Published:Updated:

கடவுளின் குரலைக் கேட்டவர் ஓய்வெடுத்த நாள் இன்று! #RememberingMotherTeresa

கொல்கத்தாவின் செயின்ட் மேரீஸ் உயர்நிலைப் பள்ளியில், புவியியல் மற்றும் மத இலக்கண ஆசிரியையாகப் பணியாற்றி, பிறகு அந்தப் பள்ளியின் தலைமையாசிரியராக உயர்ந்தார்.

கடவுளின் குரலைக் கேட்டவர் ஓய்வெடுத்த நாள் இன்று! #RememberingMotherTeresa
கடவுளின் குரலைக் கேட்டவர் ஓய்வெடுத்த நாள் இன்று! #RememberingMotherTeresa

கிறிஸ்துவ மதத்தின்மீது அதிகப் பற்றுகொண்ட குடும்பத்தில் பிறந்தவர், ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ. இவர்தான் பின்னாளில் உலகின் இதயத்தில் தன் தொண்டுகளால் இடம்பிடித்த அன்னை தெரசா. இவரின் தந்தை வெற்றிகரமான வியாபாரியாகவும், அரசியல் போராளியாகவும் இருந்தார். தெரசாவுக்கு 8 வயதாக இருக்கும்போதே இறந்துவிட்டார். அவருடைய மரணம் இயற்கையானதில்லை; அல்பேனியாவின் விடுதலைப் போராட்டத்துக்குப் பணம் உதவி செய்ததால், அரசியல் எதிரிகளால் விஷம் வைத்துக் கொல்லப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. தந்தை இறந்ததும் தாய், மிகுந்த மத நம்பிக்கை உள்ளவராக ஆக்னஸை வளர்த்தார். அதுதான் பின்னாளில், கன்னி மடத்தில் சேர்வதற்கான தூண்டுகோலாக இருந்தது.

* 1928 அக்டோபர் 12-ம் தேதி, 18-வது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி அயர்லாந்தின் தலைநகரமான டப்ளினில் இருந்த ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவ அமைப்பின் கன்னி மடத்தில் இணைந்தார். 1997 செப்டம்பர் 5-ம் தேதி, இம்மண்ணுலகை விட்டுக் கிளம்பும்வரை அன்னை தெரசா, தான் பிறந்த வீட்டுக்கு மறுபடியும் செல்லவே இல்லை; தன் குடும்பத்தினரைச் சந்திக்கவும் இல்லை. 

* 1929-ம் ஆண்டு, முதன்முறையாக இந்தியாவின் மேற்குவங்கத்தில் இருக்கும் கத்தோலிக்க திருச்சபைக்கு வந்தார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தொடர்ந்து கல்விப் பணியில் இருந்தார். கொல்கத்தாவின் செயின்ட் மேரீஸ் உயர்நிலைப் பள்ளியில், புவியியல் மற்றும் மத நல்லிணக்க ஆசிரியையாகப் பணியாற்றி, பிறகு அந்தப் பள்ளியின் தலைமையாசிரியராக உயர்ந்தார்.

* மறை பணியாளர் என்ற துறவு வாழ்க்கையைவிட்டு, மக்கள் சேவைக்காக வந்தபோது சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டார் அன்னை. `மறுபடியும் கன்னியாஸ்திரீ வாழ்க்கைக்கே திரும்பிவிடலாமா' என்று யோசித்ததாகப் பின்னாளில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கடவுள் அழைப்பை மறுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து சேவையைத் தொடர்ந்துள்ளார்.

* அன்னையின் பெயர் சொன்னால், முகம் நினைவுக்கு வருவதற்கு முன்னால், அவருடைய நீலக்கரையிட்ட வெள்ளை நிறப் புடவை நம் மனக் கண்களில் தோன்றும். அதன் பின்னணி நெகிழ்வானது. இரண்டாம் உலகப்போர் நடந்த நேரம், மக்கள் உணவுப் பஞ்சத்திலும் வியாதியிலும் தவிப்பதைப் பார்த்து, அவர்களுக்கு உதவ நினைத்தார். ஆனால், அவர் வேலை பார்த்த ரோமன் கத்தோலிக்க நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. தன்னுடைய ஆசிரியைப் பணியிலிருந்து விலகினார். விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கிருந்து கிளம்பும்போது, அவரிடம் மூன்று நீலக்கரையிட்ட வெள்ளை நிற சேலைகளே இருந்தன. அதே வகை புடவைகளையே வாழ்நாளின் இறுதிவரை அணிந்தார்.

* அவர் பிறந்தது ஆகஸ்ட் 26 என்றாலும், அவருக்குத் திருமுழுக்கு தந்த நாளான ஆகஸ்ட் 27, பிறந்ததினமாக அவர் குறிப்பிட்டு வந்தார்.

* உலகின் 10 போற்றத்தக்கப் பெண்மணிகளில் ஒருவராக, 18 முறை அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் அன்னை.

* கருத்தடை மற்றும் கருக்கலைப்புக்கு எதிரானவராக இருந்த அன்னை, விவாகரத்து மற்றும் மறுமணத்தை ஆதரித்தார்.

* `ரத்த உறவின்படி நான் அலபேனியாவைச் சேர்ந்தவள். குடியுரிமை பெற்றதின் அடிப்படையில் இந்தியாவைச் சேர்ந்தவள். என்னுடைய நம்பிக்கையின்படி, நான் ஒரு கத்தோலிக்க கன்னியாஸ்திரி' - இது தன்னைப் பற்றி அன்னை தெரசா சொன்ன வார்த்தைகள்.

* கொல்கத்தாவில் இருக்கும் ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி கற்றுத்தர ஆரம்பித்தபோது, கரும்பலகை மற்றும் சாக்பீஸ் போன்ற அடிப்படை வசதிகளே இல்லை. மரக்குச்சிகளால் தூசி படிந்த இடத்தில் எழுதி, மாணவர்களுக்குக் கல்வி கற்றுத்தந்திருக்கிறார். 

* பல பொன்மொழிகளைச் சொல்லியிருக்கிறார். அதில் ஒன்று, `மக்களை எடை போட்டுக்கொண்டே இருந்தால் அவர்களை நேசிக்க முடியாது.'

* இரண்டு முறை ஹார்ட் அட்டாக் வந்துள்ளது. ஃபேஸ் மேக்கர் பொருத்தப்பட்டது. மலேரியா, கழுத்தெலும்பு முறிவு என வயது காரணமாக பல உடல் உபாதைகள் இருந்தபோதும், தொடர்ந்து மக்களுக்காக சேவை செய்வதை விடாதவர் அன்னை தெரசா. 

அவரின் உயிர் ஓய்வெடுத்த நாள் இன்று!