
மருத்துவர் கு.சிவராமன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி
இன்னும் அதே நிலவுதான், நெஞ்சுமுட்ட காதலைச் சொல்லி வானில் வலம் வருகிறது. இப்போதும் அதே கடற்கரையின் காலைக் கவ்வும் பேரலைதான், ஒட்டுமொத்த உடலிலும் உற்சாகத்தை அள்ளி எறிகிறது. இன்றைக்கும் இரவில் பெய்த அதே மழையில், எங்கோ தூரத்தில் கேட்கும் தவளையின் ஓசைதான், மனதின் ஓரத்தில் மண்டிக்கிடக்கும் வெறுமையை விலக்குகிறது. இப்போதும், அதிகாலை ஜன்னலோரத்துச் சாலைப் பயணத்தில், முகத்தில் அறைந்து வீசும் காற்றுதான், அத்தனை வலியையும் துடைத்து எறிகிறது. ஆனால், பலருக்கும் இத்தனையிலும் தொலைந்துபோய், பின் கிளர்ந்துவர மனமும் அதற்கான பயிற்சியும் இல்லை. சிலருக்கு அப்படியான மனமும், அதற்கான பயிற்சியும், பழக்கமும் இருந்தும்கூட, ஓடி ஓடி உழன்றுகொண்டிருக்கையில், அதற்கான நேரம் இல்லை. வயது எப்போதும் இவற்றையெல்லாம் தொலைப்பதில்லை. ஆனால், வாழ்க்கை இப்போது இவற்றை வேகமாகத் தொலைத்துவிடுகிறது. அன்று அறுபதுகளில் தொலைந்த விஷயம், நேற்று நாற்பதுகளில் தொலைந்துபோனது. இன்று இருபதுகளில் தொலைக்கப்படுவதால்தான் திரும்பிய இடமெல்லாம் மன அழுத்தம்.

`குழந்தை இல்லையே...’ என்கிற ஏக்கத்தில் ஏற்படும் மன அழுத்தம் வேறு. பல வாழ்வியல் காரணங்களால் அல்லது காரணமே இல்லாமல் ஏற்படும் மன அழுத்தமே கருத்தரிப்புக்குத் தடையாக இருப்பதைத்தான் இங்கே பேசுகிறோம். சைபீரியாவில் இருந்து வேடந்தாங்கலுக்கு வலசை வரும் பறவைக்கு மன அழுத்தம் வந்து, முட்டை போடாமல் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், கோயம்புத்தூரில் இருந்து வேளச்சேரிக்கு வாழவந்த பெண்ணுக்கு முட்டை வளர்ச்சி அடைவதற்கு மன அழுத்தம் தடையாயிருக்கிறது. ``அஞ்சு மாசமா ஆன் சைட் வேலை; இந்த வாரம் பூராவும் கிளையன்ட் மீட்டிங். அதனால எங்களுக்குள்ள ஒண்ணுமே இல்லை’’, ``டி-15 மிஸ் ஆகிடுச்சு... புராஜெக்ட் எதுவும் இல்லை. பெஞ்சுலே வெச்சிருக்கான். ஒருவேளை போகச் சொல்லிருவானோனு தெரியலை. இந்த சிச்சுவேஷனுக்கு எல்லாம் டூயட் சாங் போட முடியாது சார்’’ என்று ஒரு கூட்டம் மன அழுத்தங்களை சட்டை பாக்கெட்டில் அள்ளிப்போட்டுக்கொண்டு நிற்கிறது. இது பணிச்சுமை தரும் அழுத்தம். ``அப்படியே மோடி அடுத்தமுறை கொடியேத்திட்டு இவளுக்குத்தான் வீரப்பதக்கம் குத்தப்போறாரு. தினம் எட்டு மணி வரைக்கும் அப்படி என்ன வேலையோ?’’ எனும் அன்புக் கணவனின் வார்த்தைகள், ஆபீஸில் இருந்து சட்டையை ஹேங்கரில் போடும்போது, ``என் தங்கச்சி வீட்டுக்காரர் இரண்டாவது ஃபிளாட் புக் பண்ணியாச்சு’’ என்கிற மனைவியின் அசரீரி, இது புரிதலில்லா குடும்பம் தரும் அழுத்தம். ``வாடகைக்கு வீடுதானே கேட்டேன்... என்ன வேலை பார்க்கிறீங்கனு கேளுங்க... எதுக்கு எந்த ஜாதி, என்ன மதம்னு கேட்கிறீங்க?’’ எனும் கோபத்தில் சமூகம் கொடுக்கும் அழுத்தம் எனக் காதலை, காமத்தை, கருத்தரிப்பைச் சிதைக்கும் மன அழுத்தம் நம்மைச் சுற்றி நிறைய.

