Published:Updated:

“எங்களைப் படிக்க விடுங்கடா!” - டாக்டர் அனிதா MBBS

“எங்களைப் படிக்க விடுங்கடா!” - டாக்டர் அனிதா MBBS
பிரீமியம் ஸ்டோரி
“எங்களைப் படிக்க விடுங்கடா!” - டாக்டர் அனிதா MBBS

தமிழ்ப்பிரபா - படங்கள்: ஜெ.வேங்கடராஜ், கே.குணசீலன்

“எங்களைப் படிக்க விடுங்கடா!” - டாக்டர் அனிதா MBBS

தமிழ்ப்பிரபா - படங்கள்: ஜெ.வேங்கடராஜ், கே.குணசீலன்

Published:Updated:
“எங்களைப் படிக்க விடுங்கடா!” - டாக்டர் அனிதா MBBS
பிரீமியம் ஸ்டோரி
“எங்களைப் படிக்க விடுங்கடா!” - டாக்டர் அனிதா MBBS
“எங்களைப் படிக்க விடுங்கடா!” - டாக்டர் அனிதா MBBS

``பசிக்குச் சோறு சாப்பிட்டா, காசு செலவாகிடும்னு வெறும் டீயைக் குடிச்சுக் குடிச்சு மார்கெட்ல மூட்டைத் தூக்கி புள்ளைகள ஆளாக்கினானே... கடைசிப் புள்ளைய டாக்டரா பாக்கணும்னு ஆசைப்பட்டானே... எங்க தாயும் உயிரைக் கொடுத்துப் படிச்சுதே... இப்டி அது உயிரையே எடுத்துக்கத்தானா” - அழுதழுது தொண்டை இறுகிப்போய்க் குரல் வெளியே வராமல் கைகளை விரித்து அரற்றிக்கொண்டிருந்த சண்முகத்தைப் பார்த்து மொத்தக் கூட்டமும் அழுகிறது; ஆறுதல் சொல்கிறது; தோளோடு தோள் தாங்கிப்பிடிக்கிறது. ஆனால், சண்முகத்தைச் சந்தோஷப்படுத்த வேண்டியவள், ஆறுதல் சொல்ல வேண்டியவள், இவ்வளவு காலம் சண்முகத்துக்கு வாழ்க்கையின் மேல் நம்பிக்கையை விதைத்தவள் அந்த வீட்டின் வாசலில் சடலமாய் படுத்திருந்தாள்.

அனிதாவைப்பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பு சண்முகத்தைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். கிராமத்துக் கூட்டாளிகள் சண்முகமும் பூமிநாதனும். இருவருக்குமே படிப்பின்மேல் அதீத ஆர்வம். பூமிநாதன் அடுத்தடுத்து மேற்படிப்பு படிக்க, சண்முகமோ குடும்ப வறுமையால் படிப்பைப் பாதியிலேயே கைவிட்டார். பூமிநாதன் ஆசிரியர் ஆனார்.   சண்முகம் காய்கறி மூட்டைத் தூக்கும் வேலைக்குச் சென்றார். பூமிநாதனுக்கு அதே ஊரிலேயே ஆசிரியர் வேலை கிடைத்தது. திருச்சியில் உழைத்துவிட்டு வாரத்துக்கு ஒருநாள் மட்டுமே கிராமத்துக்கு வருவார் சண்முகம்.

அதன்பிறகு பால்ய நண்பர்கள் எங்கே சந்தித்துக்கொண்டாலுமே இருவரின் பேச்சும் பிள்ளைகளின் படிப்பு பற்றி மட்டுதான் இருக்கும். “பூமி, நா இப்டிக் கஷ்டப்படணும்னு ஆகிப்போச்சு. ஆனா, ஒண்ணு என்னோட அஞ்சு புள்ளைகளையும் என்ன மாதிரி கஷ்டப்பட வைக்க மாட்டேன். பெரிய படிப்புதான் படிக்க வைப்பேன். இது சத்தியம்டா” என்று காய்ப்பேறிப் போயிருந்த தன் கையை பூமிநாதனின் மீது வைத்துச் சத்தியம் செய்வாராம் சண்முகம்.

