Published:Updated:

உயிர்மெய் - 25

உயிர் மெய்
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் மெய்

மருத்துவர் கு.சிவராமன்

உயிர்மெய் - 25

`தானாக இப்படித்
தட்டுப்பட்டது தவிர
நிலா பார்க்க என்றுபோய்
நிலா பார்த்து நாளாயிற்று’


- என்கிற வண்ணதாசனின் வரிகள் துரிதத்தில் கரைந்துபோன, இருட்டில் தொலைந்துபோன சாமானியனின் வாழ்வை வெளிச்சம் போட்டுப் பளிச்செனக் காட்டுவன. அப்படித் தொலைந்தவருக்காக, அப்படித் தொலைந்து போகாமல் இருப்பதற்காக எழுதப்பட்டதுதான் உயிர்மெய்.
சற்று தாமதமாகும் குழந்தைப்பேற்றை ஒட்டி, இங்கு ஒவ்வொரு தம்பதியரிடமும் உருவாகும்  வலியும் வேதனையும் சொல்லி மாளாதது. உள்ளத்தில் காயமின்றிக் கடந்துபோகவும் முடியாதது. நசுங்கிய வாழ்வியலும், வீசிய வார்த்தைகளும் காதலுக்குக் கல்லறை கட்டிவிட்டு அதன் குறுக்குவாட்டில் தொட்டில்கட்ட அதிகம் பிரயத்தனப்படுகிறது. இதற்கான பிரத்யேகச் சிகிச்சை பெறுகையில் உருவாகும்  உடல், சமூக மற்றும் பொருளாதார வலி இன்னும் பெரிதினும் பெரிது. ஈயோ, எறும்போ, ஈசலோ அத்தனை உயிரினத்திலும் உள்ள காதலும் காமமும்தான் அதனதன் வாழ்வை மகிழ்வாக நகர்த்துவன. சூழலில் இவ்வளவு வன்முறை நடைபெறுகையில், அவற்றில் சில இனங்கள் மனிதனால் இனப்படுகொலை செய்யப்பட்டாலும்,  உயிரோடிருப்பவை இன்னும் காதலோடுதான் சுற்றிவருகின்றன. அவையெல்லாம் கருத்தரிப்புக்காக வலியோடு மெனக்கெடுவதாகத் தெரியவில்லை.

ஆனால், சினை முட்டைக்கென, கரு முட்டைக்கென இங்கு விடும் கண்ணீரில், நொறுங்கிக் குமுறும் அவமானத்தில், காதலும் காமமும் அனேகமாகக் கசங்கிப் புழுங்கிப்போகின்றன. இரண்டையும் தொலைத்த பின்னர், இரண்டறக் கலக்கப் போடும் கணக்காகவே இதன் சிகிச்சை பெரும்பாலும் இருக்கிறது. வண்ண வண்ணக் கனவுகளில் காதல் பூத்திருக்க, நெகிழ்ந்து உரசிக் கருத்தரிக்கவேண்டிய காதலர்கள், வண்ண வண்ண நெகிழிக் கோப்புகளில், மருந்துச்சீட்டுக்களாகப் பூத்திருக்க, நெகிழாது, மகிழாது மருத்துவருக்கும் உறவுக்கும் இன்று டோக்கன் போட்டுக் காத்திருக்கிறார்கள்.

வயிற்றுப்புண் சிகிச்சை மாதிரியான விஷயமல்ல கருத்தரிப்புச் சிகிச்சை. சாப்பாட்டுக்கு முன்னர் இரண்டு, சாப்பாட்டுக்குப் பின்னர் ஒன்று என மருந்தோடு முடியும் விஷயமும் அல்ல.  `நிறைய உணவு அக்கறை’, `நிறைய  உறவு அக்கறை’ அவசியப்படும்  பிரச்னை. `இன்றைக்கு முட்டை வெடிக்கும்’ என  நம்பிக்கையோடு காத்திருக்கும் மனைவியிடம், போனில் ``வரமுடியலை. இப்போ என்ன செய்யச் சொல்றே? வேலை அதிகம். மேனேஜர் நாய் மாதிரி கத்துறான். அத்தனையும் விட்டுட்டு வீட்டுக்கு வந்து கொஞ்சச் சொல்றியா?’’ எனக் கத்தும் பாமர(ரேனிய)ன்கள் புழங்கும் நோய் வீதி இது.

உயிர்மெய் - 25

`அஞ்சு வாங்கினால் ரெண்டு ஃப்ரீ’ என்பது அமேசானிலும், அண்ணாச்சி கடையிலும் மட்டுமல்ல. ஆஸ்பத்திரி மருந்து வியாபாரத்திலும் எக்கச்சக்கம் உண்டு. அந்த வணிக மிச்சம்தான், கூவிக் கூவி எல்லோரையும் குழந்தைப்பேற்றுக்குக் குறுக்குவழியைச் சொல்லி அழைப்பது. என்ன... இன்னும் தீபாவளிக்கு கீர்த்தி சுரேஷ், காஜல் அகர்வால், அழகுப்பெண்களோடு குத்தாட்டம் போட்டு, குழந்தைகளை அள்ளிக்கொண்டு போகச் சொல்லி விளம்பரம் வரவில்லை. அவசரமும் அவமானமும் தரும் அழுத்தத்தில் பயந்து, `குழந்தை மேனுஃபேக்சரிங் டெக்னாலஜி’க்குள் தடாலடியாக நுழைவது பல  நேரங்களில் ஏமாற்றத்தையும் வலியையும் தரும். அதற்கான தேவை வெகு சிலருக்கு மட்டுமே. `யார் அந்த வெகு சிலர்?’ என்பதை நிர்ணயிப்பதில், காதல் சார்ந்த வாழ்வியலும், அறம் சார்ந்த மருத்துவரின் பங்கும் அதிகம். சில விஷயங்களைக் கொஞ்சம் நுணுக்கமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

அளவில் குறைந்தோ, வடிவில் குறைபட்டோ, இயக்கத்தில் குறையுடனோ  உள்ள உயிரணுக்களை, ஊசி மருந்தால் மட்டுமே உசுப்பிவிட வேண்டியதில்லை. எண்ணெய்க் குளியல் அதனைத் தட்டிக்கொடுக்கக்கூடும். கீரைக்கூட்டும் சாரைப் பருப்பும்கூட ஊட்டம் கொடுக்கும். எல்லாவற்றையும்விட எதிர்பாராத முத்தம், எதிர்பார்த்த பரவசம், எதையும் எதிர்பார்க்காத அன்பு, எல்லாவற்றையும் எதிர்பார்க்கும் காதல் என இவையெல்லாம் சேர்ந்து ஆணின் உயிரணுவுக்கு உரம், ஊட்டம், ஓட்டம், கூட்டம் எல்லாம் தரும் என்பதை உரக்கச் சொல்லத்தான் இந்த உயிர் மெய்.

அதேபோல முட்டையைச் சுற்றியுள்ள நீர்கட்டிக்கு, மாத்திரைகளைவிட உடற்பயிற்சி ஓட்டமும், சில உணவு ஒழுங்குகளுமே பல நேரங்களில் போதுமானது. தடையாயிருப்பது நம் சோம்பலும் அறமற்ற வணிகத்தின் தீராப்பசியும்தான். சிதறி நிற்கும் ஹார்மோன்களைச் சீராக்க, மருந்துகளின் உயிரற்ற தீண்டலைவிட,  மனதின் உயிருள்ள காதல் சீண்டலும் காமத் தீண்டலும் செய்யும் பணி அதிகம். ஒரு சில நேரங்களில் மருந்தும் காதலும் ஒன்றாகத் தீண்ட வேண்டும்.

`காதல்-காமம் எல்லாம் நிரம்பி வழிந்தால் போதுமா... மருந்து, மாத்திரை, இத்தனை நுணுக்கமாக ஆய்ந்தறிந்து செய்யும் தொழில்நுட்பம் அவசியமில்லையா?’ எனக் கேட்கலாம். நிச்சயம் இல்லை. ஆனால், `எது அவசியம், எது அத்தியாவசியம், எது ஆடம்பரம்’ என்பது, எப்படி நேற்று வந்த ஜி.எஸ்.டி-யில் குழப்பமோ அப்படித்தான். `எது அவசியம், எது அத்தியாவசியம், எது காத்திருக்கவேண்டியது?’  என்பதுதான் இந்தக் கருத்தரிப்பு உதவி மையங்களில் உள்ள குழப்பம். இரண்டிலும் பெரு வணிகர்களுக்குப் பிரச்னை இல்லை. நுகர்வோர்தாம் நசுக்கப்படுகிறார்கள். 

உயிர்மெய் - 25

பன்முகம் கொண்டதுதான் இந்த பாரதத்தின் பெருமை. எத்தனை சாதி, எத்தனை மதம், எத்தனை சித்தாந்தம்? இருந்தாலும், எல்லோரும் பல ஆயிரம் ஆண்டுகளாக, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பிய கூட்டம்தான் இந்தியா. மருத்துவத்திலும் இங்கே அப்படித்தான். தத்துவங்களும் மருத்துவ முறைகளும் நிறையவே உள்ள  தேசம். வேறு எந்த நாட்டிலும் இத்தனை வேறுபட்ட... ஆனால், அத்தனையிலும் அனுபவங்கள் கோக்கப்பட்ட மருத்துவ முறைகள் கிடையாது. கூடவே,  ஒவ்வொரு மருத்துவத் துறையிலும் நுணுக்கமான அறிவியலும் கொட்டிக்கிடக்கிறது. ஆனால், கூடவே கொஞ்சம் தடுமாற்றமும் சுயநலமும் செருகி நிற்கின்றன.

அறம் சார் இந்தப் பன்முக அணுகுமுறையை, இதில் படுவேகமாக நச்சாகக் கலந்துவரும் வணிகம் வாரிச்சுருட்டிக்கொண்டு போகிறது. `குலேபகாவலி லேகியம்’ விற்போரும் சரி... ரோபோட்டிக்ஸ் வைத்து, சினைப்பிடிக்க உதவுவோரும் சரி... உதறவேண்டிய புள்ளியும் அதுவே, இணையவேண்டிய புள்ளியும் இதுவே. உதாரணமாக, விந்தைக் கருக்குழிக்குள் செலுத்த வாய்ப்பே அற்ற நிலையில் ஐயூஐ அவசியமே. ஆனால், சாலாமிசிரியோ, பூனைக்காலியோ கொண்டு உயிரணுக்களை உயர்த்தி, Insemination  குழாய்மூலம், கர்ப்பப்பைக்குள் செலுத்தும் ஒருங்கிணைப்பில் குழந்தைப்பேறு சாத்தியங்கள் நிச்சயம் அதிகம். இந்த ஒருங்கிணைப்பில் பக்கவிளைவாக மருந்துகள் குறையும். ஒருவேளை ஐயூஐ இல்லாமல் கருத்தரிக்கவும் வாய்ப்புண்டு. இந்த ஒருங்கிணைப்பு, அறமற்ற வணிகத்தை அடித்து ஓடச்செய்யும். கூடவே, இத்தனை நாள் `அரசமரத்தைச் சுற்றி அடிவயிற்றைத் தடவிப் பார்த்த’ அவள், தாலியை அடகுவைத்துக் கட்டிய பணம் முதல் அத்தனையையும் இழந்து, அடிவயிற்றைத் தடவும் அநியாயத்தையும் முறிக்கும். இங்கும் காலத்தின் கட்டாயத் தேவை மருத்துவத்துறையின் ஒருங்கிணைப்பு. ஒருங்கிணைந்து, அறம் சார்ந்து, கருத்தரிப்புக்குக் காத்திருக்கும் நம் மக்கள்மீது காட்டும் அரவணைப்பு.

வாழ்வின் ஒவ்வொரு நகர்விலும் நிறைய நெருக்கடிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அந்த நெருக்கடிகளுக்கு நடுவேதான் அழகும் ஆர்வமும் குதூகலமும் கொட்டிக்கிடக்கின்றன. சாலையில் கொட்டிக்கிடக்கும் கொன்றைப் பூவின் அழகு நெஞ்சை முட்டுகிறது. முன்வரிசையில் முகம் தெரியாதவர் தோளில் இருக்கும் குழந்தை,  நம் முகம் பார்த்துச் சிரிப்பதில், காதலியின் அவசர முத்தம் தந்த ஆனந்தம் வருகிறது. வாசல்படியில் ஒட்டியிருக்கும் பறவை ஒன்றின் வாசமில்லா இறகு,  கவிதை ஒன்றை எழுதி நீட்டுகிறது. அந்தக் காட்சிகளுக்குப் பின்னால், இரண்டு வரலாறுகள் இருக்கலாம். வாசல்படியில் கிடந்த இறகு, அந்தப் பறவை தன் காதலனோடு  கூடிய பொழுதில் உச்சத்தில் உதிர்ந்ததாக இருக்கலாம். அல்லது, வலசையின்போது, விரட்டிய  வல்லூறுக்குப் பயந்து வேகமாகச் சிறகடித்ததில் உதிர்ந்ததாக இருக்கலாம். முன் இருக்கையில் பார்த்த குழந்தை, கடல் பார்க்கவோ அங்கு கால் நனைத்து, குதூகலிக்கவோ செல்வதாக இருக்கலாம். அல்லது, அடுத்த பஸ் நிறுத்தத்தில் இருக்கும் மருத்துவமனையில் இறங்கி  கீமோ சிகிச்சை பெறுவதற்காகச் செல்வதாக இருக்கலாம். 70 வருடக் கொன்றை மரத்தில் நேற்றுப் பூத்து, உதிர்ந்த அந்த மலர், கூட்டமாக வழிபடும் அந்தக் கோயில் சாமியின் கொண்டைக்கு அழகூட்டச் செல்லலாம். அல்லது அடுத்த நிமிடத்தில் அதன் அத்தனை இதழ்கள் மீதும் தண்ணீர் லாரி ஏறி இறங்கலாம். வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வோர் உயிருக்குப் பின்னாலும்  இப்படியான இரண்டு கணங்கள் உண்டு.

மகிழ்வும் துக்கமும், வாய்ப்பும் ஏமாற்றமும், பிறப்பும்  இழப்பும் நம்மைச் சுற்றி ஒவ்வொரு கணத்திலும் மாறி மாறி நடந்துகொண்டே இருக்கும். அதனூடே நசுங்காமல் மகிழ்ந்து நகர்வது மட்டுமே நாம் பெற்ற கல்வியும் அனுபவங்களும் கற்றுத்தருவது. குழலும் யாழும் எப்போதும் எல்லோருக்கும் இனிதுதான்; மழலை மொழிக்கு இணையான இன்பம்தான். குழந்தை இல்லை என்பதற்காகப் புழுங்கி அழுவதும், புன்னகை தொலைப்பதும் ஒருபோதும் வேண்டாம். குடும்பத்தின் அரவணைப்பு கொஞ்சமும், குடும்ப மருத்துவரின் வழிகாட்டுதல் கொஞ்சமும் கூடவே நிச்சயம் இருக்கட்டும். 

`காற்றைக் கொஞ்சம் நிற்கச் சொன்னேன்; பூப்பறித்துக் கோக்கச் சொன்னேன்; ஓடி வந்து உன்னைச் சந்திக்க.

மெத்தை ஒன்று தைக்கச் சொன்னேன்; மேகம் அள்ளி வைக்கச் சொன்னேன்;

கண்ணை மூடி உன்னைச் சிந்திக்க.

சுற்றும் பூமி நிற்கச் சொன்னேன்; உன்னைத் தேடிப் பார்க்கச் சொன்னேன்;

என்னைப் பற்றிக் கேட்கச் சொன்னேன்’ – எனப் பாட வேண்டும். இருபதில்  என்றில்லை... நாற்பதிலும் பாடலாம். அதன் பின்னர் கூடலாம்.  என்ன, அப்படியான சந்தங்களில், அந்த இன்பக் கூடலில், மிஞ்சுவது ஒன்று குழந்தைச் சத்தம், இல்லாவிடில்  காதல் முத்தம். அன்பின் மெனக்கெடலில், உயிர்மெய்க்கு இரண்டில் ஒன்று எப்போதும் நிச்சயம்!

( நிறைவு)