Published:Updated:

மண்ணள்ளிப் போடாதே!

மண்ணள்ளிப் போடாதே!
பிரீமியம் ஸ்டோரி
மண்ணள்ளிப் போடாதே!

மண்ணள்ளிப் போடாதே!

மண்ணள்ளிப் போடாதே!

மண்ணள்ளிப் போடாதே!

Published:Updated:
மண்ணள்ளிப் போடாதே!
பிரீமியம் ஸ்டோரி
மண்ணள்ளிப் போடாதே!

சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கிராமத்தில் முதல் இரண்டு கட்டமாக நடைபெற்ற அகழ்வாய்வின்போது தமிழர்களின் நாகரிகம் எந்த அளவுக்குத் தொன்மையானது என்பது தெரியவந்தது. இந்நிலையில், இந்த ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெறுவதற்குப் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டன.

இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு திசைகளில் இருந்தும் போராட்டக் குரல்கள் எழுந்தன.

மண்ணள்ளிப் போடாதே!

நாடாளுமன்றத்திலும் இது எதிரொலித்தது. நீதிமன்றமும் தலையிட்டது. இந்தத் தொடர் அழுத்தங்களால் வேறு வழியில்லாமல் கீழடியில் மூன்றாவது கட்ட அகழ்வாராய்ச்சியை மத்தியத் தொல்லியல் துறை மேற்கொண்டது. ஆனால், கீழடியில் புதைந்திருந்த தமிழர் நாகரிகத்தை வெளிக்கொண்டுவந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் என்ற அதிகாரியைத் தமிழகத்தில் இருந்து அசாம் மாநிலத்திற்குப் பணியிட மாற்றம் செய்துவிட்டு வேறு ஓர் அதிகாரியின் கீழ் இந்தப் பணிகள் நடைபெற்றன.

மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி இப்போது முடிவடைந்திருக்கும் நிலையில், ‘முதல் இரண்டு கட்ட ஆராய்ச்சி முடிவுகளில் வெளிவந்ததைப்போலத் தமிழரின் தொன்மையை எடுத்துச் சொல்லும் கட்டுமானங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை’ என்றும் ‘முதல் இரண்டு கட்ட ஆராய்ச்சிகளில் வெளிப்பட்ட கண்டுபிடிப்புகளுக்கும் இப்போது அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பொருள்களுக்கும் எந்த ஒரு தொடர்ச்சியும் இல்லை’ என்றும் மத்தியத் தொல்லியல் துறை தெரிவித்திருப்பது தமிழகத்தில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

‘முதல் இரண்டு கட்ட அகழ்வாராய்ச்சிகளின்போது சுமார் 2,300 சதுர மீட்டர் அளவுக்கு ஆராய்ச்சி மேற்கொண்ட தொல்லியல்துறை இந்த மூன்றாவது கட்ட அகழ்வாராய்ச்சியின் போது வெறும் 400 சதுர மீட்டர் மட்டுமே தோண்டியிருக்கிறது. அதாவது முதல் இரண்டு கட்ட அகழ்வாராய்ச்சிகளின்போது மொத்தம் 109 குழிகள் தோண்டப்பட்டன. ஆனால், மூன்றாம் கட்ட ஆராய்ச்சியில் தோண்டப்பட்டது வெறும் எட்டு குழிகள் மட்டுமே. அதேபோல் முதல் இரண்டு கட்ட அகழ்வாராய்ச்சிகளின்போது வெவ்வேறு இடங்களைத் தேர்ந்தெடுத்து ஒன்பது இடங்களில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இப்போதோ ஒரே ஓர் இடத்தில் மட்டுமே அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டு, அவசர அவசரமாக முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது பலத்த சந்தேகத்தைக் கிளப்புகிறது.

முதல் இரண்டு கட்ட ஆராய்ச்சிகளின்போது கிடைத்த தொழிற்கூடக் கட்டுமானங்கள் தென் திசை நோக்கிப் புதைந்துகிடப்பது தெரியவந்தது. நியாயமாகப் பார்த்தால், அதன் தொடர்ச்சியாக மூன்றாம் கட்ட அகழ்வராய்ச்சிகள் தென் திசை நோக்கியே நீண்டிருக்க வேண்டும். ஆனால், இந்த ஆராய்ச்சிகள் இப்போது மேற்கொள்ளப்பட்டதோ, வட திசை நோக்கி. ஏன் இப்படி முன்னுக்குப் பின் முரணான நிலையை இந்தியத் தொல்லியல் துறை மேற்கொண்டது? தமிழர்களின் தொன்மையை நிரூபித்துவிடக் கூடாது என்பதில் யாருக்கு இத்தனை ஆர்வம்?

தமிழரின் தொன்மையான சரித்திரத்தை மறைக்க எந்தத் திசையில் இருந்து முயற்சிகள் வந்தாலும் அதை நாம் முறியடிக்க வேண்டும். கீழடி ஆராய்ச்சியைத் தமிழகத் தொல்லியல் துறை புகழ்பெற்ற அகழ்வாராய்ச்சியாளர் அமர்நாத் தலைமையில், போதுமான நிலமும், நிதியும் ஒத்துழைப்பும் வழங்கித் தொடர்ந்து நடத்திட வேண்டும்.

‘அகழாய்வுகள் முடிந்துவிட்டன’ என்று போடப்படும் மண், நமது வரலாற்றுக்கும் போடப்படும் மண் என்பதை நாம் உணர வேண்டும்.