Published:Updated:

``காலேஜ் வரைக்கும் படிப்பேன்!’’

``காலேஜ் வரைக்கும் படிப்பேன்!’’
பிரீமியம் ஸ்டோரி
``காலேஜ் வரைக்கும் படிப்பேன்!’’

பரிசல் கிருஷ்ணா - படம்: ப.சரவணக்குமார்

``காலேஜ் வரைக்கும் படிப்பேன்!’’

பரிசல் கிருஷ்ணா - படம்: ப.சரவணக்குமார்

Published:Updated:
``காலேஜ் வரைக்கும் படிப்பேன்!’’
பிரீமியம் ஸ்டோரி
``காலேஜ் வரைக்கும் படிப்பேன்!’’

ந்துவின் வீட்டைத் தேடிச் சென்றபோது, அவள் தனது காம்பவுண்டை விட்டு வெளியே வந்து  படிக்கட்டில் அமர்ந்திருந்தாள். காதைச் சுற்றி பெரிய கட்டு இருந்தது. அதில் கை வைத்திருந்தாள். எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள். அடுத்த வரியாக ‘எதையோ யோசித்துக்கொண்டிருந்தாள்’ என்று எழுத முடியாது. ஏனென்றால் அவள் எதையும் யோசிக்கக் கூடாது. 

சைதாப்பேட்டை, கன்னியம்மன் கோயில் வீதியில் இந்துவின் வீடு. தி.நகர் சாரதா வித்யாலயாவில் ப்ளஸ் டூ படிக்கிறார். தங்கை சிந்து, அதே பள்ளியில் பத்தாவது. அம்மா அம்மு, துணிக்கடை ஒன்றில் ஹவுஸ் கீப்பிங்கில் பணிபுரிகிறார். இந்து எட்டாவது படிக்கும்போது அப்பா சுதர்சன் இறந்துவிட்டார்.

“எங்களுக்குச் சொந்த ஊர் செங்கல்பட்டு பக்கத்துல குன்னவாக்கம். கல்யாணம் ஆகி சென்னை வந்துட்டேன். இவங்க அப்பாவுக்கு வியாசர்பாடியில வீடு. அங்கிருந்து சௌகார் பேட்டையில பால் வியாபாரம் பண்ணிட்டிருந்தார். சின்னவ பொறந்தப்ப, அவருக்கு ரொம்பக் கெட்ட பழக்கமெல்லாம்  ஆரம்பிச்சார். அவரு வீட்டுக்கு வர்றது கம்மியாகிடுச்சு. ஒருநாள் அவர் சொந்தக்காரங்க வீட்டுக்குப்போய்  தற்கொலை பண்ணிக்கிட்டார். அதுக்கு என்ன காரணம்னு இப்போ வரைக்கும் எங்களுக்குத் தெரியாது” - அம்மா சொல்லும்போது, அம்மாவையே பார்த்தபடி இருக்கிறார் இந்து. அதைப் பார்த்த அம்மா, “நாம வெளில போய் பேசலாம்” என்று அழைத்து வந்தார்.

``காலேஜ் வரைக்கும் படிப்பேன்!’’

``சிறுவயதில் இருந்தே அவ்வப்போது இந்துவுக்குத் தலையைச் சுற்றி வலிக்கும். ‘கண்ணாடி போட்டா சரியாப் போயிடும்’ என்று ஒவ்வொரு முறை தலைவலி வரும்போதும் கண்ணாடி வாங்கிப் போடுவோம். ஆறு கண்ணாடி வாங்கிப் போட்டிருக்கோம். எனக்கு சம்பளம் 7,000 ரூபாய். வாடகை 3,800 ரூபாய் போக பாக்கி காசுலதான் எல்லாம் பண்ணிக்கணும். என்னால சமாளிக்க முடியல. சொந்த ஊருக்கே போய்டலாம்னு முடிவு பண்ணிட்டேன். ஹவுஸ் ஓனர் மாலாதான் `ரெண்டுமே பொண்ணுக. குறைஞ்சபட்சம் ப்ளஸ் டூ வரை படிக்க வெச்சுட்டு அப்புறமா ஊருக்குப் போறதைப் பற்றி யோசி. உன்னால எப்ப, எவ்ளோ வாடகை கொடுக்க முடியுமோ கொஞ்ச கொஞ்சமா குடு” என்று என்னைத் தொடர்ந்து சென்னையிலேயே இருக்க வைத்தார்.

 இந்து அடிக்கடி தலைவலிக்குதுன்னு அழுவா. படிக்காம இருக்கத்தான் இப்படிப் பொய் சொல்றாளோன்னு தோணும். ஆனால், தலைக்குள்ள அவளுக்கு அப்படி வலிக்கும் போல. திட்டாதம்மானு கெஞ்சுவா.ஆகஸ்ட் கடைசி வாரத்தில் ஒருநாள் தலைவலி, காதுவலியோடு வாந்தி எடுத்தாள். காதிலிருந்து சீழ் வடிந்தது. பயந்துபோய் ஆஸ்பத்திரிக்குப் போனோம். ஸ்கேன் ரிப்போர்ட்டில் காதுக்கருகே ஒரு கட்டி வளர்ந்து மூளை வரை பெரிதாகி இருக்குன்னு சொல்ல அதிர்ந்து போயிட்டோம். உடனே ஆபரேஷன் பண்ணணும்னு சொன்னாங்க. இன்னும் கொஞ்சம் வளர்ந்தால், அந்தக் கட்டி மூளையைத் தொட்டுடும், உயிருக்கு ஆபத்தாய் முடியும்னு சொன்னாங்க. ரெண்டு நாள்ல ஆபரேஷன் பண்ணணும்னாங்க. சின்னவ பத்தாவது படிக்கிறா. நானும் வேலைக்குப் போக முடியல. தினப்படிக்கே காசு இல்லை. வட்டிக்குக் காசு வாங்கி ஆபரேஷன் பண்ணினோம்’’ என்கிறார் இந்துவின் அம்மா.

ஆபரேஷன் நல்லபடியாக முடிந்துவிட்டது. ஆனால், அதற்குப்பிறகு இந்துவைப் பார்த்துக் கொள்ளவேண்டியதுதான் மிக முக்கியம். சின்ன சத்தம்கூட இந்துவுக்குக் கேட்கக் கூடாது. எதையாவது யோசித்தால்கூட தலை வலிக்க ஆரம்பிக்கும். சும்மாவே இருக்கணும் என்பதுதான் டாக்டர்கள் இந்துவிடம் சொன்னது.

“என்ன பண்ணப்போறேன்னு தெரியல சார். ஆனா, எப்படியாவது ரெண்டு பேரையும் ப்ளஸ் டூ படிக்க வெச்சுடுவேன்” என்றார் அம்மு. ``ப்ளஸ் டூ இல்ல. காலேஜ் வரைக்கும் படிப்பேன்” என்கிறார் இந்து சன்னமான குரலில்.

இந்துவின் முகம் முழுக்க நம்பிக்கையால் நிறைந்திருக்கிறது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism