Published:Updated:

கில்லர் காஸ்மெட்டிக்ஸ்!

கில்லர் காஸ்மெட்டிக்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
கில்லர் காஸ்மெட்டிக்ஸ்!

டாக்டர் கு.கணேசன்

வுடர் பூசினால் முகம் பளபளப்பாகும்... சிவப்பாகும்... மென்மையாகும் எனப் பல நூறு நன்மைகளை ஒவ்வொரு பவுடர் தயாரிப்பு கம்பெனியும் சொல்லும். ஆனால் பவுடர் பூசி ஒருவருக்கு கேன்சர் வந்து, அவர் நீதிமன்றம் வரை போய், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்திருப்பதுதான் உலகையே அதிரவைத்திருக்கும் உண்மை.

நாம் சாதாரணமாக நினைக்கும் முகப்பவுடரிலேயே நஞ்சு கலந்திருக்கிறது, அது புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்றால் நாம் உபயோகிக்கும் அழகுசாதனப் பொருட்களைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய இரண்டு டஜன் ‘காஸ்மெட்டிக்’குகளை நிச்சயம் இனம் காட்டமுடியும்.

குழந்தைகளுக்கு உபயோகப்படுத்தும் பேபி சோப், பேபி பவுடர் தொடங்கி, முகத்தில் பூசிக்கொள்ளும் ஃபேஷியல் கிரீம், உதட்டில் போட்டுக்கொள்ளும் லிப்ஸ்டிக் வரை அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பு குறித்த உண்மைகளை நெருங்கிப் பார்த்தால், எல்லோருமே செயற்கை ஒப்பனைக்கு உடனே டாட்டா காட்டிவிடுவோம்.

கில்லர் காஸ்மெட்டிக்ஸ்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘லிப்ஸ்டிக்கைத் தயாரிக்க காரீயம், காட்மியம், குரோமியம் போன்ற பலதரப்பட்ட ரசாயனங்களைச் சேர்க்கின்றனர். பெண்கள் அதிகமாக உபயோகப்படுத்தும் பிரபலமான 34 நிறுவன லிப்ஸ்டிக் தயாரிப்புகளைச் சோதித்துப் பார்த்ததில் பெரும்பாலானவற்றில் இந்த ரசாயனங்கள் அனுமதிக்கப்படும் அளவுக்கும் அதிகமாக உள்ளன. பலவற்றில் உடலில் புற்றுநோயைத் தூண்டும் அளவுக்குக் காரீயத்தைக் (Lead) கலந்திருக்கிறார்கள்’ என எச்சரித்துள்ளது, கலிபோர்னியா பெர்க்கிலி ஸ்கூல் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக்குழு.

 பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அலங்காரத்தில் விருப்பம் உள்ளவர்கள்.  ஒப்பனை செய்து தங்களது முகத்தை மிளிரவைத்துக் கொள்வதற்குப் பின்னால் ஓர் உளவியல் இருக்கிறது. ஒப்பனையால் சுறுசுறுப்பும் உற்சாகமும் கைகோர்க்கின்றன; உடலின் தோற்றப் பொலிவு கூடுகிறது; தன்னம்பிக்கை அதிகரிக்கிறது.

எல்லாம் சரி. கால் நூற்றாண்டுக்கு முன்புவரை வீடுகளில் கிடைக்கும் இயற்கைப் பொருள்களால் அலங்காரம் செய்துகொள்வதுதான் நடைமுறையில் இருந்தது. அதுவரைக்கும் உடலுக்கு எந்தவிதத் தீய விளைவுகளும் ஏற்படவில்லை. நாகரிகம் வளர வளர மேற்கத்தியக் கலாச்சாரம் இந்த ஒப்பனையிலும் புகுந்துகொண்டது. வியாபார நோக்கில் நுகர்வோரைக் கவர்வதற்காகக் கவர்ச்சியான நிறங்களைத் தருவதற்கும் நாசியைத் துளைக்கும் நறுமண வாசனைகளைக் கூட்டுவதற்கும் பலதரப்பட்ட ரசாயனங்களை அளவில்லாமல் இந்த அழகுசாதனப் பொருட்களில் கலக்க ஆரம்பித்ததுதான் பேராபத்தின் தொடக்கம்.

 அனுமதிக்கப்பட்ட அளவு என்ன?

‘டைஎதனாலமைன்’ (Diethanolamine) - நுரைதள்ளும் அழகுசாதனப் பொருட்கள் பலவற்றில் கலக்கப்படும் வேதிப்பொருள். இது வீரியம் மிகுந்த புற்றுநோய்க் காரணி (Carcinogen). இதனால் கல்லீரல், சருமம், தைராய்டு ஆகிய உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருக்கிறது. அந்த அளவுக்கு இந்த ரசாயனம் கொடுமையானது. ஆனால், நுரைதள்ளும் கிரீம்களைத்தான் நாம் அடிக்கடி அதிகம் பயன்படுத்துகிறோம். ‘நாங்கள் அனுமதிக்கப்பட்ட அளவுகளில்தான் இவற்றைச் சேர்க்கிறோம்’ எனச் சொல்லப்பட்டாலும், இந்த ரசாயனத்தின் கலப்பு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை வெளிப்படையாகப் பல நிறுவனங்கள் தெரியப்படுத்துவதில்லை. ஒவ்வொரு நிறுவனமும் என்ன விகிதத்தில் இவற்றைச் சேர்க்கிறது என்ற விவரம் யாருக்கும் தெரியாத ரகசியமாகத்தான் வைக்கப்பட்டுள்ளது.

கில்லர் காஸ்மெட்டிக்ஸ்!

நரைமுடியை மறைக்கத் தலைமுடியில் கறுப்புச் சாயம் (Hair Dye) பூசிக்கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தச் சாயத்தில் கோல் தார் (Coal Tar) எனும் ரசாயனம் கலக்கப்படுகிறது. இது ஒரு பெட்ரோலியப் பொருள். இது மூளைப் புற்றுநோயைத் தூண்டுகிறது என்றும் நிணநீர்க் கழலைப் புற்றுநோய் (Lymphoma) ஏற்படக் காரணமாகிறது என்றும் உலக ஒப்பனைப் பொருள் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.

 ஓவர் வெயிட்டும் ஓவர் மேக்அப்பும்!

உங்களுக்கு உடற்பருமன் இருந்தால், அதற்கு நீங்கள் சாப்பிடும் பீட்சாவும் பர்கரும்தான் காரணம் என்று நினைத்துக்கொண்டிருப்பீர்கள். அந்த நினைப்பைக் கொஞ்சம் ஓரங்கட்டி விடுங்கள். நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பு, வாசனை திரவியங்கள்கூட உங்கள் உடற்பருமனுக்குக் காரணம் ஆகலாம் என்கின்றன சமீபத்திய ஆராய்ச்சிகள். ஆம், சோப்பிலும் ஷாம்புவிலும் ‘தாலேட்’ எனும் ரசாயனப் பொருள் 70 சதிவிகிதம் உள்ளது. இவற்றை அந்தப் பொருட்களின் கொழகொழப்புக்காகவும், அடர்த்திக்காகவும், கண்ணைக் கவரும் நிறத்திற்காகவும் சேர்க்கின்றனர். பொதுவாக, வீட்டைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் பலதரப்பட்ட பொருட்களிலும் இந்த ரசாயனத்தின் பயன்பாடு அதிகம். பொம்மைகள் செய்யப்படுவதற்கும் பெயிண்ட் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களைத் தயாரிக்கவும் தாலேட்தான் உதவுகிறது. பிளாஸ்டிக் பொருட்களில் ‘பிஸ்பினால் ஏ’ எனும் ரசாயனமும் அதிகம் உள்ளது. இந்த இரண்டுமே உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பது ஆய்வில் உறுதியாகி உள்ளது.

முக்கியமாக, இந்தப் பொருட்களின் நிறங்களுக்கு மயங்கி நாம் அவற்றைத் தொடர்ந்து உபயோகிக்கும்போது, தாலேட் ரசாயனம் கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் கலந்து, உடலில் சுரக்கும் ஹார்மோன்களுக்கு இடைஞ்சல் தருகிறது. இதன் விளைவாகக் குழந்தைகளுக்கும் வளரிளம் பருவத்தினருக்கும் உடற்பருமனை ஏற்படுத்துகிறது என நியூயார்க்கில் உள்ள மவுண்ட் சினாய் மருத்துவப் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த மாதிரியான ஆராய்ச்சிகளும் புள்ளிவிவரங்களும் இந்தியாவில் குறைவு என்பதால், இந்த ரசாயனத்தின் ஆபத்து அறியாமல் நாம் அளவுக்குமீறி உபயோகிக்கிறோம். அதற்குப் பரிசாக உடற்பருமனைப் பெற்றுக்கொண்டு அவதிப்படுகிறோம்.

உடல் வாசனைக்காக உபயோகிக்கும் பெர்ஃப்யூம்ஸ் என அழைக்கப்படும் வாசனை திரவியங்களில் பர்ஃபம் (Parfum) எனும் ரசாயனப் பொருள் கலக்கப்படுகிறது. இது குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதுடன் ஆஸ்துமாவையும் வரவேற்கிறது. பெரியவர்களுக்கு நரம்புத்தளர்ச்சி நோயை ஏற்படுத்துகிறது. இதுபோல் சருமத்தை ஈரமூட்ட உபயோகப்படுத்தப்படும் கிரீம்களில் ‘பாலிஎதிலின் கிளைக்கால்’ உள்ளது. இதுவும் புற்றுநோயை ஊக்கப்படுத்தும் ஒரு ரசாயனம்தான் என்றும், உடலில் சிறிய அளவில் புற்றுநோய் இருந்தால்கூட அதைத் தூண்டிவிட்டு அதிகப்படுத்தும் ஆற்றல் இதற்குண்டு என்றும் உலகச் சுகாதார நிறுவனமே எச்சரித்துள்ளது.

கில்லர் காஸ்மெட்டிக்ஸ்!

காஸ்ட்லி பிஸினஸ்!

உலக முழுக்க அழகுசாதனப் பொருட்களின் வர்த்தகம் ஆண்டுக்கு 35,000 கோடி ரூபாய். டிபார்ட்மெண்டல் ஸ்டோர், சூப்பர் மார்க்கெட், மருந்துக் கடைகள், மால்கள், பெட்டிக் கடைகள் என அங்கிங்கெனாதபடி எங்கும் கிடைக்கும் பொருட்களாக இந்த அழகுசாதனைப் பொருட்கள் இடம் பிடித்துள்ளன. மக்களின் வாழ்க்கைமுறைகளில் புதுப் புது நாகரிகங்கள் வளர்ந்து வருகின்ற காரணத்தால், 2022-ல் இது 45,000 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் அண்மைக்காலமாக உலகம் எங்கும் அழகுசாதனப் பொருட்களின் ஆன்லைன் விற்பனை மிகவும் அதிகரித்துள்ளது.

இந்தச் சூழலில் நுகர்வோரை ஏமாற்றும் உத்திகள் பலவும் இதில் பின்பற்றப்படுகின்றன. அந்த நிறுவனங்களின் பட்டியலில் பன்னாட்டு நிறுவனங்களும் உண்டு. உதாரணமாக, ஒரு நறுமணப்பொருள் அடங்கிய திரவத்தில் ‘அன்சென்டெட்’ (Uncented) சேர்க்கப்படவில்லை என்று அச்சிட்டிருப்பார்கள். ஆனால் அதற்கு நறுமணம் எதனால் வந்தது எனத் தெரிவித்திருக்கமாட்டார்கள். மேலும், எல்லா அழகுசாதனப் பொருட்களையும் எல்லா வயதினரும் பயன்படுத்த முடியாது. ஒவ்வொன்றும் அதற்கென உள்ள வயதினர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால் இது குறித்த தகவல்கள் தெளிவாக இருக்காது. காரணம், இதனால் விற்பனை குறைந்துவிடும் என்ற அச்சம் அதன் தயாரிப்பாளருக்கு. இதன் விளைவாக, பெரியவர்கள் பயன்படுத்த வேண்டிய ஓர் அழகுசாதனப் பொருளைக் குழந்தைகளும் பயன்படுத்த நேருகிறது. இதனால் குழந்தைக்கு ஆரோக்கியம் கெடுகிறது.

மேக்அப் போடுவது எப்படி?

அடுத்து எந்த ஒரு அழகுசாதனப் பொருளையும் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று ஒரு விதிமுறை உண்டு. சருமத்தில் தேய்க்க வேண்டுமா, தடவ வேண்டுமா, தெளிக்க வேண்டுமா, தண்ணீரில் கலக்க வேண்டுமா, அப்படியானால் எவ்வளவு கலக்குவது, எவ்வளவு நேரம் கலக்குவது, சருமத்தில் தேய்த்துவிட்டு எப்படிக் காய வைப்பது, எவ்வளவு நேரம் காயவைப்பது இவற்றையெல்லாம் நுகர்வோருக்குத் தெளிவாகப் புரியவைக்க வேண்டியது அந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் அத்தியாவசியப் பணி. இந்த விவரங்கள் அடங்கிய குறிப்புகளை அச்சிட்டுக்கொடுக்க வேண்டும். ஆனால், அந்தத் தாள்களில் பெரும்பாலானவை வாசிக்க முடியாத அளவுக்குச் சிறிய எழுத்துகளில் அச்சிடப்பட்டிருக்கும். இதைப் படிப்பதற்கெல்லாம் நுகர்வோருக்கு நேரமும் பொறுமையும் இருப்பதில்லை. எனவே, இவற்றைப் பலரும் பல நேரங்களில் முறைப்படி உபயோகிப்பதில்லை. இப்படி உபயோகத்தில் முறை தவறினாலும் அந்த அழகுசாதனப் பொருளில் சாதாரணமாக உள்ள ஒரு ரசாயனம் புற்றுநோயை ஊக்குவிக்கும் காரணியாக மாறுவதற்கு அதிக வாய்ப்புண்டு.

மனித உடல் அமைப்பின்படி ஒவ்வொருவருக்கும் அவரவர் சருமத்தின் தன்மை மாறும். அதற்கேற்றவாறு அழகுசாதனப் பொருளின் தேவையும் மாறும். ஆனால், இதை அழகு சாதனப்பொருளைத் தயாரிக்கும் நிறுவனமும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை; அதை வாங்கி உபயோகிக்கும் நுகர்வோருக்கும் அதன் முக்கியத்துவம் புரிவதில்லை. இன்னும் சொல்லப்போனால், ‘அடுத்தவர்கள் அதைப் பயன்படுத்துகிறார்கள், ஆகவே நாமும் அதைப் பயன்படுத்தலாம்’ எனும் ஒரு பொதுவான நம்பிக்கையில் அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவோர்தான் நாட்டில் அதிகம். இதுதான் பல ஆரோக்கியக் கேடுகளுக்கு அடித்தளம் போடுகிறது என்கிறது, ‘அலர்ஜி டைம்ஸ்’ எனும் மருத்துவ ஆராய்ச்சி இதழ்.
பொதுவாக, அழகுசாதனப் பொருட்களின் மூலப்பொருட்களும் மற்ற ரசாயனக் கூட்டுப்பொருள்களும் அளவோடு இருந்தால் ஆபத்தில்லைதான். ஆனால், இந்த அளவு எல்லைகளைக் கட்டுப்படுத்தும் அமைப்புகள் பல நேரங்களில் செம்மையாகச் செயல்படுவது இல்லை. பல அழகுசாதனப் பொருட்கள் ‘சர்வதேச அங்கீகாரம் பெற்றவை’ எனும் சான்றிதழுடன் பல நாடுகளில் விற்பனைக்கு வந்துவிடுகின்றன. எனவே, சந்தைக்கு வந்திருக்கும் உள்நாட்டில் அந்தப் பொருள் சோதனைக்கு உள்ளாவதில்லை. புகார் வந்தால் மட்டுமே அது பரிசோதனைக்கு உள்ளாகும். இதைப் பயன்படுத்தி முறைகேடுகள் செய்யும் சில நிறுவனங்கள் அழகுசாதனப் பொருட்களை முறைதவறி தயாரிப்பதும் உண்டு.

இன்னொன்று, சில அழுகுசாதனப் பொருட்களுக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகம் (FDA) ‘பொதுவாக இது பாதுகாப்பானது’ (Generally Recognized As Safe - GRAS) எனும் சான்றிதழையும் கொடுக்கிறது. இதைப் பெற்றுக்கொண்ட நிறுவனத் தயாரிப்புகளுக்கு, அந்தப் பொருளை விற்பனை செய்ய அடுத்தநாடுகளில் அவ்வளவாக சிரமம் ஏற்படுவதில்லை. எனவேதான், இந்த வசதியைப் பயன்படுத்தி நுகர்வோரைப் பல நிறுவனங்கள் ஏமாற்றிவருகின்றன.

ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றும் கூட்டத்துக்குக் குறை இருக்காது. இது உலக நியதி. இதை மாற்ற முடியாது. மாற்றம் நம்மிடம் இருந்துதான் தொடங்க வேண்டும். ஆம், நம் ஆரோக்கியம் நம் கையில்!

கில்லர் காஸ்மெட்டிக்ஸ்!

பாதுகாப்பாக அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது எப்படி?

* தரமான அழகுசாதனப் பொருட்களை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.

* டைஎத்தனாலமைன், டிரைஎத்தனாலமைன், பினலின் டைஅமைன் உள்ளிட்ட மொத்தம் 17 வகை ரசாயனங்கள் கொண்ட அழகுசாதனப்பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

* அழகுசாதனப் பொருட்களை முதல்முறையாகப் பயன்படுத்தும்போது அதற்கான ஒவ்வாமை பரிசோதனையை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

* அழகுசாதனப் பொருட்களை உடலில் பயன்படுத்துவதற்கு முன்னால் அதில் குறிப்பிட்டுள்ள குறிப்புகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். உதாரணத்துக்கு, உதட்டில் லிப்ஸ்டிக்கைப் பூசுவதற்கு முன்னால் பன்னீரால் (ரோஸ் வாட்டர்) கழுவ வேண்டியது முக்கியம். அதுபோல் லிப்ஸ்டிக்கை நீக்கிய பிறகும் உதட்டைப் பன்னீரால் கழுவ வேண்டும்.

* எளிமையான அழகுசாதனப் பொருட்களால் அழகை மேம்படுத்திக் கொள்ளலாம்; அடர்த்தியான ஒப்பனை ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும்.

* அடிக்கடி அழகுசாதனப் பொருட்களை மாற்றக் கூடாது.

* செயற்கை அழகுசாதனப் பொருட்களுக்கு அடிமையாவதைவிட இயற்கையாகக் கிடைக்கும் காய், பழம், தயிர் போன்றவற்றைப் பயன்படுத்தி ஒப்பனை செய்துகொள்வதுதான் ஆரோக்கியத்துக்கு என்றென்றும் நன்மை பயக்கும்.

கில்லர் காஸ்மெட்டிக்ஸ்!

புழக்கத்தில் இருக்கும் பொதுவான மேக்கப் பொருட்கள்:

* பவுண்டேஷன் கிரீம் – இதுதான் எல்லாவித கிரீம் மேக்கப்களுக்கும் அடித்தளம்.

* கன்சீலர்கள் - வடுகளை மறைக்கும் கிரீம்கள்.

* பிளஷ் (BLUSH) - இது கன்னங்களைச் சிவக்க வைக்கும் கிரீம்.

* பிரைமர் கிரீம் - முகத்தின் நிறத்தை மெருகேற்றுவது.

* ஐ லைனர் - காஜல் கண் மை.

* மஸ்காரா ஐ லேஸ் – கண்ணிமைகளைப் பெரிதாகக் காண்பிக்கும்.

* லிப்ஸ்டிக், லிப் பென்சில், லிப் கிளாஸ் – உதட்டை அழகுபடுத்துபவை.

* பிளீச்சிங், கெமிக்கல் ஃபேசியல், ஃபேசியல் வாஷ், ஃபேசியல் சீரம் – முகத்தின் அழகை அதிகரிக்க.

* ஷாம்பு – முடியின் அழுக்கை அகற்றுவதற்கு.

* கண்டிஷனர் ஷாம்பு – முடியை மெல்லியதாக ஆக்குவதற்கு.

* ஹேர் ஸ்பிரே – முடியை ஸ்டைல் செய்வதற்கு.

* ஹேர்ஜெல் - முடியை அழகுபடுத்த.

* ஹேர் டை – நரைமுடியை மறைப்பதற்கு.

* ஹேர் கலரிங் – ஒருவர் விரும்பும் நிறத்துக்கு முடியின் நிறத்தை மாற்றுவதற்கு.

கில்லர் காஸ்மெட்டிக்ஸ்!

இந்தியாவில் அழகுசாதனப் பொருட்கள் மார்க்கெட்டின் பர்ஃபாமென்ஸ் எப்படி?

* 2014-ல் ஒரு தனியார் நிறுவனம் எடுத்துள்ள புள்ளிவிவரப்படி, இந்தியாவில் ஆண்டுக்கு 650 ஆயிரம் கோடிக்கு அழகுசாதனப் பொருட்கள் விற்பனை ஆகின்றன.

* இது 2020-ல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் விற்பனை வளர்ச்சி அளவைவிட இரண்டு மடங்கு அதிகம்.

* உலகில் அழகுசாதனப் பொருட்களின் விற்பனை அமெரிக்காவில்தான் அதிகம்.

* கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் ஒப்பனைப் பொருட்களின் விற்பனை 60 சதவீதம் அதிகரித்துள்ளது.

* முகத்தை ஒப்பனை செய்யும் அழகுசாதனப் பொருட்களும் தலைமுடி அலங்காரத்துக்கு உதவும் அழகுசாதனப் பொருட்களும் அதிக வேகத்தில் வளர்ச்சி கண்டுள்ளது.

* சருமத்துக்கான அழகுசாதனப் பொருட்களின் விற்பனை குறைந்துள்ளது.

கில்லர் காஸ்மெட்டிக்ஸ்!

இந்தியாவில் மருந்துகள் மற்றும் அழகுசாதனைப் பொருள் சட்டம் – 1940

(Drugs and Cosmetics Act – 1940)


இந்தியாவில் விற்கப்படும் அழகுசாதனப் பொருட்கள் எல்லாம் தரமானவையா? பாதுகாப்பானவையா? இதற்கு யார் பொறுப்பு? இங்கு விற்கப்படும் அழகுசாதனப் பொருட்களின் தரத்தைக் கண்காணிக்கவும் விற்பனையைக் கட்டுப்படுத்தவும் ‘மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாடு அமைப்பு’ (Central Drugs Standard Control Organization) உள்ளது. முக்கியமாக, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அழகுசாதனப் பொருட்கள் அனைத்தும் இந்த அமைப்பிலிருந்து லைசென்ஸ் பெற்ற பிறகுதான் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவர முடியும். என்றாலும், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் முறையான மீள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்ப டுவதற்கான ஆய்வுக்கூட வசதிகளோ, மருந்து ஆய்வாளர்களோ தேவையான அளவுக்கு இந்தியாவில் இல்லை. புகாரின்பேரில் ஏதாவது ஒரு மாநிலம் ஒரு அழுகுசாதனப் பொருளை பரிசோதித்துப் பார்க்கிறது என்றால், உடனே மற்ற மாநிலங்களும் பரிசோதிக்கின்றன. முதல் மாநிலம் அந்த நடவடிக்கையை எடுத்திருக்கா விட்டால், நாட்டில் எந்த மாநிலமும் எடுத்திருக்காது. அப்படி ஏதாவது ஒன்றிரண்டு பொருட்கள் பரிசோதிக்கப்பட்டு, மக்களின் ஆரோக்கியத்துக்குப் பாதுகாப்பானது இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால், மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 1940-ன் விதிகளின்படி தண்டனை வழங்கப்படும்.