Published:Updated:

செப்டம்பர் பயங்கரம்!

செப்டம்பர் பயங்கரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
செப்டம்பர் பயங்கரம்!

மருதன்

செப்டம்பர் பயங்கரம்!

ரு பொல்லாத யானையைப் போல் தடதடவென்று ஃப்ளோரிடாவுக்குள் புகுந்து கண்ணில்பட்ட அனைத்தையும் சீற்றத்துடன் மிதித்துப் போட்டுவிட்டுச் சென்றிருக்கிறது இர்மா புயல்.

இர்மா புயலின் நீள அகலமும்  ஃப்ளோரிடாவின் நீள அகலமும் கிட்டத்தட்ட ஒன்றே என்பதால் அழிவும் பெரிதாகவே இருந்திருக்கிறது. இப்படி யெல்லாம் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை என்று ஃப்ளோரிடா நிச்சயம் சொல்ல முடியாது. வெகு தூரத்தில் முதல் மணியோசை கேட்கும்போதே வருவது யானை என்று வானியல் நிபுணர்கள் எச்சரித்துவிட்டார்கள். முடிந்தவரை எல்லோரும் வெளியேறிவிடுங்கள் என்றும் அறிவித்துவிட்டார்கள்.

செப்டம்பர் பயங்கரம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இர்மா தொடங்கியது என்னவோ ஆப்பிரிக்காவில்தான். மேகக் கூட்டங்களாகவும் சிறு துளி மழையாகவும் தொடங்கிய இர்மா அமைதியாகத் தவழ்ந்தபடியே அட்லாண்டிக் பெருங்கடலைத் தொட்டது. ஆகஸ்ட் 27-ம் தேதி அது புயலாக மாற்றமடைந்தது. பாதி அட்லாண்டிக் கடலிலேயே காட்டுத்தீபோல வளர்ந்துவிட்ட இர்மா மேற்கில் நகர நகர, ஐந்தாம் எண் அபாயம் கொண்ட ஒரு பெரும்புயலாக முழுவளர்ச்சி கண்டுவிட்டது. அடுத்து ஃப்ளோரிடாதான் என்று அப்போதே திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்கள்.  அவசரநிலைப் பிரகடனமும் அறிவித்து விட்டார்கள். ஃப்ளோரிடாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் குறைந்தது 25 சதவிகிதம் பேராவது உடனடியாக வெளியேறிச் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

செப்டம்பர் 8-ம் தேதி, மழை பெய்திருக்கிறது. மழையா அல்லது கூரையில் ஏதாவது சத்தமா என்று கேட்கும்படியான சிக்கனமான மழை. பிறகு பலத்த மழை. சனிக்கிழமை மிதமான புயல் ஆரம்பமாகிவிட்டது. காற்று சுழற்றியடிப்பது வீட்டுக்குள் கேட்கும் என்றாலும், ஒருவரும் அச்சப்படவில்லை. புயல் அவர்களுக்குப் புதிதல்ல என்பதால், பாப்கார்ன் கொரித்துக்கொண்டே டி.வி பார்த்துக்கொண்டிருந்தனர். மதிய அளவில் காற்று வீசுவதும் நின்றுவிட்டது. தரையில் விழுந்துகிடக்கும் மரங்களை வேடிக்கை பார்க்க மக்கள் வீதிகளில் நடக்கத் தொடங்கினர். பொழுது விடிந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லிக்கொண்டார்கள். தேவையில்லாமல் ஃப்ரிட்ஜ் முழுக்கத் தின்பண்டங்களை வாங்கி அடுக்கி வைத்தது குறித்து ஓரளவு வெட்கமும் அடைந்தார்கள். ஆனால், பொழுது விடிவதற்குள் இர்மாவின் பலம் பிடிபட்டுவிட்டது.

செப்டம்பர் பயங்கரம்!

அட்டைப்பெட்டிபோல் தன் வீடு அக்குஅக்காகப் பிரிந்து வெள்ளத்தில் மிதந்து செல்வதைக் கண்ணீருடன் பார்த்து நிற்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை பலருக்கு. பெரும்பாலான வீடுகளில் மேற்கூரை இல்லை.  கிட்டத்தட்ட எல்லா ஆங்கிலத் திரைப்படங்களிலும் காட்டப்படும் ஹாலிவுட் என்னும் வெள்ளை எழுத்துகொண்ட மலையடிவாரத்தில் உள்ள ஹாலிவுட் ஹில்ஸ் பகுதியிலுள்ள ஒரு மருத்துவமனையில் குளிர்சாதனப் பெட்டிகள் இயங்காததால், வெப்பத்தில் கருகி எட்டுப்பேர் இறந்துபோயிருக்கிறார்கள். மிச்சமிருந்த நூற்று சொச்ச நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றிக்கொண்டு செல்வதற்குள் பெரும் பாடாகிவிட்டது. மொத்தமுள்ள 700 மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட 150 மருத்துவமனைகளில் மின்சாரம் இல்லை. மின்சார வசதி ஓரளவு இருக்கும் மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்க இடமில்லை.

ஃப்ளோரிடாவின் இன்னொரு பெயர் ஓய்வு பெற்றவர்களின் சொர்க்கபுரி. பரபரப்பான அமெரிக்க வாழ்விலிருந்து ஒரு வழியாக மீண்டு, காலை நீட்டி அமர்ந்து கடலைப் பார்த்து ரசிக்கும் முதியோர்களின் எண்ணிக்கை அங்கே அதிகம். ஐந்து பேரில் ஒருவர், 65 வயதுக்கு மேற்பட்டோர். இர்மா இவர்களுடைய சொர்க்கத்தை நரகமாக மாற்றியிருக்கிறது. புயலில் இருந்து தப்பியே ஆக வேண்டும்.  ஆனால்,  கைத்தடியோ தள்ளுவண்டியோ இல்லாமல் ஓரடிகூட எடுத்து வைக்கமுடியாத இவர்களால் என்ன செய்ய முடியும்? 

செப்டம்பர் பயங்கரம்!

ஃப்ளோரிடாவை ஒரு நோட்டம் விட்டுவிட்டு டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட கருத்தை இன்னொரு குட்டிப்புயல் என்றுதான் அழைக்க வேண்டும். ‘புயலின்  அளவைப் பார்த்துவிட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வைத் தொலைத்திருப்பார்கள் என்றுதான் எல்லோரும் நினைத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால், நிஜத்தில் வெகு சிலரே இறந்துபோயிருக்கிறார்கள்’ இறந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து இப்படித்தான் ஆறுதல் சொல்லியிருக்கிறார் ட்ரம்ப். அதிகாரப்பூர்வக்குறிப்புகளின்படி, அமெரிக்காவில் மட்டும் முப்பதுக்கும் மேற்பட்டோர் புயலால் இறந்திருக்கிறார்கள். கரீபியன் தீவுகளையும் சேர்த்துக்கொண்டால் எண்ணிக்கை எழுபதைத் தாண்டிவிடும். 2005-ம் ஆண்டு ஏற்பட்ட  காட்ரீனா புயலில் 1,800 பேர் கொல்லப்பட்டனர் என்பதாலேயே இர்மாவில் இறந்தவர்களை ‘வெகு சிலர்’ என்று ட்ரம்ப் குறிப்பிட்டிருக்க வேண்டியதில்லை.

செப்டம்பர் பயங்கரம்!

அடித்தது என்னவோ ஒரே புயல்தான் என்றாலும், அதன் பாதிப்பிலிருந்து மீண்டுவர ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொருவிதமான போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும்.  உதாரணத்துக்கு, ஃப்ளோரிடாவில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில்  மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது.  ஆனால், புயல் கடந்துசென்ற சில தினங்களில் மெல்ல மெல்ல இணைப்புச் சரி செய்யப்பட்டு விட்டது. ஆனால், பியூரிட்டோ ரிகோவில் இருப்பவர்களுக்கு மின்சார இணைப்புக் கிடைக்க அநேகமாகச் சில மாதங்கள்வரை ஆகலாம். ஃப்ளோரிடா சில தினங்கள் பட்ட துயரங்களை இவர்கள் மாதக்கணக்கில் பட வேண்டியிருக்கும்.

செப்டம்பர் பயங்கரம்!

திங்கள் காலை சூரியன் உதித்ததைக் கண்டபிறகுதான் ஃப்ளோரிடாவுக்கு உயிரே வந்திருக்கிறது. `‘தெருக்களில் நடந்தோம். திரும்பும் பக்கமெல்லாம் குப்பை மலை. நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டி ருந்தது. அழிவின் தடங்கள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன. ஃப்ளோரிடாவிலிருந்து வெளியேறியவர்கள் அனைவரும் திரும்பிவருவதற்குக் காலமாகும். உடைந்த வீடுகளைச் சரிசெய்ய நேரமாகும். நிறைய வேலை இருக்கிறது. ஃப்ளோரிடா அனைத்தையும் கடந்து மேலேறிவரும் என்பது மட்டும் தெரிகிறது. அது போதும்’’ என்கிறார்கள் உள்ளூர்வாசிகள்.

இர்மா விடைபெற்றுக்கொண்டு வெளிச்சத்தை அனுப்பிவைத்த தினம் செப்டம்பர் 11. அமெரிக்காவால் ஒருபோதும் மறக்க முடியாத தினம்.