Published:Updated:

``நிஷாவுக்கு நடந்த பாலியல் தொல்லைகளைப் பற்றி நான்தான் பேசச் சொன்னேன்'' - கணேஷ் வெங்கட்ராம் #VikatanExclusive

``நிஷாவுக்கு நடந்த பாலியல் தொல்லைகளைப் பற்றி நான்தான் பேசச் சொன்னேன்'' - கணேஷ் வெங்கட்ராம் #VikatanExclusive
``நிஷாவுக்கு நடந்த பாலியல் தொல்லைகளைப் பற்றி நான்தான் பேசச் சொன்னேன்'' - கணேஷ் வெங்கட்ராம் #VikatanExclusive

``பெண்கள், தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகளையெல்லாம் இப்போதுதான் வெளிப்படையாகப் பேச ஆரம்பிச்சிருக்காங்க. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு.''

சின்னத்திரை தொகுப்பாளர் நிஷா கணேஷ். நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கும் திறமையும் அவரின் அழகும் அனைவரும் அறிந்தது. ஆனால், அவர் தன் சிறு வயதில், வளர்ப்புத் தகப்பனாலேயே பாலியல் தொல்லைக்கு ஆளானவர் என்பது யாருமே அறியாதது.  அயனாவரம் சிறுமிக்காக நியாயம்வேண்டி சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோது, கணவருடன் கலந்துகொண்ட நிஷா, தனக்கு நிகழ்ந்ததைக் கண்ணீருடன் பொதுவெளியில் வெளிப்படையாகச் சொன்னார். தனக்கு நிகழ்ந்த கொடுமைகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசிய நிஷா, தன் கணவர் கணேஷ்தான் மனம்விட்டுப் பேசச் சொன்னார் என்றதும் கூட்டம் மொத்தமும் ஸ்தம்பித்து நின்றது. அதன்பிறகு, விகடனுக்குத்  தனிப்பட்ட பேட்டியும் கொடுத்திருந்தார். தற்போது நிஷா எப்படி இருக்கிறார். தனக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லை பற்றி வெளிப்படையாகச் சொன்ன பிறகு, நண்பர்கள், உறவினர்கள் எப்படி ரியாக்ட் செய்கிறார்கள் ``அதுபற்றி நான் எதுவும் கேட்டுக்கொள்வதில்லை. என் கணவருக்குத்தான் தெரியும்'' என்றார் நிஷா. கணேஷ் வெங்கட்ராமிடம் பேசினேன்.

``சில பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் அவர்களுடைய சென்சேஷுனலுக்காக உண்மையான செய்தியில் கொஞ்சம் மசாலா சேர்ப்பாங்க. விகடன் அப்படிச் செய்யாமல், என் மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, செய்தி வெளியிட்டது. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்'' என்றபடி தொடர்ந்தார்.  

``எல்லோரின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு கடினமான நிகழ்வு நடந்திருக்கும். நிஷாவின் வாழ்க்கையில் நடந்ததை அப்படித்தான் பார்க்கிறேன். நமக்கு நடந்த அந்தக் கடினமான நிகழ்வுகளை வெளியே சொன்னால், அதுபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கும். அதனால்தான், நிஷாவுக்கு நடந்ததை வெளிப்படையாகப் பேசச் சொன்னேன். ஆனால், அயனாவரம் சிறுமிக்காக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசுவாள் என எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும், அவள் பேசியதில் சந்தோஷமே. ஏனென்றால், நிஷா பாலியல் தொல்லை பற்றி ஒரு செய்தியைப் படித்தாலும் டிஸ்டர்ப் ஆகிவிடுவாள். அது அவளை மிகவும் பாதிக்கும். அதனால்தான், `மனசுவிட்டு பேசு' எனச் சொல்லிட்டே இருந்தேன். மனசில் இருந்ததைக் கொட்டிய பிறகு இப்போது நிம்மதியாக இருக்கிறாள். அவள் மீதான மரியாதை நண்பர்கள், சொந்தக்காரர்கள் மத்தியில் அதிகமாகி இருக்கிறது. ஒரு கணவனாக எனக்கு அதுதானே வேண்டும்'' என்கிறவர் குரலில் மனைவி மீதான காதல் வெளிப்பட்டது. 

நிஷா பேட்டிக்கு வெளி மனிதர்களின் ரியாக்ட் பற்றியும் பகிர்ந்த கணேஷ், ``நிஷாவின் பேட்டிக்கு வந்த கமென்ட்ஸ் எல்லாமே பாசிட்டிவாகவே இருந்தது. விகடனில் வந்த அந்தக் கட்டுரை, யூ-டியூபிலும் வந்தது. அதற்கான கமென்ட்ஸைப் படித்தேன். நிறையப் பெண்கள் தங்களுக்கும் இப்படி நடந்திருக்கு எனக் குறிப்பிட்டிருந்தனர். சில பெண்கள், தங்களுக்குச் சிறு வயதில் நடந்த பாலியல் தொல்லையைப் பெற்றோர்களே நம்பவில்லை. கணவரிடம் சொன்னபோது பிரச்னை அதிகமாகிவிட்டது' என்று வருத்தப்பட்டிருந்தார்கள். நீங்கள் பெற்றோர்களாக இருந்தால், உங்கள் குழந்தைகள் 'அந்த அங்கிள் அசிங்கமா நடந்துக்கிட்டார்' என்று சொன்னதுமே காது கொடுத்து கேளுங்க. கணவனாக இருந்து, மனைவிக்குச் சின்ன வயதில் இப்படி நடந்திருந்தது தெரிந்தால், அதில் உன் தவறு எதுவும் இல்லை என ஆறுதல் சொல்லுங்கள். பாதிக்கப்பட்டவங்க தனக்கு நிகழ்ந்ததை வெளியே சொல்ல அவமானப்படக் கூடாது. தப்பு பண்ணவங்கதான் அவமானப்படணும்'' என்கிறவர் குரலில் அத்தனை தீர்க்கம்.

``ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் நடுவில் உடல் இணைதல் மட்டும் இருந்தால் போதாதுங்க. மனம் இணைதலும் இருக்கணும். கல்யாணத்துக்கு முன்னாடி நிஷா எனக்கு நல்ல தோழி. அவள் அம்மாகிட்ட சொல்ல முடியாத விஷயங்களை என்கிட்ட சொல்வாள். நிஷா மாதிரி பாதிக்கப்பட்டவங்களிடம் சமூகத்துக்கு மேலே கசப்புஉணர்வு இருக்கும். ஆனால், நிஷாவிடம் அது சுத்தமாகக் கிடையாது. ஆண்களே தப்பு, இந்த உலகமே சரி கிடையாது அப்படின்னு பேசினதே கிடையாது. இத்தனை கஷ்டங்களைத் தாண்டியும் ஜெயிச்சிருக்கா. சின்ன வயதிலேயே வீடியோ ஜாக்கியாகி நிரூபிச்சியிருக்கா. தனக்கென ஒரு பாதையை உருவாக்கிக்கொண்ட பெண். அவளை நான் அப்படியே ஏத்துக்கிட்டேன். அதனால்தான் என்கிட்ட எல்லாமே ஷேர் பண்ணினாள். `வாழ்க்கையின் ஒரு சரியான நேரத்தில், உனக்கு நிகழ்ந்ததை வெளியே பேசு'னு சொல்லியிருந்தேன். அயனாவரம் சிறுமிக்கு நீதி கேட்கும் ஆர்ப்பாட்டத்தில் என்னைத்தான் கூப்பிட்டிருந்தாங்க. நிஷா ஜஸ்ட் என்னோடு வந்திருந்தாள். அந்தச் சிறுமியின் அக்கா பேசினதைப் பார்த்து, நிஷா உடைந்துபோய் தனக்கு நடந்ததையும் பேசினாள். பெண்கள், தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகளை இப்போதுதான் வெளிப்படையாகப் பேச ஆரம்பிச்சிருக்காங்க. இன்னும் போகவேண்டிய தூரம் நிறைய இருக்கு. இந்த விஷயத்தில் பெண்களுக்கு ஆண்களும் சப்போர்ட் செய்யணும். அதுதான் நியாயமும்'' என அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் நிஷாவின் கணவர்.

அடுத்த கட்டுரைக்கு