Published:Updated:

செங்கொடி இல்லத்தில் பேரறிவாளன்!

செங்கொடி இல்லத்தில் பேரறிவாளன்!
பிரீமியம் ஸ்டோரி
செங்கொடி இல்லத்தில் பேரறிவாளன்!

ப.திருமாவேலன், நித்திஷ், இரா.கலைச்செல்வன் - ஓவியம்: கோ.ராமமூர்த்தி

செங்கொடி இல்லத்தில் பேரறிவாளன்!

ப.திருமாவேலன், நித்திஷ், இரா.கலைச்செல்வன் - ஓவியம்: கோ.ராமமூர்த்தி

Published:Updated:
செங்கொடி இல்லத்தில் பேரறிவாளன்!
பிரீமியம் ஸ்டோரி
செங்கொடி இல்லத்தில் பேரறிவாளன்!

``வேலூர் சிறையில் இருக்கும் கைதிகள் அனைவருமே நண்பர்கள். அவர்களைப் பார்க்க வரும் உறவினர்களும் பெரும்பாலும் எனக்குத் தெரிந்தவர்களாகத்தான் இருப்பார்கள். ஒரு நாளா... ரெண்டு நாளா... 26 வருஷம் இருந்தா... யாருக்குத்தான்  என்னைத் தெரியாது. எத்தனையோ பேர் வந்து போய்விட்டார்கள். புதிதாக தினமும் வருகிறார்கள்.

அதில் ஒருவர் கொஞ்சம் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் செயல்படுவார். அவரின் அம்மா அவரைப் பார்க்க வந்திருந்தார். என்னை அந்த அம்மாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார் அந்தக் கைதி.

‘இவர்தான்மா பேரறிவாளன்... செய்யாத தப்புக்காக 25 வருஷத்துக்கு மேல சிறையில இருக்கார்’ என்று சொன்னதும், அந்த அம்மா சொன்னார்...

‘நீ தானாப்பா அது. எப்ப டி.வி.யைத் திறந்தாலும் ஒரு அம்மா அழுதுட்டே இருக்குமே... அவரோட மகனா நீ?’ என்றார். அதைக் கேட்டதும் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது...”

- முகம் முழுக்க பூரிப்பும் பொங்கிய கன்னமுமாக பேரறிவாளன் சொல்லிச் சிரிக்கும் போது பின்னாலிருந்து ஒரு குரல்...

‘`ஆமாம்பா! என் அழுகை உனக்கு சிரிப்பா இருக்கா?” என்று குரலெடுத்துச் சொல்கிறார் அற்புதம் அம்மாள். ‘`நீ பின்னாலதான் நிக்கிறியாம்மா?” என மீண்டும் சிரிக்கிறார் அறிவு.

செங்கொடி இல்லத்தில் பேரறிவாளன்!

26 ஆண்டுகள் ஒரு வீடு நிசப்தமாய் இருக்க முடியுமா? இரண்டு பெண்பிள்ளைகள், ஒரு மகன், பேரன் பேத்திகள்... சுற்றிலும் சொந்தங்களால் சூழ்ந்த குயில்தாசன் - அற்புதம் அம்மாள் வீடு பெருமூச்சுக்காற்றால் வெடிப்புகள் விழ... விம்மிய அழுகையால் நீர்கோத்து நிற்க...மே 21-ல் இடித்த இடியால் வெள்ளைச் சுண்ணாம்புகள் கறுப்பாகிவிட... விழித்தபடி தூங்குவதும், தூங்கியபடி விழித்திருப்பதுமான துயர மனநிலையில் கால்நூற்றாண்டுக்காலத்தைக் கழித்தாக வேண்டும் என்று சபிக்கப்பட்டது காலத்தின் கோலமா, காக்கிகளின் கேவலமா?

வேலூருக்கும் ஜோலார்பேட்டைக்கும் இடையில்  இருப்பது 70 கிலோ மீட்டர் தூரம்தான். அங்கிருந்து பிணையில் வருவதற்குக்கூட 26 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன பேரறிவாளனுக்கு.

‘`இந்திய நீதித்துறை வரலாற்றில் அறிவுக்கு ஒரு மாத காலம் பரோல் வாங்கியதே பெரிய சாதனைதான்” என்று அருகில் இருந்த வழக்கறிஞர் கோவை சிவக்குமார் சொன்னார்.

‘`ஒரு பெண்ணின் கண்ணீருக்கு சிறைக்கம்பியை வளைக்கும் வல்லமை இருக்கிறது என்பதைக் காட்டியது உங்கள் அம்மாதான்” என்கிறார் அருகில் இருந்த இன்னொரு தோழர்.  ‘`ஆமா...அம்மா இல்லைன்னா நான் நிச்சயம் பரோலில் வந்திருக்க முடியாது” என்று சொல்லும்போது பேரறிவாளனின் கண்கள் அற்புதத்தைத் தேடுகின்றன. ஓர் ஓரமாய் உட்கார்ந்து, எல்லோரும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதைக் கவனித்தவராக இருந்தார் அற்புதம். 26 ஆண்டுகளாய் தமிழ்நாட்டின் எல்லா ஊர்களிலும், எல்லாப் பத்திரிகைகளிலும், எல்லா டி.விக்கள் முன்பாகவும் பேசிப்பேசிக் களைத்துப் போன அவருக்கு, பேச என்ன இருக்கிறது?

‘`முதலமைச்சரைப் பார்க்க அற்புதம் அம்மாள் கோட்டைக்குப் போனபோது முதலில் போலீஸார் உள்ளே விடாமல் தடுத்தார்கள். அப்போது ஒரு போலீஸ்காரர், ‘உள்ள விட்டுருய்யா... இல்லேன்னா  அந்த அம்மா ரோட்டுல உட்கார்ந்துடும்’ என்று சொல்ல... அதன்பிறகுதான் அம்மாவை உள்ளே விட்டார்கள். அந்தளவுக்கு அவர்மீது எல்லோருக்கும் பயம் இருந்தது” என்கிறார் வழக்கறிஞர் சிவகுமார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த பேரறிவாளனின் அப்பா குயில் தாசனுக்குப் பெருமிதமும் கம்பீரமும் ஏற்படுகின்றன.

உடல்நலம் பாதிக்கப்பட்ட  குயில்தாசனால் அலைய முடியாது. ஒரு காலத்தில் திராவிடர் கழகத்தின் தொண்டர் படையை நடத்தியவர். ஆறரை அடிக்கு மேலே உயரம். கறுப்புச்சீருடை அணிந்து சிப்பாய்கள்போல அந்த அணியை நடத்திச் சென்றவர். மகனது இளமைக் காலத்தைச் சிறைச்சாலைக்குத் தாரைவார்த்த சோகம் அவரது மனதையும் உடலையும் தின்ன ஆரம்பிக்க... தனது வீட்டையே சிறையாக்கி வாழத் தொடங்கிவிட்டார் குயில்தாசன். தன்னைத்தானே குயில் சிறைவைத்துக்கொள்ள... தாயும் தகப்பனுமாய் ஆகி தமிழ்நாட்டை அற்புதம் அம்மாள் முற்றுகையிட்டார். அதனால்தான் பேரறிவாளன் சிறை வைக்கப்பட்ட விவகாரம் ஒரு குடும்பத்தின் சோகமாக இல்லாமல் பொதுப்பிரச்னையாக மாறியது.

செங்கொடி இல்லத்தில் பேரறிவாளன்!

‘`இதை, பேரறிவாளன் என்ற தனிமனிதனுக்கு ஏற்பட்ட கொடுமையாகப் பார்க்கவில்லை. இன்னொரு நிரபராதி இப்படி அடைபட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தோடுதான் என்னுடைய சட்டப்போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறேன். தடா சட்டத்தின்படி கைது செய்யப்பட்டேன். தண்டிக்கப் பட்டேன். தடா சட்டமே செல்லாது என்று வந்துவிட்டது. நான் சொன்ன வாக்குமூலத்தை சரியாகப் பதிவு செய்யவில்லை என்று விசாரணை அதிகாரியே சொல்லிவிட்டார். `வெடிகுண்டு செய்தது யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று இன்னொரு அதிகாரி பேட்டி தருகிறார். ராஜீவ் கொலைச் சதி பற்றிய பின்னணியை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையங்கள் தனது விசாரணையை முழுமையாக நடத்தி 27 ஆண்டுகள் கழித்தும் அறிக்கை தரவே இல்லை. இந்த நிலையில் ஆயுள் தண்டனை பெற்றவர்களையும் விடுதலை செய்யாமல் இருக்கிறார்கள். இந்த வழக்கு என்றாலே எந்த முடிவும் எடுக்காமல் தள்ளிப்போடுகிறார்கள். எனவேதான் இந்த வழக்கின் சதி குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்துள்ளேன். அவர்கள் இம்முறை தப்ப முடியாது” - என்று தேர்ந்த வழக்கறிஞர் போல சட்டப்பிரிவுகளைச் சொல்லி நண்பர்களிடம் விளக்கிக்கொண்டிருந்தார் பேரறிவாளன். நீதி மறுக்கப்பட்ட ஒருவனை வழக்கறிஞனாக மாற்றக்கூடிய திறன் படைத்தவை இந்தியச் சிறைகள் என்பது அப்போதுதான் தெரிந்தது.

பேரறிவாளனைப் பார்க்க இரண்டு இளைஞர்கள் வருகிறார்கள். அவர்கள் தங்களை அறிமுகம் செய்துகொள்கிறார்கள். ‘`எந்த ஆண்டு நீங்கள் பிறந்தீர்கள்?” என்று அறிவு கேட்கிறார்.

‘`1991’’ என்று அவர்கள் சொல்கிறார்கள்.

‘`அப்படியானால் நாம வாழ்க்கையிலேயே முதல் தடவையா இப்போதுதான் சந்திக்கிறோம்” என்று அறிவு சொல்லிச் சிரிக்கும்போதே முகத்தில் லேசாக சோகம் படர்கிறது.

‘`எனக்கும் பக்கத்து ஊர்தான். சின்ன வயசில் இங்கு வந்திருக்கிறேன். உங்கள் வீடு இதுதான் என்று சொல்வார்கள். யாரிடமும் அடையாளம் கேட்காமல் நானே வந்துவிட்டேன்” என்று அந்த இளைஞர் சொல்ல...

‘`ஓ! உங்களுக்கு வழி தெரிஞ்சுதா? எனக்கு என் வீடே எதுன்னு தெரியலை. அந்தளவுக்கு மனசுக்குள் இருந்து மறைஞ்சுபோச்சு” என்று அறிவு சொல்லும் போதே, ‘`எல்லாருக்கும் பிரியாணி சொல்லியிருந்தேன். இன்னும் வரலையே?” என்று அற்புதம் அம்மாள் வந்தார். ‘`வந்திருச்சும்மா” என்றார் அறிவு. ‘`உனக்கு எப்படிப்பா தெரியும்?” என்று அவர் கேட்க, ‘`சாப்பாடு வந்திருச்சுன்னா எங்களுக்கு கரெக்டா தெரியும். கீழே வந்திருச்சு. மேலே வந்துட்டிருக்கு” என்று மூக்கால் உணர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார் அறிவு.

‘`எங்களுக்கு மரண தண்டனை உறுதிப் படுத்தப்பட்டது. சிறை மாற்றம் செய்கிறார்கள். எங்கள் நான்கு பேரை சேலத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். ஆம்பூர் தாண்டிச் செல்லும்முன் பிரியாணி சாப்பிட வேண்டும் போல இருந்தது. நைசாக போலீஸ் அதிகாரியிடம் கேட்டோம். அவரும் சம்மதித்தார். ஆம்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சொல்லி நான்கு பிரியாணிப் பொட்டலங்கள் எங்களுக்கு வந்தன.எங்கள் காவலுக்கு வந்த போலீஸ்காரர்கள் அனைவருக்கும் இட்லிதான் வந்தது. பாவம், பரிதாபமாக சாப்பிட்டார்கள். ஏதோ உயர் அதிகாரிகள் வரப்போகிறார்கள்போல என்று நினைத்து ஏராளமான பீஸ்கள் போட்டு அந்த பிரியாணியைத் தயாரித்திருந்தார்கள். சாப்பிட முடியாமல் சாப்பிட்டோம். அன்றுதான் எங்களது மரணதண்டனை உறுதியானது என்பதையே மறந்துபோய் சாப்பிட்டோம்” என்று சொல்லும் போதே... அறிவுக்கு ஒரு தட்டில் பிரியாணி வைத்துத் தரப்பட்டது.

‘`எனக்கு சோறு போதும்யா... பிரியாணி வேண்டாம்யா” என்று வாங்கிச் சாப்பிட்டார் குயில்தாசன். ரசம் ஊற்றிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர், ‘`ஒரே ஒரு துண்டு கறி மட்டும் கொடுங்க” என்று சொன்னதும்... அறிவு தனது தட்டில் இருந்த கறித்துண்டுகளை  எடுத்து அப்பா தட்டில் வைத்தார். ‘`நீ சாப்பிடுய்யா” என்றார் குயில். ‘நானே உங்களது மாமிசம்தானே?’ என்று அறிவு நினைத்திருக்கலாம். எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் காட்சியை அந்த வீட்டின் சுவர் பார்க்கிறது?

செங்கொடி இல்லத்தில் பேரறிவாளன்!

‘`நான் மீன் பிரியன். ஆனால், 26 வருஷமா மீன் சாப்பிட்டதே இல்லை. சிறையில் சிக்கன்தான். ஆகஸ்ட் 24-ம் தேதி வீட்டுக்கு வந்தபிறகுதான் திருப்தியா மீன் சாப்பிட்டேன்” என்று அறிவு சொல்லும்போது அருகில் இருந்த பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், ‘`சிறையில் சிக்கன் மட்டும்தான் போடுவார்கள். அதுவும் தலையும் காலும் மட்டும்தான் போடுவார்கள். கறி உள்ள பகுதி எல்லாம் போடமாட்டார்கள்” என்று தனது சோகத்தைச் சொன்னார்.

‘`நாளைக்கு செளரி அண்ணன் வருவார். மீன் வாங்கி வருவார்” என்று சொல்லும் போதே அறிவு முகத்தில் மகிழ்ச்சி துள்ளியது. கிளம்பிய இளைஞர் ஒருவர் அறிவின் காலில் விழுகிறார். “கறுப்புச் சட்டை போட்டவன் யார் காலிலும் விழக்கூடாது” என்று சொல்லி, கட்டி அணைக்கிறார் அறிவு. ‘`வாங்க... வேலூர் வந்தா வாங்க... அங்க பேசுவோம்” என்று ஜோலார் பேட்டையிலிருந்து பணி மாறுதல்  வாங்கிச் செல்லும்  பள்ளி ஆசிரியரைப் போல அவர்களை அழைக்கிறார் அறிவு.

வேலூரில் தான் இருப்பது சிறை, தானொரு கைதி என்பதே மறந்துபோகுமளவுக்கு மனமும் குணமும் மாறியிருந்தன.  புறப்படும்போது ஓடி வந்து கடலைமிட்டாய் கொடுக்கிறார்கள் பேரறிவாளனின் சகோதரிகள் அன்புமணியும் அருள்மணியும். அறிவும் அதில் ஒன்றை எடுத்துக்கொள்கிறார். அவரது வீட்டின் வரவேற்பு அறை முழுக்கவே புகைப்படங்கள். ஒரு படத்தில் ஐந்து வயது பையனாக கருணாநிதியின் மடியில் பேரறிவாளன் உட்கார்ந்திருக்கிறார். தி.மு.க ஆட்சி கலைக்கப் பட்டபோது, அது அவசர நிலைப்பிரகடன காலம் என்பதால் அவரைச் சந்திக்க பலரும் பயந்தபோது அவரின் சொந்தங்களும், வட்டாரத்தைச் சேர்ந்தவர்களும் கருணாநிதியை வந்து சந்தித்துள்ளார்கள். சிறுவனான பேரறிவாளனும் அப்போது ‘தடையை மீறி’ வந்துள்ளார்.

 ‘`பேரறிஞர் அண்ணாவுடன் எங்க அப்பாவும் சிறையில் இருந்தாங்க. அண்ணாவுக்கு ஊறுகாய் பாட்டிலை உள்ளே கொண்டு போய்க் கொடுக்க அவரின் மனைவி ராணி அண்ணா முயற்சி செய்தாங்க. ஆனால், கொடுக்க முடியலை. எங்க அம்மாதான் உள்ளே போய்க் கொடுத்தாங்க” என்று அற்புதம் அம்மாள் சொல்லும்போது, ‘`சிறைக்கும் எங்கள் குடும்பத்துக்கும் மூன்று தலைமுறைகளாக பந்தம் இருக்கிறது” என்கிறார் அறிவு. போராளிகள் படங்களுடன் செங்கொடியின் படமும் இருக்கிறது. வீட்டின் பெயரும் செங்கொடி இல்லம். அறிவை மீட்பதற்காக உயிரைத் தந்தவர் அவர். அந்த வீடு, பேறு பெற்றுவிட்டது.

விடை பெறும்போது பேரறிவாளனின் கையில் ரூமியின் ‘தாகங்கொண்ட மீனொன்று’ புத்தகத்தைத் தந்தோம். அவர், விடுதலை தாகங்கொண்ட பெரும்பறவை அல்லவா?