Published:Updated:

அரசுகள் அன்றே கொல்லும்!

ப.திருமாவேலன் - ஓவியம்: கார்த்திகேயன் மேடி

பிரீமியம் ஸ்டோரி

னிதா... பெயர்ச்சொல்லாக இருந்து வினைச்சொல்லாக மாறி இருக்கிறார். அந்த வினைக்கு விலையாக உயிரைத் தாரை வார்க்க வேண்டி இருந்தது. சாதியால்,  பொருளாதாரத்தால் கீழினும் கீழாக  அடையாளம் காட்டப்பட்டாள். அவளது சாவும் இன்று கொச்சைப்படுத்தப் படுகிறது. தியாகங்களைக் கொச்சைப்படுத்துவது தான் மேட்டிமைச் சமூகத்துக்குக் கைவந்த கலை ஆயிற்றே?

தந்திரபூமியான டெல்லியில் அய்யாக்கண்ணு அரை நிர்வாணமாகப் போராடியபோது, ‘கடன் வாங்கிக்கொண்டு கட்ட முடியாதவன் எல்லாம் போராட வந்துவிட்டான்’ என்று கொச்சைப்படுத்தியது இழி புத்தி. ‘உனக்குக் கேள்வி கேட்க உரிமை இல்லை’ என்பதே இதன் பொருள்.

இதோ, அனிதாவும் அதில் இருந்து தப்பவில்லை. ‘நுழைவுத்தேர்வில் மார்க் வாங்கத் தெரியாதவள் எல்லாம் டாக்டர் படிப்புக்கு அலைகிறது’ என்கிறது இன்னொரு இழி புத்தி. ‘உனக்கெல்லாம் எதற்குப் படிப்பு?” என்பதே இதன் பொருள்.

அதுவும் தகுதி, திறமை பற்றி அதற்கே பிறந்தவர்கள் வகுப்பு எடுக்கிறார்கள். ‘100 மார்க் எடுத்தவனுக்கு சீட் கிடைப்பது இல்லை. இந்த இட ஒதுக்கீட்டில் 30 மார்க் எடுத்தவன் டாக்டர் ஆகிவிடுகிறான்’ என்ற புலம்பல் கேட்கிறது.இவர்கள் மருத்துவம், பொறியியல் கட் ஆஃப் மார்க் பட்டியலைப் பார்க்க வேண்டும்.

அரசுகள் அன்றே கொல்லும்!

கடந்த 2016-ம் ஆண்டு மருத்துவக் கல்விக்கான கட் ஆஃப் மதிப்பெண்.

தாழ்த்தப்பட்ட வகுப்பு 191.75.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு 196

பிற்படுத்தப்பட்ட வகுப்பு 197.25

இதர வகுப்பினர் 198.

- என்ன தகுதிக்குறைவு வந்துவிடும்? திறமைக் குறைவு வந்துவிடும்?

அனிதாவும்  மதிப்பெண் வாங்கத் தெரியாதவள் அல்ல. 1200-க்கு 24 மதிப்பெண்கள்தான் குறைவு. இரண்டு பாடத்தில் 200-க்கு 200. அவர் வாங்கிய மதிப்பெண் அடிப்படையில் பார்த்தால் 196.75 கட் ஆஃப் பெற்றுள்ளார். அவருக்கு நிச்சயம் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும். ஆனால், ‘நீட்’ தேர்வு இடையில் நீட்டி அவரை மறித்தது. அதில் அவர் படித்த பாடப்புத்தகத்தில் இருந்து எந்தக் கேள்வியும் வரவில்லை. சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் இருந்து கேள்வி கேட்டுள்ளார்கள். இவர் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர். இரண்டின் பாடப்புத்தகங்களும் வேறு வேறு.

‘நீட் தேர்வில் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் இருந்துதான் கேள்வி கேட்கப்படும்’ என்று சொல்லவும் இல்லை. அவர் படித்த பாடத்தில் இருந்து கேள்விகளும் இல்லை. அதனால் 1200-க்கு 1176 மதிப்பெண்களை வாங்கியவரால்,  நீட் தேர்வில் 700-க்கு 86 மதிப்பெண்கள்தான் வாங்க முடிந்தது. அதாவது பட்டவர்த்தனமாக அனிதா ஏமாற்றப்பட்டாள்.அனிதாக்கள் ஏமாற்றப்பட்டார்கள். எல்லா தற்கொலையும் விரக்தி, ஏமாற்றம் ஆகியவை காரணமாகவே நடக்கிறது. தனது மருத்துவக் கனவை இந்தத் தேர்வு காவு வாங்கிவிட்டது என்பதே மனதுக்குள் பொங்கியது. தனது உயிரைத் தானே பறித்துக் கொண்டார். அவரைப் பாடைக்கு அனுப்பியதில் பாதிப் பங்கு மாநில அரசுக்கு. மீதிப் பங்கு மத்திய அரசுக்கு.

மக்களைக் காப்பாற்றுவதற்காகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டவர்கள், மயானக் கரைக்கு அனுப்புவதற்கே அதிகாரத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது அனிதா வாழ்க்கையில் நிரூபணம் ஆகி இருக்கிறது.

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி பயில்வதற்குப் பள்ளி மதிப்பெண்ணோடு சேர்ந்து நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணும் இருந்தது. நுழைவுத்தேர்வில் தனியார் பயிற்சி மையங்களில் பணம் கொடுத்துப் படிப்பவர்கள் அதிகமான மதிப்பெண்ணைப் பெற்றுவிடுகிறார்கள் என்பதால், நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. பள்ளிக்கல்வியில் வாங்கும் மதிப்பெண்ணே இறுதியாய் இருந்தது. இதில் நீட் தேர்வு நடைமுறையை மத்திய அரசு புகுத்தத் திட்டமிட்டது. நான்கைந்து ஆண்டுகளாக இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன. அப்போதே மாநில அரசு எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். பாடத்திட்டங்களில் மாறுதல் செய்து கனமானதாக ஆக்கி இருக்க வேண்டும். கருணாநிதி கொண்டுவந்த சமச்சீர் கல்வி என்ற வார்த்தையைக் காலி செய்ய ஜெயலலிதா நினைத்தாரே தவிர, கல்வித்துறையை சீர்திருத்த நினைக்கவில்லை. சமச்சீர் கல்வி என்பதை காலி செய்ய அவர் நினைத்ததால், அதைச் சென்னை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் ஏற்கவில்லை.

அப்போதே பாடத்திட்டத்தை இன்னும் செழுமைப்படுத்தியிருக்கலாம். அதனை முதல்வர் ஜெயலலிதாவும் செய்யவில்லை. அவரை ஆன்ட்டி என்று அழைத்துக் கல்வித்துறையையே காலி செய்த சபீதா ஐ.ஏ.எஸ்-ஸும் செய்யவில்லை. கல்வி அமைச்சர்களை சபீதா காலி செய்வதில் கவனம் செலுத்தினாரே தவிர, வேறு எதுவும் செய்யவில்லை. நீட் பூதம் கடந்த ஆண்டு வந்தது. கடுமையாக இதனை எதிர்த்த ஜெயலலிதா, ஓராண்டுக்கு மட்டும் விலக்குப் பெற்றார். இன்று ஜெயலலிதா இல்லை. ஆனால், நீட் வந்துவிட்டது.

அரசுகள் அன்றே கொல்லும்!

ஜெயலலிதாவைப்போல கட்அவுட் வைத்துக் கொள்ளும், ஜெயலலிதாவைப்போல தான் போகும் வழி எல்லாம் நூற்றுக்கணக்கான போலீஸ்காரர்களை நிறுத்திக்கொள்ளும், அவரைப்போலவே கதைகள் சொல்லும், அடுத்து அவரைப்போலவே ஹெலிகாப்டர் பயணத்துக்குத் தயாராகிவரும் எடப்பாடி பழனிசாமிக்கு அவரைப்போல் முதுகெலும்பு இல்லை. வாரந்தோறும் டெல்லிக்கு அன்னக்காவடி எடுத்த முதலமைச்சர், ஒரு தடவைகூட மோடியைப் பயமுறுத்துவது மாதிரி நடந்துகொள்ளவில்லை. இவர்தான் வடக்குப் பக்கம் பார்க்கும்போதே, பயந்து நடுங்குபவராக இருந்தால், என்ன செய்ய முடியும்?

இரண்டுமுறை தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவுகளைக் கொண்டு வந்தார்கள். அதனைக் குடியரசுத் தலைவர் கவனத்துக்கே கொண்டுபோகவில்லை. கொண்டுபோகும் சக்தியே இந்த அரசுக்கு இல்லை. பிரதமர், அமைச்சர்களைப் பார்த்து மனு கொடுப்பது மட்டுமே நடந்தது. ‘இந்த ஆண்டு நீட் இருக்காது’ என்று அமைச்சர்கள் அனைவரும் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். இதைத்தான் அரியலூர் பக்கம் இருந்த அப்பாவிப் பெண் நம்பினார். அமைச்சராகவும் இருக்கும் டாக்டர் விஜயபாஸ்கர் பேச்சு மாற்றிப் பேசுவார் என்றோ, ஐ.ஏ.எஸ். அதிகாரியும் கால்நடை  மருத்துவருமான  ராதாகிருஷ்ணன் எப்படி எல்லாம் பல்டி அடிப்பார் என்றோ அனிதாக்களுக்கு எப்படித் தெரியும்?

நீட் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடக்கும் என்று அமைச்சருக்கும் அதிகாரிக்கும் தெரியும். தெரிந்தே பொய் சொன்னார்கள்.  அதை மறைப்பதற்காக, பாடத்திட்டம் மாற்றம், அரசாங்கமே பயிற்சி மையங்களை நடத்தும் என்று இப்போது நாடகம் ஆடுகிறார்கள். இந்த நாடகம் பொய் என்பதை அனிதாவின் மரணம் காட்டிவிட்டது. அரசாங்கம் கொடுத்த பணத்தை வாங்க மறுத்த அனிதாவின் அண்ணனும் இதையே சொல்லி இருக்கிறார்.

கல்வித்துறைக்குச் செயலாளராக நியமிக்கப்பட்ட உதயசந்திரன் இதற்கான முயற்சிகளை சில மாதங்களுக்கு முன்பே எடுத்தபோது, அதற்குத் தலையாட்டிக் கிடந்த ஆட்சியாளர்கள், தங்களது வசூலுக்குத் தடையாக இருப்பார் என்று அவருக்கு மேலே ஒருவரை நியமித்துக்கொண்டுள்ளது, இன்னமும் இவர்கள் திருந்தவில்லை, திருந்தத் தயராக இல்லை என்பதையே காட்டுகிறது. பாடத்திட்டத்தை மாற்றும் குழுவைக் கலைக்கக் கூடாது, குழுவில் உள்ளவர்களை மாற்றக் கூடாது என்று உயர் நீதிமன்றம் சொன்னதால், உதயசந்திரன் தலை தப்பி இருக்கிறது. இல்லாவிட்டால் மீண்டும் உப்பு வாரியம் போயிருப்பார். இப்படித் தொடர்ந்து தப்பு பண்ணும் மனிதர்களுக்கு அனிதாக்களின் உயிர்மீது என்ன மரியாதை இருக்கும்?

அனிதாவைப்போல மருத்துவக் கனவில் இருந்தவர்கள் நிறைய. அவர்கள் அனைவரது மனக்குழப்பத்தையும் அனிதா தற்கொலை  காட்டிவிட்டது. அது மட்டுமல்ல; இந்த அரசாங்கம் அனிதாக்களின் தற்கொலையால் எல்லாம் திருந்தும் என்பதும் சொல்ல முடியாது.

இப்படிப்பட்ட கந்துவட்டிக்காரர்கள் கையில் ஆட்சி இருந்தால், மத்திய அரசு எதையும் செய்யத்தானே செய்யும்? ‘2020-க்குப் பிறகு நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கும்’ என்று சொல்லி இருந்தால், அதற்குள் அனைத்து மாணவர்களும் தயார் ஆகி இருப்பார்கள். அந்த வாய்ப்பைத்தர மோடி அரசுக்கு மனமில்லை. ஒரே தேசம் என்று முழங்கும் மனிதரின் ஆட்சியில் ஒரே பாடத்திட்டம் கிடையாது என்பது தெரியாமல் இருக்காது. பெரும்பான்மை மாணவர் படித்த புத்தகத்தைப் பறித்துவிட்டு வேறு பாடத்திட்டத்தை வைத்துத் தேர்வு  நடத்தியது ஜனநாயக நெறிமுறையா? மிரளும் மனிதர்கள் ஆள்கிறார்கள் என்பதற்காக மிரட்டிக் கொண்டு இருப்பது நியாயமா?

தனியார் மருத்துவக் கல்லூரிகள் பணம் பறிக்கிறார்கள் என்றால், அவர்களைத் தட்டிக் கேட்பதற்கு அதிகாரம் பொருந்திய இரும்பு மனிதரிடம் சட்டம் இல்லையா? 100 கல்லூரி முதலாளிகளை மிரட்ட முடியாமல் லட்சக்கணக்கான குடும்பங்களை வதைப்பதை எந்த யோகா மாஸ்டர் கற்றுக்கொடுத்தார்? இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்புவதற்கு அனிதா பயன்பட்டார். அனிதாவை மருத்துவர் ஆக்க இரண்டு அரசாங்கமும் பயன்படவில்லை.

அவர் கேட்டது மருத்துவம், அரசுகள் தந்தது மரணம். அரசன் அன்றே கொல்வான் என்று சும்மாவா சொன்னார்கள்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு