Published:Updated:

அகில இந்திய நாடகக் கழகம் - தமிழ்நாட்டை இயக்கும் 10 பேர்!

அகில இந்திய நாடகக் கழகம் - தமிழ்நாட்டை இயக்கும் 10 பேர்!
பிரீமியம் ஸ்டோரி
News
அகில இந்திய நாடகக் கழகம் - தமிழ்நாட்டை இயக்கும் 10 பேர்!

எண்ணம், இயக்கம்: மோடி அண்ட் கம்பெனிப.திருமாவேலன், ஓவியம்: ஹாசிப்கான்

த்துத் தலை இருப்பது இராவணனுக்குப் பலம். இங்கே பத்துத் தலை இருப்பது பலவீனம். ஒரு தலைகூட, தமிழ்நாட்டு மக்களை ஆட்சி செய்யத் தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட தலை அல்ல. எட்டுக் கோடிப் பேரும் தங்கள் வாழ்க்கையை இந்தப் பத்துப் பேரிடம் அடமானம் வைத்து விட்டுக் காத்திருக்கிறோம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒளிக்கீற்று காணவில்லையே என்ற ஏக்கத்துடன்!

அகில இந்திய நாடகக் கழகம் - தமிழ்நாட்டை இயக்கும் 10 பேர்!

1. எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி என்னவோ முதலமைச்சர்தான். ஆனால், அவர் போட்டிருக்கும் சட்டை பாரதிய ஜனதாவுடையது. எடப்பாடிக்கு வேட்டி எடுத்துக் கொடுத்தது சசிகலாதான். அதை அவர் மறந்துவிட்டு நடிப்பதால்தான், அவர் மானம் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மானமும் கப்பலேறிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா இருக்கும்போது சசிகலாவை நிமிர்ந்து பார்க்கவே முடியாமல் தெண்டனிட்டுக் கிடந்த பெருந்தகைகளில் ஒருவர் எடப்பாடி. அதனால்தான் ஓ.பன்னீர் செல்வத்தைவிட எடப்பாடி சிற்றெறும்பு என்று நினைத்து, சசிகலா குடும்பம் இவரைத் தேர்வு செய்தது. பா.ஜ.க. போட்ட கலப்பட ஊசியால் இவர் கடி எறும்பாக மாறினார். அதில் மருந்து தீரும்வரை எடப்பாடி இப்படியே இருப்பார். மருந்து காலியானதும் சசிகலா குடும்பத்துச் சிற்றெறும்பாக விரைவில் மாறுவார். இப்படி சுயமற்ற ஒரு மனிதன், கோட்டையில் உட்கார்ந்து இருக்கிறார்.

எடப்பாடிக்கு, ஆட்சி செலுத்துவது என்றால் எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவது மட்டும்தான் என்று புரிந்துகொண்டுள்ளார். அவர் மாநிலத்து மக்கள் தூங்கிக்கொண்டு இருப்பதால், முதலமைச்சர் இரவு நெடுநேரம் விழித்திருந்து குட்டிக்கதைகள் படிக்கிறார். மம்மி ஸ்டோரிஸைவிட டம்மி ஸ்டோரிஸ் படிக்கலாம்.

2. ஓ.பன்னீர் செல்வம்

‘அவரே முதலமைச்சர் ஆகும்போது நாம் ஆகக் கூடாதா?’ என்று எடப்பாடி பழனிசாமிக்கே முதலமைச்சர் ஆசையைத் தூண்டிவிட்ட எனர்ஜி டானிக்தான் இந்த ஓ.பன்னீர் செல்வம். சாமி கும்பிடுபவர்களைத்தான் ஜெயலலிதா நம்புவார் என்பதற்காகச் சாமியாராகவே ஆன ஆசாமி. 17 ஆண்டுகள் அ.தி.மு.க-வில் கோலோச்சிய பிறகும் 17 எம்.எல்.ஏ-க்களைக்கூடத் தன்பக்கம்  இழுக்க முடியாத அளவுக்கு ‘நல்ல பெயர்’ எடுத்த (!) பணிவுத் திலகம். ஜெயலலிதா இருந்தபோது நடித்ததைவிட, இறந்த பிறகும் ‘இருப்பதுபோலவே’ நடிக்க பன்னீரால்தான் முடியும். அதனால்தான் இந்தக் கூஜாவை, பா.ஜ.க. கையில் எடுத்தது. முதலமைச்சராக இருந்தவர், அதற்கான தார்மீக நெறிமுறைகளை மீறித் துணை முதல்வராக  ஆனதை நினைக்கும்போது, ‘கடவுளே! அவரைப் பெரியகுளம் நகராட்சித் தலைவராகவும் ஆக்கி விடாதே!’ என வேண்டிக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது.