வயிற்றுக்கும் தொண்டைக்கும் நடுவே உருவமில்லா உருண்டை ஒன்று உருண்டு, உன்னிகிருஷ்ணன் குரலாக வந்த `காதல் அழுத்தம்’, பின்னாளில் இப்படிப் பல மன அழுத்தக் காரணங்களால் நிற்பதில்லை. சிலருக்குக் கல்யாணத் திருவிழாவிலேயே காணாமல் போய், அதே உருண்டை மனசுக்கும் மூளைக்கும் இடையே உருவமில்லாமல், உருளத் தொடங்கி, எக்குத்தப்பாக நோய்க்கூட்டத்தை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கிறது. அதிலும், சரக்கு - முறுக்கு - சங்கதி எல்லாம் சரியாக இருந்தும், கருத்தரிப்புக்காக வருந்தி நிற்போரில், நிறைய பேர் இன்று மன அழுத்தம் கொண்டவர்கள். `மன அழுத்தத்தில் சர்க்கரைநோய் கூடும்; உயர் ரத்த அழுத்தம் வரும்; மாரடைப்பு ஏற்படலாம் எனப் படித்திருக்கிறோம்... கருக்குழாய் அடைப்புமா?’ என்போருக்கு ஒரு செய்தி, `மன அழுத்தம் உருவாக்காத நோயே இல்லை’ என உரக்கச் சொல்லும் காலத்துக்கு நாம் வந்து நாள்கள் பல ஆகிவிட்டன.

நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் வரும் மன அழுத்தத்துக்குப் பணிச்சுமை, சில ஏமாற்றங்கள், உடல் தளர்ச்சி, கதவைத் தட்டும் நோய்க் கூட்டம்... எனப் பல காரணங்கள் இருக்கும். ஆனால், இளமையின் உச்சத்தில் 25-30-களில் வரும் மன அழுத்தத்துக்கு பெரும்பாலும் காரணங்கள் வாழ்வின் நுணுக்கங்களை முற்றிலுமாகப் புரிந்துகொள்ளாத கல்வியும் வளர்ப்புமே. ஒண்ணாங்கிளாஸில் `ஐயய்யோ... ஒரு மார்க் போயிருச்சா?’ என்பதை, `ஒண்ணுவிட்ட தம்பி போயிட்டானா’ என்கிற ரேஞ்சுக்குப் பதறி, கதறுவதில் இருந்தே அந்தப் பிள்ளைக்கு மன அழுத்தம் மூளையில் குடியேற ஆரம்பித்துவிடுகிறது. வானவில்லைப் பார்த்து, ஒளிச்சிதறலைப் படிக்கும் ஒரே சமயத்தில், அதன் வண்ணங்களில் சிலாகிக்கும் மனதையும் கற்றுத்தராமல் போனது, கல்வியும் வாழ்வும் வேறு வேறு துருவங்களுக்குப் போனதன் முக்கியக் காரணம். ``அது எப்படிங்க சிலாகிப்பை எல்லாம் கத்துத் தர்றது? அவன் அவங்க அம்மா மாதிரி... வெண்ணெய்’’ என நொரநாட்டியம் சொல்லி நகரக் கூடாது. சிலாகிப்பும் கண்டிப்பாகக் கற்றுத்தர வேண்டிய விஷயம்தான்.
`முள்ளு மாறிடக் கூடாது’ என்பதால், அவர் மட்டுமே திருக அனுமதிகொண்ட, மர்ஃபி ரேடியோவில் ஒலிக்கும், `உங்கள் அப்துல் ஹமீதுடன்’ அன்று எங்கள் அம்மா உரக்கக் கேட்ட இலங்கை வானொலிப் பாடல்தான், இன்றைக்கு இளையராஜா கான்சர்ட்டுக்குப் போக, கிளினிக்கில் `வயிற்று வலி’ என்று பொய் லீவு சொல்லிவிட்டு, எங்களை வரிசையில் நிற்கவைக்கிறது. இளம் வயதில் எல்லா சிறு குழந்தைகளும் தன் பெற்றோரின் சிலாகிப்பை, சகோதரியின் கிளர்ச்சியை, நண்பனின் எள்ளல் இன்பத்தை, ஆசிரியனின் மயக்கம் தரும் வர்ணிப்பைக் கேட்டுப் பார்த்து, ரசித்துத்தான் தன் ஹார்மோன்களுக்குச் சோறூட்டுவார்கள். இப்போது அப்படியான `அப்பா, அம்மா, வாத்தி, சகோ, தல’ ஆகியோருக்கு ஏகத் தட்டுப்பாடு.

பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் மகன்/மகள் வாங்கும் கிரேடையும் மார்க்கையும் தவிர ஆபீஸ் புரொமோஷனில் மட்டுமே சிலாகிக்கின்றனர். சி.பி.எஸ்.சி-இல் படிக்கும் மூத்த சகோதரிக்கு, வண்ணதாசன் வரிகளைவிட, அமெரிக்க அட்மிஷன் மட்டுமே கிளர்ச்சி தருகிறது. நண்பன், மொஹாக் ஸ்டைலில் முடிவெட்டி,`அரை மண்டையனாக’த் திரிகிறானே ஒழிய, கையில் கவிதைப் புத்தகமோ, மனதில் காதல் அனுபவமோ அநேகமாக இல்லை. தமிழ் வாத்தியார், ` நடந்து செல்கையில், தலைவிக்கு அனிச்சம் பூ தொட்டு, அன்னப்பறவை இறகுபட்டு, பாதத்தில் முள்ளு குத்தின மாதிரி ஆயிடுச்சாம்’ என ஒரு திருக்குறளை விளக்கும்போது, `அவளுக்கு அவ்ளோ மென்மையான பாதம்டா. அப்படின்னா கொஞ்சம் யோசி... பாதமே அவ்ளோ மென்மைனா பார்த்துக்கோடா...’ எனக் கொஞ்சம் டைம் கேப்விட்டு நமுட்டுச் சிரிப்புச் சிரித்தபோது அவர் குறள் மட்டும் கற்றுத் தரவில்லை. அவர் நடத்திய ஹார்மோன் பாடம் தமிழ் சிலபஸில்கூட இல்லாதது. அங்கே குறள் வரிகளோடு, ஹார்மோன் உசுப்பலும் எப்படி என மனப்பாடம் ஆனது. இதெல்லாம் இல்லாமல் போனதில், இப்போது, அத்தனை சமத்துப் பையனும் பெண்ணும் பித்தகோரஸ் தியரம் மட்டுமே படித்துப் படித்து, பின்னாளில் பித்தம் கோரஸ் போட வேண்டிய இடத்தில் முழுதாகக் கோட்டை விடுகிறார்கள்.