சத்தியத்தை நிறைவேற்றவே செய்தார் சண்முகம். அவருக்கு ஐந்து பிள்ளைகள். முதல் மகனை எம்.பி.ஏ படிக்க வைத்தார். இரண்டாவது மகனை எம்.காம் படிக்க வைத்தார். மூன்றாவது, நான்காவது மகன்களை இன்ஜினீயரிங் படிக்க வைத்தார். அவரின் ஐந்தாவது குழந்தையும், ஒரே மகளுமான அனிதா டாக்டருக்குப் படிக்க வேண்டுமென விருப்பப்பட்டாள். கடைக்குட்டியின் கனவு நிறைவேற அவர் கடினமாக உழைத்தார். “ப்போவ்... நா டாக்டர் ஆனதுக்கு அப்புறம் நீ மூட்டை தூக்குற வேலைக்கெல்லாம் போகக் கூடாது சரியா?” என்று அன்புக்கட்டளையிட்ட மகளின் காலடியில் உட்கார்ந்துதான் சண்முகம் அழுது கொண்டிருந்தார்.

“எங்களைப் படிக்க விடுங்கடா!” - டாக்டர் அனிதா MBBS

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்டெதஸ்கோப் மாட்ட வேண்டுமென்கிற கனவு மெய்ப்பட உழைத்த அனிதாவின் கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டிக் கொலைசெய்த சமூகத்தின் சாட்சியாய் அரியலூர் மாவட்டத்தின் குழுமூர்க்குச் சென்றிருந்தேன். கடைகள் அடைக்கப்பட்டு எல்லா கதவுகளிலும் அனிதாவின் முகம் ஓட்டப்பட்டிருந்ததைப் பார்ப்பதற்கு மிகப்பெரிய மன தைரியம் தேவையாக இருந்தது.

அனிதாவின் அம்மா இறந்தபோது அனிதா இரண்டாம் வகுப்பு மாணவி. சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைத்திருந்தால், அம்மா காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று பின்னாள்களில் உணர்ந்த தருணத்திலிருந்து `படித்தால் டாக்டர்தான்’ என்று மனதுக்குள் சபதம் ஏற்றிருக்கிறார் அனிதா. 

டாக்டர் ஆனதும் குழுமூரிலியே தன் கிராமத்து  மக்களுக்குச் சேவை செய்யப்போவதாகத் தோழிகளிடமும், தன் அண்ணன்களிடமும் அவ்வப்போது சொல்லும்போதெல்லாம் “ம்ம் பாப்போம் பாப்போம்” என்று சொல்லி வந்திருக்கின்றனர். வருடங்கள் செல்லச் செல்ல அனிதா கொண்ட லட்சியத்தில் காட்டிய தீவிரம் புரிய ஆரம்பித்ததும், கிராமமே அவருக்கு உறுதுணையாய் இருந்திருக்கிறது.

``பத்தாவது படிச்சுட்டு இருந்த சமயம், ஒருமுறை அவங்க அப்பாவோட வண்டியில போய்க்கிட்டு இருந்தப்போ, இந்தப் பொண்ணு கீழ விழுந்து கை உடைஞ்சிப்போச்சு. கட்டுப் போட்டுக்கிட்டு அடுத்தநாள் ஸ்கூலுக்கு வந்துட்டா.  என்னம்மா உனக்கு இவ்ளோ அவசரம்னு கேட்டா... `சார் எனக்குக் கையை விட படிப்புதான் சார் முக்கியம். டாக்டராகப் போற நானே காயத்துக்கெல்லாம் பயந்தா நல்லா இருக்குமா’ன்னு சிரிச்சுக்கிட்டே சொன்னா. அவ சொன்னப்போ சண்முகத்தோட நண்பனாகவும் இந்தப் பொண்ணோட ஆர்வத்தை நெனைச்சும் எனக்குக் கண்ணு கலங்கிடுச்சுங்க. அனிதா பிள்ளைகிட்ட, ஒரு விஷயத்தைச் சொன்ன உடனே அப்சர்வ் பண்ணி அதுக்கு ரியாக்ட் பண்ணுவா. நிறைய கேள்வி கேட்பா. எங்க சண்முகத்தோட பொண்ணு டாக்டரா வந்துடுவான்னு எல்லோருமே நம்புனோம்” என்று கதறுகிறார் ஆசிரியர் பூமிநாதன்.

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 476 மதிப்பெண்கள் எடுத்தார் அனிதா. பதினொரு, பன்னிரண்டாம் வகுப்புக்குத் தினமும் மணிக்கணக்கில் படிப்பிற்கு நேரம் செலவழித்தால் மட்டுமே இறுதிப் பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் பெற முடியும் என முன்கூட்டியே திட்டமிட்டார்.

வீட்டில் கழிப்பறை இல்லை என்பதால், இடையே அவ்வப்போது சிறுநீர் அல்லது மலம் கழிக்க வேண்டுமென்றால் ஆள் அரவமிருக்கிறதா என்று வேவு பார்த்துக் கொல்லைக்குப் போவதற்கும் வருவதற்குமே நேரம் வீணாகிவிடும் என்பதாலே ஹாஸ்டல் வசதியுள்ள பள்ளியில் படிக்க வேண்டுமென அனிதா விரும்பினார்.  அவர் விரும்பியதுபோலவே ஹாஸ்டல் பள்ளியில் சேர்த்தார்கள்.

“எங்களைப் படிக்க விடுங்கடா!” - டாக்டர் அனிதா MBBS

அனிதாவின் முதல் அண்ணன் மணிரத்தினம் கல்லூரியில் படித்துக் கொண்டே பார்ட் டைம் வேலை செய்தபடித் தங்கையின் கல்விச் செலவுகளுக்குப் பண உதவி செய்தார். திருச்சியிலிருந்து வாரத்துக்கு ஒருமுறை வீட்டுக்கு வரும் சண்முகம் மாதத்துக்கு ஒருமுறை எனப் பயணச்செலவைக் குறைத்துக்கொண்டு விடுமுறை நாள்களிலும் வேலை செய்தார். அனிதாவுக்கு டாக்டர் சீட் கிடைத்தால் ஆகப்போகும் செலவுக்காகவும், பி.இ படிக்கும் மகனின் தேவைகளுக்கும் பணம் சேர்க்க ஆரம்பித்தார்.

குடும்ப நிலையை உணர்ந்த அனிதா படிப்பில் இன்னும் தீவிர அக்கறை காட்டினார். தன் லட்சியத்தின் மீதுள்ள வேட்கையின் பலனாகப் பன்னிரண்டாம் வகுப்பில் 1,176 மதிப்பெண்களுடன் 196.7 cut off எடுத்தார். மருத்துவப் படிப்புக்கு மாநிலக் கல்வித் திட்டத்தின் அடிப்படையில் தேர்ந்த்தெடுக்கப்படுவோமா அல்லது நீட் அடிப்படையிலா என்கிற குழப்பம் அவருக்கு இருந்தது.  இதனாலேயே, அதிக மதிப்பெண்கள் எடுத்தும் தேர்வு முடிவு வெளியான தினத்தை அவர் முற்றிலுமாகக் கொண்டாடவில்லை. ஆனால், அனிதாவின் நான்கு அண்ணன்களுக்கும் அந்த தினம் ஒரு திருவிழா.

“சத்தியத்துக்குச் சொல்றேன்ங்க. அந்த மாதிரி எல்லாம் அண்ணனுங்க கிடைக்கக் குடுத்து வெச்சிருக்கணும். அந்தப் பிள்ளைக்கு ஒண்ணு ஒண்ணையும் பாத்துப் பாத்துச் செய்வாங்க.  ப்ளஸ் டூ ரிசல்ட் வந்த அன்னைக்கு அவ மூத்த அண்ணன் சாக்லெட்டுகளை வாங்கிட்டு குழுமூர்ல வீடு வீடாப் போய்க் கொடுத்துட்டு இருந்தாரு. பாழாப்போன நீட்டுக்காரனுகளாலதாங்க இந்தப் புள்ள இப்டி செஞ்சுச்சு... அவ அண்ணமாருகள நெனக்க நெஞ்சு பதறுதுங்க” என்கிறார் அனிதாவின் வீட்டருகில் பெட்டிக்கடை வைத்திருக்கும் ஒரு பெண்.

நீட் என்னும் உயிர்க்கொல்லி தன்னை நெருங்குவதை அனிதா உணர்ந்திருக்கவே செய்தார். சென்னையிலிருந்து அண்ணன் மணிரத்னம் சில புத்தகங்கள் வாங்கிக் கொடுக்க தினமும் அதைப் படித்தவர், குறுகிய காலத்தில் தன்னைத் தயார்செய்து நீட் தேர்வு எழுத அண்ணனுடன் சென்னைக்கு வந்தார்.

