னன், ஆட்சி அதிகாரத்தைத் தனது தம்பிக்குக் கொடுத்துவிட்டுத் தலைநகர் மதுரையை விட்டுப் புறப்படுகிறார். அவருடன் மக்கள் சிலரும் புறப்பட, கம்பம் வழியாகக் கூடலூர் வந்தடைகிறார்கள். மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரமான கூடலூரில் கூடாரம் அமைத்துத் தங்குகிறார்கள். அவர்கள் புறப்படும்போது மதுரை மீனாட்சியம்மன் சிலையையும் தங்களுடன் எடுத்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. கூடலூர் வந்தடைந்த போது இப்பகுதி மிகுந்த வறட்சியாக இருந்திருக்கிறது. அங்கேயே மீனாட்சிக்கு ஒரு கோயில் கட்டியவர்கள், தேர் ஒன்றைச் செய்து திருவிழா நடத்தினால், நமக்கு நல்ல காலம் வரும் என்ற எண்ணத்துடன் பிரமாண்டமான தேர் செய்திருக்கிறார்கள்.

தேருக்கான வடம் செய்ய பிரம்புச் செடியைத்தான் அந்தக் காலத்தில் பயன்படுத்துவார்களாம். அந்தச் செடி அப்பகுதியில் இல்லாததால், சிலரைக் காட்டுக்குள் அனுப்புகிறார் பாண்டிய மன்னர். அவர்கள் செடியைத் தேடி இந்தக் கோவில்மலைப் பகுதிக்கு வந்திருக்கிறார்கள். பிரம்புச்செடியும் கிடைத்திருக்கிறது. அவர்களின் பசி நீங்கத் தேனும், கிழங்கும் கிடைத்திருக்கிறது. பசுமை கொஞ்சும் இந்தப்  பகுதி பற்றி மன்னரிடம் சொல்லியிருக்கிறார்கள். மகிழ்ச்சியடைந்த மன்னர், கோவில்மலைப் பகுதிக்குச் செல்லலாம் என முடிவு செய்கிறார். அப்போது கோவில்மலைப் பகுதி திருவிதாங்கூர் மகாராஜாவின் கட்டுப்பாட்டில் இருந்ததால், இந்த இடத்துக்கான விலையைக் கொடுத்து இப்பகுதியை வாங்கித் தன் மக்களுடன் குடியேறியதாக என் முன்னோர்கள் வழி வரலாறு. என் முன்னோர்கள் மதுரையில் இருந்து கொண்டுவந்ததாகச் சொல்லப்பட்ட மீனாட்சி  சிலை, இப்போது எங்களிடம் இல்லை. கொள்ளையர்களால் அது களவாடப்பட்டது என்றும், சில உள்நாட்டுப் போர்களின் காரணமாகக் கோயிலும் சிலையும் சிதைக்கப் பட்டது எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், இன்றும் நாங்கள் மீனாட்சியைத் தான் வழிபட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம்புங்க... நானும் ராஜாதான்!

மீனாட்சிக்கு இங்கே ஓர் கோயில் கட்டியிருக்கிறோம். வருடம் ஒருமுறை கோயிலின் காணிக்கையை மதுரை மீனாட்சி அம்மனின் காலடியில் சேர்த்துவிடுவோம். வருடம்தோறும் தை மாதம் இங்கே திருவிழா நடக்கும். அப்போது பாட்டும்  கூத்துமாக இந்தப் பகுதியே களைகட்டியிருக்கும். பாரம்பரியமாகக் கண்ணகி கோவலன் கதையைத்தான் கூத்து கட்டுவோம். அதில் சிலப்பதிகாரப் பாடல்கள் தான் பாடுவோம். ஆனால், எங்கள் மக்கள் இதுவரை சிலப்பதிகாரமே படித்ததில்லை’’ என்று சொல்லி ஆச்சர்யமூட்டும் ராமன் ராஜ மன்னான், இளங்கலைப் பொருளாதாரம் படித்திருக்கிறார்.

``இன்றும் எங்களுக்கு என்று ஆட்சிமுறையும், பாரம்பர்யப் பழக்கவழக்கங்களும் உண்டு. கோவில்மலைதான் ராஜ்ஜியங்களின் தலைமையிடம். மேற்கில் இருக்கும் கோவில்மலையைச் சுற்றி மூன்று திசைகளிலும் தெற்கில் குமுளி, கிழக்கில் உடும்மஞ்சோலை, வடக்கில் அடிமாலி என எங்கள் உபராஜ்ஜியங்கள் இருக்கின்றன. அங்கே உப ராஜாக்கள் இருக்கிறார்கள். அந்த ராஜ்ஜியங்களுக்கு  ஏதாவது பிரச்னை என்றால் என்னிடம் வருவார்கள். எனக்குக் கீழ் ஒன்பது மந்திரிமார்கள் இருக்கிறார்கள். ஒருவேளை நான் இறந்துவிட்டால், அடுத்த ராஜாவைத் தேர்ந்தெடுக்கும்  உரிமை  இந்த மந்திரிமார்களிடமே இருக்கிறது.

தாய்வழிச் சமூகமான நாங்கள், சகோதரி மகன்களையே ராஜாவாகத் தேர்தெடுப்பது வழக்கம். இதற்கு முன் என் தாய்மாமா ராஜாவாக இருந்தார். மேலும், வாத்தி என்றொரு ராஜகுரு பதவி எங்கள் ராஜ்ஜியத்தில் உண்டு. அந்த வாத்தி ஒரு பெண். எங்கள் ராஜ்ஜியத்தில் ஏதாவது கெட்டது நடந்தால் அதனைச் சரி செய்யும் வேலை வாத்தியினுடையது. அதேபோல் கெட்டது நடக்காமல் பாதுகாக்கும் பொறுப்பும் அவரிடம்தான் உள்ளது. அந்தக் காலத்தில் கொள்ளை நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களை வாத்திதான் காப்பாற்றியதாக  வரலாறு உண்டு. இப்போதும் காய்ச்சல், தலைவலி என்றால், அவரிடம் சென்றுவிட்டுத்தான் மருத்துவமனைக்குச் செல்வோம்.

நம்புங்க... நானும் ராஜாதான்!

கோழிமலையில் மட்டும் 120 குடும்பங்கள் இருக்கின்றன. மற்ற இடங்களில் அதற்குக் குறைவான எண்ணிக்கையில் மக்கள் வசிக்கிறார்கள். எங்களை கேரளா அரசு `மன்னான்’ பழங்குடிகள் என வகைப்படுத்தி யிருக்கிறது. எங்கள் பழக்கவழக்கங்கள், கலாசாரப் பண்பாடுகளுக்கு மரியாதையும், அங்கீகாரமும் கொடுக்கிறது. எங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறது.

எங்கள் முழுத்தொழில் விவசாயம். சிலர், காபி, ஏலத் தோட்டங்களுக்குக் கூலி வேலைக்குச் செல்கிறார்கள். எங்களுக்குள்தான் திருமணம் செய்துகொள்வோம். மிக எளிமையான சமூக விவாக முறைதான் எங்களுடையது. பொது இடத்தில்,  ஊர்மக்கள் முன்னிலையில் மணமக்கள் மாலை மாற்றிக்கொள்வார்கள். ஊர்மக்கள் அவர்களை வாழ்த்துவார்கள். அவ்வளவுதான் திருமணம். இப்படியான சமூக விவாகமுறைதான் உண்மையான தமிழ்க் கலாசாரம். அதனை இப்போதும் கடைப்பிடித்து வருகிறோம். வருடத்திற்கு ஒருமுறை திருவிழா, சபைக் கூட்டம் என இன்றும் கட்டுக்கோப்பாக வாழ்ந்து வருகிறோம். மகிழ்ச்சியாக இருக்கிறோம்’’ என்று மென்மையாகச் சிரிக்கிறார் ராமன் ராஜ மன்னான்.

ராஜா போட்டோக்களுக்கு போஸ் கொடுக்க ஆரம்பிக்க, ராணி மினுமோல், ராஜாவை `இப்படி நில்லுங்க... அப்படிப் பார்த்துச் சிரிங்க... கம்பீரமா இருங்க’ என இயக்க ஆரம்பிக்கிறார். எல்லாவற்றையும் பார்த்தபடி சிரித்துக் கொண்டிருக்கிறார் இளவரசி அர்ச்சனா.

13-ம் நூற்றாண்டில் இங்கே வந்ததாகச் சொல்லும் இம்மக்கள் பேசும் தமிழில் ஒரு துளி மலையாளக் கலப்பும் இல்லை என்பது ஆச்சர்யத்தின் உச்சம். தமிழின் உச்சரிப்பும் தொணியும் வியக்கவைக்கிறது!
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism