Published:Updated:

இதயத்தை இயக்கவைக்கும் அன்பு!

இதயத்தை இயக்கவைக்கும் அன்பு!
பிரீமியம் ஸ்டோரி
இதயத்தை இயக்கவைக்கும் அன்பு!

தமிழ்ப்பிரபா - படங்கள்: வீ.சதீஷ்குமார்

இதயத்தை இயக்கவைக்கும் அன்பு!

தமிழ்ப்பிரபா - படங்கள்: வீ.சதீஷ்குமார்

Published:Updated:
இதயத்தை இயக்கவைக்கும் அன்பு!
பிரீமியம் ஸ்டோரி
இதயத்தை இயக்கவைக்கும் அன்பு!

`இலவசமாக இதய அறுவை சிகிச்சைகள் செய்கிறார் மதுரை மருத்துவர் கோபி நல்லையன்’ என்கிற  தகவல் கிடைக்க, அவரைச் சந்திப்பதற்காக மதுரைக்குச் சென்றேன்.

நல்லையனுக்குச் சொந்தமாக மருத்துவமனை இல்லை. தனியார்க்குச் சொந்தமான தேவதாஸ் மருத்துவமனையில்தான் மருத்துவர் கோபி நல்லையன் சிகிச்சை அளித்துவருகிறார். மருத்துவரின் உதவியாளர் கார்த்திக்குத் தகவல் தெரிவித்ததும், அவர் கோபி நல்லையனின் வார்டுக்கு அழைத்துச் சென்று அங்கேயுள்ள ஒரு கட்டிலில் உட்கார வைத்துவிட்டு “இந்தா வந்துட்றேன். உக்காந்துட்டிருங்க” எனச் சொல்லிவிட்டுச் சென்றார்.

ஏழு கட்டில் போடப்பட்டிருந்த வார்டு அறையில் இரண்டு கட்டிலைத் தவிர மற்ற அனைத்தும் வெற்றிடமாகவே இருந்தன. நோயாளிகள் இல்லாத கட்டில்களைப் பார்ப்பது ஏதோ ஒருவகையில் ஆறுதலாக இருந்தது. எதிர்க் கட்டிலில் கூப்பாடு போட்டுக்கொண்டிருந்த இரண்டு வயது மதிக்கத்தக்க சிறுவன் எங்களைப் பார்த்ததும்  சில விநாடிகள் மௌனித்துவிட்டு திரும்பவும்  அவன் பாட்டியை பிராண்டுவதற்குத் தாவினான்.

இதயத்தை இயக்கவைக்கும் அன்பு!

அவனுக்குப் பக்கத்துக் கட்டில் காலியாக இருந்தது. அதற்கு அருகில் இருந்த கட்டிலில் மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தைக்கு தொண்டைக்குழாய்க்குக் கீழே சிலுவை வடிவத்தில் வெள்ளையாகக் கட்டு போடப்பட்டிருந்தது. அவள் உதடுகளைத் திறந்தபடி தூங்கிக்கொண்டிருந்தாள். அதே கட்டிலில் அவளுக்குப் பக்கத்தில்   இன்னொருவரும் தூங்கிக்கொண்டிருந்தார். அப்பாவாக இருக்கலாம். அவர்கள் தூங்கிய விதம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தியது. அந்தச் சுட்டிப்பயல் செய்யும் அத்தனை களேபரங்களையும்  பார்த்துக்கொண்டிருக்கும்போதே, கார்த்திக் வந்தார்.

“இந்தப் பையன் ரொம்ப சத்தம் போடுறானே” என்றேன். “அவன் ரொம்ப வாலு” என்றவர், சற்று குரலைத் தாழ்த்தி “அந்தப் பையனுக்கு நாளைக்கு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி” என்றார். இவர்களைத்தான் சந்திக்க வந்திருக்கிறேன் என்றாலும், அதற்கான அறிமுகம் இத்தனை வலுவாக இருந்திருக்கக்கூடாது என்று தோன்றியது.

இதயத்தை இயக்கவைக்கும் அன்பு!


``அந்தப் பாப்பாக்கு என்ன?” என்று கேட்டேன். ``அந்தப் பாப்பாவுக்கும் அதேதான். ஹார்ட்ல ஓட்டை. நேத்துதான் ஆபரேஷன் முடிஞ்சுது.” நாங்கள் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்ததும் அந்தச் சிறுவனின் பெற்றோர் “ரித்தீசு பேசாம இரு” என்றனர். அவன் இன்னும் அதிகமாக சத்தம் போட்டான். தலை அண்ணாந்து கூச்சலிட்டான்.

குட்லாடம்பட்டியில் வசிக்கும் ரித்தீஷின் பெற்றோர் இருவரும் கூலித் தொழிலாளிகள். மகனின் இதயத்தில் பிரச்னை இருக்கிறதென்று தெரிந்ததும் மதுரை பெரியாஸ்பத்திரியில் போய்ப்பார்த்ததற்கு,  அங்கு  இந்த அறுவைசிகிச்சை செய்யமுடியாதென்று அவர்களைச் சென்னைக்கு அனுப்பியிருக்கிறார்கள். சென்னையிலும் முடியாதென்று திருப்பி அனுப்ப, மதுரையிலுள்ள தேவதாஸ் மருத்துவமனையில் மருத்துவர் கோபி நல்லையனைச் சந்திக்க சிபாரிசு செய்திருக்கிறார்கள். இங்கு வந்ததும் ரித்தீஷுக்கு எல்லாப் பரிசோதனைகளும் இலவசமாகச் செய்யப்பட்டு, தனக்கு அறுவை சிகிச்சை என்பது தெரியாமலேயே குழந்தை காத்துக் கொண்டிருக்கிறான்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த முகிதாஸ்ரீயின் பெற்றோர்கள் வேலை நிமித்தமாகப் பரமக்குடியில் தங்கிவருகிறார்கள். குழந்தை பிறந்த சில தினங்களிலேயே இதயத்தில் ஓட்டை இருக்கிறதென்று தெரிந்தும் பணப் பற்றாக் குறையினாலும், எங்கு குணப்படுத்துவார்கள் என்று தெரியாததாலும் நீண்ட நாள்கள் அலைக்கழிக்கப்பட்டு, கடைசியாக டாக்டர் கோபி நல்லையனின் மருத்துவ முகாமுக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். இப்போது முகிதாஸ்ரீக்கு வெற்றிகரமாக அறுவைசிகிச்சை முடிந்திருக்கிறது. குழந்தை அந்தக் களைப்பில்தான் தகப்பனோடு தூங்கிக் கொண்டிருக்கிறாள்.

வார்டில் இருந்த இரண்டு குழந்தைகளைப் பற்றி கார்த்திக் சொல்லிக்கொண்டிருக்கையில் ஒரு பாட்டியும் அவருடன் பள்ளிச்சீருடையில் ஒரு சிறுமியும் உள்ளே நுழைந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் ‘`டாக்டர் இன்னும் வரலையே... சரி உள்ள வாங்க” என்றார்.

இதயத்தை இயக்கவைக்கும் அன்பு!

“இந்தப் பொண்ணுக்கும் ஹார்ட்ல ஓட்டைதாங்க. அப்பா அம்மா சின்ன வயசிலேயே இறந்துபோய்ட்டாங்க. இந்தப் பாட்டி ஒரே ஆளுதான். எப்டியாவது இந்தப் பொண்ணைக் காப்பாத்திடணும்னு எங்கெங்கயோ அலைஞ்சிருக் காங்க. பெரியகுளத்துல நாங்க நடத்துன கேம்ப்ல இந்தப் பொண்ணுக்கு பிரச்னை இருக்கிறது தெரியவர, இப்ப ஆபரேஷனுக்கு வந்திருக்காங்க” என்றார் கார்த்திக்.

எனக்கு அந்தச் சிறுமியை அழைத்துப் பேச வேண்டும்போல இருந்தது. “இங்க வாம்மா” என்றேன். அவள் தயங்கித் தன் பாட்டியின் கையை இறுக்கிக்கொள்ள “போ, கூப்பிடுறாகள” என்று அவர் அதட்டியதும் அருகில் வந்தாள். சிறுபிள்ளைகளைப் பார்த்தால் எல்லோரும் கேட்கிற ‘`உன் பேரென்ன, எத்தனாவது படிக்கிற’’ என்று அதே சம்பிரதாயக் கேள்விகளைத்தான் கேட்டேன். அந்தச் சிறுமி எதற்கும் வாயே திறக்கவில்லை. அவள் எதையோ நினைத்து அரண்டுபோயிருந்தாள். பார்வையை ஓரிடத்தில் நிலைநிறுத்தி எச்சிலை விழுங்கிக்கொண்டிருக்கிற அவள் கண்களைப் பார்க்கிற துணிவும் எனக்கு அப்போது இல்லை.

பேரமைதி நிலவிய அத்தருணத்தில் உள்ளே வந்தார் மருத்துவர் கோபி நல்லையன். சேலத்தருகே ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த கோபி, அந்த ஊரிலுள்ள அரசாங்கப் பள்ளியில் படித்தவர். தபால்நிலைய ஊழியரான தன் அப்பாவின் வற்புறுத்தலால் எவ்வித நோக்கமும் இல்லாமல் மருத்துவம் படிக்க ஆரம்பித்த கோபிக்கு எம்.பி.பி.எஸ்-க்குப் பிறகு அரசாங்க வேலை கிடைத்திருக்கிறது. விருப்பமே இல்லாமல் தேர்ந்தெடுத்த மருத்துவப்படிப்பின் மீது ஆர்வம் அதிகரிக்க அரசாங்க வேலையை நிராகரித்து, தொடர்ந்து மேற்படிப்பு படிக்க விருப்பப் பட்டிருக்கிறார். ஆனால், வீட்டில் அவரைப் படிக்க வைக்க வசதி இல்லை. 

தனக்குக் கிடைத்த உதவித்தொகை மூலம் MS, பிறகு MCH (Cardiac Surgeon)  எனப் பதினொரு வருடம் படித்து முடித்தபின்தான் வெளியே வந்திருக்கிறார் கோபி நல்லையன். படிப்புக்காக வாங்கிய கடன்களை அடைக்க ஐதராபாத், பெங்களூரு, சென்னை  எனப் பெரிய பெரிய மருத்துவமனைகளில் பணிபுரிந்திருக்கிறார் கோபி.

இதற்கிடையே மருத்துவக்கல்லூரியில் தன்னுடன் படித்த மதுரையைச் சேர்ந்த ஹேமாவை சாதி எதிர்ப்பு பிரச்னையுடன் திருமணம் முடித்தபிறகு, அவருக்கு சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை கிடைத்திருக்கிறது. அங்குள்ள மக்களைச் சந்தித்த பிறகுதான் வாழ்க்கையின் மீது தான் கொண்டிருந்த எண்ணங்களை மாற்றிக்கொள்ள ஆரம்பிக்கிறார் கோபி.

மருத்துவ விழிப்பு உணர்வும், போதிய தொழில்நுட்ப வசதிகளும், பணமும் இல்லாமல் அங்கே இதய நோயினால் குழந்தைகள் இறந்துபோவதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நம்மால் முடிந்த அளவு இவர்களுக்காக இலவசமாக சேவை செய்தால் என்ன என்கிற கேள்வி எழுந்ததும் ஹேமாவுடன் ஆலோசிக்க, ``நிச்சயம் செய்யலாம்.  ஆனால், இலவசமா சிகிச்சை செய்யணும்னா  நாம  ஒரு  ஃபவுண்டேஷன் மாதிரி ஏதாவது ஆரம்பிக்கணும். யார்னே தெரியாத இந்த ஊர்ல அது சத்தியமா முடியாது. இங்க இருக்கிற குழந்தைங்க போலவே நம்ம தமிழ்நாட்டுலயும் நெறைய பேர் இருக்காங்க. அங்க போயி, நம்ம ஊர்க் குழந்தைகளைக் காப்பத்தலாம்” என்று ஹேமாவும் ஊக்கப்படுத்த, சத்தீஸ்கரில் செய்து கொண்டிருந்த வேலையை விட்டு, சம்பாதித்த பணத்துடனும், இரண்டு பிள்ளைகளுடனும் மதுரைக்கு வந்து “Little Moppet heart foundation” என்கிற அமைப்பை, கடந்த நவம்பர் மாதம் இருவரும் சேர்ந்து ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதயத்தை இயக்கவைக்கும் அன்பு!

மதுரை, தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, கோவில்பட்டி, ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய ஊர்களில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி, பிறவி  இதயநோய்  உள்ள குழந்தைகளைக் கண்டறிந்திருக்கிறார்கள்.  இதய சிகிச்சை தேவைப்படுகிறது என்று அறிந்த குழந்தைகளுக்கு இதுவரை முப்பத்தைந்து அறுவைசிகிச்சைகள் செய்து உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்கள். அனைத்துமே இலவசமாக.

``இந்த முப்பத்தைந்து குழந்தைங்க மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய ஊர்களைச் சேர்ந்தவங்க மட்டும்தாங்க. இன்னும் மற்ற ஊர்களைச் சேர்ந்த, அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய குழந்தைகள் ஐம்பதுக்கும் மேல வெயிட்டிங்ல இருக்காங்க. நான் ஒருத்தனே பண்ணிட்டிருக்கிறதாலே ப்ராசஸ் டிலே ஆகுது” என்றவர், மேசை மீதிருந்த தண்ணீரைக் குடித்துவிட்டுத் தொடர்ந்தார் ``நான் சில மாநிலங்கள்ல வேலை செஞ்சவங்கிற முறையில் சொல்லணும்னா மருத்துவரீதியா நாம ரொம்ப அட்வான்ஸா இருக்கோம். ஆனா, என்ன பிரச்னைன்னா அது வெறும் சென்னையை மையப்படுத்தி மட்டும்தான் இருக்கு.  தென்தமிழகத்துல இருக்கிற அரசாங்க மருத்துவமனைகள்ல போதிய வசதிகள் இல்லை. குறிப்பா இதய அறுவைசிகிச்சை செய்றதுக்கான தொழில்நுட்ப வசதிகள் இங்கே உள்ள மருத்துவமனைகள்ல இல்லை. பண வசதி உள்ளவங்க சென்னைக்கு வந்தோ, தனியார் மருத்துவமனைகள்ல பார்த்தோகூட குணப்படுத்திடுவாங்க. ஆனா, டெய்லி சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறவங்க பிள்ளையை எப்படிக் காப்பாத்த முடியும்.

இந்த ஜனங்களுக்கு CHDனு சொல்லப்படுற பிறவி இதயநோய் குறித்த விழிப்பு உணர்வு இல்லை. அப்படியே நோயைக் கண்டுபிடிச்சு ஆஸ்பிட்டல் போனாலும், அங்க போங்க  இங்க போங்கன்னு தவறான வழிகாட்டுதல்களால அலைக்கழிக்கப்படுறாங்க.  அதுக்குள்ள அந்தக் குழந்தைகள் காப்பாத்த முடியாத கட்டத்துக்குப் போயிடறாங்க. நானே ரெண்டு மூணு குழந்தை களை அந்த மாதிரி திருப்பி அனுப்பியிருக்கேன். அதனாலதான் நாங்களே ஊர் ஊரா கேம்ப் நடத்தி அவங்களைக் கண்டுபிடிச்சி காப்பீட்டு அட்டை இல்லைன்னா அதுக்கு ஏற்பாடு செஞ்சி சிகிச்சை செஞ்சிட்டு வர்றோம்” என நிதானமாகப் பேசுகிறார் மருத்துவர்.

கோபி நல்லையனின் மனைவி டாக்டர் ஹேமாவைப் பார்த்துக் கேட்டேன் ``இருந்த வேலையையும் விட்டுட்டு, சார் இலவச மருத்துவரா ஆகிட்டாரே, உங்களோட செலவுக்கெல்லாம் என்ன பண்றீங்க?”

``பணம் இருக்கிறவங்க வெளி இடத்துல இருந்து கூப்பிட்டா, இவர் ஆபரேஷன் பண்ணிட்டு காசு வாங்கிட்டு வர்றார். நானும் வீட்லயே பேபி ஃபுட் செஞ்சி ஆன்லைன்ல சேல் பண்றேன். அதுல கொஞ்சம்  குடும்பம் ஓடுது” எனச் சிரிக்கிறார் ஹேமா. அம்மா சொல்வதை அமைதியாக உட்கார்ந்து கேட்டபடி இருக்கிறார் மகள் ஜனனி.

நான் உட்கார்ந்திருந்த இடத்தில் என் கைக்கு அருகே முழுக்கவும் இந்தியில் எழுதப்பட்ட கேடயம் இருந்ததைப் பார்த்து, “இது என்ன?” என்றேன். மருத்துவத் தம்பதி இருவரும் வாய் திறப்பதற்கு முன் அவர்களின் மகன் ஷர்வத்  “நான் சொல்றேன்” என முந்திக்கொண்டு சொன்னான். “இது எங்க டாடி சத்தீஸ்கர் சீஃப் மினிஸ்ட்டர்கிட்ட அவார்ட் வாங்குனது.”

என் பார்வை அவர் பக்கம் திரும்பியதும், “ஆமாங்க, இருநூறு பேர்க்கும் மேல அங்க அறுவைசிகிச்சை செஞ்சேன். அதனால சிறந்த மருத்துவ சேவைன்னு சீஃப் மினிஸ்டர் ராமன்சிங் கையாலே வாங்குன அவார்ட்தான் அது” என்றார் கோபி நல்லையன்.

கிளம்பும்போது டாக்டர் ஹேமா எங்களிடம் ``சார், நாங்க  கஷ்டப்படுறோம்னெல்லாம் எழுதிடப்போறீங்க. இப்போதான் ரொம்ப சந்தோஷமா இருக்கோம்” எனச் சொல்ல, டாக்டர் கோபி நல்லையன் சிரித்தார். அவர் முகத்தில் அரும்பிய சந்தோஷத்தில் எந்தப் பாசாங்கும் இல்லை. உயிர்வாழ வசதியற்ற முப்பத்தைந்து குழந்தைகளின் இதயத்தைத் துடிக்க வைத்த சந்தோஷம் அது. நம் எல்லோருடைய அன்பினாலும் இன்னும் பல குழந்தைகளின் இதயத்தை ஆண்டாண்டுக்காலம் துடிக்க வைக்கப்போகிற நம்பிக்கையின் கீற்று அது!