ல்லூரியில் சேர்ந்த புதிது. எனது வகுப்பிற்கு பெங்களூரிலிருந்து ஒரு மாணவியும் வந்திருந்தார். பெயர் மலர் என்று வைத்துக்கொள்வோம். சீனியர் மாணவிகளில் சிலரும் நாங்களும் ஒரு டீமாக

அடல்ட்ஸ் ஒன்லி - 9

உருவாகிக்கொண்டிருந்த நேரம். ஒரு மதிய வேளையில், பெண்கள்  மட்டுமிருந்த நேரத்தில், மலர் ஓர் அணுகுண்டைக் கேள்வியெனத் தூக்கிப் போட்டாள். அவளுக்குத் தமிழ் சரளமாக வராது என்பதால்… அந்தக் கேள்வியை இப்படிக் கேட்டாள்...

``Have anyone of you been sexually molested as a child?’’

வேறொரு மாணவி, தான் புரிந்து கொண்டதைத்தான் இவள் கேட்டுத் தொலைத்தாளா என்பதை உறுதி செய்துகொள்ள, `அப்படீன்னா...’ என்றாள்.

``சின்ன வயசுல உன்கிட்ட யாராவது தப்பா நடந்திருக்காங்களா... உன் ரிலேட்டீவ்ஸ், நெய்பர்ஸ்... யாராவது?’’ என்று விளக்கினாள்.

தமிழகத்தின் தென்கோடியில் கிராமப்புறங்களிலிருந்து வந்திருந்த எங்களிடம் மெட்ரோ நகரப் பெண்ணின் இந்தக் கேள்வி ஒரு தாக்குதலையே நிகழ்த்தியது! Child Sexual Molestation என்ற பதத்தையே நான் அன்றுதான் முதன் முதலாகக் கேட்கிறேன்.என்னைத் தவிர இன்னொருவருக்கும்கூட அந்தக் கொடுமை நடந்திருக்கிறது என்பதையும் அன்றுதான் அறிந்தேன்.

``என்ன நீ இதெல்லாம் கேட்குற. எப்படி அதைச் சொல்றது?!’’ என்று பதற்றத்தோடு கேட்டாள் இன்னொரு மாணவி.

எல்லோரும் தயங்கி நின்றதைப் பார்த்து, மலர் தன் அனுபவத்தைச் சொல்லத் தொடங்கினாள்.

``எனக்குப் பத்து வயசிருக்கும் போது, என்னோட அங்கிள் எங்க வீட்டுக்கு வந்திருந்தார். ஒரு நாள் ராத்திரி நான் அவர் பக்கத்துல படுத்திருந்தேன். என்னைக் கட்டிப் பிடிச்சு, பலவந்தமா முத்தம் கொடுத்தார். அத்துமீறினார். நான் வியர்த்து விறுவிறுத்து எழுந்து உட்கார்ந்தேன். ஓட முயன்றபோது அவர் விடவே இல்லை. அந்த ராத்திரியை என்னால் மறக்க முடியாது. ரொம்ப ஷேமா ஃபீல் பண்ணேன். அப்ப இருந்து  யாரோடவும் பேசுறதையே நிறுத்திட்டேன். ஆண்களைக் கண்டாலே விலகி ஓடினேன். என்னோட பேரன்ட்கிட்ட சொன்னா, என்னைத் தப்பா நெனைப்பாங்களோனு பயம். காலேஜ் படிக்குறப்போ ஒரு பெண்கள் அமைப்போட தொடர்பு உண்டாச்சு. அப்போதான் சைல்டு செக்‌ஸுவல் அப்யூஸ் பற்றியெல்லாம் தெரிஞ்சுகிட்டேன். இது என்னோட தனிப்பட்ட பிரச்னை இல்லைனு புரிஞ்சுகிட்டு சோஷியல் வொர்க் பண்ண ஆரம்பிச்சேன். இப்போ நான் ஒரு ஆக்ட்டிவிஸ்ட்’’ என்றாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடல்ட்ஸ் ஒன்லி - 9

மலர் பேசி முடிக்கும்போது அங்கே ஒரு கனத்த மௌனம் நிலவியது. தாத்தாவால், பக்கத்துவீட்டு நபரால், மாமாவால், சித்தப்பாவால், ஆசிரியரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வக்கிரங்களைச் சொல்ல எல்லோரிடமுமே ஏதேனும் ஒரு கதை இருந்தது. யாரிடமும் சொல்லப்படாத, ஒருவருக்கும் தெரிந்துவிடக் கூடாது என மறைத்து வைத்திருந்த, பல வருடங்களாக மனதின் அடியாழத்தில் ஒரு கொடுங்கனவாக அமிழ்ந்து போயிருந்த ரகசியத்தை நாங்கள் பேசினோம்.

பெரும்பாலும் குழந்தைகள் தாங்கள் எதிர்கொள்ளும் பாலியல் கொடுமைகள் பற்றி வெளியில் சொல்வதில்லை. நடந்த குற்றத்தில் தனக்கும் பங்கிருப்பதாக அவர்கள் நினைத்துக்கொள்ளத் தகுதியான வகையில் நாம் நடந்துகொள்கிறோம். பெற்றோர்கள் குழந்தைகளின் புகாரை மரியாதைக்குரிய தமது குடும்ப உறுப்பினரின் கௌரவத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலாகக் கருதி, பாதிக்கப்பட்ட குழந்தையையே குற்றவாளியாக உணர வைக்கின்றனர். குழந்தைகள் எப்போதும் உண்மையையே பேசுகின்றன. அந்த உண்மைகள் நம்மீதான தாக்குதலாக இருப்பதால் நாம் அவற்றைப் புறக்கணிக்கிறோம்.

`இதெல்லாம் விழிப்பு உணர்வு இல்லாத காலத்துல நடந்திருக்கும். இப்போ நிலைமை ரொம்ப மாறிடுச்சு. பெற்றோர் ரொம்ப கவனமா இருக்காங்க’ என்று யாராவது சொல்வீர்களானால், உங்களுக்குச் சில புள்ளிவிபரங்களையும் சம்பவங்களையும் எடுத்துரைக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். `வேர்ல்ட் விஷன் இந்தியா’ என்ற தொண்டு நிறுவனம் மே, 2017-ல் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் 26 மாநிலங்களில் நிகழ்த்தப்பட்ட ஆய்வில் இரண்டில் ஒரு குழந்தை பாலியல் கொடுமைக்கு ஆளாவதாகவும், ஐந்தில் ஒரு குழந்தை தான் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்படுவோம் என்ற அச்சத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

கண்களுக்குள் வைத்துக் குழந்தையை வளர்க்கிறோம். பின் எப்படி அவர்கள் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக முடியும்? இதற்கான கொடூரமான பதில் என்னவெனில் அக்குற்றத்தை நிகழ்த்துகிறவர்கள் நம் நம்பிக்கைக்கு உட்பட்ட, மிகவும் நெருக்கமானவர்கள் என்பதே! உறவினர்களால் இத்தகைய கொடுமைகள் நடந்தால், பெற்றோர் அதை சைலன்ட்டாக விட்டுவிடுகின்றனர். குறைந்தபட்சம் அந்த நபரை எச்சரிக்கும் முயற்சியைக்கூட அவர்கள் எடுப்பதில்லை. கொடுமையைச் செய்பவர் அந்நியர் என்றால் மட்டுமே பிரச்னை அம்பலப்படுத்தப்படுகிறது. வழக்கு, தண்டனை வரை போகிறது.

இரண்டில் ஒரு குழந்தை என்பது சாதாரணக் கணக்கா என்ன? இந்த ஆய்வு குறிப்பிடும் பாதிக்கப்படுவோரில் நம் பிள்ளைகளும் இருக்கலாம்! அவ்வாறு இல்லை என்றாலும் இத்தனை குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாகிற சமூகத்தின் அங்கமாக இருப்பதே நமக்கெல்லாம் எச்சரிக்கைதானே! உடலில் வெளிப்படையான காயங்கள் தெரிந்தால் மட்டுமே பெற்றோர் குழந்தையின் வாக்குமூலத்தை சீரியஸாக எடுத்துக்கொள்கின்றனர். வெளியே தடயங்கள் தெரியாத, உயிருக்கு ஆபத்தில்லாத பாலியல் அத்துமீறல்கள் குழந்தைகள்மீது ஏவப்படுகின்றன. அது மனக்காயமாக சாகிற வரை உள்ளுக்குள் கிடக்கிறது. ஏழெட்டு வயதில் நடந்த கொடுமையை நினைக்கும்போது, நமக்கு இப்போதும் ஏன் பதறுகிறது? ஏனென்றால், அது ஆறவே ஆறாத காயம்.

