Published:Updated:

ராகுல் காந்தி 25

ராகுல் காந்தி 25
பிரீமியம் ஸ்டோரி
ராகுல் காந்தி 25

பரிசல் கிருஷ்ணா

ராகுல் காந்தி 25

பரிசல் கிருஷ்ணா

Published:Updated:
ராகுல் காந்தி 25
பிரீமியம் ஸ்டோரி
ராகுல் காந்தி 25

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி நீண்ட காலமாக வெயிட்டிங்கில் இருக்க,  குஜராத் தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பாக இருக்கிறார் ராகுல். குஜராத் முடிவுகள் வெளியாகும் அடுத்தநாள் காங்கிரஸ் தலைவராகவிருக்கும் ராகுல் காந்தியின் பர்சனல் 25 இங்கே!

1. டெல்லியில் உள்ள புகழ்பெற்ற டேராடூன்  பள்ளியில் தன் பள்ளிப்படிப்பையும், செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாறும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரமும், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் எம்.பில் பட்டமும் பெற்றிருக்கிறார் ராகுல்.

2. ராகுலின் பாட்டி இந்திரா காந்தி, அப்பா ராஜீவ் காந்தி ஆகியோர் படுகொலையில் மரணமடைந்ததால், ராகுலின் பாதுகாப்பில் மிக அதிக கவனம் செலுத்தப்பட்டது. கேம்ப்ரிட்ஜ்  டிரினிட்டி கல்லூரியில் படிக்கும்போது, அங்கே இவரது பெயர் Raul Vinci. 

ராகுல் காந்தி 25

3. முழுநேர அரசியலுக்கு வருவதற்கு முன்பு, லண்டனில் மேனேஜ்மென்ட் குரு மைக்கேல் போர்டரின் மானிட்டர் குரூப்பில் பொருளாதார ஆலோசகராக 3 ஆண்டுகள் பணியாற்றினார்.

4. பள்ளி, கல்லூரியில் படிக்கும்போதும் சரி, அதன்பிறகும் சரி, மிக அமைதியானவர் என்ற பெயர் ராகுலுக்கு உண்டு. ஜப்பானின் புகழ்பெற்ற Aikido தற்காப்புக் கலையில் பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறார்.

5. சுற்றுப்பயணங்களுக்குத் தனி விமானங்கள் அளிக்கப்பட்டாலும், பெரும்பாலும் தனி விமானத்தை விடுத்து, பயணிகள் விமானங்களில்தான் பயணிப்பார். பயணங்களில் புத்தகங்கள்தான் அவர் நண்பன். ஆழ்ந்த படிப்பாளி.

6.
அப்பா ராஜீவ் காந்தியிடமிருந்து இவருக்கு ஒட்டிக்கொண்ட ஒரு பழக்கம், அவர் போலவே பாதுகாப்பு வளையங்களை மீறி மக்களைச் சந்திப்பது. கட்சியின் மூத்த தலைவர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் பலமுறை சொல்லியும் இந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளாதவர்.

7. பாட்டி இந்திரா காந்தி கொலை ராகுலின் மனதில் மறக்க முடியாத வடுவாகவே பதிந்துவிட்டது. காரணம், கொன்ற இரண்டு பாதுகாவலர்கள், ராகுலுடன் தினம் பாட்மின்டன் விளையாடி நண்பர்களைப் போல இருந்தவர்கள். ‘என் நண்பர்கள்தான் என் பாட்டியைக் கொன்றார்கள்’ என்று குறிப்பிடுவார்.

8. சூப்பர் பைக் பிரியர். திடீரென்று ஹெல்மெட் மாட்டிக்கொண்டு ரைடு கிளம்புகிற ரகம். சமீபகாலமாக பாதுகாப்பு அதிகாரிகளின் கெடுபிடியால் இது குறைந்துள்ளது. ஹார்லி டேவிட்சன், யமஹா ஆர்-1, டுகாட்டி என்று பல சூப்பர் பைக்குகளை  வாங்கிவைத்துள்ளார். அதிகாலையில் சைக்கிள் ஓட்டுவதும் இவருக்குப் பிரியமான விஷயம். திடீரென்று தனது ஸ்டைலிஷ் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவார். 

9.
சச்சின் டெண்டுல்கரின் பரம ரசிகர் மற்றும் நண்பர். சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா பட்டம் வழங்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தவர். சச்சின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற அன்று மதியம் டெண்டுல்கரை போனில் அழைத்து `பாரத ரத்னா சச்சினுக்கு வாழ்த்துகள்’ என்றார். சிறிது நேரத்தில் விருது முறைப்படி அறிவிக்கப்பட்டது.

10. ​அடிக்கடி இவரிடமிருந்து வரும் வார்த்தை ‘தேங்க்யூ’. யாரேனும் கதவு திறந்தால், தேநீர் கொடுத்தால், வழி விட்டால், உட்காரச் சொன்னால் என்று ஒருநாளுக்கு நூற்றுக்கணக்கான தேங்க்யூ இவரிடமிருந்து வந்துகொண்டே இருக்கும்.

11.
காந்திமீது பெரிய பற்றுண்டு. முழுமையான காந்தியவாதி.  “இந்தியா பல மதங்கள், மொழிகள் அடங்கிய பழக்கூடை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசி. அவற்றை மதித்து நடக்க வேண்டும்” என்பார் ராகுல்.

12.
வெளியூருக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது உதவியாளர்கள், சமையல்காரர் உடன் வருவார்கள். அப்படி வரும்போது, அவர்களுடன் அமர்ந்துதான் உணவு உட்கொள்வார் ராகுல். இது பெரும்பாலும் வேறெந்தத் தலைவர்களிடமும் காணமுடியாத விஷயம்.

13.
வெளியூர் சென்று தங்க நேர்ந்தால், இரவில் அந்தச் சுற்றுப்பகுதியில் சுவையான உணவு கிடைக்கும் ஹோட்டலை விசாரித்து, அங்கே விசிட் அடிப்பது ராகுல் வழக்கம். இது லிஸ்ட்டிலேயே இருக்காது. இவரது இந்தப் பழக்கத்தால். பெரும்பாலும் பாதுகாப்பு அதிகாரிகள், இவர் தங்குமிடத்திற்கு அருகில் இருக்கும் ஹோட்டல்கள், அவற்றின் பாதுகாப்பு குறித்து விசாரித்து வைத்திருப்பார்கள்.

14.
நண்பர்கள், கட்சியில் நெருக்கமாக இருப்பவர்களின் பிறந்தநாளை ஞாபகம் வைத்திருந்து சர்ப்ரைஸ் வாழ்த்து அனுப்புவார். பெரும்பாலும் ராகுலிடமிருந்து அழைப்பு வரும். அதேசமயம், வாழ்த்துவதை வெளியில் சொல்லி விளம்பரப்படுத்துவதை விரும்பமாட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராகுல் காந்தி 25

15. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக 62 கிலோ எடையிலேயே இருக்கிறார் ராகுல் காந்தி. இந்த ஃபிட்னஸுக்குக் காரணம், ராகுல் காந்தியின் பிரேக் இல்லாத வொர்க் அவுட். ஜிம், ஃபிட்னஸ் சென்டர், ஸ்விம்மிங் என்றெல்லாம் இல்லை. எப்போது நேரம் கிடைத்தாலும், ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி. அதேபோல அதிகாலை எழுவது, இரவு 9 மணிக்குள் தூங்கச்செல்வது என்கிற பழக்கத்தைத் தீவிரமாகக் கடைப்பிடித்துவருகிறார் ராகுல்.

16. கட்சியில் மூத்த அரசியல் தலைவர்களுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை, இளைஞர்களுக்கும் கொடுப்பார். கட்சியினர் அளிக்கும் தகவலின் உண்மைத்தன்மையை அறிய, சட்டென்று சாமானியர்களைக் கண்டதும் பேசித் தகவல்கள் பெறுவார்.
 
