Published:Updated:

டாஸ்க்... டாஸ்க்... டாஸ்க்... - டும் டும்!

டாஸ்க்... டாஸ்க்... டாஸ்க்... - டும் டும்!
பிரீமியம் ஸ்டோரி
News
டாஸ்க்... டாஸ்க்... டாஸ்க்... - டும் டும்!

பரிசல் கிருஷ்ணா - ஓவியம்: ஹாசிப்கான்

டாஸ்க் கொடுப்பதுதான் இப்போ வைரல். பிக்பாஸ் கொடுக்கிற கெக்கபிக்கே டாஸ்க்குகளில் தொடங்கி... ப்ளுவேல் க்யூரேட்டர்கள் கொடுக்கிற கொலைகார டாஸ்க்குகள் வரை எல்லாமே வைரல்தான். யோசித்துப் பார்த்தால் இந்த அனானிமஸ் அட்மின்கள் கொடுக்கிற அபாயகரமான டாஸ்க்குகளைவிட ஆபத்தான டாஸ்க்குகள் அன்றாடம் கொடுக்கின்றன நமது அரசுகள். அப்படி நமக்குக் கொடுக்கப்பட்ட அந்தப் பயங்கர டாஸ்க்குகளின் பதறவைக்கும் பட்டியல் இதோ... 

டாஸ்க்... டாஸ்க்... டாஸ்க்... - டும் டும்!

* இன்றிலிருந்து 500, 1,000 ரூபாய் செல்லாது. நீ ஆஸ்பத்திரியில் இருந்தாலும் சரி; எந்த அவசரத்தில் இருந்தாலும் சரி... அதைப்பற்றிக் கவலையேபடாமல் மிட்நைட்டில் மிரளவைப்போம். 

* பெட்ரோல், டீசல் விலை எப்போ ஏறும் எப்படி ஏறும்னு யாருக்கும் தெரியாது. ஆனா, தினமும் ஏறிக்கிட்டே இருக்கும். 

* செல்போனுடன் ஆதாரை இணைக்க வேண்டும்; ஆதாரை, பான் கார்டுடன் கோக்க வேண்டும்; பான் கார்டை வங்கியுடன் ஜாயின்ட் அடிக்க வேண்டும்; வங்கிக்கணக்கை கேஸ் கணக்குடன்... கேஸ் கணக்கை ஆதாருடன்... இணைங்க இணைங்க இணைச்சுக்கிட்டே இருங்க.

* ஏ.டி.எம்-மில் உங்கள் பணத்தை நீங்கள் எடுக்க ஏகப்பட்டத் தடைகள் இருக்கும். அதை எல்லாம் தாண்டிப் பணத்தை எடுத்துவிட்டால், உங்களுக்குப் பரிசாக ஒவ்வொரு முறை பணமெடுக்கும்போதும் அபராதம் போடுவோம்.

* அரிசி கிடையாது...கோதுமை கிடையாது... பருப்பு கிடையாது...  சில இடங்களில் ரேஷன் கடையே இருக்காது. ஆனாலும், ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்க வேண்டும். மஸ்ட்டு மஸ்ட்டு!

* நடந்து சென்றாலும்... பறந்து சென்றாலும்... ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.

* ஒரு மாநில முதலமைச்சரை இரண்டு மாதங்களுக்கு மருத்துவமனையில் அட்மிட் பண்ணி மறைத்து வைத்திருப்போம். ஆனால், அவரைக் காட்ட மாட்டோம். அதைப்பற்றி நீங்களும் கேட்கக் கூடாது; நாங்களும் சொல்ல மாட்டோம்.

* தமிழ்நாடே தகதகவென்று எரிந்துகொண்டிருந்தாலும் நாங்கள் குளுகுளு ரிசார்ட்டில் கும்மாளமிட்டுக்கொண்டிருப்போம். சீசன் ஒன், சீசன் டூ என்று எங்கள் சேட்டைத் தொடரும்.

* சி.எம். இவர்தான்; ஆனா, ஆட்சி எங்களுதுனு ஒருத்தர் சொல்வார். இல்லை இல்லை என்னுதுன்னு இன்னொருத்தர் சொல்வார். எல்லாத்தையும் நம்பணும். நம்பிக்கிட்டே இருக்கணும்.

* நீங்கள் தேர்ந்தெடுத்த நாங்கள் எந்தக் கட்சியில் இருக்கிறோம் என்றோ, அந்தக் கட்சியில் எந்த அணியில் இருக்கிறோம் என்றோ உங்களுக்குக் குழப்பமாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்வோம். ஏன் என்று எங்களுக்கே  தெரியாது.

* கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கரன்ட் முதலான பல விஷயங்கள் இலவசமாகத் தருவோம். அடிப்படையான விவசாயத்திற்கு எந்தச் சலுகையும் கொடுக்க மாட்டோம்.

* மக்கள் எல்லாம் போராடும்போது, நாங்கள் ஏதாவது ஒரு சாமியாரோடு ஜாலி டான்ஸ் ஆடிக்கொண்டிருப்போம். அதைப்பார்த்து ரசித்து லைக்ஸ் போட வேண்டும்.

* கொஞ்சம்கூட புரியாதபடி விதவிதமாக வரிகள் விதிக்கப்படும். ஜி.எஸ்.டி, சி.ஜி.எஸ்.டி, எஸ்.டி.ஜி.எஸ்.டி என்று குழப்பிப் பைத்தியம் பிடிக்கவைப்போம்.

* மெரினா சமாதியில் நாங்கள் கூடி தியானம் பண்ணுவோம், சண்டை போடுவோம், ரேஸ் விடுவோம். ஆனால், அதே இடத்தில் நீங்கள் கூடினால், லத்தி உடைய அடிப்போம் செல்லம்ஸ். 

* உங்கள் சாப்பாட்டை நாங்கள்தான் தீர்மானிப்போம். அதையும் மீறிச் சாப்பிட்டால்  விரட்டி விரட்டி அடிப்போம். விற்பவரையும் அடிப்போம்.  

* கல்வி நிலையங்களில் மாணவர்கள் ஒற்றுமையாக இருக்கும் எந்த அமைப்பையும் கண்காணிப்போம். தடை விதிப்போம்.

* வெங்காயம், தக்காளி ஆனாலும் சரி... தங்கமானாலும் சரி.. விலை குறைப்பெல்லாம் இனி சாத்தியமே இல்லை. அதற்கு ஏற்றபடி நீங்கள்தான் பழகிக்கொள்ள வேண்டும்.

* ஹோட்டலில் விலை உயர்ந்தால், கோபப்படக் கூடாது. வீட்டில் சமைத்து சாப்பிட்டுக்கணும்.

* `தனியார் பள்ளிக் கல்விக் கட்டணம் வானுயர்ந்து இருக்கே’ என்று நீங்கள் பீதியில் இருக்க , அரசுப் பள்ளிகளை இன்னும் மோசமாக மாற்றுவோம்.  

* கல்வி முறையில் மாற்றம் கொண்டுவந்து, எல்லாரும் படிக்க இருக்கும் வாய்ப்பைக் கெடுப்போம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz