Published:Updated:

ஜினல்... ஜினல்... ஒரிஜினல்!

ஜினல்... ஜினல்... ஒரிஜினல்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஜினல்... ஜினல்... ஒரிஜினல்!

எஸ்.சரவணன் - ஓவியங்கள்: கண்ணா

டிரைவிங் லைசன்ஸ் ஒரிஜினல்தான் வைத்திருக்க வேண்டும் என்ற அறிவிப்பு வந்தாலும் வந்தது, தமிழகமே பரபரத்துக் திரிகிறது! ``எங்கே தேடுவேன், நான் எங்கே தேடுவேன்” என வீட்டையே கவிழ்த்துப்போட்டு ஒரிஜினல் லைசன்ஸைத் தேடுகிறார்கள் மக்கள். லைசன்ஸ் விஷயத்தில் மட்டுமல்ல, இனித் தமிழ்நாட்டில் எல்லாமே ஒரிஜினல்தான் என்ற நிலை வந்தால் எப்படி இருக்கும்?

ஜினல்... ஜினல்... ஒரிஜினல்!

கண்ணு கலங்குமே!

இனி மேக்கப் இன்றி ஒரிஜினல் முகத்தோடுதான் அனைவரும் இருக்க வேண்டும் என்பதால், என் ஆள் வரும் என்று தெருமுனையில் காத்திருப்பவன் எல்லாம், ஐந்தாறு முறை அவன் ஆள் கடந்து சென்றும், அடையாளம் தெரியாமல் தவிப்பான். `ரைஸா’ போல மேக்கப்பிலே இருந்த பெண்கள் எல்லாம், மேக்கப் இல்லாததால் சிம்பிளாகச் சுற்றுவார்கள். தலைக்கு  டை அடிக்கவும்கூட தடை என்பதால், இளநரை பையன்கள் கூட அஜீத்தின் கசின்கள் போலவும், தோனியின் சேனைகள் போலவும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் திரிவார்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஜினல்... ஜினல்... ஒரிஜினல்!
ஜினல்... ஜினல்... ஒரிஜினல்!

ஆட்சி அலறுமே!

``எங்களுக்கும் வேண்டும் ஒரிஜினல் முதல்வர்’’ என்று மக்கள் போராட்டம் நடத்துவார்கள். எடப்பாடியும் பன்னீரும் நாங்களும் ஒரிஜினல்தான் என்று அம்மா சமாதியில் கற்பூரம் அடித்துச் சத்தியம் பண்ணுவார்கள்! இத்தனை நாட்களாகச் செடியில் ஒரிஜினல் இலை மட்டுமே இருந்தது. இப்போது அதில் பூ பூத்திருக்கிறது என்று நாஞ்சில் சம்பத் தொண்டை கிழியத் தொங்க விடுவார்! நாங்கதான் ஒரிஜினல் அ.தி.மு.க என்று மேலும் பல குரூப்புகள் பட்டையக் கிளப்பும். தீபாவிடம் நீங்க ஒரிஜினல் அ.தி.மு.க வா என்று கேட்டால் ‘`அதை நீங்கள்தான் கூற வேண்டும்” என்று பீதியூட்டுவார். ஒரிஜினல் பொதுச்செயலாளர் என்ற பதவியை உருவாக்கி, அதைத் தினகரனுக்கு வழங்க வேண்டும் என எம்.எல்.ஏ-க்கள் தீச்சட்டி எடுப்பார்கள்.

ஜினல்... ஜினல்... ஒரிஜினல்!

யூடியூப் அலறுமே!

வாட்ஸ் அப்பில் எது அனுப்பினாலும் ஒரிஜினலாகத்தான் அனுப்பவேண்டும் என்று அறிவிக்கப்படும். எந்த மெசேஜையும் ஒரிஜினலாகக் கைப்பட ஒவ்வொருவரும் டைப் செய்து மட்டுமே அனுப்ப வேண்டும் என்பதால், வாட்ஸ் அப்பிலும் பேஸ்புக்கிலும் நோட்டிஃபிகேஷன்கள் வந்து குவியாமல், பொங்கலுக்கு வெள்ளையடித்ததுபோல அந்தப்பகுதி பரம சுத்தமாகும். “தமிழனாக இருந்தா ஷேர் பண்ணு” என்ற பொன்மொழி வரலாற்றுப் பிழையாகும். காபி, பேஸ்ட், ஃபார்வேடு, ஷேர் முதலிய ஆப்ஷன்களை கம்ப்யூட்டர் மற்றும் போனிலிருந்து நீக்கும்படி ஆப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட கம்பெனிகளுக்குத் தமிழக முதல்வர் மெனக்கெட்டுக் கடிதங்கள் அனுப்புவார்! அதைப் பார்த்து கம்பெனிகள் என்ன வில்லத்தனம்... என்று திகிலில் உறையும். இது இலுமினாட்டிகள் சதி என்று யூடியூப் அலறும்!

ஜினல்... ஜினல்... ஒரிஜினல்!

சீனா சிதறுதே!

சீனப் பொருட்கள் ஒரிஜினல் இல்லை என்பதால் அவை தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தப்படும் என்று போராளி அமைப்புகள் போர்க்கொடி உயர்த்துவார்கள்!  பாண்டிபஜாரில் கூவிக்கூவி விற்கப்பட்ட சைனாப் பொருட்கள் காணாமல்போகும். ஒரிஜினல் சார்ஜர் மூவாயிரம் ரூபாய், ஹியர்போன் இரண்டாயிரம் ரூபாய் என்று விலை உயரும்போதுதான் சீனாக்காரனின் அன்பை உணர்ந்து மக்கள் கண்கலங்குவார்கள்! சீனப்பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து இந்தியாவிடம் கடன்வாங்கும்!

ஜினல்... ஜினல்... ஒரிஜினல்!

சீரியல் சிரிக்குதே!

தமிழ் சீரியலுக்கும் இனி ஒரிஜினல் கதைதான் என உத்தரவைக் காட்டிக் கெடுபிடி போடுவார்கள். ஆனால் எங்ககிட்ட எப்பயுமே ஒரே கதைதான் என்று சீரியல் இயக்குநர்கள் பகடி பண்ணிப் பல்லைக்காட்டுவார்கள். இதையும் மீறி... ஒவ்வொரு சீரியலும் மதிய நேரத்து கே.டிவி படங்களின் ரீமேக்தான் என்பதைக் கண்டுபிடித்து மக்களே சீரியல்களுக்குத் தடைவாங்குவார்கள். சீரியல் இல்லாததால் தீம் இசை கொடுமைகளின்றிக் கணவன்மார்கள் கிரிக்கெட் பார்ப்பர். இத்தனை நாள் கண்டுகொள்ளப்படாமல் விட்ட பக்கத்து வீடுகளின் இரகசியங்கள், பெண்களால் அலசி ஆராயப்பட்டு, துவைத்துக் காயப்போடப்படும்!

ஜினல்... ஜினல்... ஒரிஜினல்!

கொரியா கதறுமே!

படம் எதுவாக இருந்தாலும் அதில் கதை ஒரிஜினலாக இருக்கவேண்டும். இதனால் கதைகளும் படத்தலைப்புகளும் கிடைக்காமல் தமிழ் சினிமா பதறும்! எந்தக் கதையைக் கூறினாலும், இந்தக்கதை உகண்டாவிலும், நைஜீரியாவிலும், கொரியாவிலும் வந்து மாமாங்கம் ஆகிறது என்று ட்ரைலரைப் பார்த்தே நெட்டிசன்கள் துவைத்துத் தொங்கவிட்டுப் படத்திற்குத் தடை வாங்குவார்கள். யாருக்கும் தெரியாமல் கதை திருட எந்த நாட்டுப் படங்கள் பார்க்கலாம் என அசிஸ்டென்ட் டைரக்டர் பட்டாளம் ஒன்று ரூம்போட்டு யோசிக்கும்! மேக்கப்பும் விக்கும் இல்லாத நடிகர்களை மக்களுக்கு அடையாளம் தெரியாது... இவர் பிரபல நடிகரா? புதுமுகமா? எனப் படம் முடிந்து பலநாள் ஆகியும் சந்தேகம் இருக்கும். எந்த சினிமா இசை வந்தாலும் ``காபி காபி” என்று கமென்டுகள் வந்து விடும். இந்த ஒரிஜினல் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் வள்ளுவர் கோட்டத்தில் சினிமா துறையினர் ஜமுக்காளத்தை விரித்துப்போட்டு உண்ணாவிரதம் இருப்பார்கள்!

ஜினல்... ஜினல்... ஒரிஜினல்!

இட்லி வேகுதே!

தமிழனின் ஒரிஜினல் பாரம்பரிய உணவு இட்லியா? உப்புமாவா? என்ற விவாதம் ஆரம்பிக்கும். இட்லி எனக் கூறுவோர், சமுதாயத்தால் உச்சி முகர்ந்து ஏற்கப்படுவர்! உப்புமா என்போர் மனைவியரின் குட்புக்கில் இடம்பிடிப்பர்! தமிழனின் பானம் ‘குளம்பி’ என்றதொரு ஆய்வுக்கட்டுரை வெளிவரும். ‘’குளம்பி என்றால் என்னடா?” என்று இளைய தலைமுறை குழம்பித் தவிக்கும். “எங்கும் ஒரிஜினல், எதிலும் ஒரிஜினல் எனும் போது, எங்களுக்கு மட்டும் ஏண்டா ஒரிஜினல் கிடைக்கவே மாட்டேங்குது?” என்ற குடிமகனின் கேள்விக்கு மட்டும் அந்த சர்வேசனிடம்கூட விடை இருக்காது மக்கழேய்ய்ய்!