எடப்பாடி அணியோடு சேர்ந்திருப்பது மனப்பூர்வமாக எடுக்கப்பட்ட முடிவல்ல. கட்டாயப்படுத்தி எடுக்க வைக்கப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் உடைக்கவும் செய்வார்.

3. தனபால்

தமிழகச் சட்டப்பேரவைத் தலைவர்.ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் விபீஷணர்களாக மாறியபிறகு சசிகலா குடும்பம் தேர்வு செய்திருக்கும் நவீன அர்ஜூனன், தனபால். ‘எடப்பாடியை முதலமைச்சர் பதவியில் இருந்து அகற்றிவிட்டு தனபாலை முதலமைச்சர் ஆக்க வேண்டும்’ என்று திவாகரன் நீட்டோலை வாசிக்க, தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அதை திருப்பிச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அ.தி.மு.க-வில்தான் எத்தனை முதலமைச்சர் வேட்பாளர்கள்?

தனபால் முதல்வர் ஆவாரா என்பது 100-வது கேள்விதான். ஆனால், எடப்பாடி இந்தப் பதவியில் நீடிப்பாரா என்பதைத் தீர்மானிக்கும் மனிதர் தனபால்தான். இன்றையச் சூழலில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானம் வந்தால், ஆட்சி கவிழ்ந்துபோகும். எனவே, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் உத்தரவை மீறினார்கள் என்று நடவடிக்கை எடுத்தால், தி.மு.க. உறுப்பினர்கள் சபைக்குள் அமைதி இல்லாமல் குட்கா கொண்டு வந்தார்கள் என்று நடவடிக்கை எடுத்தால், எடப்பாடிக்கு எதிர்த்து வாக்களிப்பவர்களில் 40 பேர் காணாமல் போய்விடுவார்கள்.

ஆட்சிக்கு ஆவின் பாலோ, கள்ளிப்பாலோ தனபால் கையில் இருக்கிறது.

4. தம்பிதுரை

அ.தி.மு.க. கோட்டையில் இருந்து பா.ஜ.க-வால் உருவப்பட்ட முதல் செங்கல் தம்பிதுரைதான். ஜெயலலிதா உடலருகில் அவருடைய சித்தப்பா மகன்போல் உட்கார்ந்து இருந்த வெங்கய்யா நாயுடு, தம்பிதுரை மூலமாகத்தான் அ.தி.மு.க-வின் உட்கட்சி அரசியலுக்குள் நுழைந்தார். ஜெ. மரணத்துக்குப் பின் ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சர் ஆனபோது, அவருக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் தம்பிதுரை, டெல்லிக்கு வந்த முதல்வர் பன்னீரை ஒதுக்கிவிட்டு தனி ஆவர்த்தனம் செய்தார். சசிகலா - பன்னீர் விரிசலுக்கும் ஒருவிதத்தில் இவரே காரணம். சசிகலாவுக்கும் முதல்வர் ஆசை இல்லை, நாம் ஆகலாம் என்று தூபம் போட்டார். சசிகலாவுக்குப் பிரதமர் ஆகும் கனவே வரும் என்பதைத் தம்பிதுரை உணரவில்லை. மேலும் எடப்பாடியே முதல்வராகத் தொடர்வார் என்பதையும் உணரவில்லை. இந்த நிலையில் டெல்லிக்கும் சென்னைக்குமான சேனலாகத் தொடர்கிறார்.

முதலமைச்சர் பதவிதான் கிடைக்கவில்லை. மத்திய அமைச்சர் பதவியையாவது வாங்கத் துடிக்கிறது தம்பிதுரை இதயம். அமித்ஷா இறங்கி வரவில்லை. இப்படி எத்தனை பேரைப் பார்த்திருப்பார் அந்தத் தர்மதுரை?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அகில இந்திய நாடகக் கழகம் - தமிழ்நாட்டை இயக்கும் 10 பேர்!

5. சுப்பிரமணியன் சுவாமி

ஒருகாலத்தில் சசிகலாவைத் தேள் என்றும், இப்போது தேன் என்றும் கண்டுபிடித்திருக்கும் நிறம் மாறும் விஞ்ஞானி சுப்பிரமணியன் சுவாமி. ஜெயலலிதா மருத்துவ மனையில் இருக்கும்போது, இந்த ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றார். ஜெயலலிதா இறந்த பிறகு, சசிகலாவுக்கே பதவிப் பிரமாணம் செய்ய வேண்டும் என்றார். இப்போது அ.தி.மு.க., தினகரன் பக்கமே இருக்கிறது என்கிறார். எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்கிறார். ஜெயலலிதா, சசிகலா மீது வழக்குப்போட்டு உள்ளே போகக் காரணமான சுவாமிதான், இப்போது சசிகலா குடும்பத்து பி.ஆர்.ஓ. டெல்லித் தலைமை முதல் கவர்னர் வித்யாசாகர் ராவ் வரை சுவாமியின் ட்வீட் பார்த்தே பதறுகிறார்கள். தங்களது வலது காலை எடுத்து வைக்கிறார்கள்.

பேக் சீட் டிரைவிங் செய்கிறாரோ இல்லையோ, செய்வதுபோல் நடிப்பதில் சுவாமி சமர்த்தர்.

6. குருமூர்த்தி

ஜெயலலிதா அப்பாவி, சசிகலாதான் சதிகாரி என்று ஒரு கட்சி இருக்கிறது. அதில் குருமூர்த்தியும் ஒருவர். இப்படி ஒரு குல்லாவைச் செய்து கொடுத்தவர்கள், சசிகலா விலக்கப்பட்ட பிறகு ஜெயலலிதாவின் ‘தர்மஸ்தாபனத்துக்கு’ நிர்வாகியான பட்டியலையும் பார்த்தோம்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அணியில் பா.ம.க-வைக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்திய குருமூர்த்தியே இப்போது பன்னீரை மீண்டும் எடப்பாடி பக்கமாகச் சேர்த்து, எடப்பாடியையும் வளைக்கும் காரியங்களைப் பார்த்தார். ‘மீண்டும் தி.மு.க. வந்துவிடக் கூடாது’ என்பது இவர் பக்க நியாயங்கள். அதற்காக எதுவும் செய்யலாம் என்பது இவரது வேதங்கள்.

7. நிர்மலா சீதாராமன்

கொஞ்சம் மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள். அநேகமாக இவர்தான் பா.ஜ.க. அறிவிக்கப்போகும் தமிழகத்தின் முதலமைச்சர் வேட்பாளர். இந்தியாவின் ராணுவ அமைச்சர் என்ற மிடுக்குடன் வரப்போகிறார் நிர்மலா சீதாராமன். அவரை அதற்காகத் தயார்படுத்தும் வேலைகளை எப்போதோ தொடங்கி விட்டார்கள். இங்கே அவர் அடிக்கடி வருவதும், பேட்டிகள் கொடுப்பதும் அதற்காகத்தான். ‘நீட் தேர்வுக்கு விலக்கு கிடையாது’ என்று எல்லோரும்  சொல்லிவர, ‘ஓராண்டு விலக்கு’ என்று நிர்மலாவைச் சொல்ல வைத்ததும் அதனால்தான். இப்போதும் ராணுவ அமைச்சர் என்பதன் மூலமாகக் கிடைக்கப்போகும் பிரபல்யம் தமிழ்நாட்டில் செல்லுபடி யாகும் என்று நினைக்கிறார்கள். அவருக்கும் ஆந்திர அரசியலை விட தமிழக அரசியலே இனிக்கிறது. தமிழ்நாட்டு உணர்வு இல்லாத ஒருவர்தான் இங்கே வேண்டுமென்று கண்டுபிடித்து பா.ஜ.க-வும் திணிக்கிறது.

8. வித்யாசாகர் ராவ்

தமிழ்நாட்டுக்கு மட்டும் எப்படித்தான்  விநோதமான ஆட்கள் எங்கிருந்து கிடைக்கிறார்களோ? தமிழக ஆளுநராக நியமிப்பதற்கு இந்தியாவில் தகுதி படைத்த ஆள் எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தால் மும்பையில் ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவைத் தமிழகத்தையும் சேர்த்துக் கவனிக்கச் சொல்லி இருக்கிறார்கள். பெரும்பான்மை காட்டிய சசிகலாவுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்காமல் இழுத்தவர், எம்.எல்.ஏ-க்களே இல்லாத பன்னீர் செல்வத்தை முதலில் அழைத்துப் பார்த்தவர், பெரும்பான்மை வைத்திருந்த எடப்பாடிக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல், மும்பையில் பதுங்கியவர் எனப் பல சாதனைகளுக்குச் சொந்தக் காரர் வித்யாசாகர்ராவ். பன்னீரும் எடப்பாடியும் சேர்ந்ததும் அவர்கள் இருவர் கையையும் பிடித்து சகலைகளைச் சேர்த்து வைத்தவர். ஒரு மாநில முதல்வர்மீது 21 எம்.எல்.ஏ-க்கள் நம்பிக்கை இல்லை என்று சொன்னதை, ‘உட்கட்சி விவகாரம்’ என்று ஒதுக்கியவர். தினகரனிடம், ‘நான் அப்படிச் சொல்லவே இல்லையே’ என்றவர். அரசியல்வாதி களுக்குத்தான் நரம்பில்லாத நாக்கு என்றால், ஆளுநர் களுக்குமா? ஓ...அரசியலில் தேர்ந்தவர்களைத்தானே ஆளுநர்களாக நியமிப்பார்கள்?

நியமன உரிமை உள்ள கவர்னர் பதவியிலேயே ஒருவரை நியமிக்கத் தயங்கும் பா.ஜ.க-தான், தமிழ்நாட்டில்  பா.ஜ.கவை சேர்ந்த ஒருவர் கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறது!

அகில இந்திய நாடகக் கழகம் - தமிழ்நாட்டை இயக்கும் 10 பேர்!

9. அமித்ஷா

சொந்த வீட்டுக்கு மட்டும்தான் சொன்ன நேரத்துக்கு யாரும் போக மாட்டார்கள். ஆனால், அமித்ஷா தமிழ்நாட்டுக்குச் சொன்ன நாளுக்கு வந்தது இல்லை. ‘அமித்ஷா சுற்றுப் பயணம்’ என்ற வார்த்தைகள் ஆறு மாதத்துக்கு ஒருமுறை தேதி குறிக்கப்பட்டு...அதற்கு இரண்டு நாள்களுக்கு முன் ரத்து செய்யப்படும். அந்த அளவுக்கு அவருக்குத் தமிழ்நாட்டைப் பார்த்தால் பயமாக இருக்கிறதா... அல்லது அவரது வரைபடத்தில்  அது இல்லையா எனத் தெரியவில்லை.

‘திராவிடக் கட்சிகள் இல்லாத தமிழகம்’ என்பதை அவர் ஒருமுறை சொன்னார். அதற்குச் சாத்தியமான வழிமுறை என்ன என்று யோசிக்க யோசிக்க எதுவும் பிடிபடவில்லை. ஆனால், சிக்கினார் பன்னீர். தமிழிசை, பொன்னார், ஹெச்.ராஜாக்களை நம்புவதைவிட பன்னீர்களை நம்பலாம் என்று அமித்ஷா நினைத்ததுதான் புத்திசாலித்தனம். இந்த விவகாரத்தையும் இவர்களிடம் விட்டால், சொதப்பி விடுவார்கள்; நாமே நேரடியாக டீல் செய்யலாம் என்று அமித்ஷா நினைத்ததுதான் அதைவிட புத்திசாலித்தனம். இவ்வளவையும் செய்துவிட்டு நிர்மலா சீதாராமனைத் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைப்பதுதான் புத்திசாலித்தனமாகப் படவில்லை.

10. நரேந்திரமோடி

பா.ஜ.க. ஆளும் பட்டியலில் தமிழ்நாட்டையும் சேர்த்துவிட்டார் பிரதமர். இவ்வளவு சீக்கிரம் தனது ஆளுகைக்குள் தமிழகம் வரும் என்று அவர் நினைக்கவில்லை. முதலில் பன்னீரைக் கையில் எடுத்தார்கள். பெரியகுளத்துக்குப் போய்வருவதுபோலப் பிரதமர் அலுவலகத்துக்குச் சென்று வந்தார் பன்னீர்.அதன்பிறகு எடப்பாடியைக் கையில் எடுத்தார்கள். எடப்பாடி வந்ததால், தன்னைக் கைகழுவி விட்டுவிடுவார் என்று பயந்த பன்னீரும் தொடர்ந்து சந்தித்தார். இவர்கள் இருவர் சந்திப்பும் பிரதமருக்கு நான்சென்ஸாகப் பின்னர் மாறியது. ‘இந்த இருவரையும் டெல்லிக்குள்ளே விடாதீர்கள்’ என்ற அளவுக்குப் பிரதமர் கோபம் மாறியது. இவை எல்லாம் செல்லக் கோபம்தான். ஜெயலலிதாவிடம் மூச்சுத்திணறிக்கொண்டு இருந்தவருக்கு இந்த ஆசாமிகளைக் கண்டால் குதூகலம் பிறக்காதா என்ன?

நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் பாதித் தொகுதிகளை வாங்கி அ.தி.மு.க. என்ற கட்சியைப் பாதியாக்கும் திட்டப்படிச் செயல்படுகிறது டெல்லி. எவ்வளவு வேண்டு மானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று தாரை வார்க்கும் திட்டத் துடன்தான் எடப்பாடியும் பன்னீரும் இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு நாட்டைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லை. தங்கள் நாற்காலியைப் பற்றிய கவலை மட்டும்தான்.

உலகம் முழுக்கச் சுற்றிவரும் பிரதமரே... இப்படி ஒரு கேவலமான மாநிலத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ‘புதிய இந்தியா அமைப்போம்’ என்று சொல்கிறீர்கள். ‘புதிய தமிழகம்’ எங்களுக்கு வேண்டும். வாங்கித் தருவீர்களா? எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை!