Published:Updated:

ஒரு சதவிகித வெற்றி!

ஒரு சதவிகித வெற்றி!
பிரீமியம் ஸ்டோரி
ஒரு சதவிகித வெற்றி!

அதிஷா

ஒரு சதவிகித வெற்றி!

அதிஷா

Published:Updated:
ஒரு சதவிகித வெற்றி!
பிரீமியம் ஸ்டோரி
ஒரு சதவிகித வெற்றி!

பிரதமர் மோடி அப்படிச் சொன்னபோது ஒட்டுமொத்த தேசத்துக்கும் நரம்புகள் புடைத்திருக்க வேண்டும். ஆனால், அப்போது நாமெல்லாம் க்யூவில் பிஸியாக நின்றுகொண்டிருந்தோம். நமது கவலையெல்லாம் ஏ.டி.எம்-மில் நமக்கான வாய்ப்பு வரும்போது நூறுரூபாய் தாள்கள் தீர்ந்துவிடக் கூடாது என்பதில்தான் இருந்தது. ஆனாலும், அது முக்கியமான பேச்சுதான். இதுவரை எந்தப் பிரதமரும் அப்படிச் சொன்னதேயில்லை. ``எனக்கு 50 நாள்கள் மட்டும் கொடுங்கள்; இந்த முடிவு தவறாகப் போனால், என்னைப் பொதுவிடத்தில் வைத்துத் தூக்கிலிடுங்கள்” என்றார் பிரதமர்.  பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, ஊழல் ஒழிந்துவிடும் என்றார்; நம்பினோம். கள்ளநோட்டு அழிந்துவிடும் என்றார்; நம்பினோம். பதுக்கிவைத்த கறுப்புப்பணம் எல்லாம் வெற்றுக்காகிதங்கள் ஆகிவிடும் என்றார்; நம்பினோம். இந்தியா பொருளாதார டிஜிட்டல் மயமாகப்போகிறது என்றார்; நம்பினோம்.

இதோ ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டன. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் விளைந்த நன்மை என்ன தெரியுமா? வெறும் `ஒரு சதவிகித வெற்றி.’

ஒரு சதவிகித வெற்றி!

திடீர் சண்டை

கடந்த  ஆகஸ்ட் 31-ம்  தேதி சமூகவலைதளங்களில் இரண்டு விதமான ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங் ஆகின. ஒன்று பணமதிப்பு நீக்க நடவடிக்கை வெற்றிபெற்றதைக் கொண்டாடும் #demonetisationsuccess. மற்றொன்று அது தோல்வியடைந்துவிட்டதைக் குறிப்பிடும் #DemonetisationDisaster. மூர்க்கமாக மோதிக்கொண்டனர் இணையவாசிகள். இரண்டு தரப்புகளுமே தரவுகளை அள்ளி அள்ளித் தந்தனர். இந்தத் திடீர் சண்டைக்குக் காரணம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஓர் அறிக்கை. பணமதிப்பு நீக்க நடவடிக்கைத் தொடர்பாக அது தந்த புள்ளிவிபரங்கள். 98.6 சதவிகிதம் என்கிற அந்த எண் கொடுத்த அதிர்ச்சிதான் அது. எதற்காக?

98.6 சதவிகிதம்

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் அளவு 15.44 லட்சம் கோடி ரூபாய். அதில் இந்த நடவடிக்கைக்குப் பிறகு வங்கிக்கே திரும்பி வந்துவிட்ட தொகை 15.28 லட்சம் கோடி ரூபாய். அதாவது செல்லாது என அறிவிக்கப்பட்ட பணத்தில் 98.6 சதவிகிதம் பணம் ஒழுங்காக வங்கிக்கே திரும்பிவிட்டது. ஆனால், அப்படி வந்திருக்கக் கூடாது.

திமிங்கல வலை

பிரதமர் மோடி தன்னுடைய நவம்பர் 8-ம் தேதி பேச்சில் ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார். ‘`தேச விரோத சக்திகளிடம் இருக்கிற 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எல்லாம் இனி வெற்றுக் காகிதங்களாக மாறிவிடும்’’ என்றார். இரண்டு நாள்களுக்குப் பிறகு, நிதி அமைச்சர் அருண்ஜெட்லி ‘`குற்றவாளிகளும் தேசவிரோதிகளும் தங்களிடம் இருக்கிற பணத்தை எல்லாம் வெளியே எடுக்க மாட்டார்கள், அவை அப்படியே மக்கிப்போய்விடும்’’ என்றார். அடுத்த மாதம் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி உச்ச நீதிமன்றத்தில் ‘`மொத்தமுள்ள 15 கோடியில் அரசு எதிர்பார்ப்பது 10 முதல் 11 லட்சம் கோடிதான். மீதிப் பணமெல்லாம் இங்கே புதைந்து கிடக்கிற கறுப்புப்பணமே. மூன்று அல்லது நான்கு லட்சம் கோடி ரூபாய் வங்கிகளுக்குத் திரும்பி வராது என எதிர்பார்க்கிறோம். அந்தப் பணம் வந்தால், இந்தியாவின் ஒட்டுமொத்தக் கடனையும் அடைத்துவிடலாம்’’ என்று கூறினார். அதாவது 26 சதவிகிதப் பணம் திரும்ப வராது. அதுதான் நம் சமூகத்தை அரித்துக்கொண்டிருக்கும் கரையான் அதெல்லாம் அழிந்துவிடும் என்று எதிர்பார்த்தோம். அதற்கேற்ப ஜனவரி மாதம் நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் பிபேக் டெபராய் ``பத்து சதவிகிதப் பணம் திரும்ப வராது’’ என்று கணித்தார்.

ஆனால்,  இப்போது திரும்பிவராத தொகையின் அளவு வெறும் 16,000  கோடி ரூபாய்தான்! அதாவது வெறும் 1.4 சதவிகிதம் மட்டுமே. இதுதான் அந்த `ஒரு சதவிகித வெற்றி’.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்பது திமிங்கலங்களுக்கு விரிக்கப்பட்ட வலை என்றே நாமெல்லாம் கருதினோம். அப்படி இருக்க அந்த வலையில் விழுந்தது எல்லாம் வெறும் நெத்திலிதான் என்றால், திமிங்கலங்கள் என்னவாயின?

இங்கே யாருமே கறுப்புப்பணத்தை வெறும் ரொக்கமாக வீடுகளில் அடுக்கி வைத்திருப்பதில்லை, அவை எல்லாம் வெளிநாட்டு வங்கிகளிலும், பினாமிகளிடமும், முதலீடுகளாகவும், தங்கமாகவும், நிலமாகவும், இன்னும் பல வடிவங்களிலும் இங்கே நடமாடுகின்றன. இப்படி பணமதிப்புநீக்கம் செய்வதால் எந்தப் பலனுமில்லை எனப் பொருளாதார நிபுணர்கள் எல்லாம் கதறினார்கள். ஆனால், மத்திய அரசு அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

‘`இந்த நடவடிக்கையால் அதிகமான வரி, அதிகமான வரிகட்டுவோர், டிஜிட்டல்மயமான பொருளாதாரம், ஒழுங்குபடுத்தப்படாத பொருளாதாரத்தில் புழங்கும் பணமும் கணக்கில் கொண்டுவரப்பட்டிருக்கிறது’’ என சமீபத்தில் இந்தப் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் விளைந்த நன்மைகளைப் பட்டியலிடுகிறார் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி.

ஆனால், நவம்பர் இரவு பேச்சில் 17 தடவைகள் கறுப்புப்பணம் என்கிற சொல்லையும் 16 முறை ஊழல் என்கிற சொல்லையும்  பயன்படுத்தியிருந்தார் மோடி. இப்போது அந்தச் சொற்களை லாகவமாகத் தவிர்க்கிறார் அருண்ஜெட்லி. கூடவே தீவிரவாத ஒழிப்பையும், போலி நோட்டுகள் விஷயத்தையும் கூடப் பேசவில்லை. ஏன் என்றால், இந்த நடவடிக்கை எந்த வகையிலும் ஊழலையோ, கறுப்புப்பணத்தையோ, தீவிரவாதத்தையோ, போலி  ரூபாய்  நோட்டுகளின் ஆணிவேர்களையோ சீண்டக்கூட இல்லை என்பதால்தான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு சதவிகித வெற்றி!

மக்கள் விரோத நடவடிக்கை

`புதிய இந்தியா பிறந்துவிட்டது’ என சூப்பர்ஸ்டார் தொடங்கி சுப்ரீம் ஸ்டார் வரை முக்கியப் பிரமுகர்கள் எல்லாம் அந்த இரவில் கொண்டாடித் தீர்த்தனர். அந்த இரவை எந்த இந்தியனும் மறக்க முடியாது. ஆனால், அது நாம் நினைத்ததுபோல இருக்கவில்லை. அந்த வேதனையைப் பகிர்ந்துகொண்டவர்கள்கூட இந்திய விரோதிகளாக விமர்சிக்கப்பட்டதுதான் கொடுமை! பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் 120 அப்பாவிகள் இந்தியா முழுக்கச் செத்து மடிந்தார்கள். பல லட்சம் கூலித்தொழிலாளிகள் வேலைகளை இழந்தனர். சிறு குறுதொழில்கள் செய்துகொண்டிருந்த பலரும் தொழிலை இழுத்து மூடினார்கள். ஆனால், சிக்கிக்கொள்வார்கள் என்று எதிர்பார்த்த கள்ளப்பண முதலைகள் யாருமே மாட்டிக்கொள்ளவில்ல;  செத்துப்போகவில்லை. ஊழலும் ஒழியவில்லை. சின்னச்சின்ன சேமிப்புகளைக் கைகளில் வைத்துக்கொண்டு வங்கிகளில் பழி கிடந்தது நாம்தான்!

அந்த மூன்று காரணங்கள்

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு மூன்று காரணங்கள் சொல்லப்பட்டன. முதலாவது கறுப்புப்பணத்தை ஒழித்துக் கட்டுவது, அடுத்து கள்ளநோட்டுகளை அழிப்பது, மூன்றாவது தீவிரவாதம் முடக்கப்படுவது. இதில் கறுப்புப்பண ஒழிப்பு என்பது சுத்தமாகத் தோல்வியடைந்துவிட்டதையே ரிசர்வ் வங்கியின் `ஒரு சதவிகித வெற்றி’ காட்டுகிறது. போகட்டும்... போலி நோட்டுகள் ஒழிக்கப்பட்டதா? இல்லை. ரிசர்வ் வங்கியின் தகவலின்படி வெறும் 41 கோடி ரூபாய் அளவுக்குத்தான் கள்ளநோட்டுகள் பிடிபட்டிருக்கின்றன. அதாவது 0.0026 சதவிகிதம்தான். கூடவே, புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் தாள்களின் போலி நோட்டுகள் ஏற்கெனவே இந்தியா முழுக்கப் பரவிவிட்டன. காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட புதிய 2000 ரூபாய் போலி நோட்டுகளே அதற்குச் சான்று!

சரி இந்த இரண்டும்தான் தோல்வி. தீவிரவாதமாவது ஒழிந்திருக்கிறதா? என்றால் இல்லை என்கிறது செளத் ஏசியன் டெரரிசம் போர்ட்டல் என்கிற அமைப்பின் ஆய்வு. சொல்லப்போனால் கடந்த பத்து மாதங்களில் ஜம்மு-காஷ்மீரில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களின் எண்ணிக்கை 38 சதவிகிதம் அதிகரித்துள்ளது. பொதுமக்களின் மரணங்கள் 25 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. ராணுவ வீரர்களின் மரணமும் இரண்டு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இதுவே நக்ஸலைட்டுகள் பலம் பெற்றுள்ள பகுதிகளில் பாதுகாப்புப் படையினரின் மரணங்கள் 82 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது என்கிறது இந்த ஆய்வு. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் தீவிரவாதிகள் பலம் பெற்றுள்ளனரா? அல்லது பலவீனமாகி இருக்கிறார்களா?

டிஜிட்டல் கனவு

`ரொக்கம்தான் எல்லா ஊழல்களுக்கும் காரணம்.ரொக்கப் பரிவர்த்தனைகளைக் குறைத்துவிட்டால் ஊழல்களைக் குறைத்துவிடலாம்’ என்பதே பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது குறிப்பிட்டத் தகவல். அதற்கேற்ப பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது  இந்தியா முழுக்க டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் அளவு கணிசமாக உயர்ந்திருக்கிறது என்பதே பெரும்பாலான ஆய்வுகள் சொல்லும் தகவல். ஆனால், அவை கடந்த மாதங்களில் படிப்படியாகக் குறைந்துப் பழையபடி ரொக்கப் பரிவர்த்தனைக்கே திரும்பிவிட்டதாக அதே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சென்ட்ரல் வங்கியின் தகவல்களின்படி நவம்பர் மாதம் 671 மில்லியன் அளவுக்கே இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் அளவு டிசம்பரில் 957 மில்லியன் என்கிற அளவுக்கு உயர்ந்திருக்கிறது! ஆனால், கடந்த ஜூலையில் இந்த எண்ணிக்கை 857 மில்லியன் என்கிற அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது. எண்ணிக்கையில் மட்டும் அல்லாமல் தொகை அளவிலும் வீழ்ச்சிதான். ஆன்லைன் ஷாப்பிங் தளமான மின்ட்ராவின் சி.இ.ஓ. ஆனந்த் நாராயணன் ‘`பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு 40 சதவிகித அளவுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்திருந்தாலும், இப்போது பழையபடி ஆகிவிட்டது’’ என்று குறிப்பிடுகிறார். உண்மையில் இந்த நடவடிக்கையால் நல்ல லாபம் பார்த்தவர்கள் ஈவால்ட் நிறுவனங்கள்தான் என்று குற்றம் சாட்டுகிறார்கள் பொருளாதார நிபுணர்கள். இவை போக, கடந்த ஜனவரியில் வெறும் 8.98 லட்சம் கோடியாக இருந்த ரொக்கப் பரிவர்த்தனை கடந்த ஆகஸ்ட் மாதம் 15.5 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து, கடந்த நவம்பரில் எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலைக்கே (15லட்சம்  கோடி)திரும்பிவிட்டதாக ரிசர்வ் வங்கித் தெரிவிக்கிறது!

ஒரு சதவிகித வெற்றி!

குறைந்த வளர்ச்சி சென்ற காலாண்டில் இந்தியாவின்

ஜி.டி.பி. 5.7 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை, எனவே... பணமதிப்பு நீக்க நடவடிக்கை சிறந்தது என இப்போதும் விட்டுக்கொடுக்காமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள் சிலர். ஆனால், இது மூன்றாண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு. அதில் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குத் தொடர்பில்லை என்று சொல்வது மோசடியானது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு இந்தியப் பொருளாதாரம் சரிவைச் சந்தித்திருந்தாலும் அது மீண்டும் எழும் என்றே எல்லோரும் நினைத்தனர். கடந்த காலாண்டில் 6.5 சதவிகிதமாக அது உச்சம் பெறும் என எதிர்பார்த்தனர். ஆனால், அது இத்தகையை வீழ்ச்சியை அடைந்திருப்பது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இரண்டு பேர் இரண்டு கருத்துகள்

ஒட்டுமொத்தமாக எல்லா வகையிலும் பணமதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வியடைந்திருக்கிறது என்பதை ரிசர்வ் வங்கியின் எண்கள் மட்டும் அல்ல, பொருளாதார உலகின் இரண்டு முக்கிய நபர்கள் அழுத்தமாக உறுதி செய்திருக்கிறார்கள். ஒருவர் ஃபோர்ப்ஸ் இதழின் முதன்மை ஆசிரியரான ஸ்டீவ் ஃபோர்ப்ஸ். அவர் இந்த நடவடிக்கையை ‘`மக்களின் சொத்துகள்மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய கொள்ளைச் சம்பவம்’’ என்று வர்ணிக்கிறார். ‘`இந்தப் பூமியில் நாம் தோன்றியதில் இருந்தே நாம் குற்றங்களைச் செய்ய புதுப்புது வழிகளைக் கண்டுபிடித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்வதன் மூலம் தீவிரவாதிகளை ஒழித்துக்கட்ட முடியாது’’ என்கிறார். இதே விஷயத்தில் தன் அழுத்தமான கருத்தைச் சமீபத்தில் தெரிவித்திருப்பவர் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன். ‘`பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு நம்முடைய மக்கள் தர வேண்டியிருக்கும் விலையை நான் முன்பே தெரிவித்தேன். அப்படியும் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக இருந்தால் என்னென்ன செய்ய வேண்டும் என்கிற விபரங்களின் பட்டியலையும் கொடுத்தேன்’’ என்று கூறியிருக்கும் அவர், இந்த நடவடிக்கையை நிச்சயமாகப் பொருளாதார வெற்றி என்று குறிப்பிட முடியாது என்று சொல்லியிருக்கிறார்!

அடுத்து என்ன?


‘`இத்தனை நாளும் பதுங்கி இருந்த பணமெல்லாம் வங்கிக்கு வந்துவிட்டது. இதில் சந்தேகப்படும் வகையில் பணமதிப்பு நீக்கக் காலத்தில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைகளையும் அதன் பின்னணியையும் ஆராய்ந்து அவர்கள்மீது நடவடிக்கை எடுத்து அவர்களைக் கையும்களவுமாகப் பிடித்து தண்டிப்போம்’’ என மத்திய அரசு சொல்கிறது. அதாவது இந்தியா முழுக்க 13.3 லட்சம் அக்கவுன்ட்டுகளுக்கு வந்திருக்கிற 2.89 லட்சம் கோடி ரூபாயை அரசு கண்காணிக்கப் போகிறது. ஆனால், இதில் கறுப்புப்பணம் என்ன அளவு? நம்மிடம் இப்போது இருக்கிற வருமானவரித்துறை செட்அப்களையும் அதன் சக்தியையும் கொண்டு இந்த 13 லட்சம் அக்கவுன்ட்டுகளையும் ஆராய இன்னும் எத்தனை ஆண்டுகள் பிடிக்கும் என்பதைக்கூட நம்மால் கணக்கிட முடியாது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, வருமான வரிகட்டுவோர் எண்ணிக்கை 25 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக நிதி அமைச்சகம் குறிப்பிட்டு இதை மிகப்பெரிய சாதனையாக முன் வைக்கிறது. ஆனால், பழைய ரெகார்டுகளைப் புரட்டிப்பார்த்தால் இந்த 25 சதவிகிதம் என்பது மிகவும் நார்மல்தான். இது ஆண்டுதோறும் அதிகரிக்கிற ஒன்றுதான் என்பது விளங்கும். இது ஆண்டுதோறும் சராசரியாக 20 சதவிகிதம் என்கிற அளவுக்கு அதிகரித்து வந்திருப்பதையே கடந்த பத்தாண்டு முடிவுகள் காட்டுகின்றன!

பணமதிப்பு நீக்க நடவடிக்கை வெற்றி பெற்றதோ இல்லையோ, அது வெற்றிதான் என்பதை நம்பவைக்க நிறையவே செலவு செய்திருக்கிறது மத்திய அரசு. எந்த அளவுக்கு என்றால் ஒரு நாளுக்கு 3.21 கோடி ரூபாய் என்கிற லெவலில் விளம்பரம். இது முந்தைய காங்கிரஸ் அரசோடு ஒப்பிடும்போது மூன்று மடங்கு அதிகம்.  

இப்போது... நீங்களே சொல்லுங்கள் பணமதிப்பு நீக்கம் வெற்றியா தோல்வியா?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism