Published:Updated:

சரிகமபதநி டைரி - 2017

சரிகமபதநி டைரி - 2017
பிரீமியம் ஸ்டோரி
சரிகமபதநி டைரி - 2017

வீயெஸ்வி, படங்கள்: கே.ராஜசேகரன், சொ.பாலசுப்ரமணியன்

சரிகமபதநி டைரி - 2017

வீயெஸ்வி, படங்கள்: கே.ராஜசேகரன், சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
சரிகமபதநி டைரி - 2017
பிரீமியம் ஸ்டோரி
சரிகமபதநி டைரி - 2017
சரிகமபதநி டைரி - 2017

கெட்டி மேளம்... கெட்டி மேளம்...

பழைய மகாபலிபுரம் சாலையிலுள்ள புதிய திருமண மண்டபம் ஒன்றில் வாசித்துவிட்டு, சூளைமேட்டுப் பகுதியிலிருக்கும் தன் மகன் வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார் பிரபல தவில் வித்வான் தஞ்சாவூர் டி.ஆர்.கோவிந்தராஜன்.

சரிகமபதநி டைரி - 2017

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“நேத்து சாயந்திரம் தஞ்சாவூர்ல கச்சேரி... முடிச்சுட்டு ராத்திரி கார்லயே புறப்பட்டு வந்துட்டேன்... தூக்கமில்லே...” சிரிக்கிறார்.

பொதுவாகவே சிரித்தமுகம் கோவிந்த ராஜனுக்கு. வேட்டி, மேல் துண்டுடன் சோபாவில் உட்கார்ந்தார். ஆதார் கார்டுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்வது மாதிரி, அப்பா, அம்மா, மனைவி மக்கள் பற்றிய விவரங்கள் சொன்னார்!

“மனைவி சரஸ்வதிதான் எனக்கு எல்லாம்... அவங்களைக் கட்டிக்கிட்ட பிற்பாடுதான் வாழ்க்கைல எனக்குப் பெயரும் புகழும் கிடைச்சுது...” என்கிற கோவிந்தராஜனுக்கு வயது 65.

போட்டோகிராபர் தன் உறையிலிருந்து காமிராவை எடுக்கவும், உஷார் ஆனார் தவில் வித்வான். எழுந்து உள்ளே சென்று, சட்டையணிந்து, தலையைப் படிய வாரி, கையில் ஒரு சால்வையுடனும், முகத்தில் டிரேடு மார்க் சிரிப்புடனும் வந்தார்.

“தாத்தா நாகஸ்வரம் வாசிப்பார்... அப்பா ராஜமன்னார் தவில் வித்வான்... ஒரத்தநாட்டுல தாத்தா வீட்டில் தங்கிட்டு ஸ்கூலுக்குப் போனேன்... படிப்பு பிடிக்கலே... தஞ்சாவூருக்கே திரும்பிட்டேன்...” என்பவரை தவில் சுவீகரித்துக் கொண்டுவிட்டது!

போட்டோகிராபர் கண்களை அலையவிட்டுத் தவிலைத் தேடினார்.

“ஓ! அதுவா? நான் வந்த காரிலேயே தவிலைப் போட்டு தஞ்சாவூருக்கு அனுப்பிட்டேன்... நாளை இங்கே திருவையாறு மகோத்சவ கமிட்டி மீட்டிங் இருக்கு... அத முடிச்சுட்டு ரயில்ல ஊருக்குத் திரும்பறேன்” என்ற கோவிந்தராஜன், கமிட்டியின் துணைச்செயலாளர்களில் ஒருவர்.

பிரபல தவில் வித்வான் நீடாமங்கலம் சண்முகவடிவேலின் பிரதான சீடர் இவர். ஒன்பது வயதிலிருந்து மூன்று வருடங்கள் குருகுலவாசம்.

“அப்போ புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்ல பல்லக்கு விழா. முன்னால கோயில்ல நாகஸ்வரக் கச்சேரி... நீடாமங்கலம் அண்ணன் (குருவின் பெயர் சொல்வதில்லை சீடர்!) தவில்... அவருக்கு சேவகம் பண்ண இடுப்புல துண்டு கட்டிட்டுப் போனேன்.. விழா முடிஞ்சதும் ராத்திரி அண்ணன் வீட்டிலேயே தங்கிட்டேன்... பிறகு அவர் கூடவே இருந்துட்டேன்.”

சரிகமபதநி டைரி - 2017

மூன்று வருடங்களுக்கு இது தொடர்ந்தது. சண்முகவடிவேல் கச்சேரி வாசிக்கப்போகும் இடங்களுக்கெல்லாம் கோவிந்தராஜனும் உடன் செல்வது வாடிக்கையானது. குருவின் வாசிப்பிலிருந்து தவிலின் நுணுக்கங்களை உள்வாங்கிக் கொண்டவருக்குத் தவில்மீது காதலும் வளர்ந்தது.

