Published:Updated:

புண்ணியமாகப் போகும் மகராசன்களே!

புண்ணியமாகப் போகும் மகராசன்களே!
பிரீமியம் ஸ்டோரி
புண்ணியமாகப் போகும் மகராசன்களே!

நித்திஷ்

புண்ணியமாகப் போகும் மகராசன்களே!

நித்திஷ்

Published:Updated:
புண்ணியமாகப் போகும் மகராசன்களே!
பிரீமியம் ஸ்டோரி
புண்ணியமாகப் போகும் மகராசன்களே!

தீபாவளி தவறாமல் தேடி வரும் தூரத்துச் சொந்தம்போல வாரம் ஒருமுறை ப்ளேஸ்டோரில் ‘என்னை அப்டேட் பண்ணு, என்னை அப்டேட் பண்ணு’ என நோட்டிஃபிகேஷன் அள்ளி வீசுகிறது ஃபேஸ்புக். தொல்லை தாங்காமல் அப்டேட் செய்தால் பழைய வெர்ஷனுக்கும் அப்டேட்டட் வெர்ஷனுக்கும் இழையளவு வித்தியாசம்கூட இருப்பதில்லை. இப்படி எல்லா முறையும் பிம்பிலிக்கா பிலாப்பி காட்டுவதைத் தவிர்த்துவிட்டு நாங்கள் கேட்கும் இந்த வசதிகளை எல்லாம் அடுத்த அப்டேட்டில் சேர்த்தால் புண்ணியமாகப் போகும் மகராசன்களே!

புண்ணியமாகப் போகும் மகராசன்களே!

* `சரஹா’ என்ற ஆப் வந்து சக்கைப்போடு போட்டபின்தான் தெரிய வந்தது மொக்கை புரொஃபைல்களுக்கும் சீக்ரெட் ஃபாலோயர்கள் இருப்பது. ‘யுவர் ஃபேஸ் இஸ் நைஸுங்க’, ‘யுவர் மூக்கு இஸ் மார்வெலஸுங்க’ எனக் குவிந்த சரஹா மெசேஜ்களைக்கண்டு ஆதியோகி சிலைதிறப்பில் துள்ளிக்குதித்த ஜக்கிபோல ஆனந்தக் கூத்தாடினார்கள் முகநூல் பிரபலங்கள். ஆடியவர்களில் ஆண், பெண் வித்தியாசமில்லை. எனவே நமக்கே தெரியாமல் நம்மை யாரெல்லாம் ஸ்டாக் செய்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள `People who stalked your profile’ என்ற ஆப்ஷன் வந்தால் அமோகமாக இருக்கும்.

* பிரேக்கிங் நியூஸ் போடும் சமயங்களில் எல்லாம் வீறுகொண்டு சிலம்பாட்டம் ஆடுவது, கன்டென்ட் இல்லாத காலங்களில் பழைய போட்டோக்கள், ஸ்டேட்டஸ்களை நோண்டுவது என டெம்ப்ளேட் ஃபார்முலாவில் சிக்கியுள்ளது ஃபேஸ்புக். முப்பது வருடங்களுக்குமுன் எடுத்த கல்யாண ஆல்பத்தைக் கதறக் கதறக் கலாய்த்துத் தள்ளும் நம்மால் மூன்று ஆண்டுகளுக்குமுன் அப்லோட் செய்த சொந்த போட்டோவையே பார்க்க முடியவில்லை. இந்தக் கொடுமைகளில் இருந்து தப்பிக்க பழைய போட்டோக்கள், ஸ்டேட்டஸ்கள் எல்லாம் ஆட்டோமேட்டிக்காக ‘Only me’ ஆப்ஷனுக்குள் சென்றுவிடும் வசதி வேண்டும்.

புண்ணியமாகப் போகும் மகராசன்களே!

* டைம்லைனில் எந்த இடத்தில் ‘Tag your friend who’ என வந்தாலும் உடனே ‘கருமமே’ கண்ணாய் டேக் செய்து சாகடிக்கிறார்கள் சில உடன்பிறப்புகள். இன்னும் சிலரோ ‘அதுக்கும்மேல’ ரகம். ஃபுரொபைல் போட்டோ மாற்றிவிட்டு கமென்ட்டில் நம் பெயரை மென்ஷன் செய்து நூதன லைக் பிச்சை எடுப்பார்கள். இப்படி ஒருநாள்முழுவதும் Untag’ செய்துகொண்டே இருந்தால் எப்போது கருத்துச் சொல்வது? எப்படித் தேச நலனுக்குப் பாடுபடுவது? எனவே  ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட்டுக்கு லிமிட் இருப்பதுபோல டேக் செய்யவும் லிமிட் கொடுத்தல் நலம்.

* ‘ரொம்ப நேரம் உட்கார்ந்துகிட்டே இருந்தா தொப்பை போடும். ரெஸ்ட் ரூம் வரைக்கும் வாக்கிங் போய்ட்டு வருவோம்’ என லாக் அவுட் செய்யாமலேயே கிளம்பியிருப்போம். அந்த 2 நிமிட கேப்பில் நம் புரொஃபைலிலிருந்து ‘எனக்குக் கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிருக்கு ஃப்ரெண்ட். எனக்கு ஒரே பிரசவத்துல நாலு குழந்தைங்க ஃப்ரெண்ட்’ என எக்குத்தப்பாக ஸ்டேட்டஸ் தட்டிவிடுகிறார்கள் விஷக்கிருமிகள். இந்த விஷயத்தில் தெரிந்தவன், தெரியாதவன், ஓவியா ஆர்மி, காயத்ரி நேவி என யாரையும் நம்ப முடியாது. ஆகவே, ஆட்டோ லாக் அவுட் ஆப்ஷன் அவசியம் மக்கழே!

