Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 52

ஆண்பால் பெண்பால் அன்பால் - 52
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண்பால் பெண்பால் அன்பால் - 52

#MakeNewBondsபெருந்தேவி எழுத்தாளர் - படங்கள்: அருண் டைட்டன்

ண்-பெண் உறவு என்றவுடன் முதலில் மனதில் தோன்றியது புதுமைப்பித்தன் தன் மனைவி கமலாவுக்கு எழுதிய கடிதத்தின் வரிகள்தாம். 17.5.1940 என்று தேதியிட்ட கடிதம் அது.

“அன்பில் காமம் ஒருபடிகூட இல்லாமல் ஒருவரைக் காதலிக்க முடியும் என்று நீ ஒருமுறை சொல்லிக்கொண்டிருந்த விஷயத்தின் உண்மை இப்பொழுதுதான் எனக்குப் புலப்படுகிறது” என்று எழுதிவிட்டு, சில வரிகளுக்குப் பின் இப்படித் தொடர்கிறார்... “இதுவரை எனது காதல், நான் உன்னைப் பிரிந்தால் என்னால் தனித்து வாழ முடியாது என்ற பயத்தில், அதாவது சுயநலத்தில் பிறந்தது. சுயநலம் இருக்கும் இடத்தில் உண்மையான அன்புக்கு இடமுண்டா என்பதைத் தீர ஆலோசித்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  காட்டுத்தீபோல தேகத்தொடர்பு என்ற அடிப்படையில் பிறந்த காதலைப் புத்தித்தெளிவு என்ற அங்குசம்கொண்டு கட்டுப்படுத்திப் பணியவைத்தால்தான் அன்பு என்னும் விளக்கு வாடாமல் எரியும். இதுதான் என் ஆத்ம சோதனையின் முடிவு.”

ஆண்-பெண் உறவில் சில படிநிலைகளை வைக்கிறார் புதுமைப்பித்தன். சுயநலத்தோடு கூடிய காமம் - காமத்திலிருந்து பிறக்கும் காதல் - காதலில் காமத்தை நீக்கும்போது, அன்புவிளக்காக ஒளிரும் காதல்... இப்படிப் போகிறது புதுமைப்பித்தனின் விவரணை. ஆனால், இன்றைக்கு ஆண்-பெண் உறவில் காதல், காமம், அன்பு என்றெல்லாம் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க வேண்டுமா என்பதோடு `அது முடியுமா’ என்கிற கேள்வியும் எழுகிறது.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 52

அன்றைய காலகட்டத்தில் தொலைதூர உறவு என்பது, கடிதத்தால் மட்டுமே வளர்க்க முடிந்ததாக இருந்தது. ஐம்புலன்களிலும் காமத்தை விலக்கிவைக்க வேண்டிய நிர்பந்தம். ஆனால், இன்றோ பேசுதல், கேட்டல், பார்த்தல் இவை எல்லாமே எத்தனை தொலைவிலும் இணையவெளித் தொழில்நுட்பத்தால் நெருக்கமாகிவிட்டது. தொடுதலும் நுகர்தலும் இல்லாவிட்டாலும், மின்திரை வழியில் காமம் வேறொரு பாதையைக் கண்டடைந்திருக்கிறது. அன்று புதுமைப்பித்தன் முன்வைத்த சமன்பாடு இன்று குழம்பிவிட்டிருக்கிறது. 

புதுமைப்பித்தன் கூறிய ஆத்ம சோதனை இன்று பொருளிழந்து போயிருக்கலாம். என்றாலும், ஆண்-பெண் இடையில் அன்பு என்பது என்றும் மாறாத, சுவாரஸ்யமான விவாதப் பொருளாக நம்மிடம் தொடர்கிறது.

ஆண்-பெண் இடையிலான உறவு, அன்பை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும் என்று ஐடியலிஸ்டிக்காக இந்தக் கட்டுரைத் தொடருக்கான தலைப்பை வைத்திருக்கிறார்களா? அல்லது அது அப்படித்தான் இருக்கிறது என்று கூறுகிறார்களா? ஆண்பால், பெண்பால் என இருவகைப் பால்கள்தானா? இடையில் அல்லது மேற்கொண்டு வேறேதும் இல்லையா? மேலும் இந்த அன்பு அன்பு என்கிறார்களே, இது ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே தன்னிச்சையான நீரோட்டமாக நகர்கிறதா? சம்பந்தப்பட்ட ஆணும் பெண்ணும்தான்  அல்லது ஆண்களும் பெண்களும்தாம் அதன் திசையைத் தீர்மானிக்கிறார்களா? அல்லது மற்றவர்களுக்கும் அதில் பங்குண்டா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆண்பால் பெண்பால் அன்பால் - 52சிதறும் எண்ணங்களை ஒன்றாகக் கோக்கிறேன். புவனேஸ்வரியிலிருந்து தொடங்க நினைக்கிறேன். சிறு நகரமொன்றில் பள்ளிக்குச் சென்ற வயதில் என்னுடைய சிநேகிதி அவள். என்னைவிட மூன்று ஆண்டுகள் பெரியவள். தாமதமாகப் பள்ளியில் சேர்ந்ததாலும் ஒரு வருடம் தவறியதாலும் என் வகுப்பில் படித்தாள். சின்ன வயதிலேயே சினேகத்தின் பரிபூரண அர்த்தத்தை உணர்த்தியவள். பத்தாவது படிக்கும்போது தீபாவளிக்குப் பிறகு சிலநாள்கள் அவள் பள்ளிக்கு வரவில்லை. பின்னர் கெரசினை மேலே ஊற்றிப் பற்றவைத்துக்கொண்டு உடல் கருகிச் செத்தாள் என்றொரு தகவல் மட்டும் வந்தது. அவள் வீட்டுக்கு எதிரே கடையில் வேலை செய்யும் ஒருவரோடு காதல். சாதிப் படிநிலையில் இவர்களிலும் கீழே  வைக்கப் பட்டிருக்கிற சாதி அவருடையது. அதனால், வீட்டில் கடுமையாக எதிர்த்ததால் இந்த முடிவு என்று பள்ளியில் பேசிக்கொண்டார்கள்.

என் அம்மாவோடு புவனாவின் வீட்டுக்குப் போய்த் துக்கம் விசாரித்தது நினைவிருக்கிறது. அவள் அம்மா முந்தானையால் வாயை மூடிக்கொண்டு உடல் மடங்கி மருகியது நினைவிருக்கிறது. பறிகொடுத்த கையறுநிலையில், பாழ்கிணறுகளைப்போலத் தோற்றம்கொண்ட அவர் கண்களும் நினைவிலிருக்கின்றன. அப்போது என் அம்மாவின் கைகளை இன்னும் இறுகப்பற்றி நின்றதைத் தவிர, எனக்குச் சொல்ல வார்த்தைகள் இல்லை.

அந்த வயதில் நான் சந்தித்த முதல் சாவு புவனாவுடையதுதான். அந்த ஊரில் நாங்கள் இருந்தவரை அடுத்த மூன்று வருடங்களுக்கு அவளுக்குத் திதி கொடுக்கும் தினத்தில் அவள் குடும்பத்தினர் என்னை அழைத்துச் சாப்பாடு போடுவார்கள், புத்தாடை வாங்கித் தருவார்கள். இறந்தபின் அவள் ஆத்மாவை நன்றாகவே போஷித்தார்கள்.

ஏன் அத்தனை அவசர அவசரமாக, அத்தனை நம்பிக்கை இழந்து, அத்தனை இளம்வயதில் புவனா தன்னை மாய்த்துக்கொண்டாள்? குடும்பம், காதல் இரண்டும் எதிரெதிர்த் திசைகளில் நகர்ந்தன; எந்தத் திசையில் செல்வது என்ற வயதை மீறிய பொறுப்பு அவளைத் தற்கொலை நோக்கி நகர்த்தியது என்று எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால், குடும்பமும் காதலும் பல சமயம் முரண்படுவதற்கு முதன்மைக் காரணமே காதலிலோ திருமணத்திலோ சாதியைக் கடக்க நாம் தயாராக இல்லை என்பதால்தானே? அவள் தற்கொலைக்கு அவள் மட்டுமா பொறுப்பு?

புவனாவின் மரணத்துக்குப்பின் கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்கள் கழித்து இதே போன்றதொரு இழப்பில் பரிதவித்து நின்ற கண்களை மீண்டும் சந்தித்தேன். இந்த முறை ஓமலூரில். தலித் இளைஞன் கோகுல்ராஜின் குடும்பத்தி னருடையவை. கோகுல்ராஜ் கொலைக்குப் பிறகு, அந்த இளைஞனின் வீட்டுக்குச் சென்று இருந்தேன். ஆதிக்கச் சாதி அதிகாரத்துக்கு மகனை, சகோதரனைப் பலிகொடுத்த அவர்களிடம் என்னவென்று ஆறுதல் கூறுவது? உண்மையில் அந்தக் கண்களை நான் எப்படிச் சந்தித்திருக்க முடியும்? சாதிப் படிநிலையில் ஆக உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் சாதியில் பிறந்த எனக்கு அந்தக் கொலைப் பாவத்தில் பங்கில்லையா என்ன? புவனாவின் மரணத்திற்குப்பிறகு, மீண்டும் வார்த்தைகள் என்னைக் கைவிட்ட தருணம் அது.    

புவனாவின் சாவை நினைவு கூர்கிற போதெல்லாம் கூடவே என்னைச் சிந்திக்கத் தூண்டுகிற விஷயம் ஒன்று உண்டு. அது `அன்பின் கொள்கலன்’ என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிற குடும்பம் என்ற அமைப்பு காதல், சுயத்தேர்வு என வரும்போது மட்டும் என்னென்ன வரைமுறைகளை வைத்திருக்கிறது, கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்பதுதான். காதல், திருமணம் உள்ளிட்ட விவகாரங்களில் பெற்ற பிள்ளைகளின் சுயத்தேர்வுகளை அன்பின் பெயரால் பெற்றோர்கள் கட்டுப்படுத்தும்போது, அவர்கள் சாதி, மதம் போன்றவற்றைத் தவறாமல் கணக்கிலெடுக்கிறார்கள். ஆனால், அவற்றை மட்டுமல்ல, இங்கே பொதுவெளியில் உரத்துப் பேசப்படாத மற்றொரு விஷயமும் உண்டு. அது பாலின அடையாளம். தேர்ந்தெடுக்கப்படுபவர் எதிர் பால் அடையாளம் கொண்டவராக இருக்க வேண்டும் என்பதைக் குடும்பம் உள்ளிடையாக வலியுறுத்துகிறது. அதை முன்நிறுத்தியே தொடக்கத்திலிருந்து பிள்ளைகள் வளர்க்கப்படுகிறார்கள். 

ஆண்பால் பெண்பால் அன்பால் - 52

எதிர் பாலியல் (heterosexuality) என்று சொல்கிறோமே, அதாவது ஆண்பால்-பெண்பால், இந்த இரண்டு முனைகளின் திருமண உறவில் முகிழ்த்து, நிலைபெற்று, தொடர்வதுதான் குடும்பம் என்றொரு பொதுப்புத்திக் கருத்தியல் நம்மிடையே நிலவுகிறது. எதிர் பாலியல் குடும்ப அமைப்பு இனப்பெருக்கத்தை முன்னிட்டு, மனிதர்களின் பாலியலைக் (sexuality) கட்டுப்படுத்தும் வகையில் மனிதகுல வரலாற்றில் ஒரு கட்டத்தில் உருவாகிய அமைப்பு. ஆனால், ஏதோ இதுதான் பாலியல் இயற்கை, மற்றபடி ஒருபால் உறவு போன்றதெல்லாம் இயற்கைக்கு விரோதம் என்பதுபோல ஒரு கருத்துப் பொதுவாக நம்மிடையே உருவாகிவிட்டிருக்கிறது. எதிர் பால் உறவை அதுதான் இயல்பு, இயற்கை என்பதுபோல குடும்பம் பிள்ளைகளுக்குக் கற்றுத்தருகிறது.