அழ அழக் கொண்டுபோய், மூன்றாம் வகுப்புப் படிக்கும்போதே சேர்த்த டான்ஸ் கிளாஸும், டென்னிஸ் கிளாஸும் பின்னாளில், மறுபடி அழ அழ ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது நிறுத்தப்படும். `நீட், சேட், மேட்டு, காட்டு’ எனப் பல பரீட்சைகளுக்காக அவன்/அவள் டான்ஸ் கிளாஸிலும் டென்னிஸிலும் வைத்த அத்தனை கற்பனைகளும் மார்க் மந்திரம் அடித்து, காயடிக்கப்படும். எல்லா சடங்குகளும் முடிந்து, சரியான அவன்/அவள் பால் டப்பாவாக மாறி, கல்லூரி அட்மிஷன் கார்டு கிடைத்துப் படித்து முடிக்கையிலேயே ஏதாவது கார்ப்பரேட் அவனை/அவளைக் கொத்தடிமையாகக் கொத்திக்கொண்டு போய்விட்டால், அது நல்ல சமர்த்துப்பிள்ளை. இந்தச் சமர்த்துப் பிள்ளைகளுக்கு `தோல்வி’ எனும் சுகானுபவம் சுத்தமாக இராது. அந்தச் சமயம் கிடைக்கும் தோழனின் தோள் ஸ்பரிசமும் தெரியாது. ஏமாற்றம் எனும் உணர்வு, அந்த வலியை மறைக்க வீடு `நாங்க இருக்கோமடா’ எனக் கட்டற்ற அன்பு சொல்லி அரவணைத்த அனுபவம் கிடைத்திருக்காது. `பரவாயில்ல மாப்பிள்ளை. நீ வெச்சுக்கோடா’ எனத் தனக்குப் பிடித்ததை விட்டுக்கொடுத்த விலாசங்கள் தெரிந்திருக்காது. அழகு, பணம், பதவி, பொருள் அத்தனையும் தாண்டி, இந்த அனுபவங்கள் எதுவும் இல்லாமல் உற்பத்தி செய்யப்படும் `மேக் இன் இந்தியா’க்கள்தாம், இப்போது திருமண வாழ்வில் மொக்கையாக நுழைகிறார்கள். இவர்கள் எதிலும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. பொய்யாகவாவது தோற்றுப்போக இவர்களுக்கு ஏனோ பிடிப்பதில்லை. மருந்தாகக் கொஞ்சம் அரவணைக்க அவர்கள் ஈகோ துளியும் இடம் தருவதில்லை.

பெரும்பாலான வீடுகளில் இன்று பிள்ளை வளர்ப்பதில்லை. குதிரை வளர்க்கிறார்கள். அத்தனையும் அரைவேக்காட்டுப் பந்தயக் குதிரைகள். இவர்கள் திருமணம் மூலம் இன்னொரு பந்தயக் குதிரையுடன் இணையும்போது, எப்போதும் இணையுடன் சேர்ந்து மெள்ளப் புல் மேய்வதில்லை. முகம்-முதுகு உரசி, சீண்டி விளையாடுவதில்லை. முழங்கால் மடங்கிக் காதல் சொல்வதில்லை. முன்னங்கால் தூக்கிப் பீறிட்டு எழுந்து ஓடுவதுமில்லை. வீட்டுச் சுவரில் மாட்டியிருக்கும் கடிகாரத்தில் நகரும் முட்கள் எழுப்பும் ஓசைகளை மட்டும் எப்போதும் கேட்கிறார்கள். அந்த ஓசையைப் பந்தயத்தில் சுடும் துப்பாக்கிக் குண்டுகளின் சத்தம்போல் நினைத்து, களத்தில் ஜெயிக்கப் படுவேகமாக ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்; இவர்கள் ஓட்டத்துக்காக மட்டுமே தீனி கொடுத்து வளர்க்கப்படுபவர்கள். தன் முதுகில் ஏறியிருப்பவன் யாரென்ற அடையாளம் அவர்களுக்குத் தெரியாது. அவன் ஏன் தன் உடலை, பூட்ஸ் காலால் இறுக்குகிறான் எனத் தெரியாமல் மூச்சிரைக்க ஓடுவார்கள். ஒருவேளை ஒன்றுக்கும் பயன்படாதபோது, அதே கடிகாரத் துப்பாக்கியால் தன்னைக் கொல்லவும் கூடும் என்பதும் தெரியாமல் படுவேகமாக ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஓட்டத்தின் இடையே, பூட்டிய லாடத்துக்குள் போதைக்காகப் புணரும் அந்தப் பந்தயக் குதிரைகளின் வாழ்வில் காதல் எப்போதும் இருப்பதில்லை.