“இளம் வயதில் நீடாமங்கலம் அண்ணன் காலமாயிட்டார்... நாச்சியார் கோயில் அண்ணன் (ராகவ பிள்ளை) கிட்ட சேர்ந்தேன்... அண்ணன் பெரிய ஜீனியஸ்... அப்போ பிரபலமா இருந்த நாகஸ்வர வித்வான்களெல்லாம் அண்ணன் தங்களுக்கு வாசிக்க மாட்டாரான்னு ஏங்குவாங்க. அண்ணன்தான் தவில் வாசிப்புல இருக்கற நெளிவுசுளிவெல்லாம் எனக்குக் கத்துக் கொடுத்தாரு... அவர் சீக்கா படுத்திருந்தப்போ அவரு கூடவே இருக்கற பாக்கியம் எனக்குக் கிடைச்சது... ‘டேய்! நீ ரொம்பக் கஷ்டப்பட்டுட்டே... பின்னால நீ நல்லா இருப்பே’ன்னு சொல்வாரு... அது எனக்கு ரொம்பப் பெரிய ஆசிர்வாதம்...” என்று சொல்லும்போதே கோவிந்தராஜனுக்குக் குரல் கரகரக்கிறது. நாகஸ்வர மேதை  காருகுறிச்சி அருணாசலத்துக்கும், தவில் மேதை நாச்சியார் கோவில் ராகவபிள்ளைக்கும் இருந்த பாசப்பிணைப்பை நேரில் பார்த்த சாட்சியாக நெக்குருக விவரிக்கிறார் கோவிந்தராஜன். ஐந்து நாள் இடைவெளியில் இருவரும் மரணிக்க நேரிட்டதை, கண்கள் பனிக்கக் கூறினார்.

திருவையாறு இசைக்கல்லூரியில் 24 வருடங்கள் தவில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் டி.ஆர்.ஜி.

இன்று அரசு நடத்தும் இசைக் கல்லூரிகளில் நாகஸ்வரம், தவில் கற்கும் பிள்ளைகள்தான் அதிகம் என்று சொல்லியபோது கோவிந்தராஜனின் முகத்தில் அவ்வளவு பூரிப்பு!

“இப்போது தவில் வித்வான்கள் பரவலாகவும், பிரபலமாகவும் இருக்கும் அளவு பிரபலமான நாகஸ்வர வித்வான்கள் அதிகம் இல்லையே?”

“தவில் துறையில் என்னை மாதிரி சீனியர் கலைஞர்கள் அதிகம் இருப்பதுதான் காரணம்... ஆனால், இப்போ இளம் நாகஸ்வரக் கலைஞர்கள் நிறையபேர் ரொம்பப் பிரமாதமா வாசிக்கறாங்க... நீங்க வேணும்னா பாருங்க... இவங்க எல்லோரும் கூடிய சீக்கிரம் பிரபலம் அடைஞ்சுடுவாங்க...” என்று நம்பிக்கை தெரிவித்தார் இந்தத் தஞ்சாவூர்க்காரர்!

அதுவும் சரிதான்!

சரிகமபதநி டைரி - 2017

நித்யஸ்ரீ மகாதேவனுக்கு லண்டனில் பெரிய ரசிகர்கள் கூட்டம் உண்டு என்பது அதிகம் வெளியே அறியப்படாதது. முகநூலில் நித்தம் நான்கு பதிவுகள் போட்டு சுய தம்பட்டம் அடித்துக்கொள்வதில்லை இவர்.

லண்டனில் MILTON KEYNES பகுதியில் செந்தூர் முருகனுக்குக் கோயில் கட்டும் பணிகள் தொடக்க நிலையில் உள்ளது. இதற்கான நிதி திரட்டும் வகையில் அங்கு நவம்பர் 4 அன்று கச்சேரி செய்திருக்கிறார் நித்யஸ்ரீ. அந்தச் சமயத்தில் இவருக்கு ‘மதுர கீதவாணி’ என்று விருது வழங்கப்பட்டது. அங்கு நாடாளுமன்ற உறுப்பினர் IAIN STEWART இந்த விருதினைக் கொடுத்திருக்கிறார்.

லண்டன் ரசிகர்களில் நித்யஸ்ரீயின் அதிதீவிர ரசிகை சுபா. இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர். கணவருடன் சேர்ந்து சூப்பர் மார்க்கெட் நடத்திவரும் இவருக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. நித்யஸ்ரீதான் தன் குழந்தைக்குப் பெயர் வைக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்திருக்கிறார். இப்போது லண்டன் சென்றிருந்த சமயம் குழந்தைக்கு ‘ஆரபி’ என்று பெயரிட்டு, குழந்தையைத் தூக்கி வைத்துக் கொஞ்சி மகிழ்ந்திருக்கிறார் நித்யஸ்ரீ!

சரிகமபதநி டைரி - 2017

ஏன் ஆரபி?

“குழந்தையின் பெயர் ‘A’வில் ஆரம்பிக்க வேண்டும் என்று விரும்பினார் சுபா. ‘அமிர்தவர்ஷிணி, ஆரபி, ஆந்தோளிகா என்று மூன்று பெயர்களைச் சொன்னேன்... ஆரபியை டிக் செய்தார் அவர்...” என்றார் நித்யஸ்ரீ.

ழக்கம் போல் சென்னையில் விருது மேளா தொடங்கிவிடும். திரும்பும் பக்கமெல்லாம் யாராவது ஒருவர் பொன்னாடையும் பதக்கமும் அணிந்து அரைச்சிரிப்புடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருப்பார்கள். ரவிகிரண் (மியூசிக் அகாடமி), டி.என்.சேஷகோபாலன் (நாரதகான சபா), ஜேசுதாஸ் (பார்த்தசாரதி சுவாமி சபா), சஞ்சய் சுப்ரமணியன் (இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ்), காரைக்குடி மணி (மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ்) என்று அனுமன் வால் மாதிரி நீண்டுகொண்டே போகும் பட்டியல்!

சீனியர் மிருதங்க வித்வான் காரைக்குடி மணி எந்த விருதுக்கும் எளிதில் ஒப்புக்கொண்டுவிட மாட்டார்.

“நீங்கள் விருது பெற வேண்டும் என்பது எங்கள் கமிட்டியில் அனைவரின் விருப்பம். இருபது வருடங்களுக்கும் மேலாக ஒவ்வொரு ஜனவரி முதல் தேதியும் லால்குடி ஜெயராமனுக்கு நீங்கள் மிருதங்கம் வாசித்ததை எங்கள் உறுப்பினர்கள் உட்பட யாரும் மறக்கவில்லை. விருது வாங்கி நீங்கள் எங்களைப் பெருமைப்படுத்த வேண்டும்...” என்று சபா நிர்வாகிகள் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள்.

டிசம்பர் 9, 10 என்று இரண்டு தேதிகளைக் குறிப்பிட்டிருக்கிறார்கள் சபாவினர். இரண்டு நாள்களும் தனக்கு சௌகரியப்படாததைக் காரைக்குடியார் விளக்கி நழுவிவிட முயல, இவருக்காகவே தொடக்க விழாவை 8-ம் தேதி அல்லது 11-ம் தேதி வைத்துக்கொள்வதாகக் கூறி, சம்மதம் வாங்கிவிட்டது சபா. ஆகவே 11-ம் தேதி மணிக்கு மகுடம்!

‘ஆய்வு புகழ்’ ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆரம்பித்து வைக்க, பாரதிய வித்யா பவன் கலை விழா 2017, டிசம்பரை முந்திக்கொண்டு விட்டது. கதரி கோபால்நாத், ஓ.எஸ்.அருண், ஷைலஜா (குச்சுப்புடி) மூவரும் வாழ்நாள் சாதனையாளரானார்கள்.

வரவேற்புரை முதல் நன்றியுரை வரை மைக் பிடித்த அனைவரும் யுனெஸ்கோ இருக்கும் திக்கு நோக்கிப் பெரிய கும்பிடு போட்டார்கள். கிரியேட்டிவ் நகரில் இனி வரப்போகும் தொடக்க விழாக்கள் அனைத்திலும் யுனெஸ்கோ மந்திரம் ஒலிக்கும்.

 ‘அனைவர்க்கும் மலை வணக்கம்’ என்று இப்போதுதான் தமிழ் கற்கத் தொடங்கியிருக்கும் ஆளுநர் தலைமை உரையைத் தொடங்கினார். இவர் சர்வதேச பாரதிய வித்யா பவன்களின் துணைத் தலைவரும்கூட.

 பகவத் கீதை இரண்டாவது அத்தியாயம், 47-வது ஸ்லோகத்தை (கர்மண்யேவாதி காரஸ்ய) பாடிவிட்டு ஏற்புரை நிகழ்த்தினார் ஓ.எஸ்.அருண். பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்பவர் போலும்!

முதல் கச்சேரி A ஃபார் அருணா சாய்ராம். அரை மணி நேரம் உட்கார்ந்து இரண்டு பாடல்கள் கேட்டுவிட்டுப் புறப்பட்டார் கவர்னர். அவருக்குக் கம்பெனி கொடுத்தவர்களில் அடியேனும் ஒருவன்!

‘நாத தநு மநிசம்’ மற்றும் ‘ஏல நீ தயராது’ பாடல்களை கம்பீரக் குரலில் பாடுவதற்குமுன், பல வருடங்களுக்குப் பின்னர் தான் பவன்ஸ் மேடை ஏறுவதாக அறிவித்தார் அருணா சாய்ராம்.  எனில், இத்தனை வருட இடைவெளியில் மிகப்பிரபலமான இந்த இரு பாடல்களை அவர் மனப்பாடம் செய்திருக்கலாம். பேப்பர் வைத்துப் பார்த்துப் பாடுவதைத் தவிர்த்திருக்கலாம்.

(டைரி புரளும்...)