Published:Updated:

புரட்சிப் பெண் நாகரத்தினம்மா!

புரட்சிப் பெண் நாகரத்தினம்மா!
பிரீமியம் ஸ்டோரி
புரட்சிப் பெண் நாகரத்தினம்மா!

வீயெஸ்வி - படங்கள்: பா.காளிமுத்து

புரட்சிப் பெண் நாகரத்தினம்மா!

வீயெஸ்வி - படங்கள்: பா.காளிமுத்து

Published:Updated:
புரட்சிப் பெண் நாகரத்தினம்மா!
பிரீமியம் ஸ்டோரி
புரட்சிப் பெண் நாகரத்தினம்மா!

இயல்

தொடர்ந்து எட்டாவது வருடமாகப் பதக்கம் அணிவிக்கப் பட்டது. முதல் ஏழு வருடங்கள், வாய்ப்பாட்டுக் கலைஞர்களின் கழுத்தை அலங்கரித்த பதக்கம், இந்த முறை முதல் தடவையாக இசைக்கருவியாளர்களின் கழுத்துக்கு இடம் மாறியது. வயலின் ஜோடி லால்குடி கிருஷ்ணனும், லால்குடி விஜயலட்சுமியும் நவராத்திரி வெள்ளியன்று ஆடம்பரமாகக் கெளரவிக்கப்பட்டார்கள்.

மியூஸிக் அகாடமியுடன் இணைந்து இந்திரா சிவசைலம் அறக்கட்டளை நடத்தும் விழா இது. எனவே, வரவேற்பு உரை, அகாடமியின் தலைவர் என்.முரளி. முதல் வருடம் பேசியதை எட்டாவது வருடமும் அச்சு அசலாக அப்படியே பேசினார். 89 வருட அகாடமி வரலாற்றைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டிவிட்டு, சிவசைலம் குடும்பத்துடன் அகாடமிக்கு இருந்துவரும் நெருக்கம் பற்றிப் பெருமைப்பட்டுவிட்டு, இந்திராவின் மகள் மல்லிகாவின் கணவர் வேணு சீனிவாசன் அகாடமியின் நவீனமயமாக்கலுக்குத் தாராளமாகக் காசோலைக் கிழித்துக் கொடுத்ததை மனம் திறந்து பாராட்டினார்.

புரட்சிப் பெண் நாகரத்தினம்மா!

பதக்கம் பெறும் கலைஞர்களை அறிமுகப்படுத்தும் பணி, மல்லிகாவுக்கு. தங்களுடைய திருமண நிச்சயதார்த்த வைபவத்துக்கு லால்குடி ஜெயராமனும், சிறுவனாக மகன் கிருஷ்ணனும் சேர்ந்து வயலின் வாசித்ததை நினைவுகூர்ந்தார். ஒருமுறை அமெரிக்காவில் பண்டிட் ரவிசங்கர், லால்குடி விஜயலட்சுமியின் கை விரல்களைத் தொட்டுப் பார்த்து, ‘உன் விரல்கள் உன் அப்பாவின் விரல்களைப் போலவே இருக்கின்றன...உன் வாசிப்பு என் ஆன்மாவைத் தொடுகிறது’ என்று பாராட்டியதையும் சபையோருக்குத் தெரிவித்தார் மல்லிகா சீனிவாசன்.

தியாகராஜரின் நேரடி சிஷ்யப் பரம்பரையில் வந்த லால்குடிக் குடும்பத்தின் ஐந்தாவது தலைமுறைக் கலைஞர்கள், கிருஷ்ணனும், அவரது இளைய சகோதரி விஜயலட்சுமியும். இந்த இருவரின் ஏற்புரைகளும் நிரவல் மாதிரியாக ஒரே வரிகளில் அல்லாமல், வெவ்வேறு கோணம் பிடித்துப் பேசியது விழாவில் மகிழ்ச்சி தந்த தருணம்.

கடந்த முப்பது வருடங்களாகத் தன்னுடன் மேடையில் உட்கார்ந்து வாசித்துவரும் அருமை தங்கச்சிப் பதக்கம் பெற்றதுக்குப் பாசக்கார அண்ணன் ‘கங்கிராட்ஸ்’ சொன்னது நெகிழ வைத்த தருணம்.

“சொல்லிப் பலவும், சொல்லாமல் பற்பலவும் எங்களுக்குப் பல விஷயங்கள் புரியவைத்தவர் எங்கள் தந்தையும், குருவுமான லால்குடி ஜெயராமன்...’’ என்று விஜயலட்சுமி சொன்னது, உணர்ச்சிகரமான தருணம்.

புரட்சிப் பெண் நாகரத்தினம்மா!

அன்று தொகுப்புரையில் ஆரம்பித்து, வரவேற்பு உரை, அறிமுக உரை, ஏற்புரை என்று எல்லாமே ஆங்கிலத்தில் அமைந்தது, ‘இவர்கள் மாறவே மாட்டார்களா?’ என்று ஆதங்கப்பட வைத்தது. (நல்லவேளை, நவராத்திரி வாழ்த்துகளை ‘Nine nights greetings’ என்று சொல்லவில்லை!) வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது மாதிரி, இங்கே பதக்கம் பெறுபவர்கள் கச்சேரியும் செய்தாக வேண்டும் என்பது கட்டாயம். அன்று, கிருஷ்ணன் - விஜயலட்சுமி ஜோடி வாசித்த வயலின் கச்சேரியில் ஆரம்ப சாருகேசி வர்ணம் முதல், முடிவில் மிஸ்ர மாண்ட் தில்லானா வரை லால்குடி பாணி ‘உள்ளேன் ஐயா’ என்று ஆஜரானது.

கடந்த 26-ம் தேதி இருவரும் இளையராஜா இல்லத்தில் நவராத்திரி முன்னிட்டுக் கச்சேரி வாசித்துவிட்டு, அன்று இரவே அமெரிக்காவுக்கு விட்டார்கள் ஜூட்.

இந்த இருவர் மட்டும்தான் என்றில்லை. இசையுலகில் நிறைய பேர், டிசம்பர் சீஸனுக்கு முன் ஒரு தடவை அமெரிக்காவில் கால் நனைத்துவிட்டுத் திரும்புவது வழக்கம்.

நாடகம்

தமிழ் நாடக மேடையில் அனுபவமும் ஆளுமையும் நிறைந்தவராகத் திகழ்ந்தவர் மறைந்த ஒய்.ஜி.பார்த்தசாரதி. சுருக்கமாக ஒய்.ஜி.பி. இவருக்கு இது நூற்றாண்டு வருடம். ஒன்பது நாள்கள் நவரச விழா வாணிமகாலில். தினமும் பிரபலங்களில் சிலர் ஒய்.ஜி.பி.-யின் போட்டோவுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திவிட்டு அவர் பெருமை பேசினார்கள். இசை / நடனம் / நாடக நிகழ்ச்சிகளும் உண்டு. ஜேசுதாஸ் மற்றும் எஸ்.பி.பி. கச்சேரிகளுக்கு மட்டும் இலவச அனுமதி கிடையாது.

மனைவி ராஜலட்சுமியை (மிஸஸ் ஒய்.ஜி.பி.) காதலித்துக் கரம் பிடித்தவர் பார்த்தசாரதி. மனைவி சமையலறைப் பக்கம் போகக் கூடாது. மற்ற வீட்டு வேலைகள் எதுவும் செய்யக் கூடாது என்பது திருமணத்துக்குப்பின் ஒய்.ஜி.பி. போட்ட முதல் கண்டிஷன். “என் மனைவி வெறும் சமையல்காரியாகவும், வீட்டு வேலைக்காரியாகவும் இருக்கக் கூடாது. தன்னிடமுள்ள திறமைகளை அவள் வளர்த்துக்கொள்ள வேண்டும்” என்பாராம் அவர்.

புரட்சிப் பெண் நாகரத்தினம்மா!

கணவரின் மறைவுக்குப் பின், அவர் எழுதிவிட்டுச் சென்ற குறிப்பைப் பார்த்திருக்கிறார் மிஸஸ் ஒய்.ஜி.பி., ‘என் மறைவுக்குப் பின்னும் நெற்றியில் நீ தொடர்ந்து குங்குமம் வைத்துக்கொள்ள வேண்டும். எப்போதும்போல் தலையில் பூச்சூடிக்கொள்ள வேண்டும். பெண்களின் சக்தியை அமுக்கிவிடும் சம்பிரதாயங்களுக்கு நீ பலியாகிவிடக் கூடாது’ என்று அதில் எழுதியிருந்தாராம் கணவர் ஒய்.ஜி.பி.

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் எழுத்தாளர் சிவசங்கரி தன் கணவரை இழந்திருந்த சமயம்... மனைவியுடன் சிவசங்கரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார் ஒய்.ஜி.பி. அங்கு அவர் அம்மாவையும், மாமியாரையும் அழைத்துப் பேசியிருக்கிறார்.

“இவள் குழந்தை... என்றைக்கும் இவள் நித்ய சுமங்கலியாக இருக்க வேண்டும்... உங்களை மீறி யாரும் எதுவும் செய்துவிட முடியாது... இவள் எப்போதும் லட்சுமிகரமாகவே இருப்பாள் என்று எங்களுக்கு வாக்கு கொடுங்கள்...” என்று கரிசனத்தோடும், பரிதவிப்போடும், உரிமையோடும் கேட்டுக்கொண்டாராம் ஒய்.ஜி.பி.

நாடக மேடைக்கு வெளியே நடிக்கத் தெரியாதவராக வாழ்ந்து மறைந்த உன்னதர் ஒய்.ஜி.பி!

நடனம்


பெங்களூர் நாகரத்தினம்மா...

தேவதாசி சமூகத்தில் பிறந்து, பெண்களின் உரிமைக்காகப் போராடி, தியாகராஜரின் பரம பக்தையாகி, பல்வேறு இன்னல்களைச் சந்தித்து, போராட்டங்களை வென்று, அந்த மகானுக்கு திருவையாறில் சமாதி அமைத்த புரட்சிப்பெண்.

மைசூரில் பிறந்தவர் நாகரத்தினம்மா (1878-1952) பெங்களூரிலும், சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியிலும் வாழ்ந்தவர். நாட்டியம்  ஆடுவதில் வல்லவர். சிறப்பாகப் பாடக்கூடியவர். கன்னடம், தெலுங்கு, ஆங்கில மொழிகள் தெரிந்தவர். சொந்தமாகப் பாடல்கள் இயற்றியவர். ஹரிகதையும், சங்கீத உபன்யாசமும் செய்து வந்தவர். வளமாகச் சொத்து, சுகங்கள் கண்டவர்.

புரட்சிப் பெண் நாகரத்தினம்மா!

குரு, பிடாரம் கிருஷ்ணப்பாவிடமிருந்து கடிதம் ஒன்று வருகிறது நாகரத்தினம்மாவுக்கு. ``திருவையாறில் தியாகராஜரின் சமாதி மிகவும் பாழடைந்த நிலையில் இருக்கிறது. சுற்றுப்புறம் அசுத்தத்தின் உச்சத்தில் இருக்கிறது. இதை சீர்படுத்த உன்னால் மட்டுமே முடியும். உடனடியாக நீ நடவடிக்கை எடுக்க வேண்டும்...” என்று எழுதுகிறார் கிருஷ்ணப்பா. குருவின் கட்டளையைச் சட்டமாக ஏற்று, திருவையாறுக்குப் பயணப்படுகிறார் நாகரத்தினம்மா. அந்த புண்ணியத்தலம் இவருக்கு வசிக்கும் தலமாகி விடுகிறது.

ஏற்கெனவே அங்கே பெரிய கட்சி, சின்னக்கட்சி என்று இரண்டு கட்சிகள் ‘சமாதி யாருக்குச் சொந்தம்’ என்று சண்டையிட்டுக் கொண்டிருந்த நேரம் அது. (இன்றைய அரசியலை விட படு மோசமான அரசியல்) நாகரத்தினம்மாவின் வரவை இவர்கள் எதிர்க்கிறார்கள். சமாதிக்கு அருகில் பெண்கள் பாடுவதற்கு அனுமதி மறுக்கிறார்கள். இவர்களை எதிர்த்துப் போராடுகிறார் நாகரத்தினம்மா. தியாகராஜரின் சமாதிக்குக் கோயில் எழுப்புகிறார். பெண்களை விடாப்பிடியாகப் பாடவும் வைக்கிறார். இன்றுவரை திருவையாறில் தியாகராஜ ஆராதனை விமர்சையாக நடைபெற்று வருவதற்குத் தொடக்கப்புள்ளி வைத்தவர் நாகரத்தினம்மா. இப்போது சமாதிக்கு எதிரில் இவருடைய சிலையும் உள்ளது.

தியாகராஜரின் 250-வது ஜெயந்தி வருடம் இது. கடந்த ஞாயிறன்று பாரதிய வித்யா பவன் அரங்கில், நாகரத்தினம்மாவின் பார்வையில் ‘மை தியாகராஜா’ என்ற நடன நிகழ்ச்சியை வழங்கினார் சீனியர் டான்ஸர் லட்சுமி விஸ்வநாதன்.

இது ஒரு டான்ஸ் தியேட்டர். நாகரத்தினம்மாவின் வாழ்க்கைக் கதையை அபிநயத்துக்கொண்டே அழகான, எளிமையான ஆங்கிலத்தில் விவரித்தார், லட்சுமி விஸ்வநாதன். வழக்கமான நடன காஸ்ட்யூம் எதுவுமின்றி, புடவை மட்டுமே; ஒட்டியாணம் மட்டும் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்.

மேடையின் ஒரு பக்கம் இசைக்குழு, கதைக்கு ஏற்றவாறு தியாகராஜரின் பாடல்களை இசைத்தார்கள். நடுவே, நாகரத்தினம்மா இயற்றிய ஜாவளி ஒன்றும், தியாகராஜா மீதான நாமாவளியும் உண்டு.

தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் மாதிரியாக அங்கங்கே தன் இரண்டு மாணவிகளை நடனமாடச் செய்தார்.

ஒன்றரைமணி நேரம் போனதே தெரியாமல், நாகரத்தினம்மாவைக் கண்முன் நிறுத்தி முகபாவம் வழியே அவர் கதையைத் தங்குதடையின்றி லட்சுமி விஸ்வநாதன் விவரித்த விதம் too good. 200 பக்கச் சுயசரிதையைப் படித்துவிட்ட திருப்தி.

பாட்டுப்பாட வேண்டியவர்களைத் தேர்வு செய்ததில் மட்டும் ஏனோ பாஸாகவில்லை இவர்!