மன அழுத்தம் உள்ளவர்கள் அத்தனையும் நலமாயிருந்தும், கருத்தரிக்கத் தாமதம் ஏற்படுவதைப் பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கும்போது, `உடல் ஏதோ ஆபத்தில் இருக்கிறது... குறிப்பாக உயிருக்கு ஆபத்தோ?’ என்ற பயம் மூளைக்கு ஏற்பட்டு, உடலைக் காப்பாற்ற விழையும் அத்தனை ஹார்மோன்களும் அதன் செய்கைகளும் முடுக்கிவிடப்படுகின்றன. `உடலை ஆபத்தில் இருந்து காப்பாற்றுவதுதானே இப்போதைக்கு முக்கியம்? கருத்தரித்து அடுத்த உயிரைக் கொண்டு வருவதை எல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என முடிவுசெய்வதுதான் மன அழுத்தம் உள்ளவருக்குக் கருத்தரிப்புத் தாமதம் ஏற்படுவதற்கான முக்கியக் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். கூடவே பணிச்சுமையில், பிற சுமையில் தீவிர மன அழுத்தம் வருகிறபோது, அவசியப்படும் பெரும்பாலான நவீன ரசாயன மருந்துகள் காதல் வேட்கையைக் குறைப்பதும், கருத்தரிப்பை ஒரங்கட்டுவதும் இன்னொரு வேதனை.

பிரமிப்பு, பரவசம், சிலாகிப்பு, எள்ளல், புன்முறுவல்... இவை எல்லாமே கவிதை டிக்ஷனரியில் வரும் வார்த்தைகள் அல்ல. வாழ்வின் நிறைய கணங்களில் பிரதிபலிக்கப்பட வேண்டிய உணர்வுகள். கல்வியும் பள்ளி வாழ்வும் கற்றுத்தர வேண்டிய விஷயங்கள். இவையெல்லாம் இல்லாமல் ஓடும் ஓட்டத்தில், சின்னதாக வரும் தோல்வியும் ஏமாற்றமும்தான் பலருக்கும் மன அழுத்தத்தை விதைக்கிறது. `என்றைக்கு வீசி எறியப்படுவோம்?’ என்ற பயத்தில் ஓடும் ஓட்டத்தில், தூக்கமின்மை, தூங்கி எழுந்தாலும் உற்சாகமின்மை, அடிக்கடி வரும் தலைவலி, அவசியமில்லாமல் வரும் கோபம், எப்போதும் பரபரப்பாயிருப்பது... இவையெல்லாம்தான் மன அழுத்தத்தின் ஆரம்ப அறிகுறிகள். எதிலும் பிடித்தமில்லாமல் இருப்பது, உற்சாகத்தை ஒட்டுமொத்தமாகத் தொலைத்திருப்பது, மகிழ்ந்து சிரிக்க மறப்பது, இதழை இறுக்கி, புன்முறுவலைக்கூட பூட்டி வைப்பது, பிடித்தவர் நேசமாகத் தொடுவதிலிருந்தும் அவசரமாக விலகி நகர்வது... எனப் பல அடையாளங்களை மன அழுத்தம் கொடுக்கும். இவற்றில் எது இருந்தாலும் வெளியே காதல் கசக்கும்; காமம் தவிர்க்கும். உள்ளே டோப்பமின் ஆக்ஸிடோசின் (Dopamine oxytocin) எல்லாம் சுணங்கும்; முட்டை சோம்பும்; உயிரணு உறங்கிப்போகும்.
மனம் ஒரு குரங்கு அல்ல; அழகிய பறவை அது. அதனை ஈன்ற பொழுதிலிருந்தே அடைகாத்து, இறகு உலர்த்தி, அழகாகப் பறக்கவிட்டு, நெல்லும் தானியமும் தேவைக்குத் தூவி, கொஞ்சம் சிட்டுக்குருவியாக விட்டுவிடுதலையாகவும், கொஞ்சம் ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டெழுந்து பறக்கவும் கற்றுக்கொடுத்து வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை. சொன்னதைச் சொல்லும் கூண்டுக்கிளிகளைக் காட்டிலும், வலசை செல்லும் பறவைகள்தாம் எவ்வித மன அழுத்தமுமின்றி கவித்துவமாக இனவிருத்தி செய்கின்றன.
- பிறப்போம்...