“எஸ்.ஆர்.எம்-ல பாப்பா நீட் என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதி வெளிய வந்ததுல இருந்து ரொம்ப டல்லா இருந்துச்சி. மெரீனா பீச்சுக்குக் கூட்டிட்டுப்போனா கொஞ்சம் ரிலாக்ஸா இருப்பான்னு கூட்டிட்டு வந்தோம். அங்க வந்தும் எதுவுமே பேசல. மண்ணுல உட்கார்ந்துட்டு இருந்தவ திடீர்னு `அந்த கொஸ்டின் பேப்பர்ல ஒண்ணுமே புரியலண்ணா’ன்னு கையில இருந்த மண்ணை விசிறி விசிறி அழுதா. கூடஇருந்த அவ அண்ணனும் ஒரு மாதிரி ஆகிட்டான்.  அவன் ரொம்பப் பாவம்ங்க. பாப்பாவுக்கு என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுத புக்கு வாங்கித் தர்றதுக்கு, அங்க இங்கனு அலையறதுக்கு... கூட யாராச்சும் ஒருத்தரு இருந்தாதான் முடியும்னு சென்னையில அவன் ஐ.ஏ.எஸ் கோச்சிங் கிளாஸ் போயிட்டு இருந்ததையும் டிஸ்கன்டினியூ பண்ணிட்டு ஊருக்கு வந்து பாப்பா கூடவே இருந்தான்.  அனிதா எங்க எல்லோருக்கும் தங்கச்சி மாதிரி தான். அவளுக்கு டாக்டர் சீட்டு கிடைச்சதும் படிப்புச் செலவுக்காக நாங்க வாட்ஸ்அப் குரூப் எல்லாம் ஆரம்பிச்சுக் காசு சேர்த்துட்டு இருந்தோம். இங்க பாருங்க எங்க வாட்ஸ்அப் குரூப்” என்று காட்டுகிறார் அனிதாவின் அண்ணனின் நண்பர்.

“எங்களைப் படிக்க விடுங்கடா!” - டாக்டர் அனிதா MBBS

“யாருங்க கொண்டு வந்தா நீட்டு? இவ்ளோ மார்க் எடுத்த அப்புறமும் அவ வேற என்னங்க எடுக்கணும்? எங்க சமூகத்துப் பிள்ளைங்க எத்தனை கஷ்டத்துக்குப் பிறகு இந்த நிலைமைக்கு வர வேண்டியிருக்குத் தெரியுங்களா? எங்களால பள்ளிக்கூடத்துக்குப் போயி படிச்சு மார்க் எடுக்கத்தான் முடியும்.  ஸ்கூல்ல படிச்சதுபோக ரெண்டு லட்சம், மூணு லட்சம்னு செலவு செஞ்சி கோச்சிங் கிளாஸ்ல சேர்ந்து வேற படிக்கணுமா? இந்தத் தெருவுக்குள்ள போயிப் பாருங்க எங்க வீடுகளையெல்லாம்... நீங்களே டாக்டர், வக்கீல், ஜட்ஜ்னு எல்லாமே  ஆகிக்கோங்க... எங்கள உயிரோட மட்டும் விட்டுடுங்கடா சாமிங்களா” என்று தலைக்கு மேல் கையெடுத்துக் கும்பிடுகிறார் அனிதாவின் உறவினர் ராஜேஷ்.

ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில்  அனிதாவுக்கு சீட் கிடைத்தது. செப்டம்பர் 4-ம் தேதி முதல் அனிதா கல்லூரிக்குச் செல்ல வேண்டும். ஆனால்,  தன்னுடைய கனவு சிதைந்து போனதை அனிதாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏதோ ஒரு படிப்பை இனி படிக்க முடியாது என  மனம் முடிவெடுத்த நாளில்தான் தனது இயல்பைத் தொலைத்திருக்கிறார் அனிதா.  செப்டம்பர் 1-ம் தேதி அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் களையெடுக்கப்போக, பத்து ரூபாய் உடன் பெட்டிக்கடைக்குச் சென்று தனக்குப் பிடித்த தேன்மிட்டாய்களை வாங்கிச் சுவைத்தபடி தன் சித்தப்பா வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அதன்பிறகு தன்னை எப்போதும் அன்போடு அரவணைக்கும் எதிர்வீட்டு அக்காவைப் பார்த்துப் பேசிவிட்டுத் தன் வீட்டுக்குள் வந்து, தன்னை வளர்த்த பாட்டி பெரியம்மாளின் சேலையை எடுத்துக்கொண்டு கதவைத் தாழிட்டுக்கொண்டவர்தான், அதன்பிறகு அனிதா உயிரோடு வெளியே வரவில்லை.

இது ஓர் அனிதாவின் கதை இல்லை. பல லட்சம் அனிதாக்களின் கதை. அவர்கள் எல்லாம் இன்னும் தற்கொலை செய்துகொள்ளவில்லை  என்பதால், அவர்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism