Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 53

ஆண்பால் பெண்பால் அன்பால் - 53
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண்பால் பெண்பால் அன்பால் - 53

#MakeNewBondsஆர்.அபிலாஷ் எழுத்தாளர்

ன் சொந்த ஊரான நாகர்கோயிலில் ரெண்டு பேர் ஜோடியாய்ப் பக்கத்தில் பக்கத்தில் நின்றாலே, காதல் ஜோடி என முடிவு கட்டி விடுவார்கள். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் வீட்டுக்குத் தகவல் சொல்லி விடுவார்கள். அன்றெல்லாம் செல்போன் இல்லை என்பதால் பஸ் பிடித்து, சைக்கிள் மிதித்துப் போய்ச் சொல்வார்கள். அன்று காதலிக்கும் ஆண் பெண் மட்டும்தான் பொதுவெளியில் தயங்கித் தயங்கி ஒலியே எழுப்பாமல் பேசுவார்கள். காதலிக்காத ஆண் பெண்கள் பெரும்பாலும் பேசிக்கொள்ள மாட்டார்கள். இதனாலே பெண்களிடம் பேச வேண்டுமென்றாலே, அவர்களை அணுகி அறிய வேண்டுமென்றாலே, அவர்களைக் காதலிக்க வேண்டும் எனும் `கட்டாயம்’ ஆண்களுக்கு இருந்தது. இதனாலே நண்பர்களாய் இருக்க வேண்டிய பலரும் காதலர்களாய் மாறிப்போனார்கள்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 53

`இதயம்’ முரளிதான் அந்தத் தலைமுறை ஆண்களின் ஜெராக்ஸ் காப்பி என நான் தனியாய் சொல்ல வேண்டியதில்லை. சமீபத்தில் `இதயம்’ பார்த்தபோது ஒரு விஷயம் விநோதமாய்ப் பட்டது. முரளி ஏன் ஹீராவைக் காதலிக்கிறார் என எனக்குக் கடைசி வரையில் புரியவேயில்லை. அவர் அழகாய் இருக்கிறார் என்பதைத் தவிர, அவருக்கு அவளைப்பற்றி ஒன்றுமே தெரியாது. அவளிடம் பேசியதில்லை. அவளது விருப்பு வெறுப்புகள், குழப்பங்கள், கவலைகள், சிறப்பியல்புகள், அற்பத்தனங்கள், அபாரமான திறன்கள், குடும்பப் பின்னணி ஒன்றுமே தெரியாது. ஆனால், இப்படித்தான் அந்தக் காலத்தில் நாங்களும் இருந்தோம். இன்னொரு விஷயம்; இந்தப் படம் இப்படி என் காலத்து ஆண்களின் துல்லிய சித்திரமாய் மாறிப் போனது மிக யதேச்சையானது என சமீபத்தில் ஒரு சினிமாத்துறை நண்பர் மூலமாய் அறிந்து கொண்டேன். கதிர் அப்படத்தை இயக்கும்போது ஓவியரும் கவிஞரும் மட்டுமே. அவருக்கு சினிமாவில் பணியாற்றிய அனுபவம் இல்லை. இதன் விளைவைப் படத்தின் இறுதிக்கட்டத் தயாரிப்பின்போது, குறிப்பாய் எடிட்டிங்கின்போதுதான் தயாரிப்பாளர் புரிந்துகொண்டார். காதலனும் காதலியும் நெருங்குவார்கள். அங்கு அவர்கள் பேசும் வசனம் இருக்கும். ஆனால், காட்சியில் அவர்கள் பேச மாட்டார்கள். ஏனென்றால் படப்பிடிப்புக் குழப்பத்தில் இயக்குநர், காதலர்கள் வசனம் பேசும் காட்சியைப் பதிவு செய்யத் தவறிவிட்டார். கடைசியில் ஒரு மூத்த திரை ஆலோசகர்  வாய்ஸ் ஓவர் ஐடியாவைக் கொடுத்தார். முரளி, ஹீராவை நெருங்க அவர் சொல்ல வேண்டிய வசனம் பின்னணியில் கதிரின் குரலில் ஒலித்தது. அது பார்வையாளர்களை வெகுவாய்க் கவர, பிறகு பெரிய டிரெண்ட் ஆனது. ஏனென்றால் திரையில் பார்த்தவர்களுக்கு அந்த வாய்ஸ் ஓவர் ரொம்ப யதார்த்தமாய் இருந்தது. அது அவர்கள் காதல் வாழ்க்கையிலும் இருந்தது.

நானும் பள்ளியில் இதுபோல் ஒரு பெண்ணைக் காதலித்திருக்கிறேன். நான்  அரசுப்பள்ளியில் படித்தேன். ஆங்கில வழிக்கல்வி மற்றும் தமிழ்வழிக் கல்வி வகுப்பறைகள் தனித்தனியாய் இருந்தன. அவள் தமிழ் வழியில் படித்தாள். அவளது வகுப்பு எங்கள் வகுப்புக்கு எதிர்சாரியில். தமிழ்வழி வகுப்பறைகள் திறந்த நிலையிலானவை என்பதால், எங்கள் வகுப்பு ஜன்னலில் இருந்து பார்த்தால், அவளைத் தினமும் பார்க்கலாம். நான் எப்போதும் ஜன்னலில் விழி பதித்து இருப்பேன். அவளை ஒன்பதாம் வகுப்பு வரை நான் அருகில் சென்று பார்க்கவே இல்லை. தொலைவில் இருந்தே ரசித்தேன். ஒவ்வொரு வருடமும் அவள் மாறிக் கொண்டே வருவது, வகுப்பில் அவள் புரியும் சேட்டைகள், ஆசிரியரிடம் அடி வாங்குவது, தூங்குவது, சிரிப்பது எனத் தருணம் தருணமாய் ரசித்தேன். ஆனால், அவள் வளர வளர அழகு குன்றிக்கொண்டே வந்தாள். நான் அவளைப் பத்தாம் வகுப்பு படிக்கையில் அருகில் சென்று பார்த்தேன். நாங்கள் வேதியியல் ஆய்வகத்தில் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அவளுக்குச் சற்று மாறுகண், மூக்கு ரொம்பப் பெரியது  போன்ற விஷயங்களை அப்போதுதான் கவனித்தேன். அதற்குப்பின் எனக்கு மற்றொரு குழப்பம் ஏற்பட்டது. அவள்தானா இவள்? அவளுடைய வகுப்பு நண்பர்களிடம் விசாரித்தேன். ஆனாலும், எனக்குத் திருப்தி வரவில்லை. அவள் இவளாக இருக்க முடியாது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆண்பால் பெண்பால் அன்பால் - 53


 சற்றே பொருந்தாத, பிசிறு தட்டும் ஒரு சின்ன இயல்பே ஒரு பெண்ணைப் பேரழகி ஆக்குகிறது. ஒருமுறை என்னிடம் கண்களைச் சிமிட்டி குழந்தைபோல் சிரித்ததற்காய் ஒரு பெண்ணை இரண்டு வருடம் காதலித்திருக்கிறேன். இன்னொரு பெண் எதேச்சையாய் யாரையோ சீட்டியடித்து அழைத்ததைக் கேட்டுத் தவறாய் என்னைத் தான் என நினைத்து அவளிடம் சென்று நட்பாகி, அந்தச் சீட்டியடிக்கும் முரட்டு சுபாவத்துக்காக அவளிடம் இதயத்தைப் பறிகொடுத்திருக்கிறேன். இன்னொரு பெண் அணிந்துவந்த வித்தியாசமான சிவப்பு ஷூக்களுக்காய் `குணா’ கமல்போல் பின்னால் சென்றிருக்கிறேன். இப்படி இப்படி ஏராளமான பெண்கள் என் மன உண்டியலை உடைத்துச் சில்லறையைச் சிதற விட்டிருக்கிறார்கள்.

இந்த மெல்லிய ஈர்ப்புகளும் அலைக்கழிப்புகளும் ஒரு பக்கம் என்றால், ஆழமான உக்கிரமான காதல்களும் இருந்தன. எல்லாரையும்போலவே நான் பெண்களுடன் அதிக நேரம் பேசவும் அவர்களை அறியவும் கல்லூரிப் பருவமே வழிவகுத்தது. ஆனால், பெண்களை அறிய அறிய அவர்களைப்பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது எனத் தெரிய வந்தது. இதனாலே எனது கல்லூரிக் காதல் உறவுகள் மிகுந்த சிக்கல்களும் குழப்பங்களும் மிகுந்ததாய் அமைந்தன. நான் முதலில் காதல் சொல்லி வெற்றி கண்டது ஒரு `சக எழுத்தாளரிடம்’ தான்.

 அவள் என்னைவிட ஐந்து வயது மூத்தவள். இந்தப் பிசிறுதான் எனக்கு அவளிடம் மிகுந்த வசீகரமாய் பட்டது. மேலும் அவள், நான் இந்த உலகில் கண்ட மிக மிக அழகான பெண்களில் ஒருவள். ஏனோ நாங்கள் தொடர்ந்து நூலகங்களிலே சந்தித்துக் கொண்டிருந்தோம். எங்கள் துறைக்கு என ஒரு நூலகம் உருவாக்கிக்கொண்டிருந்தார்கள். அதற்காக விடுமுறை நாள்களில் உதவுவதற்காய் நானும் சில நண்பர்களும் சென்று வந்தோம். அப்போது அவளும் வந்தாள். அதன்பிறகு பிரதான நூலகத்தில் அவளை மீண்டும் பார்த்தேன். நாங்கள் காதலர்கள் ஆன பின்பும் ஒரு தனியார் நூலகத்திலே தொடர்ந்து சந்தித்தோம். இதனாலே நூலகங்களில் ஓர் அழகான பெண்ணைப் பார்த்தால், இப்போதும் என் மனம் கிளர்ந்துவிடும். நூலகத்தைவிட்டு அவள் வெளியே வந்ததும் ரொம்ப சாதாரணமானவளாய்த் தெரிவாள்.

 மஹதி என ஒரு பாடகி இருக்கிறாரே... அவரது குரல் அவளுக்கு. அவளது வியர்வைக்கென ஒரு கிறுகிறுக்க வைக்கும் வாசனை உண்டு. நான் அதற்கு அடிமை. சும்மா அவளை முகர்ந்து பார்ப்பதற்காகவே பக்கத்தில் போய் அமர்ந்து உலக இலக்கியம் பற்றித் தீவிரமாய் எதையாவது உளறிக் கொட்டுவேன். அவள் ஒரு கவிஞர். நான் அவளுக்கு தீவிர இலக்கியம் அறிமுகம் செய்தேன். அபாரமான வாசகி. ஒரு சில மாதங்களில் நான் வருடக்கணக்காய் சேமித்த நாவல்களை எல்லாம் வாசித்து முடித்து விட்டாள். நாங்கள் இருவருமாய் இணைந்து ஒரு கவிதைத்தொகுப்பு கொணர்ந்தோம். நான் எடிட் செய்து வெளிவந்த ஓர் இலக்கிய இதழில் அவளும் எழுதினாள். அவள் ஓர் அற்புதமான பாடகியும் கூட. அவளிடம் ஒரு நெர்வஸான ஆற்றல் இருந்தது. அவள் நினைத்தால் கிட்டத்தட்ட எதையும் செய்ய, சாதிக்க முடிந்தது. நாங்கள் தொடர்ந்து காதலித்திருந்தால், அவள் ஒருவேளை நாவல்களும் கட்டுரைத்தொகுப்புகளும் வெளியிட்டிருப்பாள். என்னுடைய அணுக்கம் அவளை மற்றொரு மனுஷியாக மாற்றிக்கொண்டிருந்தது.

 என்னைவிட மூத்தவள் என்றாலும் அவளுக்குத் தன் அப்பாவைப்போன்று ஆறுதல்படுத்தும், அரவணைக்கும், ஊக்குவிக்கும் ஓர் ஆணின் உறுதியான அன்பு தேவைப்பட்டது என நினைக்கிறேன். ஒரு குழந்தையைப்போல் அவளைத் தொடர்ந்து தாலாட்டவும் கொண்டாடவும் ஓர் அப்பா தேவை. அங்குதான் அவளைவிட இளையவனான நான் விசித்திரமாய் அவள் வாழ்வில் நுழைந்தேன்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 53

அவளுடைய அப்பா சில வருடங்களுக்கு முன்னால் மறைந்துபோக, அது அவளைக் கடுமையாய்த் தளர வைத்தது. அது உருவாக்கிய வெற்றிடம் அவளை உடைத்து நொறுக்கியது. நான் அந்த இடத்தில் சென்று சரியாய் பொருந்திக் கொண்டேன். பதிலுக்கு, நான் அதுவரை அறியாத பெண்மையின் அத்தனை அற்புதங்களை அலிபாபாவின் குகைபோல் திறந்து காண்பித்தாள்.  பிச்சைக்காரனில் இருந்து நான் ஒரே நாளில் பெரும் செல்வந்தன் ஆனேன்.

 தான் எழுதும் கதைகளை, கவிதைகளைப் பிரசுரிக்கவோ பிறரிடம் காட்டவோ முனைய மாட்டாள். நான் வாசித்தால் போதும். ஒவ்வொரு வரியையும் எனக்காக மட்டுமே எழுதினாள்.

ஆனாலும், ஆரம்ப நாள்களில் அவள் தனது பிரியத்தை என்னிடம் ஒப்புக்கொள்ள மிகவும் தயங்கினாள். ஒருநாள் மாலை மயங்கிய வேளை. சன்னமான மழை, வெண்குடையைக் கவிழ்த்தது போல் சுற்றிலும் மூடிக்கொண்டது. அவள் என்னை அழைத்து `ஒரு முக்கியமான நபரை அறிமுகப்படுத்த வேண்டும், காத்திரு’ என்றாள். ஆறு மணிக்கு அவர் பைக்கில் வந்தார். அண்ணனாக இருக்குமோ? அவர் தன்னைப் பெண் பார்க்க வந்திருப்பதாய்ச் சொன்னாள். கல்லூரிக்குள்ளா? ஆம். எனக்கு `மோகமுள்’ளில் பாபுவின் நிலை நினைவுக்கு வந்தது. அடப்பாவி! கடைசியில் எனக்கும் காதலியைப் பெண் பார்க்க வருபவனிடம் கைகுலுக்கிக் குசலம் விசாரிக்கும் அவலநிலை ஏற்பட்டுவிட்டதா? ஆனால், நல்லவேளை, `மோகமுள்’ளில் போன்றே அந்த வரன் தட்டிப்போனது.

இதற்குமேல் பொறுக்க முடியாது என அப்போதுதான் முடிவெடுத்தேன். எப்படிச் சொல்வது? ஒவ்வொரு முறையும் சொல்ல நினைத்துத் தட்டிப்போகும். ஒருநாள் பட்டிமன்றப் போட்டி எங்கள் கல்லூரியில். நாங்கள் ஒரே அணியில். அவள், தான் பேச இருப்பவற்றின் குறிப்புகளை எனக்குக் காண்பித்தாள். ஆவேசமாய் எதிரணியில் முழங்கிக் கொண்டிருப்பவருக்கு எப்படி மறுப்புச் சொல்வது என்று அடிக்கடி என் காதில் ஏதாவது ஒன்று சொல்வாள். நான் அவள் எச்சிலின் கிறுகிறுப்பான வாசனையில் சொக்கியபடித் தலையாட்டுவேன். திடீரென ஏதோ தைரியம் வர அவளிடம் காதில் என் மனதில் உறுத்திக் கொண்டிருக்கும் மூன்று சொற்களைச் சொன்னேன். கடும் இரைச்சல், கைத்தட்டல்கள், சிரிப்பொலிகள். அவளுக்குக் கேட்கவில்லை. நான் மீண்டும் அவள் காதில் சொன்னேன். அவளுக்குப் பாதி புரிந்தது. அதற்குள் அவள் பேச வேண்டிய இடம் வந்தது. அவள் திரும்ப வந்தபின் கைகுலுக்கிப் பாராட்டினேன். அப்படியே ``நான் சொன்னது கேட்டுச்சா?” என்றேன். “வெளியே வந்து சொல்லு. இங்கே ரொம்ப சத்தமா இருக்கு” என்றாள். அமைதியில் சொல்ல துணிச்சலின்றித்தானே இரைச்சல் இடையே சொல்கிறேன்? “என்ன கேட்டுச்சோ அது போதும். பதில் சொல்லு.” அவளுக்கு என் காதல் மகிழ்ச்சியாகவும் குழப்பமாகவும் இருந்திருக்க வேண்டும். ஆனால், அடுத்தநாள் பதில் சொல்கிறேன் என்றாள். அடுத்தநாள் என்னைத் தேடி வந்து “முடியாது” என்றாள். நான் உடனே சொன்னேன், “சரி, இனி நாம் சந்திக்க வேண்டாம். பேச வேண்டாம். இனிமே உன்னைத் தெரிஞ்சதாகவே காட்டிக்கொள்ள மாட்டேன்” அவள் தன் அகன்ற கண்களை உருட்டி என்னை முழுங்குவதுபோல் பார்த்தாள்.

“சரி, அதற்கு?”

“நான் உனக்குக் கொடுத்த அத்தனை புத்தகங்களையும் திரும்பத் தந்துவிடு.”

அவளுக்கு சட்டென சிரிப்பு வந்துவிட்டது. இத்தனைக்கும் நான் ரொம்ப சீரியஸாகத்தான் சொன்னேன். அவள் சற்று யோசித்துவிட்டு “சரி நாளை பதில் சொல்கிறேன்” என்றாள். அடுத்த நாளுக்காய் காத்திருந்தேன். அவள் வந்து வேறு என்னென்னமோ பேசிவிட்டுப் போனாள். ஆனால், புத்தகங்களைத் திரும்பத் தரும் விஷயத்தை மட்டும் எடுக்கவே இல்லை.

நான் அடுத்தநாள் போய்க் கேட்டேன், “ஏன் என் புத்தகங்களைத் திரும்பத் தருவதுபற்றி முடிவு சொல்ல மாட்டேன் என்கிறாய்?”

அவள் அது சரிப்படாது என என்னென்னமோ மழுப்பலாய்ப் பேசினாள்.

நான் சொன்னேன் “நீ புத்தகங்களைத் தந்தால் மட்டும்தான் நான் உறவை முறித்து விலக முடியும். இல்லாவிட்டால் எப்படி? உன்னிடம் தினமும் வந்து பேசினாலே எனக்குக் கோபம் பொங்குகிறது. ஏன் இதெல்லாம்? நான் போய் விடுகிறேனே…”

அவள் மீண்டும் சிரித்தாள். அதன் பிறகு நாங்கள் ஒரு கருத்தரங்கில் யதேச்சையாய் சந்தித்தோம். நான் அவளுக்கு முகம் கொடுக்காமல் ரொம்ப கௌரவமாய் அமர்ந்திருந்தேன். அவள் கருத்தரங்கு முடிகையில் என் கையில் ஒரு சீட்டை நீட்டினாள். அதில் ஒலியியல் குறியீடுகளைக் (phonetic symbols) கொண்டு இரண்டு வரிகள் எழுதி இருந்தாள். நானோ ஒலியியலில் ரொம்ப வீக். சுத்தமாய்ப் புரியவில்லை. அதைப் படித்துக் காட்டும்படிக் கேட்டேன். “முடியாது. நீயே படித்துக்கொள்” என்றாள். ஆனால், அவள் கண்களைப் பார்த்ததுமே அவள் என்ன எழுதியிருப்பாள் என எனக்குத் தெரிந்து போனது. அப்படி என் வாழ்க்கையின் முதல் வெற்றிகரமான காதல் – ஒரு சூறாவளியைப்போல் என்னை அலைக்கழித்து, கிட்டத்தட்டப் பைத்தியமாக்கிய காதல் – துவங்கியது.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 53

என்னிடம் அவளை எது ஈர்த்திருக்கக் கூடும்; என் இடைவிடாத பேச்சை அன்றி. பெண்களுக்கு ஓர் ஆணின் தோற்றம் இரண்டாம்பட்சம்தான் என அவள் எனக்கு உணர வைத்தாள். மகுடிக்கு மயங்கும் பாம்புபோல் பெண்கள், ஆணின் பேச்சுக்குக் கிறங்கிப் போவார்கள். என்ன சொன்னாலும் தம் சொந்தக் குரலையே கேட்டது போல் தலையாட்டுவார்கள். அவள் அப்படி என்னிடம் சொக்கிப் போயிருந்தாள்.

பெண்களைப்போல தங்குதடையற்று அன்பைக் காட்ட உலகில் யாராலும் முடியாது. நேசிக்கும் ஒருவனுக்காய் எதையும் தாங்க, ஏற்கத் தயாராவார்கள். அவர்களின் அகம் ஆகாயத்தை விட அகன்றது. ஆனால், கசப்பு ஏற்படும்போது சட்டென அதே அகம் சுருங்கிவிடும். ஓர் ஆணால் என்றுமே இந்த அளவு உணர்வுபூர்வமாய் ஒரு சக மனிதனை அணுக முடியாது. அதனால்தானோ நம் மண்ணில் பெண்களைத் தெய்வமாய் வழிபடுகிறார்கள்!

ஆனால், மிதமிஞ்சிய அன்பு என்னை பதற்றமடையச் செய்தது. ஒரு குருடன் கையிலேந்திய அகல்விளக்குபோல் அவள் என் இதயத்தில் சுடர்ந்தாள். அவளை எங்கே கீழே போட்டு உடைத்து விடுவேனோ என அஞ்சினேன். இன்னொரு பக்கம், என் குடும்பத்தினர் எங்கள் காதலைக் கடுமையாய் எதிர்த்தனர். அந்த நெருக்கடியை என்னால் சமாளிக்க முடியவில்லை. நாங்கள் பிரிந்தோம்.

பெண்களின் அன்பு ஒரு கடலைப்போல எல்லையற்றது. அதில் நீந்துகையில் மூழ்கி இறந்து விடுவோமோ என அஞ்சாத ஆண்கள் இங்கில்லை. அந்த அச்சமே சில நேரம் காதலை வெறுப்புக்கும் மன முறிவுக்கும் இட்டுச் செல்கிறது. சாதி மத வேறுபாடுகளின் சமூக வன்மமும் இந்தப் பொறியை ஊதிப் பெருக்கி நெருப்பாக்கி வளர்க்கிறது. எனக்கும் அதுவே நடந்தது. அவளைப்போன்ற அற்புதமான மனுஷியை வாழ்க்கை முழுக்கக் கொண்டாடும் கொடுப்பினை எனக்கு இருக்கவில்லை.

அவளைப் பிரிந்த அடுத்த ஐந்தாண்டுகளில் நான் கடும் மனச்சோர்வுக்கு ஆட்பட்டேன். ஒரு பக்கம் வெறுமை, இன்னொரு பக்கம் குற்றவுணர்வு. உடைந்து பல துண்டுகளாய்ச் சிதறிக்கொண்டே இருந்தேன். என்னால் எழுத முடியவில்லை. வேலையிலும் வாழ்விலும் பிடிப்பில்லை. தொடர்ந்து பல பெண்கள் என்னைச் சலனமடையச் செய்தார்கள். ஆனால், யாரும் என் ஆழத்தைத் தீண்டவில்லை. நான் முழுக்க நொறுங்கிப்போய் விடுவேனோ என அஞ்சிய சந்தர்ப்பத்தில் என் இப்போதைய மனைவி இறைவனின் கரம்போல் என்னிடம் வந்தாள். நான் அவள் உள்ளங்கையில் தலை சாய்த்துக்கொண்டேன்.

என் வாழ்வின் இரண்டாவது உக்கிரமான காதல் உறவு. கண்மூடித்தனமாய் நேசித்தோம், மோதினோம், கசந்து பிரிந்தோம், மீண்டும் இணைந்தோம். பரஸ்பரம் காயப்படுத்தியும் அடுத்து உடனே ஆற்றுப்படுத்தியும் எங்கள் காதல் வளர்ந்தது. ஆனால், இம்முறை உறவின் ஏற்ற இறக்கங்களை, மனச்சமநிலையைத் தடுமாறச் செய்ய கொந்தளிப்புகளைச் சமாளிக்கும் முதிர்ச்சி எனக்கு இருந்தது. ஒருவரை ஆழமாய் நேசிக்க அவர் கச்சிதமாய், பரிசுத்தமாய், குறைகளேயின்றி இருக்க வேண்டியதில்லை. அவர்மீது ஒரு பித்து நமக்கு இருந்தால் போதும் எனப் புரிந்துகொண்டேன்.

எங்களது இத்தனை வருட திருமண வாழ்வில் எத்தனையோ அற்புதமான தருணங்களையும் மிகச் சிக்கலான அனுபவங்களையும் கடந்து விட்டோம். ஆனால், அவள் மீதான அந்தக் கிறுக்குத்தனமான பிரியம் மட்டும் இதுவரை எனக்குக் குன்றவில்லை

- நிறைவடைந்தது

போரும் வாழ்வும்’ நாவலின் அபாரமான பெண் பாத்திரம். உலக இலக்கியத்தில் உருவாக்கப்பட்ட மிக உயிர்ப்பான, உன்னதமான பெண் என நட்டாஷாவைச் சொல்லலாம். அன்றாட வாழ்வில் அலைக்கழிப்பில், அவலங்களில், உன்னதங்களில், மன எழுச்சிகளில் ஒரே மாதிரியாகத் தன்னை ஒப்புக்கொடுத்துச் செல்லும் நட்டாஷா திருமணமாகி மகப்பேறுக்குப் பிறகு வாழ்வில் நிலைப்பட்டு அமைதியாகும் சித்திரம் அற்புதமானது.

- நட்டாஷா

`குற்றமும் தண்டனையும்’ நாவலில் வரும் பாத்திரம். சோனியா கிட்டத்தட்ட ஒரு சிறுமி. தன் குடும்பத்தைக் காப்பாற்ற வேசியாகிறாள். ஆனால், காமமோ பாவமோ தாமரைஇலை நீர்போல் அவளைத் தீண்டாமல் இருக்கிறது. தஸ்தாயெவ்ஸ்கி அவளைக் கர்த்தருக்கு நிகராய் உயர்த்துகிறார்.

- சோனியா

`மோகமுள்’ நாவலின் நாயகி யமுனாவைத் தமிழின் ஆகச்சிறந்த பெண் பாத்திரம் என்று சொல்லலாம். ஓரிடத்தில் ஒன்றாய் தங்காமல் `நீரைப்போல் இரு’ என்றார் புரூஸ் லீ. பெண்களுக்கு இது இயல்பாக வருகிறது. `மோகமுள்’ளில் யமுனா நாயகன் பாபுவைவிட வயதில் மூத்தவள். பாபு அவளை ஆவேசமாய் விரும்புகிறான். யமுனா அவனை மறைமுகமாய்த் தூண்டுகிறாள். ஆனால், வெளிப்படையாய் மறுக்கிறாள். இருவருக்கும் வயதான பின் சட்டென ஒருநாள் அவனுடன் வந்து சேர்ந்து கொள்கிறாள். தமிழ் சினிமாவில் 2000-த்துக்குப் பிறகு வந்த `விண்ணைத் தாண்டி வருவாயா’ ஜெஸ்ஸிகளின் பூர்வ வடிவம் யமுனாதான்.

- யமுனா