Published:Updated:

“கோழையே.... எதற்கும் அஞ்சமாட்டேன்!’’

“கோழையே.... எதற்கும் அஞ்சமாட்டேன்!’’
பிரீமியம் ஸ்டோரி
News
“கோழையே.... எதற்கும் அஞ்சமாட்டேன்!’’

ராஜ்மோகன் சுப்ரமண்யன் - ஓவியம்: ரவி

2006-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தின் முதல்வராக தேவகெளடாவின் மகன் குமாரசுவாமி பொறுப்பிலிருந்தார். பெங்களூரில் மெட்ரோ பணி, நகரச் சீரமைப்புப் பணி என பல இடையூறுகள். போதாக்குறைக்கு மாநகராட்சியில் தினந்தோறும் நிகழும் பலப்பரிட்சையால் மாநகர நிர்வாகம் ஸ்தம்பித்துப் போயிருந்தது.

நகரின் நடுவே திரியும் மாடுகளைக்கூட பிடித்து வைக்காமல் அது வீதியெங்கும் விளையாடும். அகாடமி விருதுபெற்ற மூத்த எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி ஒருநாள், அவர் செல்லும் சாலையெங்கும் மாடுகள் அசுத்தம் செய்து கொண்டிருப்பதைக் கண்டார். அன்று மாலை சில பத்திரிகைகளில் அனந்தமூர்த்தியின் மனவருத்தம் அரசின்மீது கடும் விமர்சனமாக வெளிவந்தது.

“கோழையே.... எதற்கும் அஞ்சமாட்டேன்!’’

குமாரசுவாமிக்குப் பெரும் சங்கடமாகிவிட்டது.நேராக யு.ஆர்.அனந்தமூர்த்தியின் வீட்டிற்குச் சென்றுவிட்டார் குமாரசுவாமி. நேரில்சென்று அனந்தமூர்த்தியிடம் மன்னிப்பு கேட்டு விளக்கம் சொன்னதோடு உடனடியாக அப்போது மேயராக இருந்த நாகராஜ் வரவழைக்கப்பட்டுத் தவறுகள் களைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

நம்புவதற்குக் கடினமாக இருக்கும். ஆனால் உண்மை. கர்நாடகவில் ஆட்சி அதிகாரத்தை மீறிக் கலைஞர்கள், இலக்கியவாதிகள், படைப்பாளிகள் மிக மிக சக்திமிக்கவர்கள்.அவர்கள் குரல் கொடுத்தால் ஆட்சி அதிகாரமே நடுங்கும். அரசை ஆட்டம் காணச் செய்ய ஒரு தெருப்பாடகன் போதும்.

இதையெல்லாம் பழங்கதைகளாக்கிவிட்டது  கவுரி லங்கேஷின் படுகொலை. ஐம்பத்தி ஐந்து வயது என்பது ஒரு தாயின் வயது. அந்த வயதில் உள்ள எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் நிச்சயம் நம் அம்மா தான் நினைவுக்கு வருவார். ஒரு தாயை ஈவு இரக்கமின்றித்  தோட்டாக்களால் சுட்டுக்கொன்றிருக்கின்றனர். உலகத்தின்முன் இந்தியா தலைகுனிந்து நிற்கிறது.

நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் நிகழும் நான்காவது அறிவுசார்ந்த படுகொலை இது. 2013-ல் புனேவில் நரேந்திர தபோல்கர், 2015-ல் கோலாப்பூரில் கோவிந்த பன்சாரே, 2015-ல் ஹூப்ளியில் எம்.எம்.கல்புர்கி, 2017-ல் கவுரி லங்கேஷ். இந்த நான்கு கொலைகளுக்கும் சில தொடர்புகள் இருக்கின்றன.

இந்த நால்வரும் இலக்கியத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்கள்.  மக்கள் செல்வாக்கு மிக்கவர்கள். சாதி, மதம், சமூக ஏற்றதாழ்வு, தறிகெட்ட அதிகாரப் போக்குகளுக்குச் சம்மட்டி அடி கொடுத்து வந்தவர்கள். மிக முக்கியமாக மத வெறியுணர்வுக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பி வந்தவர்கள். இவர்கள் நால்வருமே ஒன்றுபோல துப்பாக்கிக் குண்டிற்கு இரையாக்கப் பட்டிருக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“கோழையே.... எதற்கும் அஞ்சமாட்டேன்!’’

நான்கு பேரும் கொல்லப்பட்ட விதமும் ஒன்றேதான். இரண்டு அல்லது மூன்று பேர் மோட்டர் சைக்கிளில் வருவார்கள். ஏதோ கைகுலுக்குவதுபோல் சாவகாசமாகச் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிச்செல்வார்கள்.  முதல் மூன்று கொலைகளுக்கும் காரணமான குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. இதிலிருந்து ஓர் ஒற்றுமையை நாமே யூகித்துக்கொள்ளலாம். கவுரி லங்கேஷின் கொலையும் இப்படித்தான் நாளடைவில் மழுங்கடிக்கப்படும்.

“கோழையே.... எதற்கும் அஞ்சமாட்டேன்!’’


ஏதோ சந்தர்ப்பச் சூழலால் பத்திரிகைத் துறைக்கு வந்தவரல்ல கவுரி லங்கேஷ். `கருவில் திருவுடையார்’ என்பார்களே அது கவுரிக்கு  முற்றிலும் பொருந்தும்.  கவுரியின் தந்தை பளியட லங்கேஷப்பா கர்நாடக ஊடகத்துறையில் பெயர் பெற்றவர். நாடக நடிகராக, ஆசிரியராக, கல்லூரிப் பேராசியாராக வாழ்க்கையைத் தொடங்கி, வெறும் கல்வி  ஆசிரியாராக  இருந்தால் மட்டும் முழுமையான சமூக மாற்றத்தைக் கொண்டு வரமுடியாது என முடிவெடுத்துத் தன் பணியினைத் துறந்து 1980-ல் லங்கேஷ் எனும் வார இதழ் ஆரம்பித்துத் தன்னைப் பத்திரிகை ஆசிரியராக உயர்த்திக்கொண்டவர். அப்போது கவுரிக்கு வயது பதினெட்டு. பள்ளிப்படிப்பை முடித்திருந்தார்.  பத்திரிகையிலும்  இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டிருந்த கவுரிக்கு வெளியுலகம் தான் சிறந்த ஆசானாக முடியும் என்பதை உணர்ந்திருந்த லங்கேஷ், அவரை டெல்லியில் கல்லூரிப் படிப்பிற்காகச் சேர்த்தார். பின்னர் டைம்ஸ் ஆப் இந்தியா, சண்டே போன்ற இதழ்களில் பணிபுரிந்தார் கவுரி.

கவுரியின் எழுத்துகள் பெரும்பாலும் சமூகநீதிக்கான குரலாகவே ஒலிக்கும். சாதி, மதம் துவேஷங்கள், கல்வி சார்ந்த ஏற்றதாழ்வுகள் என எல்லோருக்கும் எல்லாம் சமமாகக் கிடைக்கவேண்டும் என்பதில் அவர் எழுத்துகள் வலிமையாக  எதிரொலித்தன. மனித உரிமைகள் மீறல் குறித்து அவர் மிகவும் கவலைப்பட்டார். 2004-ல் லங்கேஷ் மறைவிற்குப் பின்னர் 2005 லங்கேஷ் பத்திரிகைக்குப் பொறுப்பேற்ற கவுரி  தன் தந்தை நிர்மாணித்த ஒரு செய்தி ஊடகத்தைச் சமூக மாற்றத்திற்கான கருவியாகவே பயன்படுத்தினார். வெறும் செய்தியைப் போட்டுவிட்டுப் போனால் மட்டும் கடமை தீர்ந்தது என்று  இருக்காமல் அந்தப் பிரச்னைகள் தீரக் களம் இறங்கிப் போராடுவார். இதனால் பதிப்பாளராக இருந்த அவரின் சொந்தத் தம்பியான இந்திரஜித் லங்கேஷிற்கும் அவருக்கும் மோதல் உருவானது. லங்கேஷ் பத்திரிகையின் உரிமையை இந்திரஜித் எடுத்துக்கொள்ள உடனே கவுரி லங்கேஷ் என்று புதிய பத்திரிகையை உருவாக்கி அதில் தொடர்ந்து செயல்படத்தொடங்கினார் கவுரி.

“கோழையே.... எதற்கும் அஞ்சமாட்டேன்!’’

கர்நாடாகவில்  நக்சலைட் வேட்டை என்ற பெயரில் மலைவாழ் மக்கள் மற்றும் அப்பாவி தாழ்த்தபட்ட மக்கள் அழித்தொழிக்கப் பட்டபோது துணிச்சலாகக் காட்டிற்குள் சென்று அவர்களுடன் உரையாடி அதை வெளியிட்டு அதிரச் செய்தார். நக்சலைட் இயக்க கமெண்டர் சாகித் ராஜன் கொலைக்குப் பின்னர் அரசுடன் தீவிரமாக மல்லுக்கட்டிக் கொண்டிருந்த நக்சலைட் இயக்கத்தை வன்முறைப் பாதையிலிருந்து மாற்றிச் சாத்வீகப் பாதைக்குக் கொண்டுவந்ததில் கவுரிக்குப் பெரும் பங்குண்டு. அரசுடன் அவர்களுக்கான நியாயத்தைப் பேசி  நக்சலைட்டுகள் என்பவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் அல்ல, தமது வாழ்வாதாரத்திற்காகப் போராடும் அப்பாவிகள் என்பதை உணர்த்தி நக்சலைட்டுகள் மறுவாழ்விற்காகப் புதிய திட்டங்களை முன்வைத்தார். இதன்மூலம் பிரபல நக்சலைட் போராளிகள் நூர் ஸ்ரீதர், சிரிமணி நாகராஜ் ஆகியோர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர்.

மொழி, இனப்பாகுபாடுகளைக் கடந்து ஒவ்வொரு மனிதர்களின் முகமாகச் சிந்திப்பவர். இதனால்தான் காவிரிப் பிரச்னைகளில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது கன்னட இயக்கங்களைக் கடுமையாகச் சாடினார். ராஜிவ் காந்தி கொலையில் தண்டனைக்குள்ளாகி, குறிப்பிட்ட காலம் கடந்தும் மனிதநேயமின்றிச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினிக்கும் ஆதரவாகக் குரல் எழுப்பினார். ஹூப்ளியில் நடந்த இலக்கியவாதிகள் மாநாட்டில் முழுக்க முழுக்கப் பெருமாள் முருகனின் `மாதொரு பாகன்’ நாவலைப் பற்றிப் பேசிப் பெருமாள் முருகனுக்கு ஆதரவு கோரினார்.

சமூக நலனுக்காகப் போராடும் பெரும்பாலான போராளிகளின் சொந்த வாழ்க்கை எப்பொழுதும் சோகமாக இருக்கும் என்பதில் கவுரி லங்கேஷும் விதிவிலக்கல்ல.  தந்தையின் மறைவுக்குப் பின்னர் சொந்தத் தம்பியுடன் பிரச்னை.  சித்தானந்த ராஜ்கட்டாவுடனான  காதல் திருமணமும் நீடிக்கவில்லை. பிரபல கன்னட நாடக நடிகரும் பெங்களூரு மிரர் பத்திரிகை யாளருமான பிரகாஷ் பெலவாடியுடனான நட்பை  அவரின் பா.ஜ.க பாசத்தைக் குற்றம் சுமத்திப் பகிரங்கமாக உடைத்துக்கொண்டார்.  இந்துத்துவா எதிர்ப்பும் கிறித்துவ மற்றும் இசுலாமிய மதத்தினரின் மீதான பாசமும் இவரை ஒரு மிஷனரிகளின் கைக்கூலி என்ற விமர்சனத்திற்கும் உள்ளாக்கியது.

“கோழையே.... எதற்கும் அஞ்சமாட்டேன்!’’

``இன்றைய கிறித்துவர்களும் இசுலாமியரும் யார்? பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட இந்துக்கள்தானே. தாம் சார்ந்திருந்த  மதத்தில் தங்கள் உரிமை மறுக்கப்பட்டதால் உரிமைகள் கிடைக்கும் ஒரு மதத்தில் தம்மை இணைத்துக்கொண்டுள்ளனர். அங்கும் அவர்கள் ஒடுக்கப்படுவதை எப்படி அனுமதிக்க முடியும். நான் இவர்களுக்காகப் போராடுவதாலேயே என்னை மிஷனரிகளின் கைக்கூலி என்றால்சொல்லிவிட்டுப்போகட்டும்’’ என்று அலட்சியம் காட்டினார் கவுரி லங்கேஷ்.

சொந்த வாழ்க்கைக் காயங்களால் சமூகப் போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார் கவுரி. எம்.எம்.கல்புர்கி  படுகொலைக்குப் பின்னரான காலங்களில் இந்துத்துவாவிற்கு எதிரான தனது குரலை இன்னும் கடுமையாக மாற்றிக்கொண்டார். அவர் எந்தக் கூட்டத்தில் பேசச் சென்றாலும் அவர் எப்போதும் தவறாமல் உதிர்க்கும் வார்த்தைகள் “கோழையே! உன்னிடம் தோட்டாக்கள். என்னிடம் அழியாத வார்த்தைகள். எதற்கும் அஞ்சமாட்டேன்.’’ என்பவைதான்.

 செப்டம்பர் 5 ஆசிரியர் தினம். தமிழகத்தில் ஆனந்தவிகடன் தீபாவளி மலருக்கு எப்படிப் பெரும் வரவேற்பு இருக்கிறதோ அதேபோன்று கவுரி லங்கேஷ் பத்திரிகையின் தீபாவளி மலருக்கும் கர்நாடகாவில் பெரும் வரவேற்பு உண்டு. தீபாவளி மலர்த் தயாரிப்பில் பரபரப்பாக இருந்தார் கவுரி லங்கேஷ். வழக்கமாகப் புதன் கிழமைகளில் கவுரி லங்கேஷ் வெளியாகிவிடும். இந்த வாரம் அது கொஞ்சம் தள்ளிப்போனது. மாலை ஊழியர்களை அழைத்து அவர்களுக்கான பணியைக் கொடுத்துவிட்டு வீடு நோக்கிப் புறப்பட்டார். அப்போது அவரின் காரை  இரண்டு மர்ம மனிதர்கள் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்வதை அவர் உணரவில்லை.   வீட்டின் அருகே காத்திருந்த ஒருவன் இவர் கேட்டினுள் நுழைய எத்தனிக்கும் தருவாயில் துப்பாக்கியால் முதல் ரவுண்ட் சுட கவுரி நிலைகுலைந்து போனார். சுதாரித்து உள்ளே தப்பிக்க முயலும் போது பின்னால் தொடர்ந்து வந்த இருவரும் சுடச் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து சடலமானார்.  இந்திராகாந்தியின் படுகொலைக்குப் பின்னர் ஒரு பிரபலபெண் கொடூரமாகக் கொல்லப்படுவது இப்போதுதான்.

“கோழையே.... எதற்கும் அஞ்சமாட்டேன்!’’

கொண்ட கொள்கையில் தீவிரமும் விடாமுயற்சியும் கொண்ட இரும்பு மனுஷியான  கவுரி லங்கேஷின் இந்த முடிவு மிகவும் கொடுமையானது.  உரிமைகளுக்கு எதிராக எங்கு போராட்டம் நிகழ்ந்தாலும் ஒரு ஜீன்ஸ் பேண்ட், ஒரு பைஜாமா, தோளில் ஒரு சின்னப் பையுடன்  அங்கே கவுரி லங்கேஷைப் பார்க்கலாம். கடைசிவரை பொருளாதார ரீதியான பற்றாக்குறையுடன்தான் அவர் வாழ்க்கை தொடர்ந்தது.

கவுரியின் அம்மா இந்திரா லங்கேஷ் “ரெண்டு மூணு நாளாகவே யாரோ கண்காணிப்பதைப் போல் உணர்ந்தேன், அதைக் கவுரியிடம் சொன்னபோது, `இது எனக்குப் புதுசாம்மா!’ என்று அலட்சியமாக இருந்துவிட்டாள். என் மகள் என் கணவரைப்போலவே கடைசி மூச்சு வரை மக்களுக்காகப் போராடியவள். அவள்மீது காழ்ப்புணர்ச்சிகொண்டவர்கள் வைக்கும் குற்றசாட்டுதான் மிஷனரிகளின் கைக்கூலி என்பது. உங்களுக்கெல்லாம் ஒன்றைச் சொல்கிறேன் கேளுங்கள். அவள் இறந்தபோது அவள் வங்கியின் இருப்பு வெறும் எட்டாயிரம்தான். அவளின் காருக்குக்கூட இரண்டு மாதமாக மாதத் தவணை செலுத்தவில்லை. இருப்பினும் பொருளாதாரப் பலவீனத்தை யாரும் விலை பேச அனுமதிக்காமல் கர்மயோகியாக வாழ்ந்து, வீரப்பெண்ணாகவே மடிந்தாள்’’ என்று கண்ணீருடன் சொல்கிறார்.

கவரி லங்கேஷுக்குப் பிள்ளைகள் என்று யாரும் இல்லை. சமூக நீதிக்காகப் போராடிய மாணவர்கள் எல்லோருமே எனது  பிள்ளைகள் எனப் பிரகடனம் செய்தவர் லங்கேஷ். உண்மைதான் ஒடுக்கப்பட்டவர்களின் தாயாக வாழ்ந்து மரித்த கவுரிக்குப் பல கோடி மகன்கள் இருக்கிறார்கள். அவர்கள் லங்கேஷின் போராட்டத்தை அடுத்தகட்டதுக்கு எடுத்துச் செல்வார்கள். லங்கேஷ் உயிர்துறந்த இடத்தில் சுமார் 14 தோட்டாக்கள் கண்டெடுக்கப் பட்டிருக்கின்றன. அவை அனைத்துமே ஒரு வீரப்பெண்மணியின் முன்பு மண்டியிட்ட கோழைத்தனத்தின் அடையாளச் சின்னங்களே!

வுரி லங்கேஷின் படுகொலை பற்றி விசாரணை மேற்கொள்ளவும் கொலையாளிகளைப் பிடிக்கவும் பி.கே.சிங் தலைமையில் இருபத்தியோரு பேர்கொண்ட  சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பி.கே.சிங் முன்பு நக்சலைட் அமைப்புப் படையின் தலைவராக இருந்தவர். இவரின் காலத்தில் தான் சாகித்ராஜன் கொல்லப்பட்டார். இதனை எதிர்த்துச் சாகித்ராஜன் உடலை இன்னொருமுறை பெங்களூரில் போஸ்ட் மார்ட்டம் செய்யவைத்தவர் கவுரி லங்கேஷ். அந்த காலக்கட்டத்தில் பி.கே.சிங்கின் செயல்பாடுகளை மனித உரிமைகளுக்கு எதிரானது என்று கடுமையாக எதிர்த்தவர். இப்போது அவரின் கைகளுக்குத்தான் சென்றிருக்கிறது கவுரி லங்கேஷின் கொலைவழக்கு.