புண்ணியமாகப் போகும் மகராசன்களே!

* ஆபிஸ் மீட்டிங்கோ, புராஜெக்ட் கன்சல் டேஷனோ டேபிளுக்கு அடியில் மொபைலை வைத்து ஃபேஸ்புக் பார்ப்பதே அலாதி சுகம். பிரச்னை என்னவென்றால் அந்த நேரம் யாருக்காவது லைக்கோ கமென்ட்டோ போட்டால், ‘தாத்தா நான் பார்த்தேன்’ என பொன்னம்பலத்தைப் போட்டுக்கொடுக்கும் வாண்டுபோல  சைடில் வரும் நோட்டிஃபிகேஷன்கள் காட்டிக் கொடுத்து விடுகின்றன. ‘அப்ப நீ மீட்டிங்ல பேசுனதைக் கவனிக்கல’ (கவனிச்சுட்டா மட்டும்?) `போன மீட்டிங்ல பேசுனதுக்கும் இந்த மீட்டிங்ல பேசுனதுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் சொல்லுய்யா மொதல்ல’ என வறுத்தெடுக்கிறார்கள். எனவே அந்த நோட்டிஃபிகேஷன்களுக்கு RIP போடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

* இப்போது கேட்கப்போவது ஏற்கெனவே வாட்ஸ் அப்பில் இருக்கும் வசதிதான். நம் ஸ்டேட்டஸை யாரெல்லாம் பார்க்கக் கூடாது எனத் தனித்தனியாகக் குறிப்பிட்ட ஸ்டேட்டஸ்களுக்கு மட்டும் ப்ளாக் செய்யும் ஆப்ஷன் வேண்டும். காரணம், டிமானிடைசேஷனைக் கலாய்த்தால் இன்னமும், ‘கருப்புப் பணம் லாரியில வருதாம்’ என முட்டுக்கொடுக்கும் நண்பர்கள் எல்லாருடைய லிஸ்ட்டிலும் இருப்பதுதான். ‘நான் ஏழாவது பாஸுண்ணே, நீங்க எஸ்.எஸ்.எல்.சி ஃபெயிலுண்ணே’ என லாஜிக் பேசும் இவர்களோடு வாதாடினால் வி.ஜி.பி வாசலில் சிலையாக நிற்பவருக்கே பி.பி, சுகர் வந்துவிடும். பார்த்துச் செய்யுங்க ப்ரோ!

புண்ணியமாகப் போகும் மகராசன்களே!

*  ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ட்விஸ்ட் தொடங்கி ‘விவேகம்’ ஓபனிங்கில் அஜித் பறக்கும் காட்சி வரை எல்லாவற்றையும் டைம்லைனில் முதல் ஆளாய்ச் சொல்லி நம் பார்க்கும் ஆர்வத்தைப் பங்கமாக்குகிறார்கள். ‘ஏதோ ஸ்டேட்டஸ்தான் போல’ என அசால்ட்டாய்ப் படித்தால் ஸ்பாய்லர் அலர்ட்டே இல்லாமல் மூட் அவுட் ஆக்கிவிடுகிறார்கள். எனவே, ஒவ்வொரு சீரிஸ், படம் ரிலீஸ் ஆகும்போதெல்லாம் அதுகுறித்த ஸ்டேட்டஸ்களை ஃபில்டர்கொண்டு மறைத்துவிடும் ஆப்ஷனைக் கொடுக்கவும் தோழர் மார்க்!

* இது மிக மிக முக்கியமான கோரிக்கை. இணைய உலகின் மிக முக்கியமான பிரச்னை இந்த ஃபேக் ஐ.டி-க்கள். இந்தப் பிரச்னையில் இருந்து தப்பிக்க, ‘குளிக்கும்போது கழுத்துல ஆதார் கார்டு தொங்கவிட்டுக்கிட்டா ஸ்கின் ப்ராப்ளமே வராது’ என்ற ரீதியில் பிரசாரம் செய்துவரும் மத்திய அரசு, ‘இனி ஃபேஸ்புக் ஐ.டி ஆரம்பிக்கவும் ஆதார் வேணும்’ என்ற உத்தரவை வெளியிட வேண்டும். ஆனால், இதிலொரு சிக்கல் இருக்கிறது. என் ஆதார் கார்டில் நான் ‘பாட்டாளி’ படத்தில் பெண் வேஷம்போட்டு வரும் வடிவேலுவைப் போலவே இருப்பதால் இது ஆண் ஆதார் கார்டா பெண் ஆதார் கார்டா என ஃபேஸ்புக்கின் ஆர்ட் டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸே குழம்பிவிடும் வாய்ப்பு இருக்கிறது. எனவே ‘புதிய இந்தியா வெர்ஷன் 101.0’ பிறப்பதற்குள் ஆதார் கார்டு போட்டோக்களை மாற்றி விடுங்கள் மோடி ஐயா!