17. மிக எளிமையான உடைகளை மட்டுமே அணிவார். கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் பகட்டான உடைகள் அணிந்து இவர்முன் செல்லத் தயங்குவதுண்டு. ஒரு சிலரிடம் ராகுலே நேரடியாக ‘இதுபோன்ற ஃபேன்சி டிரஸ் அணிவதைத் தவிருங்கள். அப்புறம் எப்படி எளிய மனிதர்கள் உங்களிடம் வந்து பேசுவார்கள்?’ என்று கேட்டதும் நிகழ்ந்ததுண்டு.

18. கட்சியினரிடம், நம் வேலையை எளிதாக்கும் டெக்னாலஜியைப் பயன்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவார். நான்கைந்து பேர் சில கிலோமீட்டர் பயணம் செய்து நடத்த வேண்டிய ஆலோசனைக் கூட்டங்களை, ஜஸ்ட் லைக் தட் ஒரு கான்ஃபரன்ஸ் காலில் நடத்தி ஆச்சர்யப்படுத்துவார்.

19. டெல்லியில் நிர்பயா இறந்தபோது, அவரின் சகோதரர் 12-வது படித்துக்கொண்டி ருந்தார். அப்போதிலிருந்தே நிர்பயாவின் சகோதரை அடிக்கடி அழைத்து, “உன் கல்விதான் உன் குடும்பத்தை மீட்டெடுக்கும்” என்று உற்சாகமூட்டி, படிக்க நிறைய உதவிகள் செய்துவந்தவர் ராகுல். இப்போது அந்தச் சகோதரர் ஒரு பைலட். பல வருடங்களுக்குப் பிறகே இந்த விஷயங்களை நிர்பயாவின் தாய் வெளி உலகுக்குப் பகிர்ந்து கொண்டார்.

20.
செல்ல நாயொன்றை வளர்க்கிறார். பெயர் Pidi. சமீபத்தில் பா.ஜ.க தலைவர் ஒருவர் ‘யாரோ ராகுல் பெயரில் ட்வீட்டுகிறார்’ என்று விமர்சனம் செய்ய, தன் செல்லநாயின் வீடியோ ஒன்றை வெளியிட்டு ‘நான்தான் ராகுல் பெயரில் ட்வீட் போடுகிறேன்’ என்று Pidi சொல்வது போல ட்வீட்ட, அது வைரலானது.

21.முன்பெல்லாம் நிறைய உலகத் திரைப்படங்கள் பார்ப்பதுண்டு. இப்பொழுது நேரம் அரிதாகிவிட்டதால், அது குறைந்து வருவதாக நண்பர்களிடத்தில் வருத்தமாகச் சொல்வார்.

22.
தமிழில் பேசத் தெரிந்த வார்த்தைகள் இரண்டுதான். நன்றி, வணக்கம். தமிழர்களைப் பற்றி நெருங்கிய வட்டத்தில் ராகுல் சொன்னது: “தமிழர்களைப் போல  அன்பு செலுத்துபவர்களையும், உழைக்கிறவர்களையும் வேறு எங்கும் பார்த்ததில்லை.”

ராகுல் காந்தி 25

23. யார் என்ன கருத்து சொன்னாலும், சொல்வது யார் என்பதை விடுத்து, கருத்தைப் பார்த்து ஏற்றுக்கொள்வார். ஒருவேளை அந்தக் கருத்து தவறாகிவிட்டால், கோபப்பட மாட்டார். அப்போது இவர் சொல்லும் வாசகம்: “Its Good you learn on your own.”

24. இந்திய அரசியல்வாதிகளில் ராகுலுக்கு மிகவும் பிடித்தவர் டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா தீக்‌ஷித். கட்சி தொடர்பான குழப்பங்கள் எதுவாக இருந்தாலும் ஷீலா தீக்‌ஷித்திடம் ஆலோசனை கேட்பாராம்.

25.
ராகுல் காந்தியின் வயது 47. ``எப்போதுதான் திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்கள்’’ என்று சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பாக்ஸர் விஜேந்தர் சிங் நேரடியாகக் கேள்வி கேட்டார். முதலில், இது பழைய கேள்வி என்று பதில் அளித்தவர், `எல்லாம் விதிப்படி நடக்கும்’ என்று  மீண்டும் நழுவினார்.