பாலியல் அத்துமீறல் என்றதும் நம் கவனம் பெண் குழந்தைகள்மீதுதான் திரும்புகிறது. ஆண் பிள்ளைகளை அந்த வரையறைக்குள் வைப்பதே இல்லை. ஆரம்பப் பள்ளியில் இருந்த ஒரு சிறுவனுக்கு குட் டச், பேட் டச் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தபோது, அவரின் அம்மா `பையனுக்கு எதுக்கு இதெல்லாம் சொல்லித் தர்றீங்க’ எனக் கேட்டார்.  பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் குழந்தைகளில் சரிபாதி ஆண் பிள்ளைகள் என்கின்றன ஆய்வுகள். ஆனால் நாமோ, ஆண் பிள்ளைகளுக்கு அது நேராது என்றும், நேர்ந்தாலும் அதை ஆண் பிள்ளையானது சமாளித்துக்கொள்ளும் என்றும், கற்பு பறிபோதல், கருவுறுதல் போன்ற பிரச்னைகள் ஆண்களுக்கு இல்லை என்பதாலும் விட்டுவிடுகிறோம். பாலியல் தாக்குதல் என்பது ஒரு  வன்முறை. வன்முறைக்கு ஆண் பெண் பாகுபாடெல்லாம் கிடையாது. பலாத்காரத்தை ஒரு வன்கலவியாகக் (Wild Sex) கருதும் நோய்மைச் சமூகத்தில் ஆண் பிள்ளைகளுக்கு அதனால் பாதிப்பு வராது என நம்புவதில் வியப்பேதும் இல்லை.  
 
கலாசாரம் என்ற பெயரில் பெண்கள் தங்களது உடலைப் பாதுகாத்துக்கொள்ள ராணுவக் கட்டுப்பாடே இங்கு அமலில் இருக்கிறது. ஆண்களுடன் பேசக் கூடாது, தொடக் கூடாது, வெளியில் போகக் கூடாது எனப் பல விதிமுறைகள். ஆனால், ஆண்பிள்ளைகளுக்குக் கட்டற்ற சுதந்திரம் வழங்கப்பட்டு, பாதுகாப்பு குறித்து எந்தப் பயிற்றுவித்தலும் தரப்படுவதில்லை. ஆண்மகன் தன்னைப் பாதுகாத்துக்கொள்வான் என்பது நமது மூடநம்பிக்கை. ஆறு வயதுப் பெண்ணுக்கு உள்ள அதே மூளை வளர்ச்சி, உடல் வளர்ச்சிதான் அதே வயதுடைய ஆண் பிள்ளைக்கும் இருக்கும். பெண் குழந்தைகளை அந்நிய ஆண்களுடன் நெருங்கவிடாத நாம், பையன்களை `பாசிட்டிவ்’ பாரபட்சத்தில் விட்டுவிடுகிறோம். இதனால், ஆசிரியர்களால், வயதில் மூத்த மாணவர்களால், நண்பர்களால், உறவினர்களால், பெண்களால் ஆண் குழந்தைகளும் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

குழந்தைகள்மீது பாலீர்ப்பு கொள்வதற்கு பீடோஃபீலியா என்று பெயர். அது இயற்கையான பாலியல் தேர்வா, மனக்கோளாறா என்பதற்கான ஆய்வுகள் தொடர்கின்றன.  வெளிநாடுகளில் நடத்தப்பட்ட சில ஆய்வுகளின்படி பொதுவான மக்கள்தொகையில் மிகக் குறைந்த அளவில் அதாவது 1-5% மட்டுமே இவர்கள் உள்ளனர். ஆனால், இந்தியாவில் குழந்தைகள்மீது நடக்கிற பாலியல் தாக்குதல்களின் அளவைப் பார்க்கும் போது நிச்சயம் அவை அனைத்தும் பீடோஃபீலிக்களால் நிகழவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். செக்ஸ் குறித்த நமது வக்கிரமான புரிதல்களும் கட்டுப்பாடுகளுமே அதற்குக் காரணமாக அமைகின்றன. எந்தவொரு சாதாரண நபரும் பாலியல் வக்கிர உணர்வு தோன்றும் போது எதிர்க்க முடியாதவர்களான குழந்தைகளை விக்ட்டிம் ஆக்குகின்றனர். அதாவது பெரியவர்களுக்கு செக்ஸ் பண்ண பெரியவர்கள் கிடைக்காத நிலையில் குழந்தைகள் இரையாக்கப்படுகின்றனர்.

இப்படியான அத்துமீறலை நிகழ்த்துவது குற்றவாளிக்கான வரையறைக்குள் வருகிறவர்கள் அல்லர். நாம் நேசித்து, தொட்டு, பார்த்து, பேசி, பழகி, சிரித்து உறவாடும் சக மனிதர்கள்தான் இதை நிகழ்த்துகின்றனர். ஏன் இந்த அவலம்?  காமம் என்ற இயற்கையான உணர்வை இழிவானதாகவும் புனிதமானதாகவும் இரண்டு எல்லைகளில் கொண்டு போய் வைத்து அதன் நடைமுறைத் தன்மையைச் சிதைத்ததன் விளைவுதான் குழந்தைகள் எதிர்கொள்ளும் பாலியல் பிரச்னைகளுக்கு அடிப்படை.

அடல்ட்ஸ் ஒன்லி - 9

செக்ஸ் என்றால் அருவருப்பு, செக்ஸ் என்றால் பயம், செக்ஸ் என்றால் தீமை, செக்ஸ் என்றால் நடத்தைக்கேடு, செக்ஸ் என்ற மனவியாதி என்பதாக ஒரு மாயை இங்கே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பசிக்கு இணையான அவ்வளவு இயல்பான ஒரு விஷயத்தைக் கண்டு நாம் ஏன் இவ்வளவு அச்சமும் அருவருப்பும் கொள்கிறோம். ஆரோக்கியமாகக் கையாள வேண்டிய ஒன்றை ஏன் இத்தனை நோயுற்றதாக மாற்றிவிட்டோம். சரி,  ஒரு விஷயம் தவறு என நாம் நம்புகிறோம் எனில், அதைச் செய்யக் கூடாதுதானே! குறைந்தபட்சம் அதிலிருந்து விலகி இருக்க வேண்டுமில்லையா? ஆனால், செக்ஸைத் தவறு எனச் சொல்லிக்கொண்டே அது சார்ந்த அத்தனை அக்கப்போர்களிலும் ஈடுபடுகிறோம்.

பாலியல் ரீதியான குற்றங்கள் மலிந்துகிடக்கும் நாட்டில் செக்ஸ் பற்றிப் பேசுவதும் கற்பிப்பதும் எப்படிக் குற்றமாகும்?! இன்றைய நவீனக் காலத்தில்கூட அதை வெளிப்படையாகப் பேசக் கூடாத ஒன்றாக வைத்திருக்கிறோம். குழந்தைகளுக்கு `செக்ஸ் எஜுகேஷன் வேண்டும்’ என்ற பொறுப்பானவர்களின் கோரிக்கை தவறாகவே பார்க்கப்படுகிறது. குழந்தை கெட்டுப் போகும் என ஆளாளுக்கு எதிர்த்தோம், எதிர்க்கிறோம். உண்மை என்னவெனில், யாரும் சொல்லித் தராமலேயே 10-12 வயதில் இயற்கையான பாலுணர்வு தோன்றுகிறது. அது தவறான விஷயமல்ல, வளர்ச்சியின் அறிகுறியே! அதை இன்னதென இனங்காண்பதிலும் கையாள்வதிலும் ஒரு குழப்பம் குழந்தைகளை ஆட்கொள்கிறது. நல்ல தொடுதலையும் தவறான தொடுதலையும் அவர்களால் பிரித்துப் பார்க்க முடிவதில்லை. 

செக்‌ஸுவல் அசால்ட்கள் இங்கே சர்வ சாதாரணமாக நடக்கின்றன. பருவ வயது கர்ப்பம், அதனால் ஊட்டச்சத்துக் குறைபாடு, அதனால் இறப்பு, பால்வினை நோய்த் தாக்குதல்கள் போன்ற பிரச்னைகளை லட்சக்கணக்கான இந்தியக் குழந்தைகள் எதிர்கொள்கின்றன என்கிறது உலக சுகாதார நிறுவனம். கருத்தரிக்கும் பெண்களில் 1000 பேருக்கு 62 பேர் பருவப் பிள்ளைகள். இந்த எண்ணிக்கை கலாசாரமே இல்லாதவை என நாம் நம்பும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளைவிடவும் அதிகம். அதனால், பருவமெய்துவதற்கு வெகு முன்னதாகவே குழந்தைகளுக்குப் பாலியல் அறிவு ஊட்டப்பட வேண்டும் என்பதுதானே சரியான தீர்வாக இருக்க முடியும்.

முந்தைய தலைமுறைகளுக்கு இதுபோன்ற விஷயங்களைத் தெரிந்துகொள்ள லிமிட்டெட் சோர்ஸ்தான் இருந்தன. ஆனால், இன்று எல்லாமே கையடக்கக் கருவிக்குள் கடலளவு கொட்டிக் கிடக்கின்றன. நாம் விரும்பவில்லை என்றாலும் குழந்தைகள் தெரிந்து கொண்டு விடுகின்றன. குழந்தைகள் அறிந்துகொள்ளும் விஷயங்கள் குறித்துப் பொறுப்புடன் தெளிவுபடுத்த வேண்டியதுதான் நம் கடமை. சின்னஞ்சிறு மகனோ மகளோ வந்து, தனது பிறப்புறுப்பிற்குப் பெயர் என்ன எனக் கேட்டால், எத்தனை பெற்றோரால் திணறாமல், சிரிக்காமல், கூச்சப்படாமல், கோபப்படாமல் சட்டெனச் சொல்ல முடியும்? இந்தச் சாதாரண விஷயத்திற்குக்கூட நாம் தயாராகாமல் குழந்தைகளை ஆபத்துகளிலிருந்து காப்பாற்ற முடியும் என எப்படி நம்புகிறோம்!

குழந்தைக்குக் கற்பிக்க வேண்டுமானால் செக்ஸ் குறித்த அறியாமைகளிலிருந்து முதலில் பெற்றோர் விடுபட வேண்டும். மாதவிலக்கு என்பது தீட்டு, சுய இன்பத்தில் ஈடுபட்டால் ஆண்மைக்குறைவு, ஓரினச்சேர்க்கை என்பது மனநோய் என நமது பாலியல் அறிவிலேயே ஏகப்பட்ட ஓட்டைகள் இருக்கும்போது பிள்ளைகளுக்கு எப்படி சரியான அறிவைப் புகட்ட முடியும்? நாம் அறிவு ஒளிரும் இந்தத் தலைமுறைக் குழந்தைகளின் பெற்றோர். அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல, சந்தேகங்களைத் தெளிவுபடுத்த, குழப்பங்களைத் தீர்க்க `வாயை மூடு’ என்ற பழைய அங்குசம் உதவப்போவதில்லை! மிகவும் சிக்கலான இன்றைய உலகத்தில், மிக மிகச் சிக்கலானதாக இருக்கப்போகிற எதிர்கால உலகத்தில் நம் குழந்தை நல்வாழ்க்கை வாழ வேண்டுமெனில் அவர்கள் பெறும் நல்லறிவே அவர்களைக் காப்பாற்றும். அதற்காகவேனும் பெற்றோர் தங்கள் மனத்தடைகளை உடைத்து, பாலியல் அறிவை வளர்க்க முன்வர வேண்டும்.  

கல்வி எப்படி குழந்தைகளின் அடிப்படை உரிமையோ அது போலத்தான் பாலியல் கல்வியும். வேண்டுமா வேண்டாமா என்ற விவாதத்திற்கே இதில் இடமில்லை. ஏனெனில், இது அவர்களின் வாழ்நாள் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் நன்னடத்தை தொடர்பானது. பாலியல் கல்விமூலம் பாலுணர்வு மற்றும் பாலியல் இன்பம் இயல்பானவை எனக் குழந்தைகள் அறிகின்றன. நாம் தவறு செய்கிறோமோ என்ற குழப்பம் நீங்குகிறது. பாலியல் அறிவு பெருகும்போது பெண்களை முறைத்துப் பார்ப்பது, அடல்ட்ஸ் ஒன்லி படங்களைத் தேடுவது போன்ற சிற்றின்ப நடவடிக்கைகளில் ஈடுபாடு குறைகிறது. பக்குவப்பட்ட மற்றும் ஆரோக்கியமான உறவின் மீது நம்பிக்கை கொள்வார்கள். ஆபத்துகள் நெருங்கும்போது அதைக் கண்டுணரும் நுண்ணறிவு வளர்கிறது. பாதுகாப்பான உடலுறவு குறித்த, வரும்முன் காக்கும் வழிகளை அறிகிறார்கள். பாலியல் நோய்கள் குறித்த புரிதல் வளர்கிறது. பாலியல்ரீதியான குறைகள் இருப்பின் ஆரம்ப நிலையில் கண்டறியும் வாய்ப்பு பெருகுகிறது. வெளிப்படையாகப் பேச முடிகிற விஷயத்தின் மீது நமக்கு மரியாதை உண்டாகும். பெற்றோருடன், நண்பர்களுடன், ஆசிரியர்களுடன் பேசக்கூடிய விஷயமாக செக்ஸ் மாறும்போது ஒவ்வொருவரும் தனது நடத்தையில் கண்ணியத்திற்கு இடமளிப்பார்கள்.