பல ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவுக்குப் படிக்கச் சென்ற அடுத்த வருடம் விடுமுறையில் இந்தியா வந்தபோது, உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். பேசிக்கொண்டிருந்தபோது என்னிடம் அவர் கூறியது இப்போதும் காதில் ஒலிக்கிறது. “இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கியே, இப்ப படிக்கணும்னு அமெரிக்கா போயிட்டே, ஒரு நல்ல வெள்ளைக்காரனையாவது பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோ. ஆமா, அந்த நாட்டுல பொண்ணுங்க பொண்ணுங்களையே கல்யாணம் பண்ணிக்கிறாங்களாமே, அதெல்லாம் செய்யாதவரைக்கும் சரி” என்று கூறிவிட்டு, ஏதோ நகைச்சுவையைப் பகிர்ந்துகொண்டதுபோல உரக்கச் சிரித்தார்.

உங்களுக்குத் தெரியும். இன்றைக்கும் நம் ஊரில் ஒருபால் உறவு என்றால் ஏதோ நம் மண்ணுக்கு அந்நியம்போல, வெளிநாட்டிலிருந்து இங்கே இறக்குமதியாகி நம்மைச் சீரழித்திருக்கிற சரக்குபோல பலரும்  சொல்லிக் கொண்டிருக் கிறார்கள். ஆனால், காலாகாலமாக இத்தகைய உறவுகள் நம் மண்ணில் இருந்துகொண்டிருப்பதுதான் நிஜம். கோயில் சிற்பங்களாக இவற்றின் விவரணைகளைப் பார்க்கிறோம். பத்மபுராணம், ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட நூல்களில் இவை பற்றிய குறிப்புகள் வருகின்றன. ஆனாலும், இதெல்லாம் நம் மரபிலேயே இல்லை என்று நம்புவது, புனைந்து சொல்வது எந்த அளவுக்கு  எதிர் பாலியல் குடும்ப அமைப்பு, கருத்தாக்கம் சமூகத்தில் வலு பெற்றிருக்கின்றன என்பதைக் காட்டுகிறது, இவற்றுக்கு எந்த அளவுக்கு நம்மை நாம் ஒப்புக்கொடுத்திருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது.

ஆணுக்கும் பெண்ணுக்குமான எதிர் பாலியல் உறவு மட்டுமே இயல்பு என்று நாம் எண்ணுவதாலும் அதுவே சரியானது என்று நம் மனதில் பதிந்துவிட்டிருப்பதாலும், ஆண், பெண் என்பவை மட்டுமே பால் வகைமைகள் (sex categories) என்றும் நாம் கறாராக நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், `பால்களுக்கிடையே’ (intersexed) எனச் சிலர் நம் மத்தியில் அடையாளப்படுத்தப்படுவது உண்டு. அத்தகையவர்கள் தம்மை ஆணாகவோ பெண்ணாகவோ உணர்ந்து வெளிப்படுத்திக் கொள்ளும்போது,  அதைப் பண்பாட்டு ரீதியாகவோ,  நவீன மருத்துவப் பரிசோதனைகளைக் காட்டியோ ஏற்றுக்கொள்ள மறுக்கும் எதேச்சதிகாரப் போக்குகளையும் பொதுவெளியில் நாம் பார்க்க நேர்கிறது.

உதாரணமாக தோஹாவில் 2006-ல் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப்போட்டியில் மெடல் பெற்று பால் பரிசோதனைக் காரணத்தால் அதைப் பறிகொடுத்த புதுக்கோட்டை சாந்தி சௌந்தர்ராஜன் நம்மில் பலருக்கு நினைவில் வரலாம். சாந்தியும் அவர் குடும்பத்தினரும் அவரைப் பெண்ணாகத்தான் நினைக்கிறார்கள். ஆனால், டெஸ்டோஸ்டிரோன் என்கிற ஹார்மோனின் சுரப்பு அவர் உடலில் அதிகமாக இருந்ததால், அவர் பெண்ணல்ல என்ற தடாலடி முடிவுக்கு ஆசிய விளையாட்டுப் போட்டி சார்ந்த மருத்துவப் பரிசோதனைக் குழு முடிவுக்கு வருகிறது. விளைவாக, கடும் உழைப்பால் சாந்திக்குக் கிடைத்த அங்கீகாரம், அடுத்து வருகிற போட்டிகளில் பங்கேற்கும் தகுதி, இவையெல்லாம் அவருக்கு மறுக்கப்படுகின்றன. தற்கொலை முயற்சியை நோக்கி அவர் தள்ளப்படுகிறார்.

சாந்தி மட்டுமல்ல, இன்னொரு தடகள விளையாட்டு வீரரான டுட்டி சந்த் என்பவரும் இதேபோன்ற பிரச்னையைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார். தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கத்தின் (I.A.A.F) தரப்பில்  அவருக்கே தெரியாமல் பால் நிர்ணயச் சோதனைகள் அவருக்குச் செய்யப்பட்டன. இந்தச் சோதனைகளில், ஹார்மோன் சுரப்புகளை அளவிடுவதோடு கிளிடோரிஸ், யோனி போன்றவற்றின் நீள அகலங்கள், தவிர பிறப்புறுப்பின் முடி, மார்பகங்களின் அளவு போன்றவையும் கணக்கில் கொள்ளப்படும். அவர் உடலில் டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதால் உருவாகும் நிலையான ஹைபரான்ட்ரோஜெனிசம் (hyperandrogenism) கண்டுபிடிக்கப்பட்டு, பெண்களுக்கான தடகளப் போட்டியில் அவர் பங்கேற்பது தடை செய்யப்பட்டது. உலகளாவிய விளையாட்டுகளுக்கான உச்ச நீதிமன்றம் இந்தத் தடையைத் தற்காலிகமாக நீக்கினாலும், இன்னும் வழக்கு முடியவில்லை. இந்தப் பிரச்னைக்கு முன் டெஸ்டோஸ்டிரோன், பால் நிர்ணயம், ஹார்மோன் சோதனை போன்றவற்றையெல்லாம் டுட்டி கேள்விப்பட்டதேயில்லை. மிகச்சாதாரணமான கிராமப்புறப் பின்னணியிலிருந்து முன்னுக்கு வந்தவர் அவர்.

``பெண்ணாகப் பங்குபெற எதற்காக என் உடலைக் குறிப்பிட்ட வகையில் நான் சரிசெய்ய வேண்டும்? நான் பிறந்தது பெண்ணாக, வளர்க்கப்பட்டது பெண்ணாக, என்னை அடையாளப்படுத்திக்கொள்வது பெண்ணாக, நான் பிற பெண்களுடன் போட்டியிட அனுமதிக்கப்பட வேண்டுமென நம்புகிறேன்” என்ற அவர் ஆதங்கம் நியாயமானது. 

ஆண்பால் பெண்பால் அன்பால் - 52

ஆண்பால், பெண்பால் என்ற இரு வகைமைகள் மட்டுமே சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதால் இதுபோன்ற சிக்கல்கள் வருகின்றன. சமூகப் பண்பாட்டுத் தளத்தில் இந்த இரு வகைமைகளுக்கு ஏற்ப உடற்கூறுகள், உடலமைப்பு ஆகியவை நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. இரண்டில் ஏதாவதொரு ‘பால் லேபிள்’ அடியில் பொருந்தாதவர்கள், `இடைப்பட்ட பாலினர்களாகச்’ சமூகத்தில் அறியப்படுகிறார்கள். இத்தகையவர்கள் தம்மை ஆணாகவோ பெண்ணாகவோ சுய அடையாளப் படுத்திக்கொண்டாலும், அந்த அடையாளத்தை மற்றவர்கள் ஏற்க அவர்கள் கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது. சிலசமயம் அவர்கள் வாழ்நாள் முழுதும்... ஏன், வாழ்க்கையையே தொலைத்தும். 

ஆண்பால், பெண்பால் என்கிற வகைமைகள் இப்படி ‘இடைப்பட்டவர்களுக்கு’ அல்லல் தருவதோடு நிற்பதில்லை. அவை தத்தம் அளவில் நிஜங்களைப்போலவே பண்பாட்டுச் சூழலில் நிலைபெற்றிருக்கின்றன. தவிர ஒன்றுக்கொன்று முழுக்க வேறுபடுத்திப் பார்க்கப்படும் ஸ்டீரியோடைப்களாக அவை இருக்கின்றன.  `பெண்கள் வெள்ளிக் கிரகத்திலிருந்து வந்தவர்கள், ஆண்கள் செவ்வாய்க் கிரகத்திலிருந்து வந்தவர்கள்’,  `ஒரு பெண்ணால் மட்டுமே இன்னொரு பெண்ணைப் புரிந்துகொள்ள முடியும்’ போன்ற கூற்றுகளை எண்ணிப் பாருங்கள். எந்த அளவுக்கு இரு பால்களையும் ஒன்றுக்கொன்று அந்நியப்படுத்தி வேறுபடுத்தி வைத்திருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ள முடியும். அதேபோல பெண் இயல்புக்கானவை, ஆண் இயல்புக்கானவை என்று ஒருவரின் தனிப்பட்ட குணாம்சங்கள், நடவடிக்கைகளிலிருந்து பொழுதுபோக்குகள், விளையாட்டுகள், தொழில்கள் வரை இங்கே தெளிவாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆண்களும் பெண்களும் இதையெல்லாம் அப்படியே கடைப்பிடிக்கிறார்கள், வகைப்படுத்தியிருப்பதைத் தாண்டவில்லை என்பதல்ல நான் சொல்வது. அவர்கள் தாண்டுகிறார்கள்தான். ஆனாலும், அபூர்வ நிகழ்வுகளாகவே அந்தத் தாண்டல்கள் சமூகத்தில் பார்க்கப்படுகின்றன. ஏதோ தங்கள் பால் இயற்கையை மீறி அவர்கள் நடந்துகொண்டதைப் போல. டாஸ்மாக்கில் குடித்துவிட்டு ரோட்டில் தள்ளாடும் பெண்ணும் கப்பலை ஓட்டிச் செல்கிற பெண்ணும் சுடுகாட்டில் பிணத்தை எரிக்கிற பெண்ணும் இன்றும்கூட நம் செய்திகளில் முக்கிய இடத்தை அல்லது தனிக் கவனத்தைப் பெறுகிறார்கள் என்பதை வேறெப்படிப் புரிந்துகொள்வது?

சரி, அப்போது நாம் ஆணாகவோ, பெண்ணாகவோ இல்லையா என்று நீங்கள் கேட்டால், ‘ஆம் இருக்கிறோம். ஆனால், ஒரே சமயத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கிறோம்’ என்ற பதில்தான் சொல்ல முடியும்.  ஆண்தன்மைகளும் பெண்தன்மைகளும் வெவ்வேறு விகிதங்களில் கலந்துகட்டி இருப்பவர்கள்தாம் நாம். நாம் எல்லோருமே சிவனொரு பாகர்கள்தாம். ஆனால், இங்கே சமூகப் பண்பாடு, சில உடற்கூறுகளை யதேச்சையாக வைத்து ஆணாக, பெண்ணாக நம்மை வகைப்படுத்துகிறது. அந்த வகைப்படுத்தலுக்கேற்ப, குறிப்பிட்ட பாலோடு மட்டுமே நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம். அதற்கேற்ப நடந்துகொள்கிறோம்.

சமூகப் பொதுவெளியில் ‘பார் நான் ஆண்’ அல்லது ‘பார் நான் பெண்’ என்று மீண்டும் மீண்டும் நம் நடவடிக்கைகளால் நிகழ்த்திக் காட்டுகிறோம், நம்மை அவ்வாறு நிறுவிக்கொள்கிறோம். உண்மையைச் சொன்னால், சமூகப் பண்பாடு நம்மை `ஆடுறா ராமா...ஆடுறா ராமா’ என்கிறது. நாமும் குரங்கைப் போல் கோலைத் தாண்டிக் குதிக்கிறோம். ஆனால், ஏதோ நாமே சுயம்புவாக ஆடுவதைப் போல நினைத்துக்கொள்கிறோம்.

 ஆனால், நம்மில் சிலரேனும் இந்த ஆட்டத்தை ஆட விரும்பாதிருக்கலாம்; இந்த ஆட்டமற்ற வேறொரு எளிய வாழ்க்கையைக் கனவு காணலாம். ஜெயகாந்தனின் ’ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவல் நினைவிருக்கிறதா? அந்த நாவல் எழுதப்பட்ட காலத்தில் ‘திரும்பல்’ என்று ஜெயகாந்தன் எழுதி, தீபம் இதழில் பிரசுரமான பாடலொன்றை எழுத்தாளர் ராஜமார்த்தாண்டன் குறிப்பிடுகிறார் . அந்தப் பாடலின் கடைசிப்பகுதி இது:

`ஆடையும் மானமும் இல்லாததோர் வெளியினில்
ஆடி மகிழ்ந்திட விரும்புகிறேன்
கூடவும் கூடியும் குரோதம் வளர்க்கவும்
கூடாதென்று திரும்புகிறேன்.’


ஆழ்ந்த பொருள் பொதிந்த வரிகள் இவை. ஆடையும் மானமும் பால் அடையாளத்தோடு கூடவே வந்தவை அல்லது பால் அடையாளத்தை முன்னிட்டு வந்தவை. ஆடையும் மானமும் இல்லாத வெளி, பால் வகைப்பாடுகளுக்கு முந்தைய வெளி. அந்தச் சுதந்திரப் பால்வெளிக்கு மட்டும் நம்மால் திரும்ப முடியுமானால் … என்ன ஓர் அற்புதத் தங்கக் கனவு அது!

- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

காதல் இல்லாவிடம் சூனியமாம் புவி
காதலினால் நடக்கும் - பெண்கள்
காதலுளத்தைத் தடுப்பது வாழ்வைக்
கவிழ்க்கின்றதை நிகர்க்கும்.

- பாரதிதாசன்

பொம்பளைங்க, ஆம்பிளைங்க மாதிரிதான் பேசறாங்க, போறாங்க, வராங்க. வேற எப்படியோ இருக்கணும்னு நீங்க நெனைச்சுக்கிட்டு, அந்த மாதிரி இல்லையேன்னு உங்களையே கொடைஞ்சி கொடைஞ்சி வேதனைப்படறீங்க.

- தி.ஜானகிராமன்
`உயிர்த்தேன்’ நாவல்

ல்யாணம் என்பது ஓர் எலிப்பொறி. அதற்குள்ளே கட்டப்பட்டிருக்கும் மணவாழ்க்கையெனும் தேங்காய்த்துண்டுக்கு ஆசைப்பட்டால், நம்மைக் குடும்பபாரம் எனும் கோணிக்குள் போட்டுக் கொன்றுவிடுவார்கள்.

-கலைஞர் கருணாநிதி வசனம்
`இருவர் உள்ளம்’ திரைப்படம்

ந்தச் சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும்?

 -நகுலன்