Published:Updated:

“யானைதான் எங்க பெட் அனிமல்!”

“யானைதான் எங்க பெட் அனிமல்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“யானைதான் எங்க பெட் அனிமல்!”

எம்.கணேஷ் - படங்கள்: வீ.சக்தி அருணகிரி - ஓவியம்: செந்தில்

“யானைதான் எங்க பெட் அனிமல்!”

கேரளாவின் அடையாளங்களில் ஒன்று யானை. வீடுகளிலும்கூட யானைகள் வளர்க்கிற அதிசயப் பிரதேசம் அது.  இந்த வீட்டு யானைகளை எங்கே இருந்து பிடிக்கிறார்கள்? அவற்றை எப்படி வளர்க்கிறார்கள்? இப்போதும் வீட்டுக்குவீடு யானைகள் வளர்க்கிறார்களா? கேரளாவின் யானைநேசம் எப்படி இருக்கிறது?

தேக்கடி அருகில் இருக்கும் யானவச்சால் என்ற இடம் யானைகளுக்குப் பிரபலமானது. சுற்றுலாப்பயணிகளை யானைகள்மூலம் காட்டிற்குள் டிரெக்கிங் அழைத்துச் செல்லும் இடம் அது. பனைமரக் கொட்டகையில் ஒய்யாரமாக நின்றுகொண்டு தென்னை ஓலைகளை ஒடித்துச் சாப்பிட்டிக்கொண்டிருந்த 11 யானைகளை அங்கே பார்க்க முடிந்தது. பாரம்பர்யமாக யானைகளைப் பழக்கும் தொழிலைச் செய்துவரும் பாலக்காடு மணியிடம் பேசினோம்.

“யானைதான் எங்க பெட் அனிமல்!”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“அந்தச் காலத்தில் வீடுகள்தோறும் யானைகள் இருக்கும். காடுகளில் யானைகள் எண்ணிக்கை குறைகிறது என்பதால், 1972ல் காடுகளில் யானைகளைப் பிடிப்பதைத் தடைசெய்தது கேரள அரசு! அதற்குப்பிறகு இந்தப்பழக்கம் படிப்படியாகக் குறைந்துவிட்டது.

ஆனால் அப்போதெல்லாம் எல்லா கோவில்களிலும் யானைகள் நிற்கும். அன்றைய காலகட்டத்தில் கேரளாவின் காடுகள் அனைத்தும் ராஜாக்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்தன. வீட்டிற்கோ, கோயிலுக்கோ, கட்டுமானபணிக்கோ யானை தேவைப்பட்டால், காட்டில் வசிக்கும் குரும்பர், மலையர் இன மக்களில் சிலரை அழைப்பார் ராஜா. எத்தனை யானை வேண்டும், எப்போது வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளை போடுவார். காட்டிற்குள்ளே இருப்பதால் யானைகள் எந்த வழியாக வரும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். முதலில் யானை வரும் பாதையைச் சுற்றி மூன்று குழிகள் வெட்டி அதைக் காய்ந்த மரக்கட்டை, இலைகளை வைத்து மறைத்துவிட்டு அதன் அருகில் இருக்கும் பெரிய மரத்தில் கூடாரம் அமைத்துத் தங்கிவிடுவார்கள். வெட்டப்படும் குழியானது 12 அடி அகலத்தில் 10 அடி ஆழத்தில் புனல் வடிவத்தில் இருக்கும். காட்டையே சுற்றிவரும் யானைகள் மீண்டும் அந்தப் பகுதிக்குவர குறைந்தது மூன்று மாதங்கள்கூட ஆகும். அதுவரை அந்த மரத்திலேயே அவர்கள் தங்கியிருப்பார்கள். அவர்களின் இலக்கு பெரும்பாலும் குட்டி யானையாகத்தான் இருக்கும். ஏனென்றால் குட்டியானையை எளிமையாகப் பழக்கிவிடலாம்.

“யானைதான் எங்க பெட் அனிமல்!”

யானைகள் எப்போதும் கூட்டமாக, மூத்த பெண் யானையின் வழிகாட்டுதலில் மற்ற யானைகள் பின்னால் வரும். குட்டி குழிக்குள் விழுந்துவிட்டால் அனைத்து யானைகளும் பரபரப்பாகிவிடும். அந்தக் குட்டியை மீட்கப் போராடும். ஆனால் ஒரு கட்டத்தில் நம்பிக்கை இழந்து கூட்டம் மெல்ல நகர ஆரம்பிக்கும். குட்டியானையின் தாய் மட்டும் குழியின் அருகில் நின்றுகொண்டிருக்கும். அந்தக் கூட்டம் சற்றுத் தொலைவு சென்றதும், மரத்தில் காத்திருப்பவர்கள் கீழிறங்கிவந்து, அந்தத் தாய் யானையை விரட்டிவிடுவார்கள்.

“யானைதான் எங்க பெட் அனிமல்!”

மூன்று நாள்கள் குழிக்குள் குட்டி கிடந்ததால், முதலில் அதற்குத் தண்ணீர், கிழங்கு, பழம் கொடுப்பார்கள். பிறகு அந்தக் குழிக்கு அருகிலேயே மரத்தால் ஆன கூடு ஒன்றைச் செய்வார்கள். அதனை யானைக்கூடு என்பார்கள். அந்தக் கூட்டிற்கும் குழிக்கும் ஒரு பாதை வெட்டி, குட்டி யானையைக் கயிற்றால் கட்டி அந்தக் கூட்டிற்குள் இழுத்து வந்து அடைத்துவிடுவார்கள். தன் கூட்டத்தின் நினைவு கொஞ்சம் நீங்கிய பின்னர், கூட்டிற்குள்ளே வைத்து மலையாளம் சொல்லிக்கொடுப்பார்கள். முதலில் மொழிப்பயிற்சிதான். அடுத்தக்கட்டம் கீழ்படிந்து நடப்பது தொடர்பான பயிற்சிகள். அதன் நடவடிக்கை சரியில்லையென்றால், மீண்டும் கூட்டிற்குள் அடைக்கப்படும். பயிற்சி காலம் முழுமையாக ஐந்து மாதம் நடக்கும்.

வலசை சென்ற அந்த குட்டியானையின் கூட்டம் மீண்டும் அந்த இடத்திற்கு வருவதற்குள் பயிற்சிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, யானைக்குட்டி மலையிலிருந்து கீழிறக்கப்பட்டு ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டுவிடும். குழிக்குள் எந்த யானை விழுந்தாலும் இதேபோன்ற பயிற்சிதான். யானை எந்த வயதில் குழிக்குள் விழுந்தாலும் அதனைப் பழக்கிவிடலாம். மனிதர்களின் உணர்வுகளை அதனால் எளிமையாகப் புரிந்துகொள்ள முடியும்.’’ என்றார் மணி.

“யானைதான் எங்க பெட் அனிமல்!”

மூன்று யானைகளைச் சொந்தமாக வைத்து வளர்த்துவரும் பிஜூவைச் சந்தித்தோம். “யானைதான் எங்களுக்கு பெட் அனிமல். காடுகளில் குழிவெட்டி யானை பிடிப்பதைக் கேரள அரசு தடைசெய்து, வீடுகளில், கோவில்களில் யானைகள் வளர்ப்பதையும் முறைப்படுத்தியது. அதனால், அந்தமான், பீகார், அஸ்ஸாம் போன்ற பகுதிகளிலிருந்து யானைகளை வாங்க ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் அந்த இறக்குமதி யானைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. தற்போது கேரளா முழுவதும், சுமார் 500 யானைகள் வரை வீடுகளில் மட்டும் இருக்கலாம். அவற்றின் வயது 40-க்கு மிகாமல் இருக்கும். தற்போது ஊருக்குள் வரும் ஒற்றை யானைகளை மட்டுமே பிடித்துப் பழக்கி, கோவில்களுக்குக் கொடுக்கிறார்கள்” என்றார்.

``பார்க்க இவ்வளவு பெரிய உருவமாக இருக்கும் இதற்கு உடலில் சிறியதாகப் புண் வந்தால் ரொம்ப மன வேதனைப்படும். சரியாகச் சாப்பிடாது. தூங்காது. தன் உடலின் மீது அதீத அக்கறை வைக்கும் உயிரினம் யானை. எங்கள் கையில் இருக்கும் அங்குசம் கூர்மையாக இருக்கும். எங்கே அதை வைத்துத் தன் உடலில் காயத்தை உண்டாக்கிவிடுவானோ என்று அச்சப்படும். அங்குசத்திற்குப் பயப்படுகிறது என்றால் அதனால் தன் உடலில் காயம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் தான் காரணம். யானைகள் அன்பாகப் பழகக்கூடிய உயிரினம். நம் மீது அதிகப் பாசம் வைக்கும். கால்களில் அடி பட்டால் அதுவே நமக்குக் காட்டும். மருந்து போடச் சொல்லும். பசித்தால் துதிக்கையைத் தூக்கிக் கேட்கும். நம் உடல் வாசம், வெப்பம், குரல், ஏன் நாம் நடக்கும் சத்தத்தை வைத்துக்கூட நம்மை அடையாளம் கண்டுகொள்ளும் திறன் யானைகளுக்கு இருக்கிறது. யானைகளைப்போல அன்பான ஜீவன்களை எங்குமே பார்க்கமுடியாது. அதனால்தான் அவை கேரளாவின் அடையாளங்களில் ஒன்றாகவே மாறிவிட்டது!’’ என்றார் மணி.  பின்னால் ஆமோதிப்பதைப்போல தலையை ஆட்டிக்கொண்டிருந்தது ஒரு வளர்ப்பு யானை!