நம்மால் மாமாக்கள், தாத்தாக்கள், அண்ணாக்கள், சித்தப்பாக்கள், பெரியப்பாக்கள் என ஒவ்வொருவராகத் தேடித் தேடித் திருத்த முடியாது. ஒட்டுமொத்தக் குழந்தைகளுக்கும் பாலியல் புரிதலையும் பாலியல் சமத்துவத்தையும் உள்ளடக்கிய பாலியல் கல்வியை அளிக்கும் போது எதிர்காலத் தலைமுறை ஆரோக்கியமான சமூகமாக உருவாகும். அந்தச் சமூகத்தில் குழந்தைகள் தங்கள் பாதுகாப்பு குறித்த பயமின்றி, சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வலம் வருவார்கள். பெற்றோராகிய நமது கடமை அப்படியான சமூகத்திற்குத் தகுதியான மனிதர்களை நம் வீடுகளிலிருந்து உருவாக்கி அனுப்புவதே!

- நிறைய பேசுவோம்...

பெற்றோருக்குச் சில குறிப்புகள்

* குளிக்கும்போது, சமைக்கும்போது, தலைவாரும்போது, விளையாடும் போது, டிவி பார்க்கும்போது என எப்போதும் பாலியல் கல்வி அளிக்கலாம். அன்றாடமோ அவ்வப்போதோ நீங்களே அதற்கான சூழலை உருவாக்குங்கள்.

* இயல்பாகப் பேசுங்கள். தகாத விஷயத்தைப் பேசுகிறோம் என்பதைப் போல இறுக்கமாகவோ மனத்தடையுடனோ பேசாதீர்கள். பொம்மை வாங்கும் போது உங்கள் முகமும் உடலும் எவ்வளவு சகஜமாக இருக்குமோ அப்படி. தெளிவான, நேரடியான அதே சமயம் உங்களுக்கு வசதியான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள்.

* எந்தச் சூழலிலும் யாரும் உடலைத் தொட அனுமதிக்கக் கூடாது எனக் கற்பிக்கவும். உடலில் குறிப்பாக பிறப்புறுப்பு, ஆசனவாய், மார்பகங்கள், வாய் போன்றவற்றில் காயமோ வலியோ இருந்தால் உடனே சொல்லச் சொல்லுங்கள்.

* குழந்தையின் நடவடிக்கையில் திடீரென மாறுதலை உணர்ந்தால் சும்மா மிரட்டிக்கொண்டிருக்காமல் ஆதரவாக விசாரியுங்கள். முடிந்தால் விடுப்பு எடுத்து வெளியே கூட்டிப் போங்கள். என்ன நடந்திருந்தாலும் நீங்கள் விட்டுக்கொடுக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையை உருவாக்குங்கள்.

* குழந்தையை நம்புங்கள். தன்னை யாரேனும் தவறாக அணுகுவதாக, (அது உங்களுக்கு நெருக்கமானவராக இருந்தாலும்) குழந்தை சொன்னால் அலட்சியம் செய்யாதீர்கள். தவறு செய்தவரை விட்டு விலகுங்கள். அது குழந்தைக்கு உங்கள்மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்.

* தவறான எண்ணத்துடன் யாரேனும் அணுகும்போது, `நோ’ என உறுதியாக மறுக்கப் பழக்குங்கள்.

* பாலுணர்வு குறித்துப் பேசுங்கள். உங்களுக்குதான் அதில் முன் அனுபவம் இருக்கிறது. ``எனக்கும் அப்படித்தான் இருந்தது. நானும் இதைக் கடந்து வந்தேன்” என்று சொல்லும்போது குழந்தையின் டென்ஷன் குறைகிறது. தகுந்த வயது வரும் வரை அந்த உணர்வுகளை எப்படிக் கையாள்வது என வழிகாட்டுங்கள். எல்லா உணர்ச்சிகளும் சரியானவை; ஆனால், எல்லாச் செயல்களும் சரியானவை அல்ல எனக் குழந்தை புரிந்துகொள்ளட்டும்.

* பாலியல் வல்லுறவு ஒரு குற்றச்செயல் என்பதையும், அதில் ஈடுபட்டால் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்பதையும் எடுத்துச் சொல்லுங்கள். ஆண் பிள்ளைகளுக்கு இது குறித்த புரிதல் வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism