Published:Updated:

நம்பிக்கை தாருங்கள்!

நம்பிக்கை தாருங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
நம்பிக்கை தாருங்கள்!

நம்பிக்கை தாருங்கள்!

ஜெயலலிதா மரணத்துக்குப் பின்பு அ.தி.மு.க.வில் நடப்பதெல்லாம் ‘ஜனநாயகம்’ என்ற வார்த்தையையே அர்த்தமற்றதாக ஆக்கும் அரசியல் கேலிக்கூத்துகள்தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத சசிகலாவை முதல்வராக அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தது, முதல் கோணல். அதுவரை மௌனம் காத்துவிட்டு, முதல்வர் பதவி பறிக்கப்பட்டவுடன் ‘தியானப் புரட்சியை’ ஆரம்பித்து, ‘தர்ம யுத்தம் தொடரும்’ என்று ஓ.பன்னீர்செல்வம் சொன்னது, இரண்டாவது கோணல். இப்படிப் பல கோணல்களில் உச்சபட்சக் கோணல், இப்போது எடப்பாடி பழனிசாமியின் நாற்காலிக்கு மேல் தொங்கும் கத்தி.

நம்பிக்கை தாருங்கள்!


ஆளும் கட்சியான அ.தி.மு.க.வைச் சேர்ந்த 21 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரை நேரில் சந்தித்து, ‘இந்த ஆட்சியின்மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்!’ என்று கடிதம் கொடுத்திருக்கிறார்கள். ‘முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி மைனாரிட்டி  அரசாகிவிட்டது. அதனால் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும்’ என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் இரண்டு முறை ஆளுநரைச் சந்தித்து அழுத்தமாகக் கோரிக்கை விடுத்த பின்னும் எந்த அறிவிப்பும் கவர்னரிடமிருந்து வரவில்லை.

இந்த அரசு யார் யாரையெல்லாம் ஏமாற்றிக்கொண்டிருக்கிறது என்பதை விளக்கமாகச் சொல்லத் தேவையில்லை. ஏமாளிகளான தமிழக வாக்காளர்களை மட்டுமல்ல, தங்கள் சொந்தக் கட்சிக்காரர்களையே மீண்டும் மீண்டும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் ஆளுங்கட்சி உறுப்பினர்கள். ஒருபக்கம் தினகரனுக்கு வாலையும், ஓ.பன்னீர்செல்வத்துக்குத் தலையையும் காட்டிக்கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி, ஒருகட்டத்தில் தினகரனை உதறிவிட்டு, பன்னீர்செல்வத்தோடு சேர்ந்துவிட்டார். ‘தினகரனுக்கு ஆதரவா, எடப்பாடிக்கு ஆதரவா’ என்று ஆட்டம் காண்பிப்பவர்களாகவே ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களில் இருக்கிறார்கள். “அந்த அணியிலும் எங்கள் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள்” என்கிறார் தினகரன். “பெரும்பான்மை இல்லாவிட்டால் என்ன, பாதாளம் வரைக்கும் பாயும் ஆயுதம் கைவசம் இருக்கும்போது பயம் எதற்கு?” என்று வெளிப்படையாகவே பேசுகிறார் தமிழக அமைச்சர் ஒருவர்.

இந்த நிலையில், ‘முடிவெடுக்கும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது? முதல்வரிடமா, துணை முதல்வரிடமா, இல்லை இவர்களைப் பதவியில் விட்டுவைத்திருக்கும் ஆளுநரிடமா, அல்லது ஆளுநரை ஆட்டுவிக்கும் டெல்லியிடமா?’ என்று குழம்பித் தவிக்கிறது தமிழகம்.

நெடுவாசல், கதிராமங்கலம் துவங்கி, டாஸ்மாக்,  நீட் என்று ஒவ்வொரு விஷயத்திலும் ஏமாந்து நிற்கும் மக்கள் இந்த அரசின்மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதற்குத் தமிழகமெங்கும் தன்னெழுச்சியாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் போராட்டங்களே சாட்சி. ‘நீங்கள் எங்கள் முதல்வர் இல்லை’ என்ற முழக்கத்தையும் இந்தப் போராட்டங்களில் கேட்க முடிகிறது.

பெரும்பான்மை உள்ள அரசு என்ற நம்பிக்கை உண்மையிலேயே இருந்தால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ‘ஆளுநர் உத்தரவிடுவார்’ என்று காத்திராமல் தாங்களாகவே முன்வந்து நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் இருக்கும். `மக்களால் நான்’ என்று ஜெயலலிதாவைப் போல் பொதுமேடைகளில் மார் தட்டவும் முடியும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz